Published : 22 Jan 2014 09:59 AM
Last Updated : 22 Jan 2014 09:59 AM
ஒரு நூலகம் எப்படி இருக்க வேண்டும்? ஒரு நூலகத்தின் முக்கியத்துவம் என்ன? தனியொரு மனிதரால் ஒரு நூலகத்தின் மூலம் என்னவெல்லாம் செய்ய முடியும்? புதுக்கோட்டையிலிருந்து வழிகாட்டுகிறார் கிருஷ்ணமூர்த்தி. தன் சொந்த செலவில் மூன்று தளங்களில் கிருஷ்ணமூர்த்தி அமைத்திருக்கும் ‘ஞானாலயா நூலகம்’தான் தமிழ்நாட்டில் தனிநபர் ஒருவரின் மிகப் பெரிய நூலகம்.
கிட்டத்தட்ட ஒரு லட்சம் நூல்களைக் கொண்டிருக்கும் ‘ஞானாலயா’வின் முக்கியமான சிறப்பு அவற்றில் ஆகப் பெரும்பான்மையான நூல்கள் மூல நூல்கள் – அரிய நூல்கள் என்பது. தமிழ் மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த நூலகத்தைத் தன் மனைவி டோரதியுடன் இணைந்து ஏகப்பட்ட சிரமங்கள் இடையே பராமரிக்கிறார் எழுபதுகளில் இருக்கும் கிருஷ்ணமூர்த்தி.
“எனக்குச் சொந்த ஊர் திருவாரூர் பக்கத்துல இருக்குற காலாலகுடி. பின்னாடி திருச்சி வந்துட்டோம். எங்க அம்மா, அப்பா ரெண்டு பேரோட குடும்பங்களுமே நல்ல கல்விப் பின்னணி உடையவை. தவிர, அப்பா அந்தக் காலத்துல திருச்சி மாவட்டக் கல்வி அதிகாரியா இருந்தவர். வீட்டுல எல்லோருக்குமே வாசிக்கிற பழக்கம் இருந்ததால புத்தகங்கள், வாசிப்பு மேல எனக்கு ரொம்ப இயல்பா பிடிமானம் ஏற்பட்டுடுச்சு.
எங்க வீட்டுல ஒன்பது பிள்ளைங்க. ஆனா, அப்பா அவர் முக்கியமான புத்தகங்கள்னு நெனைச்சு சேகரிச்சுவைச்சிருந்த புத்தகங்களை என்கிட்ட கொடுத்து பத்திரமா வைச்சுக்கச் சொல்லிக்கொடுத்தப்போ ஏதோ ஒரு பொறுப்புணர்வு, புத்தகங்களைப் பாதுகாக்குறதுல வந்துச்சு.
எல்லோரும் மாதிரி நானும் ஒருகாலம் வரைக்கும் புதுப் புத்தகங்களை ஆர்வமா வாங்கிக்கிட்டு இருந்தவன்தான். ஒருமுறை புத்தகம் வாங்கப் போனப்போ 1908-ல பாரதி கொண்டுவந்த ‘சுதேச கீதங்கள்’ முதல் பதிப்பு புத்தகம் கிடைச்சது. அதுல பாரதியோட கவிதைகள் மட்டும்தான் இருக்கும்னு நெனைச்சுக்கிட்டு புரட்டினப்போ, மதுரை புலவர் முத்துக்குமரனார் எழுதின
‘என் மகனே…’ங்கிற ஒரு பாட்டை அதிலே பார்த்தேன். நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் இல்லாத ஒரு பிள்ளையைப் பார்த்து தந்தை பாடுற மாதிரி அமைஞ்ச பாட்டு அது. ‘பாரதி புத்தகத்துல முத்துக்குமரனார் பாட்டு எப்படி’ன்னு பார்த்தப்போதான், அந்தக் காலத்துல, தான் எழுதின பாடல்களை மட்டும் இல்லாம தேச பக்திப் பாடல்களை எழுதி பாரதிகிட்ட கொடுத்த மற்ற புலவர்களோட பாடல்களையும் தன்னோட கவிதைகளோட இணைச்சு பாரதி புத்தகமா வெளிக்கொண்டுவந்தது தெரியவந்தது.
பாரதிக்குத்தான் என்ன மாதிரி ஒரு உயர்ந்த நோக்கம் இருந்துருக்குன்னு யோசிச்சப்போதான் தோணுச்சு. பின்னாடி வந்த பாரதியோட கவிதைத் தொகுப்புகள்ல பாரதியோட தேச பக்திப் பாடல்களைப் படிக்க முடியும். ஆனா, இந்தப் புத்தகத்தைப் பார்க்காத ஒருத்தருக்கு இந்த விஷயம் எப்படித் தெரியும்?
அப்புறம்தான், முதல் பதிப்புப் புத்தகங்களா தேடிச் சேகரிக்க ஆரம்பிச்சேன். அப்படித் தேடிப்பிடிக்க ஆரம்பிச்ச கொஞ்ச நாள்லேயே உணர்ந்த ஒரு உண்மை – ஒரு புத்தகத்தோட முதல் பதிப்புக்கும் அதோட அடுத்தடுத்த பதிப்புகளுக்கும் இடையில பல இடைச்செருகல்கள், நீக்கங்கள், மாற்றங்கள் இருக்கும்கிறது. முதல் பதிப்புங்குறது பெரும்பாலும் ஒரு புத்தகத்தை எழுதின ஆசிரியரோட நேரடிப் பங்கேற்பைக் கொண்டதா இருக்கக்கூடியது. அதனால அது முக்கியமானதுன்னு புரிஞ்சுது.
கூடிய சீக்கிரமே இன்னொரு உண்மையும் புரிஞ்சுது. தமிழ்நாட்டைப் பொறுத்த அளவுல பாரதியிலேர்ந்து சுஜாதா வரைக்கும் எல்லோரோட பெரும்பாலான எழுத்துகளும் இதழ்கள்லேயே பிரசுரமாகியிருக்கு. அதனால, இதழ்களையும் சேகரிக்க ஆரம்பிச்சேன். இதுலேயும் பல செய்திகள் இருக்கு. உதாரணத்துக்கு ஒண்ணு சொல்றேன். புதூர் வைத்தியநாத ஐயர்கிட்டேயிருந்து ஒரு எழுத்துக்கு 25 ரூபாய்னு 200 ரூபாய்க்கு எஸ்.எஸ். வாசனால வாங்கப்பட்டது ‘ஆனந்த விகடன்’. இது பலருக்குத் தெரிஞ்சுருக்கலாம்.
வாசன்கிட்ட ‘ஆனந்த விகடன்’ பத்திரிகையை வித்ததுக்கு அப்புறம் வைத்தியநாத ஐயரால சும்மா இருக்க முடியலை. ‘ஆனந்த விஜய விகடன்’னு ஒரு பத்திரிகையை ஆரம்பிச்சு நடத்தினார். என்கிட்ட வாசன் வாங்கின 1928-ம் வருஷ ‘ஆனந்த விகடன்’ பிரதியும் இருக்கு; அதுக்கு அப்புறம் வைத்தியநாத ஐயர் ஆரம்பிச்சு நடத்தின 1929-ம் வருஷ ‘ஆனந்த விஜய விகடன்’ பிரதியும் இருக்கு.
சின்ன வயசுலேர்ந்தே இலக்கிய ஆர்வம் இருந்ததால ஏராளமான இலக்கியவாதிகளோட எனக்குப் பழக்கம் இருந்துச்சு. அப்படியான என்னோட நண்பர்கள்ல ரொம்ப முக்கியமான ரெண்டு பேர் ஏ.கே. செட்டியாரும் ரோஜா முத்தையா செட்டியாரும். ஆவணப்படுத்துறதுல அவங்களுக்கு இருந்த அக்கறையும் அதுக்காக அவங்க எடுத்துக்கிட்ட சிரத்தையும் எனக்குள்ளே ரொம்பவே தாக்கத்தை உண்டுபண்ணுச்சு. இந்த நூலகத்தோட ஆரம்பப் புள்ளி அவங்களோட பாதிப்புலேர்ந்து தொடங்கினதுதான்.
என்னோட காதல் மனைவி டோரதிக்கும் புத்தக வாசிப்புல என்னை மாதிரியே பெரிய ஆர்வம் இருந்ததால, அவங்களும் என்னோட கைகோத்தாங்க. சின்ன நூலகமாத்தான் ஆரம்பிச்சோம். முதல்ல எங்களுக்குப் பெரிய களமா இருந்தது திருச்சில இருந்த பழைய புத்தகக் கடைகள். அப்புறம் செட்டிநாட்டுல நிறைய பேர் வீட்டைக் காலி பண்ணும்போது புத்தகங்களை ஒழிச்சாங்க. அங்கே போக ஆரம்பிச்சேன். திருச்சிலேர்ந்து புதுக்கோட்டைக்கு வந்ததுக்கு முக்கியமான காரணம் செட்டிநாட்டுக்குப் பக்கத்துல இது இருக்குங்கிறது.
எங்களுக்கு ரெண்டு பிள்ளைகளும் பெண்கள். பூர்வீகமா 36 ஏக்கர் நிலம், மூணு வீடு இருந்த பின்னணியிலேயிருந்து வந்தவன்னாலும் ஒரு கட்டத்துல நானும் என் மனைவியும் எங்க எல்லாச் செலவையும் சுருக்கிக்கிட்டு, புத்தகங்களுக்குச் செலவழிச்ச தொகையைப் பார்த்துட்டு சுத்தி இருக்கிற சொந்தபந்தங்கள், நண்பர்கள் எல்லாருமே பயந்தாங்க. ஆனா, நாங்க எங்க நோக்கத்துல தெளிவா இருந்தோம். வேலையிலேர்ந்து ஓய்வுபெற்றப்ப பதினோரு லட்ச ரூபாய்ல நூலகத்தை முறையாக் கட்டினோம். அப்புறம் பதிமூணு லட்ச ரூபாய்ல மேல ரெண்டு தளங்களைக் கட்டினோம் – வெளிநாட்டுலேர்ந்து யாரும் வந்தா இங்கேயே தங்கிப் படிக்கிற அறை வசதியோட.
இன்னைக்கு, 1842-ல வந்த வீரமா முனிவரோட ‘சதுரகராதி’ல ஆரம்பிச்சு 1852-ல வந்த ‘திருக்குறள்’ பதிப்பு, 1866-ல வந்த ‘பிரெஞ்சு – தமிழ் அகராதி’, 1887-ல உ.வே.சா. பதிப்பிச்ச ‘சீவக சிந்தாமணி’ன்னு ஆயிரக் கணக்கான அரிய நூல்கள்; ஏ.கே.செட்டியார் நடத்தின ‘குமரிமலர்’ (1943-1983 தொகுப்பு), வை.கோவிந்தன் நடத்தின ‘சக்தி’ (1939-1954 தொகுப்பு) போல, பல நூறு இதழ்கள் இங்கே இருக்கு. கிட்டத்தட்ட 150 பேர் இந்த நூலகத்தைப் பயன்படுத்தி முனைவர் பட்டமும் ஆய்வியல் நிறைஞர் பட்டமும் வாங்கியிருக்காங்க.
இங்கே உள்ள முதல் பதிப்பு புத்தகங்களைப் பிரதி எடுத்து மூவாயிரத்து சொச்ச புத்தகங்கள் மறுபதிப்பாகி வந்திருக்கு. இந்த நூலகத்தை வைச்சு ஆதாயம் அடையணும்கிற நோக்கம் எங்களுக்கு இல்லை; ஆனா, இவ்வளவு பெரிய சேகரிப்பும் வீணாயிடக் கூடாதுங்குற கவலை இருக்கு. நாள் ஆகஆக புத்தகங்கள் உடைஞ்சு நொறுங்கி உருக்குலைஞ்சுபோயிடும். இந்த நூல்களை எல்லாம் மின் வடிவத்துல மாத்தணும்.
அதுக்குப் பெரும் செலவு ஆகும். அரசாங்கம் இதற்கு உதவணும். ஏன்னா இங்கே உள்ள புத்தகங்கள் எல்லாம் வெறுமனே எங்களோட சேகரிப்பு மட்டும் இல்லை; காலாகாலத்துக்கும் நம்ம சமூகத்துக்குப் பயன்படுற வரலாற்று வளங்கள். இது அடுத்த தலைமுறைக்குப் பாதுகாப்பா கையளிக்கப்படணும். எவ்வளவோ கஷ்டங்களுக்கு மத்தியில இதுவரைக்கும் பாதுகாத்துட்டோம்; இனியும் பாதுகாக்கணும். நிச்சயம் நடக்கும். தமிழ் நடத்தும்!”
(தொடர் நிறைவடைந்தது)
சமஸ், தொடர்புக்கு: samas@kslmedia.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT