Published : 15 Jun 2018 09:57 AM
Last Updated : 15 Jun 2018 09:57 AM
சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் ட்ரம்பைச் சந்தித்த வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன், தனது மெய்க்காவலர்கள் புடைசூழ காரில் வந்த காட்சியை உலகமே ஆச்சரியத்துடன் பார்த்தது. கருப்பு நிற லிமோ காரில் அவர் வர, காரின் வேகத்துக்கேற்ப ஒரு டஜன் மெய்க்காவலர்கள் ஓடிவருகிறார்கள். கறுப்பு கோட், கறுப்பு டை. எல்லோரும் ஒரே உயரம். அதாவது கிம் உயரம். அவரைப் பாதுகாக்க என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். கிட்டத்தட்ட ஒரு மனிதக் கேடயம். மூன்றடுக்கு கொண்ட மெய்க்காவல் படை அவருக்கு உண்டு.
கிம் காருக்கு அருகில் ஓடிவரும் மெய்க்காவலர்களும், அவர் நடந்துசெல்லும்போது அருகில் இருப்பவர்களும் ‘சென்ட்ரல் பார்ட்டி ஆஃபீஸ் 6’ பிரிவைச் சேர்ந்தவர்கள். அனைவரும் கொரிய மக்கள் ராணுவத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.
இன்னொரு குழு உண்டு. அது ‘கார்டு கமாண்ட்’. அதிபர் செல்லும் இடங்களைப் பற்றி எல்லாத் தகவல்களும் அவர்கள் விரல் நுனியில் இருக்கும். உணவுப் பொருட்கள், மதுபானம், சிகரெட் என்று அவ்வப்போது அதிபருக்குத் தேவைப்படும் பொருட்களையும் தயார் நிலையில் வைத்திருக்கிறார்கள். அவற்றைக் கடுமையாகச் சோதனை செய்த பின்னரே அதிபருக்குக் கொடுக்கிறார்கள்.
மெய்க்காவலர் குழுவுக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களின் பரம்பரை ஜாதகமே அரசின் கையில் இருக்கும். பெரும்பாலும் அதிபர் கிம்மின் உறவினர் குடும்பங்களிலிருந்தோ, வட கொரியாவின் மேட்டுக்குடி குடும்பங்களிலிருந்தோதான் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT