Published : 28 Nov 2024 03:24 AM
Last Updated : 28 Nov 2024 03:24 AM
இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே கடந்த 14 மாதங்களாக நடந்து வந்த போரின் முக்கிய திருப்பமாக, இஸ்ரேலும் ஹிஸ்புல்லா அமைப்பும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொண்டிருப்பது உலக நாடுகள் அனைத்துக்கும் மகிழ்ச்சிகரமான செய்தியாக அமைந்துள்ளது. ‘இஸ்ரேல் மீது எந்த தாக்குதலும் நடத்தக் கூடாது, இஸ்ரேல் எல்லையில் இருந்து 40 கி.மீ. தொலைவுக்கு அப்பால் சென்றுவிட வேண்டும்’ என்பது ஹிஸ்புல்லா தீவிரவாத குழுவினருக்கான நிபந்தனையாக விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், 60 நாட்களுக்குள் இஸ்ரேல் ராணுவத்தினர் லெபனான் எல்லைப் பகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
காசா பகுதியில் நடைபெறும் சண்டை பற்றி எந்த தகவலும் இல்லை என்றாலும், அடுத்து அங்கும் சண்டை முடிவுக்கு வரும் என்று உலகம் முழுவதிலும் உள்ள நல்லெண்ணம் படைத்தவர்கள் எதிர்பார்க்கின்றனர். ஓராண்டுக்கு மேலாக நடந்துவரும் சண்டையில் 44 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். இவை அனைத்தும் முடிவுக்கு வருவது நிம்மதி அளிக்கும் விஷயம்.
இதைத் தொடர்ந்து ரஷ்யா - உக்ரைன் இடையே நடைபெறும் போரும் முடிவுக்கு வர வேண்டும் என்பதே அனைவரது விருப்பம். பிரதமர் நரேந்திர மோடி போர் நடைபெறும் நாடுகளுக்கு சென்றபோது, ‘‘இது போருக்கான காலம் அல்ல; உலக முன்னேற்றத்தை பற்றி சிந்திக்க வேண்டிய காலம்’’ என்று குறிப்பிட்டிருந்தார். அவரது கருத்து தற்போதைய சூழ்நிலைக்கு மிகப் பொருத்தமானது, சர்ச்சைக்குரிய நாடுகளின் தலைவர்கள் சிந்திக்க வேண்டிய கருத்து.
இதுபோன்ற போர் சூழ்நிலைகளில் தலைவர்கள் சிலர் எடுக்கும் முடிவுகளால் பாதிக்கப்படுவது அப்பாவி பொதுமக்களே. போர் நிறுத்தம் ஏற்படுவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு கூட இஸ்ரேல் 2 நிமிட நேரத்துக்குள்ளாக 20 குண்டுகளை வீசியுள்ளது. இதில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். போரில் கை, கால்களை இழந்து, உற்றார், உறவினர்களை இழந்து, வீடு, உடமைகளை இழந்து அவர்கள் படும் இன்னல் சொல்லி மாளாது.
போரால் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி மக்களுக்கு மனிதநேயத்துடன் உலக நாடுகள் அனைத்தும் சற்றும் தாமதிக்காமல் உதவிக்கரம் நீட்ட வேண்டிய தருணம் இது. எவ்வளவு உதவிகள் செய்தாலும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுகட்ட முடியாது. இருந்தாலும், உலகநாடுகள் மனிதநேயத்துடன் உதவிக்கரம் நீட்டும்போது, பாதிக்கப்பட்டுள்ள மக்கள் சற்று ஆறுதல் அடைவார்கள்.
போரின்போது வெளியேற்றப்பட்ட மக்கள் மீண்டும் அவர்கள் முன்பிருந்த பகுதிக்கு திரும்பக் கூடாது என்று இஸ்ரேல் நிபந்தனை விதித்திருப்பதாக கூறப்படுகிறது. பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள தலைவர்கள் இதுபோன்ற விஷயங்களிலும் தலையிட்டு, அப்பாவி மக்களுக்கு விடியல் ஏற்படுத்த வேண்டும். இந்த நல்ல சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஐ.நா. உள்ளிட்ட அமைப்புகள், ரஷ்யா - உக்ரைன் போருக்கும் முடிவுகட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி உலகில் போரே நடக்காதபடி, என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க முடியுமோ அனைத்தையும் எடுக்க வேண்டும். அதுவே மனிதகுலத்துக்கு உலக தலைவர்கள் செய்யும் கைமாறு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT