Published : 18 Dec 2024 06:53 AM
Last Updated : 18 Dec 2024 06:53 AM
2024ஆம் ஆண்டை ‘ஏஐ ஆண்டு’ என்று சொல்லும் அளவுக்குச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சியை உலகம் கண்டது. இந்த ஆண்டு நோபல் பரிசுத் தேர்வுகளும் ஏஐ முன்னேற்றத்துக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையிலேயே அமைந்திருந்தன. கூடவே, இணையவழித் தாக்குதல்களும், அச்சுறுத்தல்களும், முறைகேடுகளும் அதிகரித்தன. சமூக ஊடகப் பரப்பில் செல்வாக்காளர்களின் (Influencers) தாக்கம் பெரும் விவாதத்துக்கு உள்ளானது. இன்னும் எண்ணற்ற நிகழ்வுகளும் தொழில்நுட்பச் சாதனங்களும் தாக்கம் செலுத்திய ஆண்டை ஒரு பறவைப் பார்வையாகப் பார்ப்போம்.
ஏஐ அலை: சாட்ஜிபிடி (ChatGPT) அதன் மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்த நிலையில், எழுத்து வடிவிலான சேவை மட்டும் அல்லாமல், ஒலி, ஒளி திறன் கொண்ட ‘GPT-4o’ மே மாத வாக்கில் அறிமுகம் ஆனது. சாட்ஜிபிடி மேலும் பயனாளிகளை ஈர்த்ததோடு, ஜிபிடி தேடுபொறி சேவையையும் அறிவித்தது. இதன் விளைவாக, சாட்ஜிபிடியின் தாய் நிறுவனமான ஓபன் ஏஐ-யின் சந்தை மதிப்பு மேலும் அதிகரித்தது. சாட்ஜிபிடியின் போட்டி
யாளராகக் கருதப்படும் நிறுவனங்களில் ஒன்றான, ‘ஆந்த்ரோபிக்’ (Anthropic), தனது ‘கிளாடு’ (Claude) சாட்பாட்டில், கணினிச் செயல்பாடுகளைக் கையாளும் திறனை அறிவித்தது. ஃபேஸ்புக்கின் பின்னே உள்ள ‘மெட்டா’ நிறுவனம் தன்னுடைய எல்.எல்.எம் சேவையில் மேம்பாட்டைக் கொண்டுவந்தது. கூகுளின் ‘ஜெமினி’யும் பின்தங்கிவிடவில்லை. எக்ஸ் தளத்தில், அதன் ஏஐ சாட்பாட் ‘கிராக்’ (Grok) தாக்கம் செலுத்தியது.
ஏஐ தேடல்: ஏஐ சேவைகளின் தாக்கம் இணையத் தேடலிலும் எதிரொலித்தது. புத்தாயிரமாண்டுக்குப் பின், இணையத் தேடலில் கூகுளே ஆதிக்கம் செலுத்திவரும் நிலையில், ‘பெர்பெளக்சிட்டி’ (Perplexity AI ) உள்ளிட்ட ஏஐ தேடியந்திரங்கள் பிரபலமடையத் தொடங்கியிருக்கின்றன. இன்னொரு பக்கம், இணையத்தில் தேடித் தகவல் பெறுவதைவிட, சாட்ஜிபிடி உள்ளிட்ட சாட்பாட்களிடம் கேட்டுப் பதில் பெறுவதே தேடலின் எதிர்காலமாக இருக்கும் என்கிற கணிப்புகளும், கருத்துகளும் வெளியிடப்பட்டன.
இந்த நோக்கில் ஜிபிடி தேடல் தொடர்பான அறிவிப்பு முக்கியமாக அமைந்தது. இதனிடையே, தேடலில் ஏஐ போட்டியைச் சமாளிக்க, ‘ஏஐ சர்ச் ஓவர்வியூ’ என்னும் ஏஐ மூலம் தேடல் சார்ந்த முக்கிய தகவல்களைச் சுருக்கமாக முன்கூட்டியே வழங்கும் வசதியைச் சோதனை முறையில் கூகுள் கொண்டுவந்தது.
ஆனால், இந்த ஏஐ வசதி, உணவு தொடர்பான தேடலுக்கு, ‘பீட்ஸாவில் கோந்தை ஒட்டுங்கள்’ என்றும், ‘தீங்கான பொருள் ஒன்றைச் சாப்பிடவும்’ என்றும் ஆபத்தான பரிந்துரையை முன்வைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது விதிவிலக்கான பிழை என கூகுள் சமாளித்தாலும், தேடலில் ஏஐ நுட்பத்தை நம்புவதில் உள்ள பிரச்சினைகளுக்கான முன்னோட்டமாக அமைந்ததை மறுப்பதற்கில்லை.
ஏஐ நிறுவனம்: இணையத் தேடலில் சவாலையும், சர்ச்சையையும் கூகுள் எதிர்கொண்டதோடு, அமெரிக்காவில் இணையத் தேடல் சார்ந்த ஏகபோகம் தொடர்பான வழக்கில் வந்த தீர்ப்பும் அந்நிறுவனத்துக்குப் பாதகமாகவே இருந்தது. இதன் அதிர்வுகள் வரும் ஆண்டிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இணைய உலகில் கூகுளின் ஏகபோக ஆதிக்க நிலையைக் கட்டுப்படுத்துவது குறித்துத் தொடர்ந்து விவாதிக்கப்படும்.
ஆப்பிள் நிறுவனம், புதிய ஐபோன்களை அறிமுகப்படுத்தி, அவற்றில் ஒருங்கிணைக்கப்பட்ட ஆப்பிள் இண்டலிஜென்ஸ் ஏஐ சேவையால் தனது மதிப்பை மேம்படுத்திக் கொண்டாலும், சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியாவே (Nvidia) தொழில்நுட்ப உலகின் புதிய நட்சத்திரமாக அறியப்படுகிறது. எங்கும் ஏஐ, எதிலும் ஏஐ எனப் பேசப்படும் நிலையில், ஏஐ சேவைகளுக்கான உயிர்நாடியான அதிவேக சிப்களைத் தொலைநோக்குடன் தயாரிக்கத் தொடங்கிய என்விடியா இந்த அலையால் அதிகம் பலன் பெறும் நிறுவனமாக உருவாகியுள்ளது.
சைபர் தாக்குதல்: மற்றொரு பெரும் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட் ஓபன் ஏஐ கூட்டு மூலமான ‘கோபைலட்’ (Copilot) உள்ளிட்ட சேவைகள் வாயிலாக முன்னேற்றம் காட்டினாலும், ‘கிரவுட்ஸ்டிரைக்’ நிறுவனத்தின் எதிர்பாராத சைபர் தாக்குதலால் சிக்கலுக்கு உள்ளானது. இந்தத் தாக்குதலுக்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பொறுப்போ, காரணமோ அல்ல என்றாலும், விண்டோஸ் கணினிகளே அதிகம் பாதிப்புக்குள்ளாகின. சைபர் பாதுகாப்பு சேவை வழங்கும் நிறுவனமே சரியாகச் சோதனை செய்யாமல் அனுப்பிவைத்த அப்டேட் வசதியே, உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான கணினிகளை முடக்கி, விமான சேவைகளையும் மருத்துவ சேவைகளையும் பாதித்தது பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது.
இந்தச் சம்பவம் சைபர் பாதுகாப்பில் கவனம் செலுத்துவதன் அவசியத்தை உணர்த்தியது என்றால், இணையக் காப்பகமாக விளங்கும், ‘இன்டர்நெட் ஆர்கேவ்’ தளம் தாக்காளர்களின் கைவரிசைக்கு இலக்கானது கூடுதல் அதிர்ச்சி அளித்தது. இது தவிர, இன்னும் எண்ணற்ற தரவு மீறல்கள் இணையப் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை அடிக்கோடிட்டுக் காட்டின.
நீல வானம்: சமூக ஊடக உலகைப் பொறுத்தவரை, ‘எக்ஸ்’ (டிவிட்டர்) சேவை தொடர்ந்து விமர்சனத்துக்கும் சர்ச்சைக்கும் உள்ளானது. குறிப்பாக, உலகின் முன்னணி நாளிதழ்களில் ஒன்றான பிரிட்டனின் ‘தி கார்டியன்’, எக்ஸ் சேவை நச்சுத்தன்மை மிகுந்துவிட்டதாகக் கூறி, அதிலிருந்து விலகுவதாக அறிவித்தது. மேலும் பல பயனாளிகளும், பல்துறைப் பிரபலங்களும் எக்ஸ் தளத்திலிருந்து வெளியேறிவருகிறார்கள். ஆனால், இந்தப் போக்கால் மெட்டாவின் குறும்பதிவு சேவை ‘திரெட்ஸ்’ (Threads) பலன் பெற்றதைவிட, ‘புளூஸ்கை’ (Bluesky) என்னும் போட்டி சேவையே அதிகம் பலன் பெற்றது. பழைய டிவிட்டர் போன்ற அம்சங்கள் கொண்ட ‘புளூஸ்கை’ வேகமாக வளர்ந்துவருகிறது.
நானே ராஜா! - எக்ஸ் சேவை மீதான விமர்சனங்கள் குறித்தெல்லாம், அதன் புதிய உரிமையாளரான எலான் மஸ்க் அதிகம் அலட்டிக்கொள்வதாகத் தெரியவில்லை. எக்ஸ் தளத்தில் தனது விருப்பப்படி மாற்றங்களைக் கொண்டுவந்தவர், அமெரிக்க அதிபர் தேர்தலில்தான் அதிக ஆர்வம் காட்டினார். அதற்கேற்ப அவர் ஆதரவு தெரிவித்த முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பதால், மஸ்க்கின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது.
இதனிடையே, டெலிகிராம் சேவை சட்ட விரோதச் செயல்களுக்குப் பயன்படுத்தப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக அதன் நிறுவனர் பாவல் துரோவ் ஃபிரான்ஸ் அரசால் கைது செய்யப்பட்டு, நிபந்தனைகளோடு விடுவிக்கப்பட்டார். துரோவின் தனியுரிமைக்கு ஆதரவான செயல்பாடும், போர் எதிர்ப்பு நிலையும், இன்னும் பிற ஆடம்பரச் செயல்பாடுகளும் அவரை நட்சத்திர அந்தஸ்தைப் பெற வைத்தன.
ஏஐயில் இந்தியா: உலகம் முழுவதும் ஏஐ அலை வீசும் பின்னணியில் இந்தியாவில் உள்நாட்டு மொழி மாதிரிகளை உருவாக்கும் விவாதம் தீவிரம் அடைந்தது. அதற்கேற்ப இந்தியாவில் உருவாக்கப்பட்ட பல்வேறு மொழி மாதிரிகளும் கவனம் ஈர்த்தன. ஓலா நிறுவனம், தன் பங்குக்கு மொழி மாதிரி, ஏஐ சாட்பாட் சேவையைக் கொண்டுவந்தது. மேலும், கூகுள் வரைபட சேவைக்குப் போட்டியாகச் சொந்த வரைபட சேவையில் கவனம் செலுத்தப்போவதாக அறிவித்தது.
இதனிடையே பாலிவுட் நட்சத்திரங்களை ஆபாசமாக, போலியாகச் சித்திரித்த டீப்ஃபேக் வீடியோக்கள், ஏஐ நுட்பத்தின் இருண்ட பக்கத்தை உணர்த்தின. ஏஐ தொழில்நுட்பத்தில் உள்ள பிரச்சினைகள் குறித்துப் பகிரங்கமாக விமர்சித்துவந்த ஓபன் ஏஐ நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் சுசிர் பாலாஜி சான்பிரான்சிஸ்கோவில் உள்ள தனது வீட்டில் மர்மமாக மரணமடைந்தது சர்ச்சைக்குள்ளானது. ஓபன் ஏஐ நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரும், கருத்துவேறுபாட்டால் அதிலிருந்து வெளியேறியவருமான எலான் மஸ்க், இந்தச் சம்பவம் குறித்து ஆதங்கத்துடன் ட்வீட் செய்ததும் பேசுபொருளானது.
இன்னொரு புறம், சமூக ஊடகப் பரப்பில் செல்வாக்காளர்களின் அதிகரிப்பும், அவர்களின் தாக்கமும் முக்கிய விவாதமானது. பிழைத் தகவல்கள் பெருக்கத்தின் பின்னணியில் இது நிகழ்ந்தது. குறிப்பாகப் பங்கு வர்த்தகம் தொடர்பான பரிந்துரைகளை நிதி செல்வாக்காளர்கள் வழங்குவது செபி அமைப்பின் தலையீட்டுக்கு வழிவகுத்தது. சமூக ஊடகச் செயல்பாட்டிலும், புரிதலிலும் இன்னும் பெருமளவு விழிப்புணர்வு அவசியம் என்பதையும் உணர்த்தியது.
- தொடர்புக்கு: enarasimhan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT