Last Updated : 22 Jun, 2018 07:53 AM

 

Published : 22 Jun 2018 07:53 AM
Last Updated : 22 Jun 2018 07:53 AM

பொறியியல் மோகத்தைக் கொல்வோம்!

டந்த மாதம் வெளியான பிளஸ் 2 தேர்வுகளில் தமிழகத்தில் 91.1% மாணவர்கள் தேர்வுபெற்றிருக்கிறார்கள். அறிவியல் பாடங்களை எடுத்துப் படித்தவர்களின் தேர்வு விகிதம் இந்த சராசரியைக் காட்டிலும் அதிகம், 94.3%. வணிகத்திலும் வரலாற்றிலும் தேர்வு விகிதம் முறையே 87.5%, 79.6%, சராசரியைக் காட்டிலும் குறைவு. இதன் பொருள் வணிகமும் வரலாறும் கடினமான பாடங்கள் என்பதல்ல. நன்றாகப் படிக்கக்கூடிய பிள்ளைகள் மருத்துவ-பொறியியல் கனவுகளுடன் அறிவியலைத் தேர்ந்தெடுத்ததுதான் காரணம்.

தமிழகத்தில் 550-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. பொறியியல் படிக்க விரும்பும் அனைவருக்கும் இடம் கிடைத்துவிடும். ஆனால், எல்லோராலும் நல்ல பொறியாளர்களாகப் பரிணமிக்க முடிகிறதா?

லண்டனிலிருந்து வெளியாகும், ‘நியூ சிவில் இன்ஜினிய’ரின் சமீபத்திய இதழில் ஜாக்கியா ஆடம் எனும் இளம் பொறியாளர் எழுதிய கட்டுரை என்னைக் கவர்ந்தது. ‘பொறியாளர்கள் நாம் வாழும் இந்த உலகை வடிவமைக்கிறார்கள், கட்டமைக்கிறார்கள்’ என்று தொடங்குகிறது கட்டுரை. இது எனக்கு 1956-ல் கரக்பூர் ஐஐடி-யின் முதல் பட்டமளிப்பு விழாவில் நேரு நிகழ்த்திய உரையை நினைவூட்டியது. “இந்த உலகம் பொறியாளர்களின் கரங்களில் உருவாகிறது. பொறியாளர்கள் தேச நிர்மாணத்தில் நிர்வாகிகளாகவும் பங்காற்றுவார்கள்” என்று நேரு நம்பிக்கை தெரிவித்தார். இந்த நம்பிக்கை நம்முடைய சமகாலச் சூழலில் எந்த அளவுக்குப் பொருந்தும்?

வளர்ச்சியும் வீழ்ச்சியும்

1980-களில் தமிழகத்தில் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் தோன்றின. தொடர்ந்து இந்தியா மேற்கொண்ட தாராளமயமாக்கல் கொள்கையின் விளைவாக, தேசம் தகவல் தொழில்நுட்பத் துறையில் ‘அவுட்சோர்சிங்’ (அயல்பணி ஒப்படைப்பு) மையமாக மாறியது. சுயநிதிக் கல்லூரிகள் பெருகின. பொதுவியல், இயந்திரவியல், மின்னியல், மின்னணுவியல் என்று சகல துறைகளில் பட்டம் பெற்றவர்களும் தகவல் தொழில்நுட்பத் துறைக்குத் தாவினார்.

சுயநிதிக் கல்லூரிகளின் பெருக்கம் தொடக்கத்தில் வளர்ச்சியாகவே பார்க்கப்பட்டது. 2003-04ல் ‘அவுட்சோர்சிங்’ துறை உச்சத்தில் இருந்தது. வெளிநாட்டு நிறுவனங்களுக்குக் குறைந்த செலவில் சேவை வழங்கிய இந்த வர்த்தகம் ஒருகட்டத்தில் ஆண்டுக்கு பத்து லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியது. அப்போது அவுட்சோர்சிங், இந்தியாவை உய்விக்க வந்த தொழில் என்று விதந்தோதியவர்கள் உண்டு. உண்மையில் அது ஒரு சேவை, அது ஒரு தொழிலன்று. 2007-ல் ஏற்பட்ட உலகப் பொருளாதார மந்த நிலை அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் பாதித்தது. அவுட்சோர்சிங் தங்கள் நாடுகளின் வேலைவாய்ப்பைப் பறிப்பதாக அங்கெல்லாம் குரல்கள் எழுந்தன. 2016-ல் பிரிட்டிஷ் குடிமக்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற முடிவெடுத்ததும், அமெரிக்கக் குடிமக்கள் ட்ரம்பை அதிபராகத் தேர்ந்தெடுத்ததும் அவுட்சோர்சிங் துறைக்குப் பெரிய பின்னடவை ஏற்படுத்தின.

ஹாங்காங் உதாரணம்

அவுட்சோர்சிங்கின் வீழ்ச்சியால் இன்று பல பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை இல்லை. தொழில் துறையிலும் போதிய வேலைவாய்ப்புகள் இல்லை. முக்கியமாகப் பல பட்டதாரிகளின் பொறியியல் அறிவும் குறைபாடுடையதாக இருக்கிறது. என்றாலும், பொறியியல் மோகம் குறைந்தபாடில்லை.

இந்தியாவில் உள்ள இந்தப் பொறியியல் மோகத்தை வேறு எந்த நாட்டிலும் பார்க்க முடியாது. ஹாங்காங் பல்கலைக்கழகங்களில் கிராக்கியுள்ள துறை மருத்துவம். அடுத்து சட்டமும் மேலாண்மையும். அடுத்து மொழியியல், இலக்கியம், அறிவியல். அடுத்துதான் பொறியியல். சில ஆண்டுகளுக்கு முன்னால் நன்றாகப் படிக்கிற பிள்ளைகளைப் பொறியியலின்பால் ஈர்ப்பதற்காக ஹாங்காங் பொறியியல் கழகம் சில பிரச்சார உத்திகளைக் கைக்கொண்டது. அவற்றுள் ஒன்று பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களிடம் பொறியியலின் மேன்மையை எடுத்துச் சொல்வது. 2007-08ல் இந்தக் குழுவில் நானும் பங்கு பெற்றேன்.

ஒரு புகழ்பெற்ற பள்ளியில் லாம் சுங் வா என்ற மாணவன் கலந்துரையாடலில் ஆர்வமாகப் பங்கேற்றான். ஆனால், “வேதியியல்தான் படிக்கப் போகிறேன்” என்றான். “ஏன் பொறியியல் படிக்கக் கூடாது” என்று கேட்டேன். “பொறியியல் படிப்பதற்குக் கணிதத்திலும் இயற்பியலிலும் ஆர்வமும் அறிவும் இருக்க வேண்டும், என்னிடத்தில் இல்லை” என்று பதிலளித்தான். நான் வியந்துபோனேன். நமது பிள்ளைகளில் எத்தனை பேருக்கு இந்தத் தெளிவு இருக்கிறது?

கணிதமும் இயற்பியலும்தான் பொறியியல் கல்வியின் அடித்தளங்கள். இந்த அடித்தளத்தைப் பள்ளிப் படிப்பின்போது உருவாக்கிவிட வேண்டும். இந்த அடித்தளம் சரியாக இல்லாமல் பொறியியல் கல்லூரியில் சேர்வது பலமான அடித்தளம் இல்லாமல் கட்டிடம் கட்டுவதைப் போன்றது. பிற்பாடு பணியில் சேர்ந்தாலும் இவர்களால் மிளிர முடியாது. ஹாங்காங்கில் வளர்ந்த எனது பிள்ளைகள் இரண்டு பேரும் பொறியியல் படிக்கவில்லை. அவரவர்க்கு விருப்பமான துறையைத் தேர்ந்தெடுத்தார்கள். நன்றாகவே படித்தார்கள். எல்லாத் துறைகளும் நன்று. எல்லாத் துறைகளிலும் வேலைவாய்ப்பும் இருக்கிறது. எந்தத் துறையாக இருந்தாலும், ஈடுபாட்டோடு படிக்க வேண்டும். விஷயம் அவ்வளவுதான்!

கல்வி வணிகம்

நேரு தேச நிர்மாணத்துக்குப் பொறியாளர்களைப் பெரிதும் நம்பினார். பொறியியல் கல்வி இப்படி வணிகமாகும் என்று அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார். நேரு ஏமாந்தார். இது கல்வியிலும், வேலைவாய்ப்பிலும், தொழில் துறையிலும் பெரிய வீழ்ச்சியை ஏற்படுத்திவருகிறது. இதை அனுமதிக்கலாகாது. இளம் தலைமுறையினர் விழித்துக்கொள்ள வேண்டும்!

- மு.இராமனாதன்,

ஹாங்காங்கின் பதிவுபெற்ற பொறியாளர்,

தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x