Published : 07 Dec 2024 05:04 AM
Last Updated : 07 Dec 2024 05:04 AM
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜூன் நடித்துள்ள ‘புஷ்பா-2’ திரைப்படம் வெளியீட்டுக்கு முன்பாக, ஹைதராபாத்தில் உள்ள ஒரு திரையரங்கில் முன்வெளியீட்டு காட்சி திரையிடப்பட்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி (35) என்ற பெண் உயிரிழந்துள்ளார்.
அவரது மகன் ஸ்ரீதேஜா (13) கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக அல்லு அர்ஜுன், அவரது பாதுகாவலர்கள் மற்றும் திரையரங்க நிர்வாகத்தினர் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்துள்ளனர். இது தெலங்கானா, ஆந்திராவில் மட்டும் நடக்கும் சம்பவம் அல்ல. தமிழகம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சினிமா ரசிகர்கள் அளவுக்கு அதிகமான வெறியுடன் நடந்து கொள்கின்றனர்.
தமிழகத்திலும் பிரபல நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது, ரசிகர்களுக்கென நள்ளிரவு காட்சிகளுக்கு அனுமதி அளிக்கின்றனர். அதில் போக்குவரத்தை தடுப்பது, பொதுமக்களுக்கு தொந்தரவு செய்வது, அதிக சத்தத்துடன் பட்டாசு வெடிப்பது, மேளதாளங்களுடன் விசில் அடிப்பது என பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
தமிழகத்தில் ஒரு நடிகரின் படம் வெளியானபோது ஆட்டம் போட்டபடி பேருந்து முன் விழுந்து ஒருவர் உயிரிழந்தார். ஒரு திரையரங்கின் உட்பகுதியிலேயே பட்டாசு வெடித்து நாற்காலிகளை உடைத்து, கிழித்து நாசம் செய்தனர். ரசிகர்கள் என்ற பெயரில் இதுபோன்று உயிரை பணயம் வைப்பது, அட்டூழியங்களில் ஈடுபட்டு எல்லை மீறுவதை ஏற்க முடியாது.
முன்பெல்லாம் ஒரு மாதத்துக்கு 4 அல்லது 5 படங்கள் வெளியாகும். அதைப் பார்க்கும் ரசிகர்கள், படம் பற்றி தங்களுக்குள் விவாதிப்பதை பொழுதுபோக்காக வைத்திருப்பார்கள். இப்போது தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பாகும் படங்களை மட்டும் கணக்கிட்டால் தினந்தோறும் 150 படங்களை பார்க்கலாம்.
இதுதவிர திரையரங்குகளில் வெளியாகும் படங்கள், ஓடிடி தளத்தில் வெளியாகும் படங்கள் என பொழுதுபோக்கு அம்சங்கள் மிதமிஞ்சிய அளவில் உள்ளன. சினிமாவை வளர்க்கிறோம் என்று கூறி, அந்த துறையை பொதுமக்களும், அரசும், பத்திரிகை, தொலைக்காட்சிகளும் அளவுக்கு அதிகமாகவே வளர்த்து விட்டுள்ளோம்.
ஒரு நடிகர் ஓரிடத்துக்கு வருகிறார் என்றால் கட்டுக்கடங்காத கூட்டம் கூடுவது, நடிகை நகைக்கடை திறக்கிறார் என்றால் காவல் துறையை திணறடிக்கும் அளவுக்கு கூட்டம் அலைமோதுவது என்று நிலைமை கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருக் கிறது. அஜித் ரசிகர்கள் பொது இடங்களில் எல்லாம் ‘அஜித்தே கடவுளே…’ என்று குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.
முதல் நாள் முதல் காட்சியை பார்க்க வேண்டும் என்று ஒரு கூட்டம் அலைமோதுகிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி டிக்கெட் விலையை ரூ.3,000, ரூ.7,000 என உயர்த்தி கட்டணக் கொள்ளையில் ஈடுபடுகின்றனர். சினிமா என்பது கலை, பொழுதுபோக்கு என்பதில் சந்தேகமில்லை. ஆனால், நடிகர்களை கடவுளாக சித்தரிப்பது, அவர்கள் பெயரைச் சொல்லி கட் அவுட் வைத்து கும்மாளம் போடுவது போன்ற செயல்கள் தேவையா என்பதை இளைஞர்கள் சிந்திக்க வேண்டும். அப்போதுதான் தெலங்கானா சம்பவம் போன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT