Published : 20 Nov 2024 03:24 AM
Last Updated : 20 Nov 2024 03:24 AM
சினிமா துறையில் ‘ரிவியூ பாம்’, அதாவது விமர்சனக் குண்டு போடுவதன் மூலம் படங்களின் வெற்றி வாய்ப்பை பாதிப்படையச் செய்கின்றனர் என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாக இருந்து வருகிறது. பிரபல விநியோகஸ்தரும், தயாரிப்பாளருமான திருப்பூர் சுப்பிரமணியம் இதே குற்றச்சாட்டை சமீபத்தில் கூறியுள்ளார்.
கேரளாவில் தயாரிப்பாளர் ஒருவர் தனது படம் வெளியாகி 48 மணி நேரத்துக்கு விமர்சிக்க கூடாது என்று தடைபெற்றிருப்பதாக தெரிகிறது என்ற தகவலையும் வெளியிட்டிருந்தார். கேரள திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர், சமூக வலைதளங்களில் ‘இன்ப்ளூயன்ஸர்கள்’ எனப்படும் விமர்சகர்கள் தனது படத்தைப் பற்றி தவறான கருத்துகளை வெளியிட்டு படத்தின் வெற்றியை பாதிப்படையச் செய்துவிட்டதாக வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் ஷ்யாம் பத்மன் நீதிமன்ற ஆலோசகராக செயல்பட்டார். அவர், ஒரு திரைப்படம் வெளியாகி 48 மணி நேரத்துக்கு அந்த படத்தைப் பற்றி யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் வெளியிட தடை விதிக்கலாம் என்ற பரிந்துரையை அளித்தார். இதுகுறித்து மத்திய அரசின் கருத்தை கேட்டு பெறுமாறு கேரள உயர் நீதிமன்ற நீதிபதி தேவன் ராமச்சந்திரன் உத்தரவு பிறப்பித்தார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 19(1)(ஏ), பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தின்கீழ் விமர்சிக்கும் உரிமை வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்கள் இந்த சுதந்திரத்தின் அடிப்படையிலேயே இயங்குகின்றன. விமர்சனங்களுக்கு தடை விதிக்க முயற்சிக்கும்போது, கருத்து சுதந்திரம் பாதிக்கிறது என்ற குரல் எழுவதற்கு வாய்ப்புள்ளது.
கோடிக்கணக்கில் பணத்தை முதலீடு செய்து திரைப்படத்தை தயாரிப்பவர்களின் உழைப்பை 10 நிமிட காணொலி காட்சி விமர்சனம் மூலம் பாழடிப்பது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. எனவே, திரைப்படம் வெளியான 48 மணி நேரத்துக்கு விமர்சனம் கூடாது என்ற பரிந்துரை நியாயமான ஒன்றாகவே தெரிகிறது.
ஒரு படத்தின் தகுதிக்கும் மீறி, கோடிக்கணக்கில் செலவழித்து விளம்பரங்கள், புரோமோ போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும்போது, ரசிகர்களுக்கு அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்பு ஏற்படுகிறது. அதை பயன்படுத்தி ஒரே நேரத்தில் பல திரைகளில் படத்தை வெளியிட்டு இரண்டு, மூன்று நாட்களுக்குள் லாபத்தை அள்ளிவிடும் உத்தியும் விமர்சிக்கப்பட வேண்டியதே. ரசிகர்களுக்கு போலியான தோற்றத்தை ஏற்படுத்தி அவர்களை ஏமாற்றும்போது, பாதிக்கப்பட்டோர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர வாய்ப்பிருக்கிறதா?
அதேபோன்று, ஒரு திரைப்படம் வெளியாகும் முன் அதைப்பற்றி நேர்மறையான விமர்சனம் வெளியிடுவதற்கும், எதிர்மறையான விமர்சனம் வெளியிடாமல் இருப்பதற்கும் பத்திரிகையாளர்கள், விமர்சகர்கள் என்ற போர்வையில் உலவும் சிலருக்கு ‘கையூட்டு’ வழங்கும் நடவடிக்கையை திரைத்துறையினர் நிறுத்துவார்களா?
20, 30 வருடங்களுக்கு முன்பெல்லாம் ஒரு திரைப்படம் வெளியானால், அதனை பார்ப்பவர்கள், தங்கள் சுற்றம் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் கருத்தின் அடிப்படையிலேயே அந்த படத்தின் வெற்றி, தோல்வி அமையும். அத்தகைய நிதானமான, நியாயமான சூழல் இப்போது நிலவுகிறதா என்று நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT