Published : 18 Dec 2024 06:45 AM
Last Updated : 18 Dec 2024 06:45 AM
ஒவ்வொரு வருடமும் உலகளவில் 40 கோடி டன் ஞெகிழிக் கழிவு உற்பத்தியாவதாக ஐக்கிய நாடுகள் அவை குறிப்பிடுகிறது. இதில் 1.1 கோடி டன் கழிவு கடலில் கலப்பதாகவும்; 2024இன் இறுதியில் இது 2.9 கோடி டன்னாக அதிகரிக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது. அதிகரித்துவரும் ஞெகிழிக் கழிவானது சுற்றுச்சூழலில் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம், உணவு உற்பத்தி போன்றவற்றில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது.
இந்த நிலையில், ஞெகிழி மாசைக் கட்டுப்படுத்துவது தொடர்பான ‘அரசுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தைக் குழு’வின் (The 5th Intergovernmental Negotiating Committee (INC-5) on plastic pollution) ஐந்தாவது மாநாட்டில், உலக நாடுகளிடையே ஆக்கபூர்வமான ஒப்பந்தங்கள் ஏதும் நிறைவேற்றப்படாமல் முடிவடைந்திருப்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஐ.என்.சி. என்றால்? - ஞெகிழி மாசுபாடு குறித்த ஐஎன்சி குழு என்பது சுமார் 170 நாடுகளின் கூட்டமைப்பு. ஐக்கிய நாடுகள் அவையின் சுற்றுச்சூழல் அமைப்பின் ஓர் அங்கமாக இந்தக் குழு செயல்பட்டுவருகிறது. இந்த அமைப்பு, ஞெகிழி மாசுபாட்டைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கான ஒப்பந்தங்களை உருவாக்குகிறது. இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும் ஞெகிழியின் பயன்பாடு, உற்பத்தி, வடிவமைப்பு, மறுசுழற்சி, அகற்றுதல் போன்றவற்றை மையமாகக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், தென் கொரியாவின் பூசான் நகரில் நவம்பர் 25 ஆம் தேதி முதல் டிசம்பர் 1ஆம் தேதி தேதிவரை ஐஎன்சி குழுவின் சந்திப்பு நடைபெற்றது. இச்சந்திப்பில், உலகளவில் ஞெகிழி மாசைக் கட்டுப்படுத்த உருவாக்கப்பட்ட ஒப்பந்தங்களை நிறுவுவதில், உலக நாடுகளிடையே ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. இதன் காரணமாக ஞெகிழி மாசைக் கட்டுப்படுத்தும் உலக நாடுகளின் செயல்பாட்டில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
அதிகரிக்கும் ஞெகிழிக் கழிவு: 1950 முதல் 1970 வரையிலான காலக்கட்டத்தில் உலக அளவில் குறைந்த ஞெகிழிக் கழிவே உற்பத்தியானது. இதனால் அக்கழிவை உலக நாடுகளால் திறம்பட நிர்வகிக்க முடிந்தது. ஆனால், அதற்கடுத்த ஆண்டுகளில் ஞெகிழிப் பயன்பாடு தீவிரமடைந்தது. ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் அமைப்பின் தரவானது, 1979 முதல் 1990வரையிலான காலக்கட்டத்தில் ஞெகிழிக் கழிவு உற்பத்தி மூன்று மடங்காக அதிகரித்திருப்பதாகக் கூறுகிறது.
மேலும், 1990 - 2000 காலக்கட்டத்தில், கடந்த 40 ஆண்டுகளில் இருந்ததைவிட ஞெகிழிக் கழிவின் அளவு கடுமையாக அதிகரித்ததால் அக்கழிவை நிர்வகிப்பதில் உலக நாடுகள் தடுமாற்றம் அடைந்தன. தற்போது, ஒவ்வோர் ஆண்டும் சுமார் 40 கோடி டன் ஞெகிழிக் கழிவை உலக நாடுகள் உற்பத்தி செய்கின்றன. 2050ஆம் ஆண்டுவாக்கில் இது 110 கோடி டன்களை எட்டும் என அறிவியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உலக அளவில்... 70% ஞெகிழிக் கழிவு 20 நாடுகளால் மட்டுமே உற்பத்தியாகிறது. ஒரு வருடத்தில் அதிக அளவு ஞெகிழிக் கழிவை வெளியேற்றும் நாடுகளில் முதல் ஐந்து இடங்களை இந்தியா (93 கோடி டன்), நைஜீரியா (35 கோடி டன்), இந்தோனேசியா (34 கோடி டன்), சீனா (28 கோடி டன்), பாகிஸ்தான் (26 கோடி டன்) ஆகிய நாடுகள் வகிக்கின்றன.
பெரும்பாலான ஞெகிழிக் கழிவு தெற்கு நாடுகளிலிருந்துதான் உருவாகியுள்ளதாக சர்வதேச ஆய்வுகள் கூறுகின்றன. தெற்கு நாடுகள் வெளியேற்றும் ஞெகிழிக் கழிவைக் கையாள்வதற்கான போதிய கழிவு மேலாண்மைக் கட்டமைப்பு அந்நாடுகளிடம் இல்லை எனவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தியாவின் நிலைப்பாடு: 2024இல் பூசானில் நடைபெற்ற ஐஎன்சி கூட்டத்தில் ஞெகிழிக் கழிவைக் குறைக்கவும், முதன்மை ஞெகிழி பாலிமர்களின் உற்பத்தியைக் கட்டுப்படுத்தவும் கொண்டுவரப்பட்ட ஒப்பந்தங்களை ஏற்க இந்தியா மறுத்துவிட்டது. முதன்மை ஞெகிழி பாலிமர்களின் உற்பத்தியைக் கட்டுப்படுத்தினால், நாட்டின் முன்னேற்றம் பாதிக்கப்படும் என்பது இந்தியா தரப்பு வாதமாக முன்வைக்கப்பட்டது. ஞெகிழிக் கழிவைக் குறைக்க, ஒருமுறை மட்டும் பயன்படுத்தித் தூக்கி எறியப்படும் ஞெகிழிப் பொருள்களுக்கு 2022 ஜூலை மாதம் முதல் இந்திய அரசு தடை விதித்தது.
குறிப்பாக, பல்கலைக்கழகங்களில் உணவகங்கள், விடுதிகள் உட்பட்ட இடங்களில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய ஞெகிழிப் பொருள்கள் பயன்படுத்துவதைத் தடை செய்வதாகப் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்தது. எனினும் போதிய விழிப்புணர்வு இன்மையால், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் ஞெகிழியை ஒழிப்பதில் இந்தியா எதிர்பார்த்த இலக்கை அடைய முடியவில்லை.
அரசு தடை செய்திருந்தாலும், அந்தத் தடையை நடைமுறைப்படுத்துவதில் எந்த அக்கறையையும் காட்டவில்லை. ஞெகிழிக் கழிவைக் கட்டுப்படுத்துவதைவிட, ஞெகிழி உற்பத்தி நிறுவனங்களால் கிடைக்கும் குறுகிய கால லாபத்துக்கு மட்டுமே அரசு கவனம் கொடுக்கிறது.
அடுத்து, ஞெகிழிக் கழிவை மறுசுழற்சி செய்யும் முறைகள் தற்போது அனைத்து நாடுகளிலும் பின்பற்றப்படுகின்றன. இந்தியாவிலும் ஞெகிழிக் கழிவை மறுசுழற்சி செய்து சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், அதிகரித்துவரும் மக்கள்தொகைக்கு ஏற்ப ஞெகிழிக் கழிவைத் திறம்பட முறைப்படுத்துவதில் கூடுதலாகக் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது.
ஞெகிழிக் கழிவு எரிபொருளுக்கு மாற்றா? - அதிகரித்துவரும் புவியின் வெப்பநிலையைக் கட்டுக்குள் கொண்டுவர, 2023இல் நடைபெற்ற காலநிலை உச்சி மாநாட்டில் புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பது, ஞெகிழிக் கழிவை மறுசுழற்சி செய்வது தொடர்பான கொள்கைகளை உலக நாடுகள் ஏற்றுக்கொண்டன. அதன்படி, ஞெகிழிக் கழிவை எரிபொருளாக மாற்றும் முறையை நிபுணர்கள் பரிந்துரைத்தனர்.
ஆனால், “காலநிலை மாற்றமும் ஞெகிழி மாசும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்; அவ்வாறு இருக்கும்போது புவி வெப்பத்துக்குக் காரணமான கார்பன் உமிழ்வைக் குறைக்க ஞெகிழிக் கழிவைப் பயன்படுத்துவது என்பது இலக்கில்லாமல் படகில் பயணிப்பதற்குச் சமம்” என ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்ட இயக்குநர் இங்கர் ஆண்டர்சன் விமர்சித்திருந்தார்.
ஞெகிழி மாசைக் குறைக்கும் ஒப்பந்தங்களை நிறைவேற்றுவதற்கான பேச்சுவார்த்தைகளை 2025இல் ஐஎன்சி மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது உலக நாடுகளிடம் ஒருமித்த கருத்து ஏற்படும் எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஞெகிழிக் கழிவைச் சரியான முறையில் கையாள்வதற்கான நிரந்தரத் தீர்வை நோக்கி உலக நாடுகள் நகருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT