Last Updated : 27 Jun, 2018 09:12 AM

 

Published : 27 Jun 2018 09:12 AM
Last Updated : 27 Jun 2018 09:12 AM

தள்ளாடும் கங்காருகள்: பலி கேட்கும் புற்கள்

ஆஸ்திரேலியாவில் சாம்பல் நிற வகையைச் சேர்ந்த கங்காருகளில் சில, மதுபோதையில் தள்ளாடுவதுபோன்ற காட்சிகள் சமீபத்தில் வெளியாகின. நிலைகொள்ளாமல் தாவித் தாவிச் செல்லும் கங்காருகள், வேலிகளிலும் மரங்களிலும் மோதி விழுகின்றன. நிற்க முடியாமல் தடுமாறுகின்றன. வலிப்பு ஏற்பட்டு பல கங்காருகள் உயிரிழந்திருக்கின்றன. இது வன உயிர் ஆர்வலர்களைக் கவலைக்குள்ளாக்கியிருக்கிறது. இந்தப் பாதிப்புக்கு என்ன காரணம்? பலாரிஸ் எனப்படும் ஒருவகை புற்களை உட்கொள்வதால் கங்காருகளுக்கு இந்தப் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்கிறார்கள் மெல்போர்ன் பல்கலைக்கழகக் கால்நடை மருத்துவர்கள்.

பல ஆண்டுகளுக்கு முன்னர், தென் கிழக்கு ஆஸ்திரேலியாவில் மேய்ச்சல் புல் வகையாக அறிமுகப்படுத்தப்பட்ட பலாரிஸ், கடுமையான வறட்சியையும் தாங்கி வளரக்கூடியது. உப்புத்தன்மை நிறைந்தது. ஆழமாக வேரூன்றும் தன்மை கொண்டது. பெரும்பாலான விவசாயிகள் இதை வளர்த்துவந்தாலும், கால்நடைகளுக்கு வலிப்பு, இதயநோய் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்துவதால் பலர் இதைப் புறக்கணித்திருக்கிறார்கள்.

வளர்ப்புப் பிராணிகளுக்கு இந்தப் புற்களால் பாதிப்பு ஏற்படும்போது தாமிரச் சத்து அடங்கிய உணவு வகைகளைக் கொடுத்துச் சரிசெய்ய முடியும். ஆனால், வன விலங்குகளான கங்காருகள் உதவிக்கு யாரும் இல்லாமல், இப்படிப் பரிதாப நிலைக்குத் தள்ளப்படுகின்றன. கங்காருகளில் ஏற்படும் பாதிப்புகளுக்கு இந்தப் புற்கள்தான் காரணம் என்று இறுதி முடிவுக்கு வந்துவிடவில்லை. என்றாலும், 2014-ல் ஆஸ்திரேலியன் வெட்ரினரி ஜர்னல் இதழில் வெளியான ஆய்வின்படி, இந்தப் புற்களை உட்கொள்வதால் கங்காருகள் உள்ளிட்ட அசைபோடும் பிராணிகள் பலாரிஸ் புற்களை உண்பதால் மூளையிலும் தண்டுவடத்திலும் பாதிப்புகள் ஏற்படுவதாகத் தெரியவந்திருக்கிறது.

இந்த ஆண்டு பலாரிஸ் புற்கள் அதிக அளவில் வளர்ந்திருப்பதால், கங்காருகள் இவற்றை அதிகமாக உட்கொண்டிருப்பதாக அப்பகுதி மக்கள் கருதுகிறார்கள். இத்தகைய பாதிப்புடன் தள்ளாடும் கங்காருகளைக் கண்டால், வனத் துறைக்கு உடனடியாகத் தகவல் அளிக்குமாறு உத்தரவிடப்பட்டிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x