Published : 11 Aug 2014 08:28 AM
Last Updated : 11 Aug 2014 08:28 AM
கடலுக்கும் கடற்கரைக்கும் அழகான ஒரு நிறம் உண்டு. அது இயற்கையைச் சிதைத்துவிடாத, பாரம்பரியக் கடலோடிகளின் எளிமையான வாழ்க்கைக் கலாச்சாரத்தால் விளைந்த நிறம். இப்போது அந்த நிறம் வெளிரி புதிதாக வெளியிலிருந்து ஊடுருவும் நிறம் கடலையும் கடற்கரையையும் ஆக்கிரமிக்கிறது. பண வேட்கையும் சுரண்டும் வெறியும் நுகர்வுக் கலாச்சாரமும் சூழ்ந்த நிறம். பாரம்பரியக் கடலோடிகளை அவர்களுடைய பூர்வீகச் சொத்தான கடலிலிருந்தும் கடற்கரையிலிருந்தும் அடித்து விரட்டத் துடிக்கும் நிறம்.
நான் கன்னியாகுமரியைவிட்டுப் புறப்படும் நாளன்று என்னை நோக்கித் தலைதெறிக்க ஓடிவந்தார் பெரியவர் அந்தோணிசாமி.
“ஏய்யா, பத்திரிகையில எங்க கடப்புற மக்களப் பத்தி எழுத வந்தவரு நீங்கதான?”
மூச்சிரைப்பு நிற்காத அவரிடம் நான் ஒரு வார்த்தை பேசுவதற்குள் அவரே தொடர்கிறார்.
“ஏய்யா, எங்க மக்களுக்காவ நீங்க தயைபண்ணி ஒண்ணு எழுதணுமய்யா... இங்க கன்னியாகுமரியில ஒரு புத்துநோய் ஆசுபத்திரி கட்டிக்கொடுக்கணும்னு எழுதணுமய்யா...
ஐயா, உங்ககிட்ட எங்காளுங்க யாரும் இதப் பத்திச் சொன்னாங்களா இல்லையான்னு தெரியலீங்கய்யா. இங்க கடக்கர முழுக்கப் புத்துநோய் பரவிக் கெடக்கு. பாவி மக்களைக் கொன்னுப்போடுது. நாங்க பொழைக் கிற நூறு எரநூறு பொழப்புல இந்த நோயிலாம் வந்தா எப்டிங்கய்யா பாக்குறது? சாவத் தடுக்க வழியில்ல. சாவுற வரைக்கும் வலி தாங்குறதுக்குத் தூக்க மாத்தர வாங்கணும்னாலே, திருவனந்தபுரம் ஓட வேண்டிக் கெடக்கு. அங்கே நம்மாளுவோள மதிக்க மாட்டாங்கான். அவன சொல்லிக் குத்தமில்ல. அன்னிக்கு கேரள சர்க்காரு வேணாமின்னு போராட்டம் செஞ்சி, நாம தமிழ்நாட்டு சர்க்காரோட சேர்ந்துகிட்டம். இப்பம் போயி அவன்கிட்ட நின்னா, நியாயம் இல்ல பாருங்க... நீங்க எழுதணுமய்யா...”
தூத்துக்குடி கடற்கரையில் ஜானைச் சந்தித்தேன். “தூத்துக்குடின்னா, முத்துக் குளிக்குற நகரம்னு நெனைச்சுக்கிட்டிருக்கு ஒலகம். தூத்துக்குடில முத்துக் குளிக்குற தொழில் செத்து அம்பது அறுவது வருசம் ஆயிப்போச்சு, தெரியுங்களா? அப்புறம் வேற வழியில்லாம சங்கு குளிச்சுக்கிட்டு கிடந்தோம். இப்ப உயிர்ச் சங்குக்கும் வழியில்லாம, செத்த சங்கப் பொறுக்கி பொழைச்சிக்கிட்டுருக்கோம். இதுவும் எவ்வளோ காலத்துக்குன்னு தெரியல. எழுதுங்க...”
வேம்பார். “நகரத்துல காசு கொடுத்துத் தண்ணி வாங்கிக் குடிக்கிறது உங்களுக்குத் தெரியும். இப்படிக் கடக்கரைப் பக்கம் உள்ள கிராமங்கள்ல தண்ணி வாங்கிக் குடிக்கிறது ஒலகத்துல எங்கேயாவது நடக்குமாய்யா? நீங்க அவசியம் இதை எழுதணும்!”
பாம்பன் சென்றுவிட்டு ராமேஸ்வரம் பஸ்ஸில் ஏறும்போது கால் வழுக்கியது. சட்டெனக் கை கொடுத்து இழுத்தார் பெரியவர் ஆறுமுகம். “யப்பா... பஸ்ஸா இல்ல ராமேஸ்வரத்துக்கு, பாத்து ஏறக்கூடாதாப்பா?” என்று உட்கார இடம் கொடுத்தார். வெறும் கால் மணி நேரப் பயணத்துக்குள் இருவரும் யார், எவர் என்று சகல கதைகளையும் பரிமாறிக்கொண்டிருந்தோம்.
“யப்பா, ரொம்ப நல்ல காரியம் செய்யுறீங்க. யாரும் கண்டுக்காத பாவி மனுசனாப் போய்ட்டோம். எழுதுங்க, நல்லா எழுதுங்க. கடக்கரையில நடக்குற எதுவும் வெளியே யாருக்கும் தெரியுறதில்ல.
அந்தக் காலத்துல ‘உள்ளதையெல்லாம் வித்தாவது உள்ளான் வாங்கித் தின்னு’னு சொல்லுவாங்க ராமேஸ்வரத்துல. அந்த ருசி உள்ளான் ருசி. ராமேஸ்வரம் கடல்ல இப்படிப் பல மீனுங்க உண்டு. இங்க மட்டும் வரும். வெளிக்கடல்ல கெடைக்குற மீனுங்களும்கூட இந்தக் கடத்தண்ணில கெடக்கும்போது ஒரு தனி ருசி ஏறிடும், பாத்துக்கங்க, அப்படி ஒரு தண்ணி இந்தத் தண்ணி. எல்லாம் பவளப்பாறையில தங்குற கூட்டம் வேறல்ல? அதனால, வெளியூர்க்காரனெல்லாம் இங்கெ வந்து தங்கி விதவிதமா மீன் தின்னுப் போவான். ஆனா, இப்பம் கத என்ன தெரியுமா? ராமேஸ்வரக்காரன் மீன் திங்க ஆசையெடுத்தாலே, வெளியூர் மீனை வாங்கித்தான் திங்கணும்.
ராமேஸ்வரத்துல மூணு படகை வெச்சி, தொழில் செஞ்சிக்கிட்டுருந்தவன் நான். ரெண்டு படகை வித்திட்டு, ஒத்த படகைப் பாம்பன்ல போட்டு, அங்க போயி தொழில் பாத்துக்கிட்டு வந்துக்கிட்டிருக்கேன். மீனே கெடையாது. பவளப்பாறையெல்லாம் அழிஞ்சுக் கெடக்கு. என் நெலமையாவது தேவலாம். கட்டுமரம் வெச்சிருந்தவனெல்லாம் வழியத்துப்போய்ட்டான். எல்லாம் பொழப்பத்துப்போய்க் கெடக்கோம். இதெல்லாம் எழுதுங்க...”
தமிழ்நாட்டுக் கடற்கரை ஊர்களின் சாபங்களில் முக்கியமானது புற்றுநோய். பழவேற்காடு தொடங்கி நீரோடி வரை புற்றுநோயின் குரூர ஆட்டத்துக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள் தமிழகக் கடலோடிகள். காரணம் என்ன?
தூத்துக்குடி கடலில் முத்து வளம் அழிந்து, இப்போது சங்கு வளமும் சாகக் காரணம் என்ன? ஆற்றுத் தண்ணீரின் ருசியைக் கடற்கரை ஊற்றுத் தண்ணீர் தாண்டும் என்பார்கள். ஊற்றுநீர் தூர்ந்து நிலத்தடிநீர் உப்பள நீராகக் காரணம் என்ன?
ராமேஸ்வரத்தில் மட்டும் அல்ல; அங்கே நீரோடியில் தொடங்கி இங்கே பழவேற்காடு வரை என்றைக்கு மீன் வளம் அற்று பிழைப்பு அற்றுப்போகுமோ என்று கடலைப் பயத்தோடு பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் தமிழகக் கடலோடிகள். காரணம் என்ன?
(அலைகள் தழுவும்...)
- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT