Published : 03 Dec 2024 06:36 AM
Last Updated : 03 Dec 2024 06:36 AM
இந்தியாவில் மிகப்பெரிய பொதுப் போக்குவரத்தாக உள்ள ரயில்களில் குளிர்சாதன பெட்டிகளில் வழங்கப்படும் கம்பளியை உரிய காலத்தில் துவைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு சமீபத்தில் எழுந்துள்ளது. இதுகுறித்து மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டதால், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ரயில்களில் கம்பளியை மாதம் ஒருமுறை துவைப்பதாக பதிலளித்துள்ளார்.
ஆண்டுக்கு 60 கோடி பேர் பயணிக்கும் தெற்கு ரயில்வே அளித்துள்ள விளக்கத்தில், 2010-ம் ஆண்டு 3 மாதங்களுக்கு ஒருமுறை கம்பளி துவைக்கும் நடைமுறை இருந்ததாகவும், பின்னர் 2 மாதங்களாக குறைக்கப்பட்டு, 2016 முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை துவைப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பேசின்பிரிட்ஜ், கொச்சுவேலி, நாகர்கோவில், எர்ணாகுளத்தில் சலவை இயந்திரங்கள் வசதி இருப்பதாகவும், மதுரை, கோவை, மங்களூரில் சலவையகங்கள் நிறுவுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. சலவை இயந்திர வசதி உள்ள இடங்களுக்கு எளிதில் எடுத்துச் செல்ல முடியாத நிலை இருந்தால், கம்பளிகளை துவைப்பதில் உள்ள கால இடைவெளி அதிகரிக்கும் என்ற விளக்கமும் தரப்படுகிறது.
அமைச்சர் மற்றும் ரயில்வே தரப்பில் இப்படிப்பட்ட விளக்கங்கள் தரப்பட்டாலும், ரயில் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் ஊழியர்களிடம் விசாரித்ததில் கம்பளியில் கறை படிந்திருந்தால் அல்லது துர்நாற்றம் இருந்தால் மட்டுமே துவைப்பதாக தெரிவித்துள்ளனர். பயணிகளுக்கு வழங்கப்படும் கம்பளியில் உணவுக்கறை, அசுத்தம் மற்றும் முடி உள்ளிட்டவை இருப்பது போன்ற காணொலி காட்சிகளை பயணிகள் பகிர்ந்து வருவது, ரயில் பயணத்தில் உள்ள சுகாதார நடைமுறைகள் குறித்து பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது. ராஜ்தானி போன்ற ரயில்களில் ஒருமுறை பயணம் சென்று வந்ததும் அவை சலவை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
குளிர்சாதன பெட்டிகளில் ஒரு கம்பளி மற்றும் இரண்டு படுக்கை விரிப்புகள் வழங்கப்படுகின்றன. படுக்கை விரிப்புகள் ஒவ்வொரு பயணத்துக்கு பின்பும் சலவை செய்யப்பட்டு விடுவதால், அதுபற்றி பயணிகள் கேள்வி எழுப்பவில்லை. ஆனால், கம்பளி சுகாதாரமாக பராமரிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு வலுவாக வைக்கப்படுகிறது. கம்பளியை ஒவ்வொரு முறையும் சுத்தம் செய்ய முடியாது என்ற வாதத்தை ஏற்க முடியாது. ஏனென்றால், மற்ற துணிகளைவிட கம்பளிகளில் சிந்தப்படும் உணவுத் துகள்களில் நுண்கிருமிகள் அதிகம் படிய வாய்ப்புள்ளது. பாக்டீரியா, பூஞ்சைகள் அதிகம் வசிக்கும் இடமாகவும் கம்பளி அமைகிறது. அதை சுத்தம் செய்யாமல் மற்ற பயணிக்கு கொடுக்கும்போது, ஒவ்வாமை, சரும நோய்கள் உள்ளிட்டவை எளிதில் பரவும் வாய்ப்பு அதிகம். கோடிக்கணக்கான மக்கள் பயணிக்கும் ரயில்களில் சுகாதாரமின்மை என்ற குற்றச்சாட்டை சாதாரணமாக கருத முடியாது.
இவை எளிதில் நோய் கடத்தும் காரணியாக இருப்பதால், ஒருமுறை பயணத்தில் பயன்படுத்தப்பட்ட கம்பளியை சலவை செய்யாமல் மற்ற பயணிக்கு தரக் கூடாது. அதற்கு சாத்தியமில்லை என்றால் கம்பளி நடைமுறையையே மாற்றிவிட்டு மாற்று ஏற்பாடுகளை செய்வது குறித்து ரயில்வே நிர்வாகம் ஆலோசிப்பதே மக்கள் நலன் சார்ந்த முடிவாக இருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT