Published : 25 Jun 2018 08:15 AM
Last Updated : 25 Jun 2018 08:15 AM
கா
ஷ்மீரில் மஜக-பாஜக கூட்டணி உடைந்ததன் தொடர்ச்சியாக, முதல்வர் மெஹ்பூபா முஃப்தி ராஜிநாமா செய்திருக்கிறார். விளைவாக, ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டிருக்கிறது. அடுத்து என்ன என்ற கேள்வி ஒட்டுமொத்த காஷ்மீர் அரசியல் கட்சிகளையும் சூழ்ந்திருக்கும் நிலையில், பாஜக நீங்கலாக எல்லாக் கட்சிகளையும் சூழ்ந்திருக்கும் கவலை ஆளுநர் ஆட்சி எவ்வளவு நாட்கள் நீடிக்கும் என்பதுதான்!
பொதுவாகவே, ஒரு மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும் நிலையில், மத்தியில் எந்தக் கட்சி ஆட்சியில் இருக்கிறதோ அந்தக் கட்சியின் ஆதிக்கமே அம்மாநிலத்தில் இருக்கும். இது காங்கிரஸ் ஆட்சியின்போதே பல முறை நிரூபிக்கப்பட்ட விஷயம்.
பாஜகவின் கணக்கு
ஆளுநர் ஆட்சி அமைந்திருக்கும் நிலையில், காஷ்மீரி லும் காஷ்மீருக்கு வெளியிலும் தனது செல்வாக்கை அதிகரிக்கும் வேலைகளில் முழுமூச்சாக இறங்கியிருக்கிறது பாஜக. ஒருபுறம், காஷ்மீரில் ராணுவ நடவடிக்கைகளை அதிகப்படுத்துவதன் மூலம், 2019 தேர்தலில் தனது செல்வாக்கை அதிகரிக்க மோடி விரும்புவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள். பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஆளுநர் என்.என்.வோரா உத்தரவிட்டிருப்பதையும் “பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடரும்” என்று ராணுவத் தலைவர் பிபின் ராவத் குறிப்பிட்டிருப்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். ஆளுநர் ஆட்சியின் கீழ் பணிபுரிவது எளிது என்று காஷ்மீர் டிஜிபி எஸ்.பி.வைத் சொன்னதும் அங்கு சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
பாஜகவின் இந்தக் கணக்குகளைத் தாண்டி, இப்போதைக்கு அங்கு தேர்தல் நடக்காது. 2019 மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து காஷ்மீர் சட்ட மன்றத் தேர்தலை நடத்தவே பாஜக திட்டமிட்டிருக்கிறது என்றே எல்லா எதிர்க்கட்சிகளும் சந்தேகிக்கின்றன. அதாவது, மறை முகமாக இன்னும் ஓராண்டுக்கு ஆளுநர் மூலம் முழு மாநிலத்தையும் தன் ஆட்சியில் பாஜக வைத்திருக்கும் என்றே அவர்கள் நம்புகிறார்கள்.
பொது நடைமுறை என்ன?
பொதுவாக, ஒரு மாநில அரசு கலைந்த பின்னர் 356-வது சட்டக் கூறின்படி, குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும். காஷ்மீர் மாநிலத்தைப் பொறுத்தவரை, அம் மாநிலத்துக்குத் தனி அரசியல் சட்டம் இருப்பதால், ஜம்மு-காஷ்மீர் அரசியல் சட்டக் கூறு 92-ன்படி அங்கு ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்படுகிறது. அடுத்த ஆறு மாதங் களுக்கு ஆளுநர் ஆட்சி இருக்கும். அதுவரை, காஷ்மீர் சட்ட மன்றம் முடக்கப்பட்டிருக்கும். இந்த ஆறு மாதங்களில் ஆளுநர் ஆட்சி முடிவுக்கு வந்ததும், சட்ட மன்றம் முடக்கம் ரத்துசெய்யப்படாதபட்சத்தில், இந்திய அரசியல் சட்டம் 356-வது சட்டக்கூறின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும். இந்த இரு வகை களிலுமே, மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி ஆளுநரே ஆட்சி நிர்வாகத்தைக் கவனிப்பார். மத்திய அரசின் வழிகாட்டல் என்பது உள்ளூரில் ஆளுங்கட்சியின் வழிகாட்டலாகவே இருக்கும் என்பதே யதார்த்தம். காஷ்மீரில் ஆளுநர் ஆட்சியின்போதோ, குடியரசுத் தலைவர் ஆட்சியின்போதோ சட்ட மன்றம் கலைக்கப்பட்டால், ஆறு மாதங்களில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். சட்ட மன்றம் கலைக்கப்பட்டு, ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்படாவிட்டால், அது தொடர்பாகத் தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும்.
ஆனால், ஆளுநர் ஆட்சி என்பது காஷ்மீரில் அடிக்கடி நிகழும் விஷயம். கடந்த 40 ஆண்டுகளில் 8 முறை காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளை எடுத்துக்கொண்டால் இது நான்காவது முறை.
டெல்லியின் மறைமுக ஆட்சி
சிறப்பு அந்தஸ்துக்கு உட்பட்ட காஷ்மீரின் நிலையே இதுதான் என்றால், ஏனைய மாநிலங்களில் குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவரப்பட்டால், அதற்குப் பின் என்ன நடக்கும்? அதற்கான நடைமுறை இதுதான். இந்திய அரசியல் சட்டம் 356-ன்படி ஒரு மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைந்தால், ஆறு மாதங்களுக்கு அது அமலில் இருக்கும். “ஆறு மாதங்களுக்குப் பின்னர், நாடாளுமன்றத்தில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றினால் குடியரசுத் தலைவர் ஆட்சியைத் தொடர முடியும். இப்படி மத்திய அரசு கருதினால், அதற்கு எல்லையே இல்லை. எத்தனை நாட்களுக்கு வேண்டுமானாலும் குடியரசுத் தலைவர் ஆட்சியை நீட்டிக்க முடியும்” என்கிறார் ஓய்வுபெற்ற நீதிபதியான சந்துரு.
பழனிசாமி ஆட்சி நீடிக்கும் இரு ரகசியங்கள்
பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு நீடிப்பதில் இரு காரணங்கள் முக்கியமானவை. ‘இந்த ஆட்சி எவ்வளவு காலம் நீடிக்கிறதோ, நீடிக்க வேண்டும்; முடிந்தவரை காய்களை நகர்த்திவிட வேண்டும்; அடுத்த தேர்தலை எதிர்கொள்வது மிகச் சிரமம்’ என்று அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் நினைப்பதாகப் பலரும் கருதுகிறார்கள். இது முதல் காரணம். இரண்டாவது, அரசியல் அரங்கில் மட்டும் பேசப்படுவது - அதைத்தான் காஷ்மீரின் இன்றைய சூழல் வெளிக்கொண்டுவந்திருக்கிறது. அதிமுக ஆட்சி கலைந்தால் பாஜகவின் நேரடி ஆட்சி இங்கே வந்துவிடும்; அதிமுக மட்டும் அல்ல; எதிர்க்கட்சிகளும்கூட இதை விரும்பவில்லை.
தமிழகத்தில், அடுத்த சட்ட மன்றத் தேர்தலுக்கான தருணம் 2021. மக்களவைத் தேர்தலுக்கான தருணம் 2019. குடியரசுத் தலைவர் ஆட்சி இருக்கும்பட்சத்தில் குறைந்தபட்சம் ஓராண்டுக் காலம் ஆளுநர் மூலம் தன்னுடைய நிழல் ஆட்சியை இங்கே பாஜகவால் நடத்த முடியும். அதிமுக அரசிடமாவது குறைந்தபட்சம் சில விஷயங்களை நிர்ப்பந்திக்க முடியும்; எதிர்பார்க்க முடியும். பாஜகவிடம் பேசவே முடியாது என்ற அச்சம் எல்லாக் கட்சிகளுக்குமே இங்கே இருக்கிறது.
இப்போது நாம் பார்க்கும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் முன்னுதாரணமாகச் செயல்பட்டிருக்கும் காங்கிரஸ், தனது ஆட்சிக் காலத்தில், பல மாநிலங்களில் ஆண்டுக் கணக்கில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நீட்டித்தது வரலாறு. எஸ்.ஆர். பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னர், மாநில அரசுகள் கலைக்கப்படுவதும் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுவதும் குறைந்திருப்பதைப் பலரும் சுட்டிக்காட்டுகிறார்கள். எனினும், அதற்கு முக்கியமான இன்னொரு காரணம், இடைப்பட்ட காலகட்டங்களில் மத்தியில் கூட்டணி ஆட்சி யுகம் இருந்தது என்பதுதான். தனித்த பலத்துடன் ஒரு கட்சி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இருக்கும்பட்சத்தில் கூடவே மாநிலங்களுக்கான எல்லாத் தொல்லைகளும் வரும்!
-வெ.சந்திரமோகன்,
தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT