Published : 26 Nov 2024 06:19 AM
Last Updated : 26 Nov 2024 06:19 AM
உலகின் மிக நீண்ட நெடிய இந்திய அரசமைப்புச் சட்டம் அரசியல் நிர்ணய அவையில் ஏற்கப்பட்டு, இன்றுடன் 75 ஆண்டுகள் ஆகின்றன. இறையாண்மை கொண்ட சோஷலிச மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசான இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் சமூக, பொருளாதார, அரசியல் நீதி; கருத்து, நம்பிக்கை, வழிபாட்டுக்குரிய சுதந்திரம்; சட்டத்தின் முன் சமத்துவமும் சம வாய்ப்பும்; தனிமனித மாண்பை வலியுறுத்தும் சகோதரத்துவம், தேசத்தின் ஒற்றுமையும் ஒருமைப்பாடும் பேணப்படும் என்று அரசமைப்பின் அடிநாதமாகத் திகழும் முகப்புரை அறிவிக்கிறது.
அம்பேத்கர் வலியுறுத்திய சமத்துவம்: தனிமனிதனின் மாண்பைக் காப்பாற்று வதில்தான் இந்நாட்டின் மேன்மை பறைசாற்றப்படுகிறதே தவிர, பண்டைய நாகரிகப் பெருமிதங்களிலோ, எதிர்கால வல்லரசுக் கனவுகளிலோ அல்ல. அதனால்தான் தனிமனித மாண்பையும் சமத்துவத்தையும் அரசமைப்பின் முகப்புரையில் அம்பேத்கர் இடம்பெறச் செய்தார். முடியரசுகளின் கீழும் அந்நியர் ஆக்கிரமிப்புகளாலும் ஆட்பட்டிருந்த இம்மண்ணில், எண்ணற்ற சட்டங்கள் வகுக்கப்பட்டிருப்பினும் அவை இங்கு புரையோடிப்போயிருந்த சாதிய சமூக அமைப்பைக் கேள்விக்கு உள்ளாக்கவில்லை. முதன்முறையாக, சாதிப் பாகுபாட்டை ஏற்க மறுத்த அரசமைப்புச் சட்டம் இந்த வகையில்தான் ஒரு முதன்மையான சமூக ஆவணமாக மிளிர்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT