Published : 20 Dec 2024 05:19 PM
Last Updated : 20 Dec 2024 05:19 PM

கலை எங்களை இணைத்தது: கலைத் தம்பதி சந்தீப் நாராயண் - ராதே ஜக்கி சிறப்பு நேர்காணல்

சென்னை கலாஷேத்ரா மாணவி, உலகம் முழுவதும் அறியப்படும் பிரபல பரதநாட்டியக் கலைஞர், தக்‌ஷின சித்ராவில் கலை மேலாண்மையில் முதுநிலை டிப்ளமா முடித்தவர், ஹார்வர்டு சம்மர் ஸ்கூலில் ஜர்னலிசம் - பிசினஸ் லீடர்ஷிப் படித்தவர் ராதே. சத்குருவின் மகள்.

இவரைப் போலவே, சிறு வயதிலேயே கலைத் துறையில் பயிற்சி பெற்றவர் சந்தீப். 4 வயதிலேயே கர்னாடக இசையை பாடத் தொடங்கி, 11 வயதில் அரங்கேறியவர். கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் ‘லா அண்ட் சொசைட்டி’ பட்டப் படிப்பை முடித்தவர். பல்வேறு நாடுகளிலும் தொடர்ந்து கர்னாடக இசை கச்சேரிகளை நிகழ்த்தி வருகிறார்.

10-வது ஆண்டு திருமணநாள் விழாவை சமீபத்தில் கொண்டாடிய ஆதர்ச கலை தம்பதிகளான சந்தீப் நாராயண் - ராதே ஜக்கியுடன் ஒரு இனிமையான நேர்காணல்..



‘சத்குரு’வின் மகளாக எப்படி உணர்கிறீர்கள் ராதே ஜக்கி?

ராதே ஜக்கி: எல்லா பெண்களுக்குமே அப்பா என்றால் ஸ்பெஷல். சத்குரு, எல்லோருக்குமே ஸ்பெஷல். அதனால், நான் இன்னும் அற்புதமாக உணர்கிறேன். அவர் மீது அன்புகொண்ட அனைவரும் அந்த அன்பை என்னிடமும் காட்டுகின்றனர். அன்பு நிறைந்தவர்களால் சூழப்பட்டிருப்பது என் பாக்கியம்.

‘ஈஷா சம்ஸ்கிருதி’யில் உங்கள் திட்டங்கள் குறித்து..

ராதே ஜக்கி: வருங்கால தலைமுறையின் நலன் கருதி, சத்குரு நிறுவியதுதான் ‘சம்ஸ்கிருதி’. இங்கு குழந்தைகளுக்கு நடனம் உள்ளிட்டவற்றை கற்றுத் தருகிறேன். பள்ளி பாடங்கள் மட்டுமின்றி, யோகா, களரிப்பயட்டு, இந்திய சாஸ்திரிய இசை, பரதநாட்டியம், சம்ஸ்கிருதம் போன்றவையும் இங்கு உள்ளன.

வெறும் தகவல்களை குழந்தைகள் மேல் திணிக்காமல், அவர்களது இயல்பான திறமைகளை இது வெளிக்கொண்டு வருகிறது. இந்த குழந்தைகள் வலிமையான, உறுதியான, அர்ப்பணிப்புமிக்க மனிதர்களாக உருவாகின்றனர். உலகின் பல்வேறு பகுதிகளிலும் இவர்கள் தங்கள் கலைகளை நிகழ்த்திக் காட்டுகின்றனர். சென்னை வாணி மகாலில் ஜனவரி 7-ம் தேதி கூட ஒரு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.



‘ஈஷா யோகா’வில் உங்கள் பங்களிப்பு என்ன?

ராதே ஜக்கி: யோகா, தியானம் என்றால் வயதானவர்களுக்கானது என்ற எண்ணம்தான் 25 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது. அது ஒரு வாழ்வியல் முறை. ஆரோக்கியமான வாழ்வுக்கு நம்மை அழைத்துச் செல்கிறது என்று இப்போது மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர். ஈஷா யோகாவில் பல லட்சம் தன்னார்வலர்கள் பங்களித்து வருகிறார்கள். அதில் என் பங்கு சொற்பமே.

பலரும் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு விரும்பிச் செல்லும்போது, அமெரிக்காவில் இருந்த சந்தீப் இந்தியா வந்தது ஏன்?

சந்தீப் நாராயண்: அப்பா கே.எஸ்.நாராயண் திருவையாறில் வளர்ந்தவர். அம்மா சுபா மியூசிக் டீச்சர். லாஸ் ஏஞ்சல்ஸில் அப்பா - அம்மா 1980-களில் தொடங்கிய ‘சவுத் இண்டியன் மியூசிக் அகாடமி’, இன்றளவும் அமெரிக்காவில் நமது இசையை பரப்பி வருகிறது. என் 2 அண்ணன்களும் புல்லாங்குழல், மிருதங்க வித்வான்கள். அதனால, சின்ன வயசிலேர்ந்தே, எனக்கும் கர்னாடக இசை மீது நாட்டம் வந்துவிட்டது. நாலு வயசிலயே நான் பாட ஆரம்பிச்சிட்டேன்னு சொல்லுவாங்க.

அம்மாதான் முதல் குரு. அவங்களிடம் கத்துக்கிட்டுதான் அரங்கேற்றம் செய்தேன். பிறகு, கே.எஸ்.கிருஷ்ணமூர்த்தி சாரிடம் பயிற்சி பெற, அமெரிக்காவில் இருந்து சென்னை வந்தேன். 1999-ல் அவர் காலமான பிறகு, சஞ்சய் சுப்பிரமணியனிடம் பயிற்சி பெற்றேன். 2006-ல் அமெரிக்காவில் சட்ட படிப்பை முடித்த பிறகு, இசைதான் என் களம் என முடிவெடுத்து சென்னைக்கே வந்துவிட்டேன்.

ராதே ஜக்கியை எப்போ பார்த்தீங்க?

சந்தீப் நாராயண்: 2012-ல் எங்களது இசை, நடன நண்பர்கள் மூலமாக அறிமுகம் கிடைச்சது. நல்ல நண்பர்களா இருந்தோம். 2014-ல் திருமணம் செய்துகொண்டோம்.

உங்களது இசை, நடன நிகழ்ச்சிகளுக்கு பிறகு விமர்சித்துக் கொள்வீர்களா?

ராதே ஜக்கி: மேடை நிகழ்ச்சிகளின்போது அதிக கைதட்டல்களோ, எதிர்மறை விமர்சனங்களோ உண்மை நிலையை காட்டாது. எனவே, பரஸ்பர விமர்சனம் எங்களுக்கு ரொம்ப முக்கியம். அதில் ரெண்டு பேருமே ரொம்ப வெளிப்படையா, நேர்மையா இருப்போம். சந்தீப்பாவது நாசூக்கா சொல்வார். நான் பட்டென்று சொல்லிவிடுவேன்.

சந்தீப் நாராயண்: ராதேக்கு மியூசிக் தெரியற அளவுக்கு, எனக்கு டான்ஸ் பற்றி தெரியாது. ஆனாலும், தெரிஞ்சவரை நேர்மையான விமர்சனங்களை சொல்வேன். எந்த பாட்டுக்கு ஆடலாம் என்று நானும், கச்சேரியில் என்ன பாடலாம் என ராதேயும் கூறிக்கொள்வோம். ஒரு ரசிகரின் பார்வையில் கிடைக்கும் உண்மையான விமர்சனங்கள், எங்களை மெருகேற்ற உதவுகின்றன.



நடன நிகழ்ச்சிக்காக பல ஊர்கள், வெளிநாடுகள் என பயணிப்பது சிரமமாக இல்லையா?

ராதே ஜக்கி: எனது பரதநாட்டியம் என்னை எல்லா இடத்துக்கும் அழைத்துச் செல்கிறது. அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலி. பயணம் தனிமையானதாக இருந்தாலும், போகும் இடங்களில் எல்லாம் அன்பு நிறைந்த, தாராள மனம் கொண்ட நல்ல மனிதர்கள் நிறைய பேரை பார்க்கிறேன். தங்கள் குடும்பத்தில் ஒருவராக கருதுபவர்களோடு அவர்களது வீட்டில் தங்குகிறேன். சில நேரங்களில் சோர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியாது. ஆனால், அதை கடந்து அடுத்த பயணத்துக்கு தயாராகிவிடுவேன்.



கணவன் - மனைவி இருவரும் ஒரே துறையினராக இருந்தால் சின்னச் சின்ன சிக்கல்கள், மனஸ்தாபங்கள் ஏற்படுவது சகஜம். உங்கள் வீட்டில் எப்படி?

சந்தீப் நாராயண்: கலைஞர்களின் வாழ்க்கை வித்தியாசமானது. திடீரென வெளியூர் கிளம்ப வேண்டி இருக்கும். ஊரே தூங்கும் நேரத்தில் நாங்கள் சாதகம் செய்வோம். புதிய உருப்படிகளை பயிற்சி செய்து பார்க்க வேண்டி இருக்கும். இருவருக்கும் இந்த அனுபவம், பரஸ்பர புரிதல் இருப்பதால், பிரச்சினைகள் வருவதில்லை.

கர்னாடக இசை பெரிய அளவில் ரசிகர்களை சென்று சேரவில்லையோ?

சந்தீப் நாராயண்: யார் சொன்னது. கர்னாடக இசை ரசிகர்கள் எண்ணிக்கை பல மடங்கு பெருகி வருகிறது. டிஜிட்டல் பிளாட்பார்ம் வந்த பிறகு, சபாக்களுக்கு போகவேண்டும் என்ற அவசியம் இல்லை. வீட்டில் இருந்தபடியே ‘லைவ்’ பார்க்கிறார்கள். எனினும், ஃப்யூஷன் மியூசிக் போன்ற வடிவிலும், பல்வேறு ஊடகங்கள் வாயிலாகவும் கர்னாடக இசையை மக்களிடம் இன்னும் அதிக அளவில் கொண்டுசெல்வது அவசியம்.

சபாக்களுக்கு எதேனும் பரிந்துரைக்க விரும்புகிறீர்களா?

சந்தீப் நாராயண்: பரிந்துரைப்பதற்கு விஷயங்கள் உள்ளன. ஆனால், தற்போது பல சபாக்கள் பல்வேறு வழிகளில் மேம்பாடுகளைச் செய்ய தங்களால் இயன்றவரை முயற்சிப்பதை நான் பார்க்கிறேன். இதற்கான பெருமையை நாம் அவர்களுக்குக் வழங்க வேண்டும். நமக்குச் சிக்கல்கள் உள்ள விஷயங்களைப் பற்றியே பேச வேண்டும் என எண்ண வேண்டாமே! பொதுமக்களும் கூட சபாக்களுக்கு நேரில் சென்று நிகழ்சிக்களை ரசிப்பதுடன் பொருளாதார ரீதியாகவும் அதிகம் உதவிட முன்வரவேண்டும்.

நாட்டியம் என்றாலே ‘காஸ்ட்லி’ என்ற எண்ணம் உள்ளதே..

ராதே ஜக்கி: பரதநாட்டியக் கலைஞராக உருவாக ஒருவர் எவ்வளவு மெனக்கிடுகிறார் என்று பார்க்க வேண்டும். ஒரு சிறந்த நடனக் கலைஞரின் பின்னால் பல ஆண்டு உழைப்பு, பயிற்சி இருக்கிறது. இதுதவிர கலையம்சத்துடன் கூடிய நேர்த்தியான நிகழ்ச்சியை வழங்குவதற்கான சிந்தனை, நடன ஒருங்கிணைப்பு, இசைக் கலைஞர்களை ஒருங்கிணைப்பது, உடைகள் வடிவமைப்பு, அரங்க ஏற்பாடு ஆகியவற்றையும் அந்த கலைஞரே மேற்கொள்கிறார்.

இதெல்லாம் சேரும்போதுதான் அது சிறந்த படைப்பாக மாறுகிறது. ரசிகருக்கு நல்ல அனுபவம் கிடைக்கிறது. எனவே, இந்த கலை அனுபவத்தை செலவு அடிப்படையில் மதிப்பிடக் கூடாது. ரசிகர்களும் இந்த உன்னதங்களுக்கு முழு ஆதரவு தரவேண்டும்.

யாரை போட்டியாக கருதுகிறீர்கள்?

சந்தீப் நாராயண்: இது கலை உலகம். எல்லாம் கலை படைப்புகள். ஒருவருக்கொருவர் கற்றுக்கொண்டு மேம்படுத்திக் கொள்ளலாமே தவிர, ஒரு படைப்பை விஞ்சி, அதைவிட சிறப்பாக இன்னொன்று செய்ய போட்டி போடக் கூடாது. முந்திச் செல்ல இது பந்தயம் அல்ல.

ஹிந்துஸ்தானி, நாட்டுப்புற இசை, ஜாஸ், ஹிப்-ஹாப் என மற்ற கலைஞர்களுடன் இணைந்து இசை நிகழ்ச்சிகள், பாரம்பரியம் மாறாத கச்சேரிகள், இசை வகுப்புகள், பயிற்சி பட்டறைகள், சிறப்புரை நிகழ்ச்சிகள், ஆல்பங்கள் என பரபரப்பாக இருக்கிறீர்கள். அடுத்த திட்டம் என்ன?

சந்தீப் நாராயண்: இயன்றவரை இசையை சிறப்பாக கற்க வேண்டும். இயன்றவரை அதை சிறப்பாக மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம். சென்னை ஈசிஆரில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் மையத்தில் ஜனவரி 11-ம் தேதி நடைபெற உள்ள இசை நிகழ்ச்சியில் பல்வேறு கலைஞர்களுடன் இணைந்து பங்கேற்கிறேன். ‘ஈஷா சம்ஸ்கிருதி’யின் இளம் கலைஞர்களும் கலந்து கொள்கிறார்கள்.



ராதே எப்போதும் நேர்த்தியாக உடுத்துகிறீர்கள். இது விளம்பர உத்தியா?

ராதே ஜக்கி: அற்புதமான திறமை, ஆச்சரியமான வடிவமைப்பின் களஞ்சியம்தான் இந்திய ஜவுளிக் கலை. இங்குள்ள நெசவு தொழில்நுட்பம் வேறு எங்கும் இல்லை. தினமும் காலையில் நேர்த்தியாக, சீராக உடை உடுத்துவது அந்த கலையை சிறப்பிக்க, கவுரவிக்க நாம் செய்யும் சிறிய செயல். அவ்வாறு செய்வது நம் பொறுப்பும்கூட.



கர்னாடக இசைக் கலைஞர்களுக்கு போதிய வருமானம் கிடைக்கிறதா?

சந்தீப் நாராயண்: நான் அமெரிக்காவில் பிறந்து, விருப்பப்பட்டுதான் சட்டம் பயின்றேன். அதே துறையில் இருந்தால் நிறைய சம்பாதிக்கலாம். ஆனால், கர்னாடக இசை மீதான ஆர்வத்தால் இதுதான் எனது துறை என்று தீர்மானித்தேன். அமெரிக்காவில் இருந்து இதற்காகவே இந்தியாவுக்கு வந்துவிட்டேன். இதில் கிடைக்கக்கூடிய ஆத்ம திருப்தி, நிம்மதி, சந்தோஷத்துக்கு ஈடு இணை இல்லை. வேறு துறைகளில் கிடைக்கிற வருமானம் இவற்றை ஒருபோதும் தரமுடியாது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x