Published : 04 Jul 2018 09:35 AM
Last Updated : 04 Jul 2018 09:35 AM
வெ
ண்ணிலா தங்கச்சி வந்தாளே என்று எழுதுகிறார் யுகபாரதி. புதிய வார்த்தைகளில் மரபின் தொடர்ச்சி. கொஞ்ச காலத்துக்கு முன்பு, கங்கை நீ.. மங்கை நீ... வெண்ணிலவின் தங்கை நீ என்று எழுதினார் வாலி. அதற்கும் முன்பு, அருமைக் காதலிக்கு வெண்ணிலவு சகோதரி, ஆனால் இளையவளா, மூத்தவளா என்பதில் மட்டும்தான் சந்தேகம் என்றார் பட்டுக்கோட்டை. நிலாவின் பிள்ளை இங்கு நீதானோ என்று நிலாவுக்கு மாமியார் அந்தஸ்தைக் கொடுத்தார் அறிவுமதி. அதே பாடலில், அடுத்துவரும் ஈரநிலாப் பெண்ணே என்ற வரிகள் உறவுமுறைக் குழப்பத்தை விளைவிப்பது வேறு கதை. நிலவு மாமியாரா, மைத்துனியா என்ற கேள்விகள் எல்லாம் நிலவைப் பெண்ணுக்கு உவமிப்பதன் வேற்றுமை வடிவங்கள்தான். நிலவே என்னிடம் நெருங்காதே என்ற கண்ணதாசன் தொடங்கி, சந்திரனைத் தொட்டது ஆம்ஸ்ட்ராங் இல்லை என்ற வைரமுத்து வரைக்கும் நீயும் நிலவும் வேறல்ல என்பதே முடிவு. தமிழ் சினிமாவின் காதல் பாடல்களில் நிலவு ஒரு உவமை. ஆனால், கவிதைகளில் அது ஒரு முதன்மைப் பாடுபொருள். நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்த நிலாவை பாரதிதாசன் எழுதிய பிறகு, அவரைத் தொடர்ந்துவந்த மரபுக் கவிகள் ஒவ்வொருவரும் நிலவைப் பற்றி ஒரே ஒரு விருத்தமாவது எழுதியாக வேண்டும் என்பது எழுதப்படாத விதியாகவே பின்பற்றப்பட்டது. இது வெப்பம் தகிக்கும் நிலம். கதிரவன் நன்றிக்குரியவன். என்றாலும், நிலவுதான் மகிழ்ச்சியைத் தருபவள். உஷை, சாவித்ரி என்று ஒவ்வொரு பொழுதிலும் சூரியனுக்குத் தனிப் பெயரிட்டுப் பாடுவது குளிர்ப் பிரதேச மரபு. தமிழின் கவிதை மரபில் நிலவே மையம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT