Published : 14 Jun 2018 08:37 AM
Last Updated : 14 Jun 2018 08:37 AM
தமிழகத்தின் தண்ணீர் தொட்டி என்று நீலகிரி மாவட்டம் அழைக்கப்படுகிறது. சமவெளியில் பாயும் நதிகளின் நீர்ப்பிடிப்பு பகுதியாகவும் விளங்குகிறது. இங்கு உற்பத்தியாகும் மாயார், பவானி ஆகிய இரு ஆறுகளும் கோவை, ஈரோடு மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசனத் தேவையை பூர்த்தி செய்து, காவிரியுடன் கலந்து டெல்டா மாவட்டங்களை சென்றடைகின்றன. நீலகிரி மாவட்டத்தில் ஜூலை முதல் செப்டம்பர் வரை தென்மேற்குப் பருவ மழை சராசரியாக ஜூனில் 172, ஜூலையில் 212, ஆகஸ்டில் 135, செப்டம்பரில் 136 மி.மீ. என 655 மி.மீ. பதிவாகும். அக்டோபர், நவம்பர் மாதங்களில் வட கிழக்குப் பருவமழை சராசரியாக 614 மி.மீ. பதிவாகும். பெரும்பாலும் மின் உற்பத்தி, குடிநீர்த் தேவைக்கு பயன்படுகிறது.
குந்தா, பைக்காரா புனல் நீர்மின் திட்டத்தின் கீழ் உள்ள 12 மின் நிலையங்கள் மூலமாக 833.77 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், நீலகிரி மாவட்டத்துக்கு 70 மெகா வாட் மட்டுமே பயன்படுகிறது. மீதமுள்ள மின்சாரம், ஈரோடு கிரீட்டுக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து தமிழகம் முழுவதும் விநியோகிக்கப்படுகிறது. மேலும், எமரால்டு, முக்கூர்த்தி, பைக்காரா, சாண்டிநல்லா, கிளன்மார்கன், மாயார், பார்சன்ஸ்வேலி, போர்த்திமந்து, அவலாஞ்சி, குந்தா, கெத்தை, அப்பர் பவானி அணைகளில் தேக்கி வைக்கப்படும் நீரின் மூலமாகவும் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. மேற்கண்ட அணைகளில் தேக்கப்படும் சுமார் 11 ஆயிரத்து 715 கனஅடி க்யூபிக் செக்சஸ்(Cusecs) நீர், ராட்சத குழாய்கள் மூலம் குந்தா மின் நிலையம் கொண்டு வரப்பட்டு, மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
உற்பத்திக்குப் பிறகு வெளியேறும் நீர், குந்தா அணை சுரங்கப் பாதை வழியாக 16 கி.மீ. தூரத்தில் உள்ள கெத்தை மின் நிலையம் கொண்டு செல்லப்பட்டு மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதே முறையில் பரளி, பில்லூர் மின் நிலையங்களும் இயங்குகின்றன. மின் உற்பத்திக்கு முக்கியமான அப்பர் பவானி அணையில் இருந்து வெளியேறும் நீர், குழாய்கள் மூலமாக மீண்டும் அணைக்கு கொண்டு வரப் படுவது சிறப்பம்சம்.
இந்த அனைத்து அணைகளும் ஒன்றோடு ஒன்று ஒன்றிணைந்துள்ளதால், மாவட்டத்தில் சேகரமாகும் நீர் விரயமாகாமல் மின் உற்பத்திக்கு பயன்படுகிறது. பின்னர், பில்லூர் அணை மூலமாக உபரிநீர் சமவெளிப் பகுதிக்கு வெளியேற்றப்படுகிறது. அந்த நீர் பவானி ஆற்றில் கலந்து, ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானிசாகர் அணையை சென்றடைகிறது.
குடிநீர் பயன்பாடு
மின் உற்பத்திக்குப் பயன்படும் அணைகளில் ஒன்றான பார்சன்ஸ் வேலியில் இருந்து உதகை நகரம், வெலிங்டன் ராணுவ மையத்தின் குடிநீர் தேவைக்கு தினமும் 1 கோடி லிட்டர் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. குன்னூர் நகருக்குஎமரால்டு அணையில் இருந்து குடிநீர் வழங்க 2011-ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா புதிய திட்டத்தை அறிவித்தார்.
தமிழ்நாடு வடிகால் வாரியம் மூலமாக, எமரால்டு அணையில் இருந்து 40 கி.மீ. தூரம் குன்னூர் வரை குழாய்கள் அமைத்து, தினமும் 116 லட்சம் லிட்டர் தண்ணீர் விநியோகிக்க முடிவு செய்யப்பட்டது. இதன்மூலமாக, குன்னூர் நகராட்சி, முப்படை அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி மற்றும் பாஸ்டியர் ஆய்வகம் பயன் பெறும். இத்திட்டம், இழுபறியில் நடந்து வருகிறது.
பாண்டியாறு - புன்னம்புழா
நீலகிரி மாவட்டத்தின் கிழக்கு பகுதியிலுள்ள கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாக்களில் பெய்யும் மழை நீர், கேரளாவுக்கும், கர்நாடகா மாநிலத்தின் கபனி ஆற்றுக்கும் செல்கிறது. நாட்டின் 2-வது சிரபுஞ்சி என்று அழைக்கப்படும் கூடலூர் அருகே உள்ள தேவாலாவில் ஆண்டுக்கு சராசரியாக 7,000 மி.மீ. மழை பெய்கிறது. இங்கு உற்பத்தியாகும் பாண்டியாறுக்கு நீர் ஆதாரமாக இருப்பது தேவாலா, பந்தலூர் மற்றும் ஓவேலிப் பகுதிகள்.
பாண்டியாறு மேற்கு நோக்கி சென்று, கேரளாவில் உள்ள சாலியாற்றில் கலந்து நிலம்பூர் வழியாக கோழிக்கோடு அருகே கடலில் கலக்கிறது. தமிழகத்தில் உருவாகி கேரளா கடலில் கலக்கும் பாண்டியாறை முறையாக பயன்படுத்தியிருந்தால், தமிழகத்துக்கு தேவையான நீர் ஆதாரம் மேம்பட்டிருக்கும் என்கின்றனர் மின்சார வாரியத்தினர்.
சென்னைக்கும் குடிநீர்
மின் வாரிய அதிகாரிகள் கூறும்போது, “1967-ம் ஆண்டில் கேரளா அரசுடன் இணைந்து போடப்பட்ட பாண்டியாறு-புன்னம்புழா நீர்த்தேக்கத் திட்டம், வனச்சூழல் மற்றும் கேரளா அரசின் எதிர்ப்பு காரணமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. வீணாகக் கடலில் கலக்கும் நீரை தமிழகத்துக்கு திருப்பினால், விலங்குகளுக்கு மட்டுமல்ல மனிதர்களுக்கும் போதுமான தண்ணீர் கிடைக்கும். நீராதாரம் மட்டுமின்றி, மின்சாரம் தயாரிக்கும் வாய்ப்பும் இருப்பதால் இரு மாநிலங்களும் பயன்பெறும்” என்றனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர் செ.நல்லசாமி கூறும்போது, “தமிழக - கேரள எல்லையில் தடுப்பணை கட்டி, கிழக்கு நோக்கி திருப்பினால் தமிழகத்துக்கு 14 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கும். இதைக் கொண்டு அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை நிறைவேற்ற முடியும். பாண்டியாறு - புன்னம்புழா நீர், பவானி பாசனங்களின் நீர் பற்றாக்குறையைப் போக்கும். காவிரி கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்கும், காவிரி டெல்டா பாசனங்களுக்கும் கூடுதல் வளம் சேர்க்கும். வீராணம் ஏரிக்குச் சென்று, சென்னைக்கும் குடிநீராக செல்லும்” என்றார்.
கூடலூர், பந்தலூர் பகுதிகளில் இருந்து கர்நாடகாவுக்கு பாயும் தண்ணீரை தடுத்து, தமிழக எல்லையில் அணை கட்ட முடியுமா? என்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.
சாத்தியம் இல்லை
முதுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாயும் மாயாறு, அடர்ந்த வனப் பகுதியில் பயணித்து பவானிசாகர் அணையை அடைகிறது. ‘மாயாற்றின் குறுக்கே அணை கட்டினால் கர்நாடகாவை நம்பி இருக்க தேவை இல்லை’ என்ற செய்தி, சமீப காலமாக வாட்ஸ்அப்ல் பரவி வருகிறது.
இதுகுறித்து தமிழக பசுமை இயக்க இணைச் செயலாளர் எஸ்.ஜெயசந்திரன் கூறும்போது, “பவானியின் கிளை ஆறான மாயாறு, நீலகிரி மாவட்டத்தின் உள்ளே அடர்ந்த வனத்தில் மாயாறு பள்ளத்தாக்கில் பாய்ந்து, பவானி சாகர் அணையை அடைகிறது. இந்த ஆறு கர்நாடகா சென்று, மீண்டும் தமிழகத்துக்கு திரும்புவதில்லை. இங்கு அணை கட்ட சாத்தியம் இல்லை” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT