Published : 14 Aug 2014 12:00 AM
Last Updated : 14 Aug 2014 12:00 AM
சுவாசிப்பதற்கும் முகர்வதற்கும் மட்டுமல்ல, மொழியில் சில ஒலிகள் உருவாவதற்கும் மூக்கு மிகவும் அவசியம். தமிழில் மெல்லினம் என்ற பிரிவைச் சேர்ந்த ‘ங், ஞ், ண், ந், ம், ன்’ ஆகிய ஆறு ஒலிகளும் உருவாவதில் மூக்குக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. எனவே, இந்த ஒலிகள் ‘மூக்கொலிகள்’ என்று அழைக்கப்படுகின்றன.
மூக்கு தொடர்பான சில சொற்களும் தொடர்களும் எடுத்துக்காட்டுகளும்:
மூக்கறு/ மூக்கை உடை- (அவனுடைய நண்பர்களுக்கு முன்னாலேயே அவனை நான் மூக்கறுத்துவிட்டேன்.)
மூக்கால் அழு – (கார் வாங்கச் சொல்லி மனைவி மூக்கால் அழுகிறாள்.)
மூக்கில் விரலை வை – (அவளுடைய திறமையைப் பார்த்து ஊரே மூக்கில் விரலை வைக்கிறது.)
மூக்கில் வியர்- (நீ வந்துவிட்டாய் அல்லவா, இன்னேரம் உன் நண்பனுக்கு மூக்கில் வியர்த்திருக்கும்.)
மூக்கு மேல் கோபம் – (அநியாய வட்டி வாங்குகிறீர்களே என்று கேட்டதும் அவருக்கு மூக்கு மேல் கோபம் வந்துவிட்டது.)
மூக்குடைபடு – (அந்தப் பெண்ணிடம் வம்பிழுக்கப் போய் நன்றாக மூக்குடைபட்டு வந்திருக்கிறான் என் நண்பன்.)
மூக்குப்பிடிக்க – (மூக்குப்பிடிக்கச் சாப்பிட்டது போதாதா?)
மூக்கும்முழியுமாக – (அந்தப் பெண், பார்ப்பதற்கு மூக்கும்முழியுமாக இருந்தாள்.)
மூக்கைத் துளை – (கோழிக்குழம்பு வாசனை, மூக்கைத் துளைக்கிறதே?)
மூக்கை நுழை – (தேவையில்லாத விஷயங்களில் மூக்கை நுழைக்காதே.)
மூக்கு தொடர்பான பொருட்களும் இருக்கின்றன. மூக்குக் கண்ணாடியைக் கண்பார்வைக்குப் போட்டாலும், அதிலும் மூக்கு வந்து ஒட்டிக்கொண்டுவிடுகிறது! அப்புறம் மூக்குத்தி, மூக்குத்திப் பொட்டு (சிறிய மூக்குத்தி), புல்லாக்கு போன்ற அணிகலன்களை விட்டுவிட முடியுமா!
மூக்கு தொடர்பான ஒருசில சொற்களும் தொடர்களும்தான் இங்கே கொடுத்திருக் கிறோம். வாசகர்களே, உங்கள் வட்டாரத்தில் மூக்கு தொடர்பான தனித்துவமிக்க சொற்களும் தொடர்களும் இருந்தால் எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்!
சொல்தேடல்
‘விசில்’ என்ற விளையாட்டுப் பொருளுக்கு, பெரும்பாலான வாசகர்கள் ‘ஊதல்’ என்ற சொல்லை அனுப்பி அசத்திவிட்டார்கள். இதுதவிர, பீப்பி, ஊதி, பிகில், சீட்டி, ஊதுகுழல், சீப்பாங்குச்சி, ஊதாங்குச்சி போன்ற அழகான சொற்களையும் வாசகர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். இதில், பீப்பி என்ற சொல் பெரும்பாலும் பூவரசம் பீப்பியைக் குறிக்கும். நாதஸ்வரத்தையும் சிறுவர்கள் பீப்பி என்று குறிப்பிடுவதுண்டு.
மேலும், ‘உங்கள் குரல்’ மூலம் ஒரு வாசகர் விசிலுக்கு ‘வாய்க்குருவி’ என்ற அலாதியான சொல்லைக் குறிப்பிட்டிருக்கிறார். ‘தி இந்து’ இணையதளத்தில் பெயர் குறிப்பிடாத வாசகர் ஒருவர் ‘சீங்குழல்’ என்ற அற்புதமான சொல்லைக் குறிப்பிட்டிருக்கிறார். மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படும், அழகாகச் சீட்டியடித்துப் பாடும் ‘சீகாரப் பூங்குருவி’ (Malabar Whistling Thrush) என்ற பறவையை ‘சீங்குழல்’ என்ற சொல் நினைவுபடுத்துகிறது.
ஊதலைக் கொண்டு எழுப்பும் ஒலியை வாயாலும் எழுப்புவார்கள். அந்த ஒலியையும் செயலையும் குறிப்பிட சீட்டி, சீழ்க்கை, சீக்கி, வீளை போன்ற சொற்கள் இருக்கின்றன.
இந்த வாரக் கேள்வி: ஆங்கிலத்தில் ‘ஃப்ரீலான்ஸ்’ (freelance) என்று ஒரு சொல் இருக்கிறது. குறிப்பிட்ட எந்த ஒரு நிறுவனத்திலும் பணிபுரியாமல் பலருக்கும் பணி செய்து கொடுப்பதைக் குறிக்கும் சொல் இது. இந்தச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல் எது?
- ஆசை, தொடர்புக்கு : asaithambi.d@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT