Published : 05 Dec 2024 04:19 PM
Last Updated : 05 Dec 2024 04:19 PM
‘நீரின்றி அமையாது உலகு' என 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் கூறிவிட்டு சென்றுள்ளார். அவரது கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் உலகில் பண்டைய கால வாழ்வியல் ஆற்றங்கரைகளின் அருகில் அமைந்திருப்பதை பார்க்க முடிகிறது. இதற்கு இந்தியாவில் அமைந்துள்ள சிந்து சமவெளி நாகரிகம், நைல் ஆற்றின் கரையில் அமைந்துள்ள எகிப்து நாகரிகம் மிகச்சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.
தமிழகத்திலும் வைகை, காவிரி ஆற்றங்கரை நாகரிகங்கள் புகழ்பெற்றவை. ஆறுகளால் செல்வ செழிப்புற்ற தமிழகம், மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு நதிநீர் உரிமைக்காக நீண்ட நெடிய சட்டப் போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறது. நீரின் முக்கியத்துவம், தமிழகத்தின் நீர் தேவையை நன்கு அறிந்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவர் முதல்வராக இருந்த காலங்களில், மாநிலத்தின் நீர் உரிமையை பெற பெரும் சட்டப் போராட்டங்களை நடத்தியுள்ளார்.
முன்னொரு காலத்தில் தமிழகத்தில் வற்றாத ஜீவநதியாக காவிரி இருந்தது. இதனால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்களின் சில தாலுகாக்கள் ஆகியவை காவிரி டெல்டா பகுதிகளாக உள்ளன.
நாட்டுக்கே உணவளிக்கும் வகையில் முப்போகம் விளைந்த பகுதிகள், கர்நாடக அரசின் அரசியல் காரணங்களால் வறண்ட நிலங்களாகும் நிலை ஏற்பட்டது. அப்போது தமிழக அரசு சட்டப் போரட்டங்களை தொடங்கியது. இதில் காவிரி நடுவர் மன்றம் கடந்த 2007-ம் ஆண்டு பிப்ரவரியில் அளித்த தீர்ப்பில், ‘தமிழகத்துக்கு ஆண்டுக்கு 192 டிஎம்சி நீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும்’ என்று உத்தரவிட்டிருந்தது.
அதை எதிர்த்து கர்நாடக, கேரள மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தன. தமிழக அரசும், இறுதி ஆணையில் பாதகமான பகுதிகளை ஆய்வு செய்ய, சிறப்பு மனுவை தாக்கல் செய்தது. இந்த மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன.
காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையை செயல்பாட்டுக்கு கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சட்டப் போராட்டத்தால், மத்திய அரசு காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை கடந்த 2013-ல் மத்திய அரசிதழில் வெளியிட்டது.
அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு காவிரி நீர்பாசன விளைபொருட்கள் விவசாயிகள் நல உரிமை பாதுகாப்பு சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.ரங்கநாதன்தலைமையில் காவிரி டெல்டா விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஜெயலலிதாவை சந்தித்து, காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிடச் செய்து, தமிழகத்துக்கான காவிரி நீரை உச்ச நீதிமன்றம் மூலம் பெற்றுத் தந்தமைக்காக நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.
மழைநீர் சேகரிப்பு: தமிழகத்தில் கடந்த 2001 முதல் 2003-ம் ஆண்டு வரை தண்ணீர் தட்டுப்பாடு கடுமையாக இருந்தது. அதனைத் தொடர்ந்து மழைநீர் குறைவாக கிடைத்தாலும், அதை சேமித்து, நிலத்தடி நீராக செறிவூட்டும் வகையில், வீடுகள், கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டுமானங்கள் அமைப்பதை அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா கட்டாயமாக்கினார். இதனால் குறிப்பாக நகர்ப்புறங்களில் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்தது.
இத்திட்டம் நாடு முழுவதும் பிரபலமானது. பிற மாநிலங்களில் இருந்து பெற வேண்டிய நீர் உரிமையை கடும் சட்டப் போராட்டங்களை நடத்தி பெற்ற ஜெயலலிதா, மாநிலத்தின் மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்படுத்திய திட்டங்கள், அவரின் மறைவுக்கு பிறகும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
| டிச.5 - இன்று: ஜெயலலிதாவின் 8-ம் ஆண்டு நினைவு தினம் |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT