Last Updated : 16 Jul, 2018 08:22 AM

 

Published : 16 Jul 2018 08:22 AM
Last Updated : 16 Jul 2018 08:22 AM

அனைத்துச் சமூகத்தினருக்குமான இயக்கமாக பாமக உருவெடுக்கும்!: ராமதாஸ் பேட்டி

பி

டிவாதமாக சென்னைக்கு வெளியே தன்னை இருத்திக்கொண்டிருக்கும் தலைவர் ராமதாஸ். திண்டிவனம் – புதுச்சேரி சாலையில் உள்ள தைலாபுரம் செல்லும் பயணம் தமிழ்நாட்டின் அரசியல் சூழலுக்கும் சமூக, பொருளாதாரச் சூழலுக்கும் உள்ள பிணைப்பைக் குறுக்குவெட்டாகப் பார்க்க உதவுகிறது. அகலமான சாலையின் இருபுறங்களிலும் நீளும் வயற்காட்டின் பெரும் பகுதி தரிசாகக் கிடக்கிறது. பிரதான சாலையிலிருந்து பிரிபடும் கிராமத்துச் சாலைகளின் நுழைவாயிலை ஒட்டி ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் கொடி மரங்கள், பிராந்தியத்தின் அரசியலைத் தீர்மானிக்கும் சமூகச் சூழலைச் சொல்கின்றன. சிறுத்தைகள், சிங்கங்கள் படங்களும் பொம்மைகளும் மாறி மாறி கடக்கின்றன. சாதிக்கு அப்பாற்பட்டு பெரும்பான்மையான மக்கள் வறண்ட கண்களுடனேயே நிற்கிறார்கள். வழிநெடுகிலும் தென்படும் மாடுகள் விவசாயிகளை மேய்ச்சல் எப்படி காத்துக்கொண்டிருக்கிறது என்பதைச் சொல்கின்றன. ராமதாஸ் வீட்டு எல்லையின் தொடக்கத்தில் மார்க்ஸ், பெரியார், அம்பேத்கர் மூவரின் சிலைகளும் நிற்கின்றன. மதில்கள் உயர்ந்த, மரங்கள் அடர்ந்த வீட்டில் வரவேற்கிறார் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ்.

கிராமத்திலிருந்து உங்களைப் பிரிக்க முடியாததுதான் உங்களுடைய பலமும் பலவீனமும் என்று சொல்லலாமா?

கிராமத்து மனுஷன் நான். பிறந்த ஊரான கீழ்சிவிறியை வேறு வடிவில் இங்கே பார்க்கிறேன். என்னுடைய வளர்ச்சி, சிந்தனை, செயல்பாடு எல்லாமும் கிராமத்து வாழ்க்கையும் கிராமத்து மனிதர்களும் உருவாக்கியது. திண்டிவனம் என்ற ஒரு சிற்றூரிலிருந்து பாமக என்ற அரசியல் இயக்கம் வளர்ந்திருக்கிறது என்றால், கிராமத்திலிருந்து பெறும் பலம் அது. நீங்கள் அதில் பலவீனமும் இருக்கிறது என்று சொன்னால், கிராமங்களைப் பலவீனமான சூழலில் வைத்திருக்கும் ஆட்சியாளர்களைத்தான் குற்றஞ்சாட்ட வேண்டும்.

இளம் பிராயத்தில் நிறையக் கஷ்டப்பட்டிருக்கிறீர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். உங்களுடைய இன்றைய வாழ்க்கையைக் கட்டமைத்ததில், இளம் பிராயத்தின் தாக்கம் என்ன?

இளம் பிராய வாழ்க்கையின் தாக்கம்தான் பின்னாளைய உலகத்தைப் புரிந்துகொள்ள உதவியது. என்னுடைய தகப்பனார் ஒரு சிறு விவசாயி. திண்ணைப் பள்ளிக்கூடத்தில், ஓலைச்சுவடியில் படித்தேன். அப்போது எங்கள் ஊருக்கு அச்சடித்த புத்தகம்கூட வந்திருக்கவில்லை. மரத்தடியில் தரையில் மணலைப் பரப்பி ‘அ, ஆ’ எழுதிப் பழகினோம். கையெல்லாம் கொப்புளம் வந்துவிடும். நன்னெறி, மூதுரை, விவேக சிந்தாமணி இதெல்லாம் பாடங்கள். திண்ணைப் பள்ளிக்கூடம் போதவில்லை. அப்போது, எங்கள் ஊரில் பாலசுந்தரம் என்று ஒரு காந்தியர், அவரும் அவர் மனைவியும் சேர்ந்து ஆதிதிராவிடர் காலனியில் ‘காந்திஜி ஆதாரப் பள்ளி’ என்ற பள்ளிக்கூடத்தை நடத்தினார்கள். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள். தீண்டாமை பார்த்து அந்தப் பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிட என்னுடைய அப்பா மறுத்தார். நான் மீறினேன். பள்ளிக்கூடம் போய் வந்ததும், சட்டையையும், டவுசரையும் கழற்றிவிட்டு குளிக்க வேண்டும்; இல்லையென்றால் வீட்டுக்குள் அம்மா விட மாட்டார்கள். ஆனால், பாலசுந்தரம் அண்ணா - கமலா அக்கா என்று ஊரே கும்பிட்டு, அந்த தம்பதியிடம் பஞ்சாயத்துக்குச் செல்லும் காலமும் பிற்பாடு வந்தது. அவர்கள்தான் நான் தொடக்கக் கல்வி தாண்டி வெளியூர் போய் படிக்கவும் பள்ளிக்கூடம் காட்டிவிட்டார்கள். பத்து வயது இருக்கும். உறவினர் வீட்டில் தங்கி படிக்க காஞ்சிபுரம், எலப்பாக்கத்துக்கு என்னுடைய குடும்பத்தார் அனுப்பினார்கள். அவர்கள் வீட்டில் இன்னும் கஷ்டம். தினமும் சாணி பொறுக்க வேண்டும். இரண்டு மைல் நடந்து சென்று, சாணி பொறுக்கி கூடையைத் தலையில் வைத்துக்கொண்டு நடந்தால் உடலெல்லாம் வழியும்; கால் கசந்து போகும். வந்து குளித்துவிட்டு பள்ளிக்கூடம் ஓட வேண்டும். ஆறாம் வகுப்புக்கு மேல் சென்னையிலுள்ள என்னுடைய அக்கா வீட்டுக்கு அனுப்பினார்கள். பாலசுந்தரம் ஆசிரியரிடம் போனேன். சென்னை ராயபுரம், மீனாட்சியம்மன்பேட்டை ‘கண்ணப்பநாயனார் பள்ளி’யில் சேர கடிதம் கொடுத்தார். பெரியசாமி என்ற அவருடைய சினேகிதர் நடத்திய பள்ளி இது. என்னுடைய மாமா துறைமுகக் கூலி. ‘சாப்பாடு மட்டும்தான் போடுவோம்’ என்று கறாராகச் சொல்லிவிட்டார். புத்தகம் வாங்க காசில்லாமல், ஒவ்வொரு வாத்தியாரும் அவர்கள் புத்தகத்தை இரவல் தர வாங்கிப் படித்தேன். வீட்டில் மின் விளக்கு இல்லாததால், ராபின்சன் பூங்காவுக்குப் போய் அங்குள்ள வெளிச்சத்தில் படித்தேன். பிற்பாடு எம்.சி.ராஜா அரசினர் விடுதியில் தங்கியிருந்தேன். நல்ல மதிப்பெண் எடுத்ததால், மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. செலவை எதிர்கொள்ள பள்ளி மாணவர்களுக்கு டியூஷன் எடுத்தேன். இரண்டு செட் உடைக்குத்தான் வழி இருக்கும். ஒயிட் அண்டு ஒயிட் ஆடைக்கு மாறினேன். தூய்மையாக இருப்பதை வெளிப்படுத்தியது மாதிரியும் ஆயிற்று; ஆடைப் பற்றாக்குறையையும் மறைத்தது மாதிரியும் ஆயிற்று, இல்லையா? இப்படியெல்லாம் கஷ்டத்தில் கழிந்தது இளமைக் காலம். அதுதான் படிப்பை முடித்ததும் மறுபடியும் சொந்த ஊரில் வேலை செய்யும் உத்வேகத்தையும் தந்தது. 1967-ல் மருத்துவராகி திண்டிவனம் வந்துவிட்டேன்.

நீங்கள் பள்ளி – கல்லூரியில் படித்த காலகட்டம்தான் தமிழ்நாட்டில் இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டத்தில் மாணவர்கள் தகித்துக்கொண்டிருந்த காலகட்டம். உங்களை அது இழுக்கவில்லையா?

இல்லை. எனது சொந்த வாழ்க்கையே அப்போது பெரும் போராட்டமாக இருந்ததே!

அரசியல் ஈடுபாடு எப்போது வந்தது? முதன்முதலில் உங்களை ஈர்த்த அரசியல்வாதி யார்?

அண்ணா. பெரிய ஆளுமை. மருத்துவக் கல்லூரியில் படித்த காலகட்டத்தில் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அண்ணாவைப் பார்க்கப் போவேன். அவர் எங்கே கூட்டம் பேசினாலும் போய்க் கேட்பேன். அப்போது சென்னையில் கோகலே ஹால் போன்ற இடங்களில் ஞாயிறுதோறும் கூட்டங்கள் நடக்கும். பெரியார், அண்ணா, ஈ.வி.கே.சம்பத் கூட்டங்களை விட மாட்டேன். மற்றபடி அரசியலில் ஈடுபாடு என்பதெல்லாம் பிற்பாடு வந்தது. திண்டிவனம் அரசு மருத்துவமனையில் மருத்துவம் பார்க்க உட்கார்ந்த பிறகு வந்தது. நாளெல்லாம் நோயாளிகளைப் பார்ப்பேன். நம்மூர் மக்கள், நம் கடமை என்ற எண்ணம். ஆட்கள் அதிகரித்தபோது தனியாக க்ளினிக் தொடங்கினேன். பார்க்க ஒரு ரூபாய். ஊசி போட்டு மருந்து கொடுத்தால் மூன்று ரூபாய். பலருக்கு அதற்கும் வழி இருக்காது. சிலருக்கு ஊர் திரும்ப பஸ்ஸுக்கு காசு கொடுக்க வேண்டும். தலையைச் சொறிவார்கள். அவ்வளவு ஏழ்மை. அப்போதுதான் யோசித்தேன். ‘இது ஒரு ராமதாஸ் வைத்தியம் பார்த்து தீரும் நோய் அல்ல; அரசியல் வழியே தீர்க்க வேண்டிய நோய். சமூக நீதி ஒன்றே சிகிச்சை.’ அரசியல் அதுவாக உள்ளே இழுத்தது.

முதலில் 28 வன்னியர் சங்கங்களை ஒருங்கிணைத்து ஒரே அமைப்பாக வன்னியர் சங்கம் ஆக்கினீர்கள். 20% தனி இட ஒதுக்கீடு கோரினீர்கள். இங்கே இரு கேள்விகள். பெரியார், அண்ணா மீது உங்களுக்குப் பெரிய மதிப்பு இருந்திருக்கிறது. வகுப்புவாரி பிரதிநிதித்துவம் பேசுகிறீர்கள். திராவிட இயக்கம் உங்களுடைய இயல்பான தேர்வாக இருந்திருக்கலாம். ஏன் புதிய கட்சி நோக்கி நகர்ந்தீர்கள்? வகுப்புவாரி பிரதிநிதித்துவமும் சாதி ஒழிப்பும் ஒன்றல்ல என்றாலும், திராவிட இயக்கமானது பொது வாழ்வில் சாதி அடையாளத்தை ஒதுக்கிவிட்டு, அதைக் கோரியது. நீங்களோ சாதி அடையாளத்தை வரித்துக்கொண்டு அதைச் செய்தீர்கள். என்ன காரணம்?

பெரியார், அண்ணா மீதான மதிப்புக்கும் நான் களத்தில் இறங்கிய காலத்துக்கும் வேறுபாடு இருக்கிறது. அவர்கள் மறைவுக்குப் பிறகே நான் அரசியலுக்குள் வருகிறேன். பெரியார், அண்ணாவுக்குப் பிந்தைய திராவிட அரசியல் எனக்கு உடன்பாடாக இல்லை. திராவிடக் கட்சியினர் சொன்னதைச் செய்திருந்தால் ஏன் வன்னியர் சமூகத்துக்கு 20% ஒதுக்கீடு கேட்டு நான் போராட்டத்தில் இறங்க வேண்டும்? வாரத்தில் ஐந்து நாட்கள் மருத்துவமனை, இரண்டு நாட்கள் கிராமங்கள் என்று ஏன் ஊர் ஊராக அலைய வேண்டும்? தமிழ்நாட்டில் அதிகமான எண்ணிக்கையைக் கொண்டது வன்னியர் சமூகம். ஆனால், கல்வியிலும் பொருளாதாரத்திலும் மோசமாகப் பின்தங்கியிருந்தது. அரசு வேலைகளில் இரண்டு சதவீதம் பிரதிநிதித்துவம்கூட இல்லை என்று 1989-ல் பிரதமர் ராஜீவுக்கு ஆளுநர் மாளிகையிலிருந்து ஒரு குறிப்பு போகிறது. அப்படியென்றால், ஆரம்ப நிலை எப்படி இருந்திருக்கும்? நான் கீழே இறங்கி, 21 பேர் தங்கள் உயிரைக் கொடுத்த பின்தானே மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவு உருவாக்கப்பட்டு இங்கே 20% ஒதுக்கப்பட்டது? வன்னியர் சமூகத்துக்கு மட்டும் இல்லை, 108 சமூகங்களுக்கு சேர்த்து நடந்த ஒதுக்கீடு அது. அப்புறம், சாதியை யார் ஒதுக்க முடிந்திருக்கிறது? சமூகம் இல்லையா சாதியைச் சுமத்துகிறது? தமிழ்நாட்டில் திமுகவும், அதிமுகவும் செயல்பட்ட விதம் சரி என்றால், சாதிகளுக்குள் ஏன் இன்றும் இவ்வளவு ஏற்றத்தாழ்வுகள்? 1985-ல் மானுவிடவியல் ஆய்வறிக்கை ஒன்று வெளியானது. இந்தியாவில் உள்ள 4,425 சாதிகளில் தமிழ்நாட்டில் 370 சாதிகள் இருக்கின்றன என்று அது சொன்னது. அதாவது, நாட்டிலேயே இன்று அதிகமான சாதிகள் உள்ள மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. இந்தச் சாதிகளின் சமூக, பொருளாதார அந்தஸ்தைப் பற்றி அந்த ஆய்வறிக்கை சொல்வதைப் படித்தால் இங்கே எவ்வளவு அநீதிகள் இருக்கின்றன என்பது புரியும். சாதியின் பெயரால்தான் எல்லாம் நடக்கிறது. வன்னியர் சமூகத்துக்காக மட்டும் நான் பேசவில்லை. வன்னிய சமூகத்துக்கு 20% இடஒதுக்கீடு வேண்டும் என்று கேட்ட அதே காலகட்டத்தில்தான் தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டை 22% ஆக உயர்த்த வேண்டும் என்றும் கேட்டேன். ‘இந்தச் சாதிய சமூகத்திலே எல்லோர்க்கும் சம நீதி கிடைக்க வேண்டும் என்றால், அவரவர் மக்கள்தொகைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட வேண்டும்’ என்றார் பெரியார். அதுதான் பாமகவின் கொள்கையுமானது.

கொள்கையளவில் வேறாகவும், நடைமுறையில் வேறாகவும் பாமக வெளிப்படுவது எங்கு தொடங்கியது? தாழ்த்தப்பட்ட மக்கள் மேம்பாட்டில் பிரக்ஞை கொண்ட இயக்கமாகவே பாமக தோன்றியிருக்கிறது. தமிழ்நாடு எங்கிலும் அம்பேத்கர் சிலைகளை நிறுவியது உட்பட நிறைய காரியங்களையும் முயன்றிருக்கிறீர்கள். பின்னாளைய எதிர் காரியங்கள், வன்முறைகள், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான அணிதிரட்டல் இதற்கெல்லாம் காரணம் என்ன?

இவையெல்லாம் விசிகவுடன் முறிவு ஏற்பட்ட பிறகு செய்யப்படும் பிரசாரங்கள். பொதுவெளியில், வீச்சரிவாளிலிருந்து ரத்தம் சொட்டுவதுபோல சுவர் விளம்பரம் செய்பவர்களுக்கு, என்னை வன்முறையாளன் என்று சொல்ல எந்தத் தகுதியும் கிடையாது. நான் பேருக்காக தாழ்த்தப்பட்ட மக்கள் நலனைப் பேசிய ஆள் இல்லை. என் இளம்பிராயம் முழுக்க அவர்களுடன் இருந்திருக்கிறேன். பாலசுந்தரம் ஆசிரியர் நடத்திய ‘காந்திஜி ஆதாரப் பள்ளி’ எங்கே இருந்தது? காலனியில் இருந்தது. என்னைத் தவிர அங்கே படித்தவர்கள் எல்லோரும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள். சென்னையில் மீனாட்சியம்மன்பேட்டை ‘கண்ணப்பநாயனார் பள்ளி’யில் படித்தேனே, அதுவும் தாழ்த்தப்பட்ட மக்களுடைய பகுதிதான். தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பெரும்பான்மையாகப் படித்த பள்ளிதான். பிற்பாடு எம்.சி.ராஜா விடுதியில் தங்கியிருந்தேனே, நூற்றுக்குத் தொண்ணூறு பேர் தாழ்த்தப்பட்ட மாணவர்கள்தான். அவர்கள் படும் பாட்டை நேரில் கண்டவன் நான். விளைவாகவே பாமகவின் இலக்குகளில் தாழ்த்தப்பட்ட சமூகத்தின் மேம்பாட்டையும் அவர்களுடைய பிரதிநிதித்துவத்தையும் இணைத்தோம். இரட்டைக் குவளை ஒழிப்பு இயக்கம் நடத்திய கட்சி பாமக. கோயில் நுழைவு இயக்கம் நடத்தி, தாழ்த்தப்பட்டோர் நுழைய முடியாதிருந்த கோயில்களுக்குள் வன்னிய சமூகத்தினரைக் கொண்டு அவர்களுக்கு மாலை அணிவிக்கச் செய்து உள்ளே அழைத்துச் சென்ற கட்சி பாமக. எங்களுடைய அக்கறை மக்களுக்குத் தெரியும். 1980 வரை திண்டிவனத்தில் அரசுப் பள்ளி கிடையாது; நான், கல்யாணி உள்ளிட்டோர் போராடி கொண்டுவந்தோம் என்று சொன்னால் நம்புவீர்களா? இப்படியான பாதிப்புகள் எல்லாச் சமூகத்தினரையும் சேர்த்து பாதிப்பது. பாதிப்பு உங்களுக்கு அதிகமாகவும், எனக்குக் குறைவாகவும் இருக்கலாம். எனக்கு உங்கள் மீது அக்கறை இருக்கிறது என்றால், நீங்களும் என் மீது அக்கறை காட்ட வேண்டும். இருவரும் பாதிக்கப்பட்டு நிற்கும்போது ஒருவர், மற்றொருவரைப் பார்த்து ‘நீ ஆதிக்க சாதி திமிரில் நிற்கிறாய்’ என்று சொன்னால், அது ஆக்கபூர்வமான தீர்வைக் கொடுக்காது.

இங்கே ஒரு சிக்கல் இருக்கிறது. சமூகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் இடையே ஒரு முரண் பிளவு இருக்கிறது. பொருளாதாரத் தளத்தில் இருவரும் பாதிப்புற்ற சமூகங்களாக இருக்கிறார்கள். சமூகநீதி கேட்கிறார்கள். ஆனால், சமூக தளத்தில் ‘நான் மேலே, நீ கீழே’ என்ற அணுகுமுறை பிற்படுத்தப்பட்ட மக்களிடம் இருக்கிறது. இது பேசப்பட வேண்டியதும், களையப்பட வேண்டியதும்தானே?

ஆமாம். களையப்பட்டுதான் ஆக வேண்டும். அதை முன்னிறுத்திதான் பிற்படுத்தப்பட்டோர் – தாழ்த்தப்பட்டோர் ஒற்றுமை என்ற விரிந்த பார்வையில் பாமகவின் கொடியில் நீலத்தைச் சேர்த்தோம். கட்சியின் பொதுச்செயலாளர் பதவியைத் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவருக்கு ஒதுக்குகிறோம். பாமகவுக்குக் கிடைத்த முதல் மத்திய அமைச்சர் பதவியை தலித் எழில்மலைக்குக் கொடுத்தோம். மதுரையில் இருந்த திருமாவளவனை, ‘நம்மூர் பக்கம் வாருங்கள். இருவரும் சேர்ந்து அரசியல் செய்வோம்’ என்று கூட்டிவந்தவன் நான்தான். விசிக விழாவில் ‘அம்பேத்கர் சுடர்’ விருது கொடுத்து அரை மணி நேரம் என் பணிகளைப் பேசினார். எனக்குத் ‘தமிழ்க்குடிதாங்கி’ என்று பட்டம் கொடுத்தவர் திருமாவளவன். எதற்காக கொடுத்தார்? குடிதாங்கி கிராமத்திலே, தாழ்த்தப்பட்ட ஒருவர் இறந்தபோது பிணத்தைப் பொதுவீதி வழியாக எடுத்துச் செல்ல முடியவில்லை. அந்த உடலைக் கொண்டுசென்று நான் அடக்கம் செய்தேன். அதற்காகப் பட்டம் கொடுத்தார். சொந்த சாதியினர் தவறாக நடந்தபோது அதைக் கண்டித்து, அவர்கள் எதிர்ப்பை மீறிச் செயல்பட்டு இதைச் செய்தேன். நீங்களும் உங்கள் சமூகத்தில் ஒரு தவறு நடக்கும்போது அதைக் கண்டிக்க வேண்டும் இல்லையா? கீழே கல்யாண கட்டப் பஞ்சாயத்து நடக்கிறது, பேரம் நடக்கிறது. இது எதையும் களைய திருமாவளவன் முற்படவில்லை. அவர் என்றில்லை, புதிதாக உருவாகிவரும் தலித் தலைவர்களும் சரி, ஆய்வாளர்களும் சரி; ஒரு வெறுப்பைக் கொண்டிருக்கிறார்கள். தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் பாடுபட்ட எந்த மாற்றுச் சமூகத் தலைவரை இவர்கள் அங்கீகரிக்கிறார்கள்? பெரியாரையே இன்று தலித் விரோதியாக சித்திரிக்க தலித் ஆய்வாளர்கள் துடிக்கவில்லையா? என்னை விட்டுவிடுங்கள், இவர்கள் செல்லும் பாதை சரி என்றால், சமூகத்தில் சாதியுணர்வு குறையத்தானே வேண்டும், ஏன் நாளுக்கு நாள் அதிகமாகிறது? வெறுப்பு இணக்கத்தைத் தராது. ஒன்றை உறுதியாகச் சொல்கிறேன், சமூக நீதி பேசுகிற எவரும் தாழ்த்தப்பட்ட மக்கள் மேம்பாட்டைப் புறக்கணிக்க முடியாது. தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான பாமகவின் அக்கறையும் குறையாது. ஆனால், அந்த மக்களிடமிருந்தே அந்நியப்பட்டிருக்கிற இவர்களுடைய சான்றிதழ் எங்களுக்கு வேண்டியதில்லை. நாம் அடுத்த விஷயத்துக்குப் போவோம்.

தமிழ் தேசியம் பேசுகிற கட்சிகளுக்கான பொதுப் பண்புகளில் ஒன்று, இந்தி ஆதிக்கம், இந்துத்துவ ஆதிக்கத்துக்கு எதிரான உறுதியான நிலைப்பாடு. தமிழ் தேசியம் பேசும் பாமக இந்த விஷயத்தில் மாறுபட்டு, பாஜகவுடன் உறவாடுகிறதே எப்படி?

இல்லை! கடந்த காலங்களில் பாஜகவுடன் கூட்டணி வைத்தற்காக இப்போது வருந்துகிறோம். நூறு சதவிகிதம் உறுதியாகச் சொல்கிறோம். இந்தியும் இந்துத்துவமும்தான் இந்தியா என்று உருவாக்கப்படும் சூழலை நாங்களும் கடுமையாக எதிர்ப்போம்.

கடைசி வரை நீங்களோ, உங்கள் குடும்பத்தினரோ சட்ட மன்ற, நாடாளுமன்றப் பதவிக்கு வர மாட்டோம் என்று அறிவித்தீர்கள். குடும்ப - வாரிசு அரசியலுக்கு எதிராகப் பேசிய நீங்கள் அன்புமணியை உள்ளே கொண்டுவர எது காரணமாக இருந்தது?

உங்கள் கேள்வியே தவறு. நான் இதுவரை சட்ட மன்றத்திலோ, நாடாளுமன்றத்திலோ எந்தப் பதவியிலும் இல்லாதபோது, அன்புமணி அந்தப் பதவிக்கு வருவது எப்படி வாரிசு அரசியலாகும்? அரசியலில் நான் ஒரு முனிவன். கட்சிதான் அன்புமணியை அரசியலில் திணித்ததே தவிர, நான் திணிக்கவில்லை.

தேர்தலில் அரசியல் கணக்குகளில், குறிப்பாக தொகுதிகளைப் பெறுவதில் நீங்கள் ஒரு வியூகக்காரர் என்ற பேச்சுண்டு. ஆனால், உங்களுடைய பேட்டி ஒன்றை வாசித்தபோது ஏராளமான சமயங்களில் பாமக ஏமாற்றப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருந்தீர்கள். சின்ன கட்சிகளைப் பெரிய கட்சிகள் கையாள்வதில் உள்ள திரைமறைவு விஷயங்களைக் கொஞ்சம் பேசலாமா?

பொதுவாக, தொகுதி உடன்பாட்டுக்கு நான் செல்வதில்லை. பிரதிநிதிகளை அனுப்புவேன். நாங்கள் கேட்பது கிடைத்தால்தான் தொகுதி உடன்பாட்டில் கையெழுத்திடப் போவேன். நான் இறுதி முடிவு எடுக்கும் இடத்தில் உள்ள நிலையில், நானே பேச்சுவார்த்தைக்கு நேரே சென்றால் பேச்சுவார்த்தையின் பெயரால் தர்மசங்கடத்தில் தள்ளி ஒழித்துவிடுவார்கள் என்றுணர்ந்து கையாளும் முறை இது. ஆனால், நாம் என்ன முன்னெச்சரிக்கையாக இருந்தாலும், அவர்கள் வேலையைக் காட்டுவார்கள். இரு உதாரணங்கள் சொல்கிறேன். 1996 தேர்தலை எடுத்துக்கொண்டால், பாமக உள்ளிட்ட ஏழு கட்சி கூட்டணியை இரண்டாண்டுகளுக்கு முன்னரே உருவாக்கியிருந்தது திமுக. கடைசி நேரத்தில் காங்கிரஸை உடைத்துக்கொண்டு மூப்பனார் வந்ததும், ‘நண்பர்களாகச் சேர்ந்தோம், நண்பர்களாகவே பிரிவோம்’ என்று சொல்லி எங்களைக் கழற்றிவிட்டுவிட்டு தமாகாவோடு சேர்ந்துகொண்டார் கருணாநிதி. 1998 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணியில் 4 இடங்களில் வென்றோம். எங்களுக்குக் கிடைக்க வேண்டிய காபினெட் அமைச்சர் பதவி ஒரேயொரு இடத்தில் வென்ற வாழப்பாடி ராமமூர்த்திக்குச் சென்றது. ராமமூர்த்தி, ஜெயலலிதா, பாஜக மூவருமே இதில் விளையாடினார்கள். இப்படி ஒவ்வொரு தேர்தலிலும் சொல்லலாம். முக்கியமான விஷயம் என்னவென்றால், திமுக, அதிமுக யாரோடு கூட்டணியில் இருந்தாலும், பாமக நிற்கும் இடங்களில் இந்த இரு கட்சிகளும் தங்களுக்குள் ஒரு கள்ளக் கூட்டணியை உருவாக்கி எங்களைத் தோற்கடிப்பதைப் பல சமயங்களில் செய்திருக்கிறார்கள். பொதுவாக, சிறிய கட்சிகள் வளர்வதைச் சகிக்க மாட்டார்கள். பாமகவை ஒழிக்க, கட்சியை உடைக்க பல முறை முற்பட்டிருக்கிறார்கள். தொகுதி உடன்பாடு பேச அனுப்புபவரையே வளைத்த வரலாறும் உண்டு.

தமிழக முதல்வர்களில் கருணாநிதிக்கும் உங்களுக்கும் இடையே ஒரு நெருக்கமான உறவு இருந்தது. உங்கள் கோரிக்கைகள், திட்டங்களை அதிகம் செயலாக்கியவர் அவர். நீங்களோ எம்ஜிஆர், ஜெயலலிதாவைக் காட்டிலும் கருணாநிதியையே அதிகம் விமர்சித்தீர்கள். இதை எப்படிப் புரிந்துகொள்வது?

உண்மைதான். நான் சொன்ன வடிவில் – முழுமையான அளவில் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றாலும், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு தொடங்கி சமச்சீர்க்கல்வி வரை எவ்வளவோ விஷயங்களில் கருணாநிதி என் கோரிக்கைகளை ஏற்றிருக்கிறார். அதை வெளிப்படையாகக் குறிப்பிடவும் செய்திருக்கிறார். ஆனாலும், ஏன் அவரை அதிகம் விமர்சித்தேன் என்றால், ஏனைய இருவரையும் அரசியல் தலைவர்களாகவே கருதவில்லை என்பதால்தான். எம்ஜிஆர் ஒரு நல்ல நடிகர், ஜெயலலலிதா அவர் வழிவந்த நடிகை. அதிமுக ஒரு ரசிகக் கூட்டம். அதிமுகவுக்கு என்று என்ன கொள்கை இருந்தது? ஹெலிகாப்டரையும் காரையும் பார்த்து கும்பிடும் கூட்டம் அது. எவ்வளவு மோசமான கூட்டம் அது என்பதற்கு பழனிசாமியின் இன்றைய ஆட்சி உதாரணம். திமுகவை அப்படிச் சொல்ல மாட்டேன். கருணாநிதி பண்பட்ட அரசியல்வாதி. ஆனால், நிறையத் தவறுகளை அவர் செய்தார். முக்கியமாக தமிழ்நாடு ஊழல் மாநிலமாக, குடிபோதைமாநிலமாக மாற அவரும் ஒரு காரணம். அதனால்தான் விமர்சித்தேன்.

நாம் தொடங்கிய இடத்துக்கே மறுபடி வருவோம். பாமக முன்வைக்கும் மாற்றுக் கொள்கைகளில் முக்கியமானது விவசாயக் கொள்கை. பொருளாதாரத்துக்கு கிராமப்புற வடிவம் கொடுக்க முற்படும் ஒரு கனவு அதில் வெளிப்படுகிறது. ஆனால், நவீன அறிவியல் - தொழில்நுட்பம், தொழில் கொள்கை போன்றவற்றில் ஏனைய கட்சிகளின் தீவிரத்துடனேயே அதுவும் பேசுகிறது. ஒரு நாட்டின் தொழில், கல்விக் கொள்கையை மாற்றாமல் விவசாயக் கொள்கையை மட்டும் மாற்றி மாற்றத்தை உருவாக்கிவிட முடியுமா?

கல்வி, சுகாதாரம் இரண்டிலும் ஏழை – பணக்காரர் பாகுபாட்டுக்கு இடம் இல்லாத வகையில் அரசு அதைக் கட்டணம் இல்லாமல் கொடுக்க வேண்டும் என்பது எங்களுடைய நிலைப்பாடு. பெரும்பான்மையோர் விவசாயத்தில் இருக்கிற இந்த நாட்டில் விவசாயத் துறையில் ஏற்படுத்துகிற மாற்றமே எல்லாவற்றையும் மாற்றும் என்பது எங்கள் கணக்கு. தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால் மூன்றில் இரு பங்கினர் விவசாயம் சார்ந்த தொழில்களில் இருக்கின்றனர். ஆனால், மாநிலத்தின் உற்பத்தி மதிப்பில் பதினான்கில் ஒரு பங்கு மட்டுமே இவர்களின் பங்கு. இந்த பாரதூர வேறுபாட்டைக் குறைக்க நடவடிக்கை எடுத்தாலே அதற்கேற்ப ஏனைய விஷயங்கள் தானாக மாறும். இரண்டு போகத்துக்குப் பாசனத்துக்கு நீர் கிடைப்பதை உறுதிசெய்துவிடுவதாக வைத்துக்கொள்ளுங்கள். நகரத்துக்கு வேலை தேடி வரும் கூட்டம் எவ்வளவு குறையும்? கிராமத்திலேயே நீங்கள் இருக்கும் சூழல் ஏற்படும்போது கிராமத்தின் தேவைக்கேற்ப தொழில் – கல்வி சூழலிலும் மாற்றம் ஏற்படும். இந்தியா போன்ற பெரிய மக்கள்தொகை கொண்ட நாட்டில் வேளாண்மையை மிக லாபகரமான தொழிலாக மாற்ற முடியும். தரிசு நிலத்தில் மர வளர்ப்பு ஒரு மாற்றா, இல்லையா? கிராமத்திலிருந்து யோசித்தல் என்று இதைச் சொல்லலாம். அதுதான் தீர்வு.

முப்பதாவது ஆண்டில் அடியெடுத்துவைக்கிறது பாமக. எதிர்கால இலக்கு என்ன?

புதியதோர் தமிழகம் செய்வோம் – இதுதான் இலக்கு. அதை அடைய எல்லைகள் கடந்த எல்லாச் சமூகத்தினருக்குமான இயக்கமாகவே பாமக செயல்படும். இதுதான் இந்தப் பேட்டியின் வழியாக நான் மக்கள் மக்களுக்குச் சொல்ல விரும்பும் முக்கியமான செய்தி.

சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x