Last Updated : 27 Dec, 2024 08:34 AM

 

Published : 27 Dec 2024 08:34 AM
Last Updated : 27 Dec 2024 08:34 AM

நவீனரக பேருந்துகள் காலத்தின் கட்டாயம்

கர்நாடக மாநில போக்குவரத்து துறை, தொலைதூர பயணத்துக்காக இயக்கப்படும் பேருந்துகளை அதிநவீனமயமாக்கி வருகிறது. ஏற்கெனவே அதிநவீன வால்வோ பேருந்துகளான ஐராவத் ரக பேருந்துகளை முக்கிய நகரங்களுக்கு இயக்கி சாதனை படைத்துள்ள நிலையில், தற்போது அம்பாரி உத்சவ் ரக பேருந்துகளை அறிமுகம் செய்துள்ளது. வால்வோ 9600 ரக தூங்கும் வசதியுடன் கூடிய சொகுசு பேருந்துகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்மூலம் நாட்டிலேயே தொலைதூர பயணத்தில் அதிக சொகுசு வசதிகள் கொண்ட பேருந்துகளை இயக்கும் பெருமைக்குரிய மாநிலமாக கர்நாடகம் வளர்ந்துள்ளது. இந்த ரக பேருந்துகள் பெங்களூரு, ஹைதராபாத், கோழிக்கோடு உள்ளிட்ட பெருநகரங்களுக்கு இயக்கப்படுவதால் பயணிகள் மத்தியில், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழக போக்குவரத்து துறை, மற்ற மாநிலங்களுக்கு எந்தவிதத்திலும் சளைத்தது அல்ல. 300 கி.மீ. தொலைவுக்கு அதிகமாக பயணம் செய்யும் பயணிகளுக்கு சொகுசுப் பேருந்தை இயக்க வேண்டும் என்ற திட்டம் தமிழகத்தில் 1975-ம் ஆண்டிலேயே வகுக்கப்பட்டு, அதற்கென தனித்துறையை உருவாக்கி, 1980-ம் ஆண்டு முதல் திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகம் தொடங்கப்பட்டது.

திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகத்துக்கு அப்போது அதிநவீன பேருந்துகள் வாங்கப்பட்டு தொலைதூர பயணிகள் போக்குவரத்தில் நாட்டுக்கே முன்னோடி மாநிலமாக வழிகாட்டியது தமிழகம். ஆனால், காலப்போக்கில் பல்வேறு பெயர்களில் மாற்றப்பட்டு தற்போது மாநில விரைவு போக்குவரத்துக் கழகம் (எஸ்இடிசி) என்ற பெயரில் தொலைதூரங்களுக்கு ஓட்டை உடைசல் பேருந்துகளே இயக்கப்படுகின்றன. இதில் 1,078 பேருந்துகள் தற்போது இயங்குகின்றன.

பேருந்துகள் பொதுவாக 12 லட்சம் கி.மீ., தொலைவு ஓடிவிட்டால் அவை வயதான பேருந்துகளாக கருதப்பட்டு கழிக்கப்படுகின்றன. அந்த கட்டத்தை தாண்டிவிட்ட 260 பேருந்துகளுக்கு மாற்றாக மட்டுமே புதிய பேருந்துகள் வாங்கப்படுகின்றன. கடந்த 2020-ம் ஆண்டுக்கு பிறகு 2024-ல் தான் புதிய பேருந்துகள் வாங்கப்படுகின்றன. அதுவும் மற்ற மாநிலங்களின் சொகுசு பேருந்துகளுடன் ஒப்பிடும் நிலையில் இல்லை.

குறைந்த கட்டணத்தில் சொகுசு பயணத்தை தருகிறோம் என்று அரசு தரப்பில் காரணம் சொல்லப்படுவது தற்போதைய காலகட்டத்துக்கு ஏற்புடையதாக இல்லை. தமிழகம் முழுவதும் 1,500-க்கும் அதிகமான ஆம்னி சொகுசு பேருந்துகளை இயக்கி அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். பண்டிகை காலங்களில் மும்மடங்கு, நான்கு மடங்கு கட்டணம் வசூலித்தாலும் பயணம் செய்ய இடம் காலியாக இல்லை என்ற நிலைதான் இருக்கிறது.

தமிழக அரசின் விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் நாள் ஒன்றுக்கு 60 ஆயிரத்துக்கும் அதிகமான பயணிகள் பயணிக்கின்றனர். அந்த அளவுக்கு தேவை இருக்கும் நிலையில், மற்ற மாநிலங்களுக்கு இணையாக குளிர்சாதன வசதி, படுக்கை வசதி, சார்ஜிங் வசதி உள்ளிட்ட தனியாருக்கு இணையான, சர்வதேச தரத்திலான பேருந்துகளை இயக்க வேண்டும். அப்போதுதான் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் சளைத்ததல்ல என்பதுடன், போக்குவரத்து துறையில் தமிழகம் நாட்டின் முன்னோடி மாநிலம் என்ற பெருமையை கொண்டுவர முடியும்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x