Published : 02 Dec 2024 04:27 AM
Last Updated : 02 Dec 2024 04:27 AM
தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனம் (இபிஎப்ஓ) ‘3.0’ என்ற நவீன திட்டத்தின்கீழ் மிகப்பெரும் மாற்றங்களை செய்ய முன்வந்துள்ளது. இதன்படி, வருங்கால வைப்பு நிதி கணக்கு வைத்துள்ளவர்கள், தங்கள் கணக்கில் இருந்து ஏடிஎம் மூலம் பணத்தை எடுத்துக் கொள்ளும் வசதியை வழங்கப் போவதாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டில் 6 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் வைப்பு நிதி கணக்கு வைத்துள்ளனர். இவர்கள் தற்போது, வீடு வாங்குதல், திருமணம், பிள்ளைகளின் கல்வி உள்ளிட்ட காரணங்களைக் கூறி விண்ணப்பித்தால் மட்டுமே அவர்களது கணக்கில் இருந்து பணத்தை எடுக்க முடியும் என்ற நிலை உள்ளது. இதில் விண்ணப்பிப்பதில் உள்ள சிரமம், உரிய ஆவணங்களை சமர்ப்பித்தல், ஒப்புதல் கிடைப்பதற்காக நீண்டகாலம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை என பல்வேறு இன்னல்களை தொழிலாளர்கள் சந்தித்து வருகின்றனர்.
ஆனால், தற்போது கொண்டுவரப்படவுள்ள மாற்றத்தின் மூலம், தொழிலாளர்கள் எளிதாக தங்கள் கணக்கில் உள்ள பணத்தை வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுப்பதைப் போன்று ஏடிஎம் வசதியை பயன்படுத்தி எடுத்துக் கொள்ளலாம் என்பது மிகப்பெரிய பொருளாதார சீர்திருத்தமாக கருதப்படுகிறது. இந்த புதிய வசதி, அடுத்த ஆண்டு மே அல்லது ஜூன் மாதத்துக்குள் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தொழிலாளர் வைப்பு நிதிக்கு 8.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. தொழிலாளர்களிடம் இருந்து அதிகபட்சமாக சம்பளத்தில் இருந்து 12 சதவீதம் பிடிக்கப்படுகிறது. இந்த அளவை தொழிலாளர்கள் நினைத்தால் அதிகப்படுத்திக் கொள்ளும் வசதியையும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளனர். இதுதவிர, தகவல் தொழில்நுட்ப நவீனமயமாக்கும் திட்டத்தின்கீழ், தொழிலாளர் ஓய்வூதியம் பெறும் 78 லட்சம் பேருக்கும் இத்திட்டம் நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 82 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வைப்பு நிதியில் இருந்து தொழிலாளர்கள் பணத்தை எடுத்துள்ளனர். இந்த ஆண்டு இதுவரை ஒரு லட்சத்து 57 ஆயிரம் கோடி ரூபாய் வரை பணம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த அளவுக்கு வரவு-செலவு நடைபெறும் துறை, நவீனமயமாக்கல் மூலம் ஏடிஎம்-ல் நினைத்த நேரத்தில் பணத்தை எடுத்துக் கொள்ளும் வசதியை கொண்டுவருவது என்பது இந்திய பொருளாதாரத்துக்கே வலுசேர்க்கும் நடவடிக்கையாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான அரசு, மிகப்பெரிய பொருளாதார நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று அமெரிக்க தொழில் முதலீட்டாளர் ஜிம் ரோஜர்ஸ் பாராட்டியுள்ளார். அவரது ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவுக்கு 1,182 லட்சம் கோடி ரூபாய் முதலீடு கிடைத்துள்ளது என்றும் அவர் பாராட்டியுள்ளது இந்தியாவின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு கிடைத்துள்ள பாராட்டு பத்திரமாகும். இத்தகைய பொருளாதாரம் சார்ந்த புதிய முடிவுகளே இந்தியாவை உலக அரங்கில் உயர்த்திப் பிடிக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT