Last Updated : 16 Nov, 2024 04:14 AM

 

Published : 16 Nov 2024 04:14 AM
Last Updated : 16 Nov 2024 04:14 AM

புதிய திட்டங்களில் தமிழக அரசு பங்கெடுப்பது அவசியம்!

சில தினங்களுக்கு முன்பு கேரள மாநிலம் கொச்சியில் இருந்து மேட்டுப்பெட்டி வரை கடல் விமானம் இயக்கப்பட்டு வெள்ளோட்டம் பார்க்கப் பட்டுள்ளது. சாலை மார்க்கமாக 5 மணி நேரத்தில் கடக்கும் தூரத்தை கடல் விமானம் அரை மணி நேரத்தில் கடந்து சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பாக ஆந்திர மாநிலம் பிரகாசம் அணையில் இருந்து ஸ்ரீசைலம் அணை வரை கடல் விமானம் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் கொச்சி, மூணாறு, வயநாடு, ஆழப்புழா ஆகிய பகுதிகளுக்கு கடல் விமானம் இயக்கவும், 6 மாதங்களுக்குள் இத்திட்டத்தை செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்திலும் கடல் விமானம் சோதனை நடத்தப்பட்டுள்ளது. தெலங்கானா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. சுற்றுலா பயணிகளுக்கும் இதர பயணிகளுக்கும் கடல் விமானம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மொத்தம் 20 வழித்தடங்களில் கடல் விமானம் இயக்க சாத்தியம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. துரிதமாக கட்டமைப்பு பணிகளை முடித்து இன்னும் 6 மாதங்களுக்குள் கடல் விமானங்களைப் பறக்கவிட கேரளா ஆர்வமாக உள்ளது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த திட்டத்தில் தமிழகம் இடம்பெற்றிருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை.

இந்தியாவின் கடற்பரப்பு நீளத்தில் 15 சதவீதம், அதாவது 1,076 கி.மீ. நீள கடற்கரை பரப்பைக் கொண்டுள்ள தமிழகத்தில் கடல் விமானம் மூலம் போக்குவரத்தை ஏற்படுத்துவது வரப்பிரசாதமாக இருக்கும். இந்த விமானத்தில், 9 முதல் 30 பேர் வரை விமானத்தின் அளவைப் பொறுத்து பயணம் செய்ய முடியும். சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை 12 மணி நேரம் சாலை மார்க்கமாக செல்கிறோம் என்றால், கடல் விமானம் மூலம் ஒரு மணி நேரம் அல்லது ஒன்றரை மணி நேரத்தில் சென்றடைய முடியும். இந்த விமானங்கள் பறக்க 800 மீட்டர் நீள நீர்ப்பரப்பு இருந்தாலே அதை ஓடுதளமாக பயன்படுத்திக் கொள்ளும். இரண்டு மீட்டர் ஆழம் உள்ள நீர்ப்பகுதி இருந்தாலே தரையிறங்க முடியும். தமிழகத்தில் இத்தகைய வசதி உள்ள இடங்களை அடையாளம் காண்பது மிக எளிது.

முதல்கட்டமாக ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் கடல் விமான சேவையை வழங்க உள்ளது. படிப்படியாக வேறு நிறுவனங்களும் இத்திட்டத்தில் பங்கெடுக்க உள்ளன. நாட்டின் நவீன போக்குவரத்தில் மிகப்பெரிய மாற்றத்தை இத்திட்டம் ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். போக்குவரத்து நெரிசல், மக்கள்தொகை பெருக்கம், வாகனப்பெருக்கம், சுற்றுச்சூழல் சீர்கேடு போன்றவற்றுக்கு மாற்றாக இத்திட்டம் அமைய உள்ளது.

மத்திய அரசின் ‘உடான்’ திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்படும் இதுபோன்ற நவீன திட்டங்களில், வளர்ச்சியடைந்த மாநிலங்களில் ஒன்றாக திகழும் தமிழகம் இணைவது நாட்டின் முன்னேற்றத்துக்கு பயனளிக்கும். அரசியல் கருத்து வேறுபாடுகளை கடந்து மக்களின் நலன்கருதி இதுபோன்ற திட்டங்களில் இணைய தமிழக அரசு முன்முயற்சிகள் எடுப்பது அவசியம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x