Published : 13 Nov 2024 07:10 AM
Last Updated : 13 Nov 2024 07:10 AM
“ஹேமந்த் பாபு. உங்கள் ஆட்சியின் நாள்கள் எண்ணப்படுகின்றன. உங்கள் தோல்வி உறுதி” – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு விடுத்திருக்கும் சவால் இது. “ஒரு பழங்குடி முதல்வரிடமிருந்து பதவியைப் பறிப்பதற்கு முழுமூச்சுடன் பாஜக முயல்கிறது; அக்கட்சியின் வேட்பாளர்களின் எண்ணிக்கையைவிட அதிக எண்ணிக்கையிலான பாஜக தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்” என்று இண்டியா கூட்டணித் தலைவர்கள் பதிலடி கொடுக்கின்றனர்.
“பழங்குடியினரின் நிலங்களைப் பறித்துக்கொள்ள வங்கதேச சட்டவிரோதக் குடியேறிகளை ஹேமந்த் சோரன் அரசு அனுமதிக்கிறது” என்று பாஜக குற்றம்சாட்ட, “ஜார்க்கண்டின் கனிம வளங்களைக் கொள்ளையடிக்கவே ஆட்சியைப் பிடிக்க பாஜக முயல்கிறது” என இண்டியா கூட்டணி புகார் கூறுகிறது.
இன்று (நவம்பர் 13) நடைபெறவுள்ள ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 2000ஆம் ஆண்டில், பிஹாரிலிருந்து தனி மாநிலமாக ஜார்க்கண்ட் பிரிந்த பின்னர், நீண்டகாலம் அங்கு ஆட்சியில் இருந்த பாஜக, தற்போது மீண்டும் அரியணை ஏற பிரம்மப் பிரயத்தனம் செய்கிறது.
மறுபுறம், இண்டியா கூட்டணி வலுவிழந்துவருவதாக முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்குப் பதிலடியாக ஹேமந்த் சோரனின் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள அக்கூட்டணி கடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. எப்படி இருக்கிறது சூழல்?
மாறிய களம்: 2019 மக்களவைத் தேர்தலில், அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கத்துடன் (ஏ.ஜே.எஸ்.யூ.) கூட்டணி அமைத்து 12 இடங்களில் வென்ற பாஜகவால், அதே ஆண்டின் இறுதியில் நடந்த ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலில் தனித்துக் களம் கண்டு - மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் 25 இடங்களைத்தான் வெல்ல முடிந்தது.
அந்தத் தேர்தலில், காஷ்மீரில் 370 ஆவது சட்டக்கூறு ரத்து, ராமர் கோயில், தேசியக் குடிமக்கள் பதிவேடு, குடியுரிமைத் திருத்தச் சட்டம் என பாஜக முன்வைத்த தேர்தல் விவகாரங்கள் எடுபடவில்லை. இவற்றுக்கும் ஜார்க்கண்ட் அரசியல் களத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று ஹேமந்த் சோரன் முன்வைத்த பதிலடி வியூகம் பாஜகவுக்குத் தோல்வியைத் தந்தது.
இந்த முறை, வங்கதேசத்திலிருந்து வரும் சட்டவிரோதக் குடியேறிகளால் ஜார்க்கண்டுக்குப் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாக பாஜக தொடர்ந்து குற்றம்சாட்டிவருகிறது. ஜார்க்கண்ட் மக்கள்தொகையில் பழங்குடிகள் 28%, முஸ்லிம்கள் 14.05%. இந்தச் சூழலில், முஸ்லிம்களைப் பழங்குடியினருக்கு எதிராக நிறுத்தும் உத்தியை பாஜக கையாள்கிறது.
2014 சட்டமன்றத் தேர்தலில் 28 பழங்குடித் தனித்தொகுதிகளில் 12ஐ பாஜக கைப்பற்றியது. எனினும் 2019 சட்டமன்றத் தேர்தலில் வெறும் இரண்டே இடங்களில்தான் பாஜக வென்றது. பழங்குடியினரின் நிலங்களைப் பிறர் வாங்குவதைத் தடைசெய்யும் சோட்டா நாக்பூர் குத்தகைச் சட்டம், சந்தால் பர்கானா குத்தகைச் சட்டங்களில் 2016இல் திருத்தம் மேற்கொண்டது ரகுவர் தாஸ் தலைமையிலான பாஜக அரசு.
இதன் மூலம் பழங்குடியினர் பகுதிகளில் பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகளைக் கொண்டுவருவதுடன், தனியார் நிறுவனங்கள் தொழில் தொடங்க அனுமதியளிக்கவும் அரசு திட்டமிட்டது. பழங்குடியினர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இதைக் கண்டித்து ‘பத்தல்கடி’ எனும் இயக்கத்தை ஆரம்பித்து பழங்குடியினர் போராடினர். அவர்கள் மீது வழக்கு தொடர்ந்தது அரசு. 10,000 பேர் மீது தேசத் துரோக வழக்குகள் தொடரப்பட்டன. பழங்குடியினரின் அதிருப்தியும் கோபமும் 2019 சட்டமன்றத் தேர்தலில் எதிரொலித்தன.
இந்நிலையில், இந்தத் தேர்தலில் பழங்குடிகளின் வாக்குகளைக் கவர்வதில் முழுமூச்சுடன் பாஜக இறங்கியிருக்கிறது. இந்தப் பணியில், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா களமிறக்கப்பட்டிருக்கிறார். வங்கதேச சட்டவிரோதக் குடியேறிகள் மேற்கு வங்கம் வழியாக, ஜார்க்கண்டுக்கு வருவதாக பாஜக தொடர்ந்து குற்றம்சாட்டிவருகிறது.
அந்நியர்கள் மீதான பழங்குடியினரின் எதிர்ப்பைக் கொள்கையாகவே வைத்திருந்த சுதந்திரப் போராட்ட வீரர் பிர்ஸா முண்டாவை பாஜகவினர் போற்றிப் புகழ்கின்றனர். பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவருவது; அதில் பழங்குடியினருக்கு விலக்கு அளிப்பது என இதிலும் பழங்குடிகள் எதிர் முஸ்லிம்கள் என்னும் வியூகத்தை பாஜக முன்வைக்கிறது.
மறுபுறம், வங்கதேச சட்டவிரோதக் குடியேறிகள் ஊடுருவுகிறார்கள் என்றால் மத்திய அரசும் உள் துறையும் என்ன செய்துகொண்டிருக்கின்றன என இண்டியா கூட்டணி கேள்வி எழுப்புகிறது. அத்துடன், ‘பத்தல்கடி’ போராளிகள் மீதான வழக்குகளை ரத்துசெய்தது, பழங்குடியினர் மத்தியில் ஹேமந்த் சோரன் மீதான செல்வாக்கைத் தக்கவைத்திருப்பதாகக் கருதப்படுகிறது.
ஊழல் குற்றச்சாட்டுகள்: இன்னொருபுறம், ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஹேமந்த் சோரன் அரசு மீது மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் நடத்திவரும் சோதனைகள் பேசுபொருளாகியிருக்கின்றன. 8.86 ஏக்கர் நிலத்தைச் சட்டவிரோதமாகக் கையகப்படுத்தியதாக ஹேமந்த் சோரன் மீது 2023இல் அமலாக்கத் துறை குற்றம்சாட்டிய நிலையில், அவர் ராஜினாமா செய்ய நேர்ந்தது. கைதுசெய்யப்பட்ட அவர் பிணையில் வெளிவந்து மீண்டும் முதல்வராகிவிட, அவருக்குப் பதில் முதல்வராக இருந்த சம்பயி சோரன் அதிருப்தியடைந்து பாஜகவில் ஐக்கியமாகிவிட்டார். தேர்தல் நெருக்கத்தில், ராஞ்சியில் ஹேமந்த் சோரனின் உதவியாளர் சுனில் ஸ்ரீவஸ்தவாவின் வீடு உள்ளிட்ட 9 இடங்களில் வருமான வரித் துறை சோதனை நடத்தியது பரபரப்பாகப் பேசப்பட்டது.
சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என இண்டியா கூட்டணி முன்வைத்திருக்கும் வாக்குறுதிக்குத் தனது பாணியில் பாஜக பதிலடி கொடுத்துவருகிறது. 1990களில் ஓபிசி சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்ட நிலையில், அதன் பின்னர் காங்கிரஸ் கட்சியால் மக்களவைத் தேர்தல்களில் 250 இடங்களைக்கூடப் பெற முடியவில்லை என்று விமர்சித்திருக்கும் மோடி, சாதிவாரிக் கணக்கெடுப்பை முன்வைப்பதன் மூலம் எஸ்சி, எஸ்டி, ஓபிசி சமூகங்களுக்கு இடையிலான ஒற்றுமையைக் குலைக்க இண்டியா கூட்டணி முயல்வதாகக் குற்றம்சாட்டியிருக்கிறார்.
காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கிவந்த 370ஆவது சட்டக்கூறு திரும்பக் கொண்டுவரப்படும் என ஓமர் அப்துல்லா அரசு கொண்டுவந்த தீர்மானம், ஜார்க்கண்ட் தேர்தல் களத்திலும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. “இது பாகிஸ்தானின் அஜெண்டா” என்று விமர்சிக்க பிரதமர் மோடி தயங்கவில்லை.
மகளிர் வாக்குகள்: ஜார்க்கண்ட் வாக்காளர்களில் 40%க்கும் மேற்பட்டோர் பெண்கள். முதல் முறை வாக்காளர்களில் 56% பேர் பெண்கள். இந்நிலையில், ‘மைன்யா சம்மான் யோஜனா’ என்னும் திட்டத்தின்கீழ் மகளிருக்கு மாதம் ரூ.1,000 என வழங்கப்பட்டுவந்த உதவித்தொகை, ரூ.2,500 ஆக உயர்த்தப்படும் என ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி வாக்குறுதி அளித்திருக்கிறது.
10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, ஒவ்வொரு நபருக்கும் மாதம் தலா ஏழு கிலோ உணவு தானியம், ரூ.15 லட்சத்துக்கான சுகாதாரக் காப்பீடு, ரூ.450-க்கு எரிவாயு சிலிண்டர் எனப் பல்வேறு வாக்குறுதிகளை இண்டியா கூட்டணி முன்வைத்திருக்கிறது. இலவசத் திட்டங்களை எதிர்க்கும் பாஜகவும், மகளிருக்கு மாதம் ரூ.2,100 உதவித்தொகை, ரூ.500க்கு எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்திருக்கிறது.
ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரது மனைவி கல்பனா சோரன் அரசியல் பயணத்தைத் தொடங்கினார். கல்பனா சோரன் கலந்துகொள்ளும் கூட்டங்களில் அதிக அளவிலான மக்கள் - குறிப்பாக, பெண்கள் கூடுவது கவனம் ஈர்த்திருக்கிறது.
கூட்டணி நிலவரம்: ஜார்க்கண்டில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 43 தொகுதிகளிலும் காங்கிரஸ் 30 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. சத்தர்பூர், பிஷ்ரம்பூர், தன்வர் ஆகிய மூன்று தொகுதிகளில் ‘நட்பார்ந்த மோதல்’ என்ற பெயரில் இண்டியா கூட்டணிக் கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தியிருக்கின்றன. ராஷ்ட்ரிய ஜனதா தளத்துக்கு வெறும் ஆறே இடங்கள் ஒதுக்கப்பட்டது அக்கட்சியை அதிருப்திக்கு உள்ளாக்கியிருக்கிறது. இண்டியா கூட்டணியில் இடம் கிடைக்காததால் 21 தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறது. இது வாக்குகள் பிரிய வழிவகுக்கலாம் என்றும் பேசப்படுகிறது.
ஜார்க்கண்ட் மக்கள்தொகையில் 15% பங்கு வகிக்கும் குர்மி சமூகத்தைச் சேர்ந்த ஜெயராம் மஹதோ என்னும் இளம் தலைவர் இந்தத் தேர்தலில் கவனம் ஈர்த்திருக்கிறார். 2022இல் போஜ்புரி, மகஹி மொழிகளை ஜார்க்கண்டின் பிராந்திய மொழிகளின் பட்டியலில் இணைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராடிய ஜெயராம் மஹதோ, ஜார்க்கண்ட் லோக்தந்திரிக் கிராந்திகாரி மோர்ச்சா (ஜேஎல்கேஎம்) என்னும் கட்சியைத் தொடங்கி மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.
எனினும் அவரது கட்சியினருக்குக் கிடைத்த வாக்குகள் அவரது முக்கியத்துவத்தை உணர்த்தின. பாஜகவுக்கும் இண்டியா கூட்டணிக்கும் சற்றே அச்சுறுத்தலாக இவர் கருதப்படுகிறார். அதேவேளையில் அக்கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களில் சிலர் ஜேஎம்எம், கட்சியில் சேர்ந்துவருவது கவனிக்கத்தக்கது. குர்மி சமூகத்தைச் சேர்ந்தவரும் அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கம் கட்சித் தலைவருமான சுதேஷ் மஹதோ, இந்த முறை பாஜக பக்கம் இருப்பது அக்கட்சிக்கு அனுகூலம் எனக் கருதப்படுகிறது.
காங்கிரஸைப் பொறுத்தவரை இந்தத் தேர்தலில் முழு மூச்சாகப் பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை. அக்கட்சியின் தேர்தல் பொறுப்பாளரான குலாம் அஹ்மத் மீர், சமீபத்தில் நடைபெற்ற காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலில் வென்றவர். காஷ்மீர் சட்டமன்ற நடவடிக்கைகளில் காட்டும் ஈடுபாட்டை, ஜார்க்கண்ட் தேர்தலில் அவர் செலுத்தவில்லை என்கிற விமர்சனம் உண்டு.
“இண்டியா கூட்டணி நமுத்துப்போன பட்டாசு, பாஜக ராக்கெட் வேகத்தில் ஜார்க்கண்டை முன்னேற்றும்” எனப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியிருக்கிறார். கடந்துபோயிருக்கும் தீபாவளி யாருக்கு வெற்றியைப் பரிசளிக்கும் என நவம்பர் 23 இல் தெரிந்துவிடும்.
- தொடர்புக்கு: chandramohan.v@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT