Last Updated : 21 Nov, 2024 05:58 AM

 

Published : 21 Nov 2024 05:58 AM
Last Updated : 21 Nov 2024 05:58 AM

ரஷ்யா - உக்ரைன் போர்: பல் இல்லாத அமைப்புகளால் எந்த பலனும் இல்லை!

ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் தொடங்கி 1,000-வது நாளை கடந்துள்ளது. தொலைதூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடையை அமெரிக்கா விலக்கிக் கொண்டதை அடுத்து, அதன் எதிர்வினையாக அணு ஆயுதங்களை பயன்படுத்தும் அனுமதியை ரஷ்ய ராணுவத்துக்கு அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புதின் வழங்கியுள்ளார்.

உக்ரைன் ராணுவம் தொலைதூர ஏவுகணைகளை ரஷ்யாவுக்கு எதிராக பயன்படுத்தவும் தொடங்கிவிட்டது. இதன்மூலம், ரஷ்ய ராணுவம் உக்ரைனுக்கு எதிராக எந்த நேரத்திலும் அணு ஆயுதத்தை பயன்படுத்தலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையிலான போரிலும் அதிநவீன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. முதல் உலகப் போர் மற்றும் இரண்டாம் உலகப் போரின்போது பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களைவிட பன்மடங்கு சக்திவாய்ந்த ஆயுதங்களை வளர்ந்த நாடுகள் தற்போது கைவசம் வைத்துள்ளன.

நாடுகளின் எல்லைகளை அந்தந்த நாடுகள் தங்கள் வசதிக்கேற்ப பிரித்து வைத்திருந்தாலும், மனிதன் வாழும் இடமான பூமி ஒன்றுதான். அது மனிதகுலம் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது. ஏவுகணைகள், அணுகுண்டுகளை வீசி அந்த பூமியை சேதப்படுத்தும் உரிமை யாருக்கும் இல்லை. பூமியின் ஒரு பகுதியில் ஏற்படுத்தும் சேதம் ஏதாவது ஒரு வகையில் இன்னொரு பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்த அடிப்படையில், சண்டையிடும் நாடுகளை தட்டிக்கேட்கும் உரிமை இந்த பூமியில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் உண்டு. கிராமப்புறங்களில் இரண்டு பேர் சண்டையிட்டால், நாலு பேர் சேர்ந்து அவர்களை விலக்கிவிட்டு, சண்டை சச்சரவுகளை தீர்த்து வைப்பார்கள். அதில் ஒருவர் வழிக்கு வராவிட்டால் அனைவரும் சேர்ந்து தலையில் தட்டி அவரை வழிக்கு கொண்டு வருவார்கள். இதுபோன்ற ஒரு முயற்சி உலக அளவில் நடக்கிறதா என்றால் இல்லை.

உலகில் பெரும்பான்மை நாடுகள் பங்கேற்றுள்ள உச்சபட்ச அமைப்பாக ஐக்கிய நாடுகள் சபை உள்ளது. ரஷ்யா - உக்ரைன் மற்றும் இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சினைகளில் இந்த அமைப்பு தலையிட்டு எந்த தீர்வையும் ஏற்படுத்த முடியவில்லை. இவர்களால் தீர்மானம் கொண்டுவந்து பரிந்துரைகளை மட்டுமே வழங்க முடிகிறது. சண்டையிடும் நாடுகள் இந்த பரிந்துரைகளை அலட்சியப்படுத்தி தூக்கி எறிந்து விடுகின்றன. பெரும்பான்மை உலக நாடுகள் பங்கெடுத்துள்ள இத்தகைய உச்சபட்ச அமைப்பு இப்படி பல் இல்லாத அமைப்பாக இருந்தால், பிரச்சினைகளுக்கு எங்கிருந்து தீர்வு வரும்?

இன்றைய காலகட்டத்துக்கு பொருத்தமற்ற அமைப்பாக ஐக்கிய நாடுகள் சபை இருந்து வருகிறது. இரண்டு நாடுகள் சண்டையிடும்போது அவர்களது சண்டையை நிறுத்தி, பிரச்சினையை விசாரித்து நியாயமான தீர்ப்பு வழங்க வேண்டும். அந்த தீர்ப்புக்கு இரண்டு தரப்பும் கட்டுப்பட வேண்டும். இல்லாவிட்டால், அனைத்து நாடுகளும் சேர்ந்து, அந்த கட்டுப்படாத நாட்டை அடக்கி வைக்கும் அளவுக்கு வலிமைமிக்க அமைப்புதான் இன்றைய தேவை. அத்தகைய தீர்வை நோக்கி உலக நாடுகள் அடியெடுத்து வைப்பது அவசியம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x