Last Updated : 26 Jun, 2018 09:21 AM

 

Published : 26 Jun 2018 09:21 AM
Last Updated : 26 Jun 2018 09:21 AM

ஆளுநர், போராட்டம், எச்சரிக்கை: எது சரி, தவறு?

தமிழ்நாட்டின் ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பதவியேற்ற பின் ஆங்காங்கே சென்று அரசு அதிகாரிகளை அழைத்து ஆய்வுக்கூட்டம் நடத்துகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஒன்று ஆட்சியிலிருக்கும்போது, ஆளுநர் இப்படி நேரடி அரசு நடவடிக்கைகளில் இறங்குவதைக் கண்டித்து திமுக அவருக்கு எதிராகப் போராட்டங்களை நடத்திவருகிறது. இந்நிலையில், ‘ஆளுநர் மாளிகையை முற்றுகையிடுவது; ஆளுநரைச் செயல்படவிடாமல் தடுப்பது உள்ளிட்டவை ஏழாண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கத்தக்க குற்றங்கள்’ என்று எச்சரித்திருக்கிறது ஆளுநர் மாளிகை. இவற்றில் எது சரி, தவறு?

சட்டப்படி ஆளுநர் ஆய்வுகளை நடத்துவது தவறல்ல!

சு.சீனிவாசன், மத்திய அரசின் முன்னாள் உதவித் தலைமை வழக்கறிஞர்.

எங்கு அரசு தவறுகிறதோ அல்லது இன்னும் சிறப்பான நடவடிக்கை, செயல்பாடு வேண்டும் என்ற நிலை இருக்கிறதோ அந்த இடத்தில் ஆளுநரோ, துணைநிலை ஆளுநரோ நடவடிக்கை எடுக்கிறார்கள்.

ஆளுநரோ துணை நிலை ஆளுநரோ அப்படிச் செய்யக் கூடாது என்று சட்டத்தில் எங்கும் சொல்லப்படவில்லை. அவர்கள் அரசியல் சட்ட அதிகாரம் பெற்றவர்கள். சட்டத்துக்கு உட்பட்டு எந்த வேலையையும் அவர்கள் செய்யலாம். அவர்கள் ஒன்றும் நேரடியான உத்தரவுகளைப் பிறப்பிப்பதில்லை. ஆனால், பணிகள் சரியாக நடக்கின்றனவா என்பதைப் பார்க்கத்தான் செல்கிறார்கள். அதில் சட்டப்படி எந்தத் தவறும் இல்லை.

அவர்கள் ஆய்வுசெய்யக் கூடாது என்று எந்தச் சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை, இதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் சொல்ல வேண்டும். அரசியல் சட்டப்படி ஆளுநர் அம்மாநில அரசின் தலைவர். அந்த வகையில், தமிழ்நாட்டில் உள்ள எல்லா உத்தரவுகளும் ஆளுநரின் பெயரில்தான் வரும். தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் உள்ளிட்ட நியமனங்களும் ஆளுநரின் உத்தரவுப்படிதான் வரும். ஆகவே, ஆளுநரின் பெயரில்தான் தமிழ்நாடு அரசே செயல்படுகிறது. ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறது என்பதைத்தான் இது காட்டுகிறது.

பிற மாநிலங்களில் ஆளுநர் இப்படிச் செயல்படவில்லையே என்று கேட்கிறார்கள். ஒவ்வொருவரின் செயல்பாடு ஆளுக்காள் மாறும். புதுச்சேரியில் முன்பு இருந்த ஆளுநர் இப்படிச் செய்யவில்லை. இப்போது செய்கிறார் என்றால், ஒவ்வொருவரின் செயல்பாடும் மாறும் என்பதுதான் அர்த்தம். ஒரு அரசியல் கட்சி ஒரு வகையில் செயல்படுகிறது என்றால், இன்னொரு கட்சி வேறு மாதிரி செயல்படும். அவர்கள் செய்கிறார்கள்; நீங்கள் ஏன் செய்யவில்லை என்று கேட்க முடியாது.

தமிழக ஆளுநர் புரோஹித் ஆங்காங்கே சென்று அரசுப் பணிகளை ஆய்வு செய்வதைத் தவறு என்று யாரும் கூற முடியாது. இதை எதிர்த்து திமுகவும் பிற கட்சிகளும் சாலைக்கு வந்து போராடுகின்றன. இவர்கள் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு ஊர்களில் போராட்டம் நடத்துவது என்பது அரசியலே தவிர, வேறொன்றும் இல்லை.

ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டுவதை எதிர்த்து, அவர் பணிக்கு இடைஞ்சலாக இருந்தால் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டிருப்பது பற்றிப் பலரும் விமர்சிக்கிறார்கள்.

இதுவும் சட்டத்தில் இருக்கிறது. அதைத்தான் ஆளுநர் வெளிப்படுத்தியிருக்கிறார். ஆகவே, ஆளுநர் ஒன்றும் புதிதாகச் சொல்லவில்லை. ஏற்கெனவே இருப்பதைச் சொல்கிறார்.

அடையாளரீதியாக ஒருமுறை போராட்டம் நடத்தினால் பரவாயில்லை. என்னவோ ஆளுநர் சட்டவிரோதமாக, அத்துமீறிச் செயல்படுவதுபோல் போராட்டம் நடத்துகிறார்கள். இது சரியல்ல.

ஆளுநர் மாளிகைக்கு முன்னர் போராடுவது தவறல்ல!

து.அரிபரந்தாமன், ஓய்வுபெற்ற நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்.

ஆளுநர் மாளிகை மட்டுமல்ல, உயர் நீதிமன்றம், கோட்டை என்று எல்லாமே பாதுகாக்கப்பட்ட அமைப்புகள்தான். நாம்தான் கோட்டையை நோக்கியோ, ஆளுநர் மாளிகையை நோக்கியோ ஊர்வலம் செல்ல அனுமதி மறுக்கிறோம். 1990-ல் பிரிட்டனில் பிரதமர் இல்லம் அருகே கலகம் நடந்தது. அதற்கு அனுமதி வழங்கப்பட்டது. கலகக்காரர்கள் தீ வைத்தபோது அவர்கள் மீது தாக்குதல் நடத்தாமல், தீயை அணைத்தனர் போலீஸார். போலீஸ் வாகனங்கள் தாக்கப்பட்டன. அப்போதும் அவர்களை போலீஸார் தாக்கவில்லை. ஒரு கட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்துசென்றுவிட்டார்கள். இங்கே என்ன நடக்கிறது?

தமிழகத்தில் பாஜக தயவில் ஆட்சி நடக்கிறது. 18 எம்எல்ஏக்கள் இல்லையென்றால், ஆட்சி கவிழ்ந்துவிடும். மத்திய அரசின் ஆட்சிதான் ஆளுநர் மூலமாக நடக்கிறது. பாஜக ஆளும் மாநிலங்களிலோ, மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு ஆளும் மாநிலங்களிலோ இப்படி ஒரு ஆய்வை ஆளுநர் நடத்த முடியுமா? அதை விடுங்கள். தூய்மை இந்தியா திட்டம் எப்படிச் செயல்படுத்தப்படுகிறது என்று மத்திய அரசு அலுவலகங்களில் குடியரசுத் தலைவர் ஆய்வு நடத்த முடியுமா? குடியரசுத் தலைவருக்கும் ஆளுநருக்கும் அந்த அதிகாரம் கிடையாது என்பதுதான் விஷயம்.

குடியரசுத் தலைவருக்கான அதிகாரம் குறித்து, அரசமைப்பு அவையில் விவாதம் வந்தபோது, “நம்முடையது பிரிட்டிஷ் வடிவிலான அரசு. அமெரிக்க மாதிரியான அரசு அல்ல. இங்கு கேபினட்தான்” என்றார் அம்பேத்கர். குடியரசுத் தலைவர் பதவி ‘அதிகாரம் இல்லாத அலங்காரப் பதவி’ என்றே குறிப்பிட்டார். ஆளுநர் தொடர்பாக விவாதம் வந்தபோது அவர் சொன்னார்: “குடியரசுத் தலைவர் தொடர்பாக ஏற்கெனவே விவாதித்துவிட்டோம். தேர்ந்தெடுக்கப்படுகின்றவரான குடியரசுத் தலைவருக்கே அதிகாரம் இல்லை என்று இந்த அவை கருதுகிறது. இந்நிலையில், அவரால் நியமிக்கப்படும் ஆளுநருக்கு மட்டும் எப்படி அதிகாரம் இருக்கும்?”.

ஆளுநர் எங்கு வேண்டுமானாலும் போகலாம். ஆனால், அங்கு சென்று ஆட்சியர், உயர் அதிகாரிகளை அழைத்துப் பேசக் கூடாது. அது மரபல்ல.

ஆளுநரின் இந்த நடவடிக்கை தொடர்வது இந்திய ஒன்றியத்துக்கே ஆபத்து. ஜனநாயக நாட்டில் ஆளுநர் மாளிகையை நோக்கியோ, உயர் நீதிமன்றத்தை நோக்கியோ ஊர்வலம் செல்லக் கூடாது என்றெல்லாம் சொல்லக் கூடாது. ஜனநாயக முறையில், முற்றுகை என்றால் ஆயுதங்களுடன் சென்று முற்றுகையிடுவது என்பதல்ல.

இது அடையாளரீதியானது. அமைதியாக ஒரு நாள் அங்கு சென்று அமர்வதிலும் அறவழியில் எதிர்ப்பைத் தெரிவிப்பதிலும் என்ன தவறு? சட்டத்தை மட்டுமே வைத்து நடத்துவதல்ல விவாதம். மரபும் சேர்ந்துதான் நாடாளுமன்ற அரசியல் அர்த்தப்படுகிறது. போராட்டம் என்றாலே அச்சுறுத்துவது என்பதான சூழல் ஜனநாயகத்துக்குக் கேடு!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x