Published : 13 Nov 2024 07:00 AM
Last Updated : 13 Nov 2024 07:00 AM
காலநிலை உச்சி மாநாடு (COP29) நவம்பர் 11 முதல் 22ஆம் தேதிவரை மத்திய ஆசிய நாடான அசர்பைஜான் தலைநகர் பாகுவில் நடைபெற்றுவருகிறது. சமீப ஆண்டுகளாக உலக நாடுகள் எதிர்கொண்டுவரும் வெள்ளம், வெப்ப அலை, காட்டுத் தீ, அதிதீவிர மழை, வறட்சி, பூமியின் சராசரி வெப்பநிலை அதிகரிப்புக் குறித்து இந்நிகழ்வில் உலகத் தலைவர்கள் பேச உள்ளனர். இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாக, காலநிலை மாற்றத்தினால் ஏழை நாடுகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள, வளர்ந்த நாடுகள் எவ்வளவு நிதி வழங்க வேண்டும் என்பது குறித்த ஆலோசனை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாநாட்டின் முக்கியத்துவம்: COP29 என்பது காலநிலை மாற்றம் குறித்து சர்வதேச அளவில் நடத்தப்படும் முக்கிய மாநாடாகும். இதை ஐக்கிய நாடுகள் அவை முன்னின்று நடத்துகிறது. COP (Conference of the Parties) அமைப்பில் 200 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இதன் முதல் காலநிலை உச்சி மாநாடு ஜெர்மனியின் பெர்லின் நகரில் 1995ஆம் ஆண்டு நடத்தப்பட்டது.
இம்மாநாட்டில் உலக நாடுகளின் பிரதமர்கள், அதிபர்கள், அமைச்சர்கள், அரசுப் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள். காலநிலை மாற்றத்தினால் உலக நாடுகளில் ஏற்படும் பாதிப்புகள், அதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்குத் தயாராவது போன்றவை குறித்து இம்மாநாட்டில் விவாதிக்கப்படும்.
ஆனால், காலநிலை மாற்றப் பாதிப்புக்கு முக்கியக் காரணமான கார்பன் உமிழ்வை அதிகம் வெளியிடும் உலக நாடுகளின் தலைவர்கள் (அமெரிக்காவின் தற்போதைய அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஷி ஜின்பிங், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரூன், ஜெர்மன் அதிபர் உலாஃப் ஷோல்ஸ், இந்தியப் பிரதமர் மோடி) அசர்பைஜான் மாநாட்டில் பங்கேற்கவில்லை.
கடந்த கால ஒப்பந்தங்கள்: காலநிலை உச்சி மாநாட்டின் முக்கிய விவாதமாகப் புவியின் வெப்பநிலை அதிகரிப்பு உள்ளது. காலநிலை மாற்றத்தினால் புவியின் ஆண்டு சராசரி வெப்பநிலை இயல்பைவிட 1.1 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. 2040ஆம் ஆண்டுக்குள் புவியின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸாக மாறக்கூடும் என்று விஞ்ஞானிகள் உலக நாடுகளை எச்சரித்துள்ளனர். வெப்பநிலை அதிகரிப்பால் புவியில் உயிரினங்கள் வாழ முடியாத சூழல் உருவாகலாம் என அஞ்சப்படுகிறது.
இதன் காரணமாகவே 2015இல் பாரிஸ் உடன்படிக்கையில் புவியின் வெப்ப நிலையை 1.5 டிகிரி செல்சியஸுக்குள் கட்டுப்படுத்த வேண்டும்; வளரும் நாடுகள் காலநிலை மாற்றத்தைச் சமாளிக்க 2020ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் 100 பில்லியன் டாலர் நிதியை வளர்ந்த நாடுகளிலிருந்து திரட்ட வேண்டும் என்பன போன்ற ஒப்பந்தங்கள் உலக நாடுகள் இடையே ஏற்படுத்தப்பட்டன. எனினும் இந்த நிதிப் பங்களிப்பில் வளர்ந்துவரும் நாடுகளான இந்தியா, சீனாவுக்கு அப்போது விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.
அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் போக்கு, அப்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப் பாரிஸ் உடன்படிக்கையிலிருந்து விலகியது, கரோனா பாதிப்பு, போர்ச் சூழல் போன்றவை காரணமாக பாரிஸ் உடன்படிக்கை சார்ந்து எந்த ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது.
2023இல்... 2023ஆம் ஆண்டு காலநிலை உச்சி மாநாடு (COP28) துபாயில் நடைபெற்றது. இதில், காலநிலை மாற்றத்தைச் சமாளிக்க, வளர்ந்த நாடுகளால் மொத்தம் 770 மில்லியன் டாலர் நிதி திரட்டப்பட்டது. காலநிலை உச்சி மாநாட்டின் 28 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாகப் புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கவும் முடிவுசெய்யப்பட்டது.
அத்துடன், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாட்டை உலக நாடுகள் மூன்று மடங்கு அதிகரிக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் நோய்கள், சுகாதாரப் பிரச்சினைகள் பற்றியும் அம்மாநாட்டில் தலைவர்கள் ஆலோசித்தனர்.
மாநாட்டின் எதிர்பார்ப்புகள்: காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புக்கான இழப்பீட்டு நிதியில் கார்பன் உமிழ்வில் முக்கிய அங்கம் வகிக்கும் இந்தியா, சீனா, வளைகுடா நாடுகள் பங்களிக்க வேண்டும் என வளர்ந்த நாடுகள் வலியுறுத்திவருகின்றன. தவிர, இழப்பீடு நிதியை வழங்குவதில் வளர்ந்த - வளரும் நாடுகளுக்கு இடையே சுமுகத் தீர்வு எட்டப்படாமல் உள்ளது. இவை குறித்து COP29 மாநாட்டில் விவாதம் நடைபெறலாம்.
கடல், ஆறு, மலை என எங்கெங்கும் சுற்றுச்சூழலில் பாதிப்பை ஏற்படுத்திவரும் பிளாஸ்டிக் மாசு குறித்து உலக நாடுகள் விவாதிக்கக்கூடும். மறுசுழற்சியை அதிகரித்தல் உள்ளிட்ட காலநிலை மாற்ற பாதிப்பைக் குறைப்பதற்கான புதிய ஒப்பந்தங்கள் உருவாக்கப்படும் என நம்பப்படுகிறது. “2030க்குள் வறட்சியினால் பாதிக்கப்பட்ட 1.5 பில்லியன் ஹெக்டேர் நிலத்தை மீட்டெடுப்பதற்கான வழிகள் குறித்தும், வறட்சியை எதிர்கொள்வதற்கான ஒப்பந்தங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படும்” என்று காலநிலை மாற்றம் குறித்த நிபுணரான அரோனா டிடியோ தெரிவித்துள்ளார்.
தீர்வுகள் எட்டப்படுமா? - புவியின் வெப்பநிலையை 1.5 டிகிரி செல்சியஸுக்கு உயராமல் தடுக்கக் கரியமில வாயுக்கள் உமிழ்வை, சுழியமாகக் (Net zero - கரியமில வாயு வெளியேற்றத்தை முற்றிலுமாகத் தடுத்துச் சமநிலைக்குக் கொண்டுவருவது) குறைக்க உலக நாடுகளின் நடவடிக்கை தேவை. பசுமை ஆற்றல் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் உலக நாடுகள் பொருளாதாரத்தை வலுப்படுத்திக்கொள்வதற்கான வழிமுறைகளை முன்வைப்பது இம்மாநாட்டின் முக்கிய நகர்வாக அமையக்கூடும். மேலும், காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் ஏழை நாடுகள், அவற்றுக்கான இழப்பீட்டைப் பெறுவதை இம்மாநாடு உறுதிப்படுத்த வேண்டும்.
புவியில் கரியமில வாயு வெளியேற்றம் 2022ஐவிட 2023இல் 1.1% அதிகரித்துள்ளது. 2023இல் கார்பன் உமிழ்வு புதிய உச்சத்தைத் தொட்டதாக கார்பன் பட்ஜெட் அறிக்கை (The Global Carbon Budget) சுட்டிக்காட்டியுள்ளது. இந்த எச்சரிக்கைகளை எல்லாம் கவனத்தில் கொண்டு, காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளைக் குறைப்பதற்கான தீர்வுகளை நோக்கி அசர்பைஜான் மாநாடு பயணிக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment