Published : 12 Aug 2014 09:41 AM
Last Updated : 12 Aug 2014 09:41 AM
வாஜ்பாய் அமைச்சரவையில் நிதியமைச்சர், பாதுகாப்புத் துறை அமைச்சர், வெளியுறவுத் துறை அமைச்சர் ஆகிய பதவிகளில் இருந்த ஜஸ்வந்த் சிங், வியாழக்கிழமை தனது வீட்டில் வழுக்கி விழுந்து, கோமா நிலையில் இருக்கிறார்.
பாஜகவின் முக்கிய தலைவர்களுள் ஒருவராகவும், சிறந்த நிர்வாகியாகவும் இருந்த அவர், இன்று கோமாவெனும் நீண்ட மவுனத்தில் ஆழ்ந்துவிட்டார்.
1960-களிலிருந்து அரசியலில் இருந்தாலும் 1980-ல் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக் கப்பட்ட பின்னர்தான், ஜஸ்வந்தின் அரசியல் வாழ்க்கையில் மறுமலர்ச்சி வந்தது. பின்னர், 1996-ல் வாஜ்பாய் பிரதமரானபோது அவரது அமைச்சரவையில், நிதியமைச்சரானார் ஜஸ்வந்த் சிங். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் வாஜ்பாய் மீண்டும் பிரதமரானபோது ஜஸ்வந்த் சிங்கின் கைக்குக் கிடைத்தது, வெளியுறவுத் துறை. இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பிரச்சினைகளைத் திறமையாகக் கையாண்ட பெருமை இவருக்கு உண்டு. 1999-ல் இந்திய விமானம், ஆப்கானிஸ்தானின் காந்தஹார் நகருக்குக் கடத்தப்பட்ட சம்பவத்தின்போது, பயணிகளைக் காப்பாற்றச் சென்ற குழுவுடன், ஜஸ்வந்த் சிங்கும் சென்றார். எனினும், பயணிகளை மீட்பதற்காக, மூன்று பயங்கரவாதிகளை விடுவித்ததாகக் கடும் கண்டனத்தை அவர் சந்திக்க நேர்ந்தது. 2002-ல் மீண்டும் நிதியமைச்சரானார்.
முகமது அலி ஜின்னா பற்றி 2009-ல் இவர் எழுதிய ‘ஜின்னா: இந்தியா, பிரிவினை மற்றும் சுதந்திரம்' என்ற புத்தகம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. ஜின்னாவைப் புகழ்ந்து எழுதினார் என்று அதிருப்தியடைந்த பாஜக தலைமை, ஜஸ்வந்த் சிங்கைக் கட்சியை விட்டு நீக்கியது. பின்னர், ஜூன் 2010-ல் அவர் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டார். எனினும், 16-வது மக்களவைத் தேர்தலில் தனது சொந்தத் தொகுதியான ராஜஸ்தானின் பார்மரில் போட்டியிட தனக்கு சீட் மறுக்கப்பட்டபோது, விரக்தியின் உச்சத்துக்கே சென்றுவிட்டார். “நான் திரும்பி வந்துவிட்டேன். வீட்டுக்குச் செல்லாமல் வேறெங்கு செல்வேன்? நினைத்தால் மனதுக்குச் சங்கடமாக இருக்கிறது” என்று கண்கலங்கினார். மூத்த தலைவரான தன்னைப் புறக்கணித்துவிட்டு, காங்கிரஸ் கட்சியிலிருந்து ஒரு வாரத்துக்கு முன், பாஜகவில் இணைந்த சோனாராம் சவுத்ரிக்கு சீட் கொடுக்கப்பட்டது தன்னைக் காயப்படுத்திவிட்டதாக அவர் கூறினார்.
அத்துடன், “எது அசல் பாஜக, எது போலி பாஜக என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டிய தருணம் இது” என்று மோடியையும் ராஜ்நாத் சிங்கையும் மறைமுகமாக விளாசினார்.
சீட் விவகாரத்தில் கட்சித் தலைமை அசைந்துகொடுக்காததால், மிகுந்த மனவருத்தத்துடன் இருந்த ஜஸ்வந்த் சிங், “நான் கட்சியை விட்டுப் போவதைவிட, அவர்களே என்னை நீக்கிவிடட்டும்” என்றார். சொன்னதுபோல், கட்சியிலிருந்து இரண்டாவது முறையாக நீக்கப்பட்டார். “நான் நீக்கப்பட்டதாகத் தொலைபேசி மூலம் சொன்னார் ராஜ்நாத் சிங். முதல்முறை நீக்கப்பட்டபோதும் தொலைபேசியில்தான் தகவல் சொன்னார். தொலைபேசியில் தகவல் சொல்ல ‘நான் ஒன்றும் அலுவலக உதவியாளர் அல்ல' என்று ராஜ்நாத் சிங்கிடம் சொன்னேன்” என்று குறிப்பிட்டார் ஜஸ்வந்த் சிங். பின்னர், சுயேச்சையாக பார்மர் தொகுதியில் போட்டியிட்டார். தான் போட்டியிடும் கடைசித் தேர்தல் இதுதான் என்று உணர்ச்சிவசப்பட்டார். எனினும் வெற்றி அவர் பக்கம் வரவில்லை. வேறு கட்சிகளில் சேரவும் அவர் விரும்பவில்லை.
2001-ல் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருதை வென்ற ஜஸ்வந்த் சிங்கின் அரசியல் எதிர்காலம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது என்பது வருத்தமான உண்மை.
- வெ. சந்திரமோகன், தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT