Last Updated : 19 Sep, 2024 06:16 AM

2  

Published : 19 Sep 2024 06:16 AM
Last Updated : 19 Sep 2024 06:16 AM

அதிகாரத்தில் பங்கு: தமிழ்​நாட்டில் சாத்தி​யம் இல்​லையா?

தமிழ்​நாட்டில் நீண்ட காலம் கழித்து, ‘அதிகாரத்தில் பங்கு’ என்கிற விவாதத்தை விடுதலைச் சிறுத்​தைகள் கட்சித் தலைவர் தொல்.​திரு​மாவளவன் தொடங்கி வைத்திருக்​கிறார். அதிகாரத்தில் பங்கு என்பதன் மூலம், தமிழ்​நாட்டில் கூட்டணி ஆட்சி என்கிற முழக்​கத்தை முன்வைக்க விசிக முற்படுகிறது. இதுபோன்ற முழக்​கங்கள் தமிழ்​நாட்டுக்குப் புதிதல்ல. ஆனால், தமிழ்​நாட்டில் இதுவரை அது சாத்தி​ய​மான​தில்லை என்பதே வரலாறு. இந்நிலை​யில், இந்த முழக்கம் என்ன விளைவை ஏற்படுத்​தும்?

இணையாகப் போட்டி: தமிழ்​நாட்டில் 50 ஆண்டு​களுக்கும் மேலாக ஆட்சி​யமைக்கும் திறன் உள்ள கட்சிகளாக திமுக, அதிமுகவே இருக்​கின்றன. இந்தக் கட்சிகளின் தலைமையில் தேர்தல் கூட்ட​ணிகள் அமைந்​தா​லும், வெற்றிக்குப் பிறகு தோழமைக் கட்சிகளுடன் அதிகாரத்தை அவை பங்கிட்டுக்​கொண்​ட​தில்லை.

தனித்து ஆட்சி​யமைக்கும் அளவுக்கு இக்கட்​சிகள் தேர்தலில் பெரும்​பான்மை பலத்தைப் பெற்று​விடுவது ஒரு காரணம். தேர்தலுக்கு முன்ன​தாகவே அதிகாரத்தில் பங்கு என்று தோழமைக் கட்சிகள் வலியுறுத்த முடியாத இடத்தில் இருப்பது இன்னொரு காரணம்.

தமிழ்​நாட்டில் 1967 முதலே தேர்தல் கூட்டணி உருவாகத் தொடங்கி​விட்டது. 1980 தொடங்கி 1990களின் மத்தி வரை தமிழ்​நாட்டுத் தேர்தல் களத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ் ஆகியவை பெரிய கட்சிகளாக இருந்த​போதும், காங்கிரஸுடன் இக்கட்​சிகள் கூட்டணி அமைத்த​போதும்கூட அதிகாரத்தைப் பகிர்ந்​து​கொள்வது தொடர்பான பேச்சு எழுந்​த​தில்லை.

1980இல் திமுக – காங்கிரஸ் இடையே கூட்டணி அமைந்தபோது சட்டமன்றத் தேர்தலில் இரண்டு கட்சிகளும் சரிசம​மாகத் தொகுதி​களில் போட்டி​யிட்டன. கூட்டணி வெற்றி பெற்றால் யார் முதல்வர் என்கிற கேள்வியும் எழுந்தது. அன்றைய பிரதமரும் காங்கிரஸ் தலைவருமான இந்திரா காந்தி, ‘மு.கருணாநி​திதான் முதல்வர்’ என்று சந்தேகங்​களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். தேர்தலில் இக்கூட்டணி வெற்றி பெறவில்​லை​யென்​றாலும், சட்டமன்றத் தேர்தலில் ஒரு திராவிடக் கட்சி இணை எண்ணிக்கையில் தோழமைக் கட்சிக்குத் தொகுதிகளை ஒதுக்​கியது வரலாறு.

புதிய சூத்திரம்: அதன் பிறகு அதிமுக – காங்கிரஸ் கூட்டணி வேறுவிதமான சூத்திரத்தைப் பின்பற்றியது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அதிகத் தொகுதி​களில் போட்டி​யிடுவது, மக்களவைக்கு காங்கிரஸ் அதிகத் தொகுதி​களில் போட்டி​யிடுவது என்று அதிகார எல்லையை வரையறுத்​துக்​கொண்டன.

அதாவது, தேர்தலில் வெற்றி பெற்றால் தமிழ்​நாட்டில் அதிமுக அரசு - மத்தியில் காங்கிரஸ் அரசு. 1984 சட்டமன்றம் - மக்களவை, 1989 மக்களவை, 1991 சட்டமன்றம் - மக்களவை, 1996 சட்டமன்றம் - மக்களவைத் தேர்தல்​களில் அதிமுக – காங்கிரஸ் கூட்டணி இந்தச் சூத்திரத்தையே பின்பற்றியது. எனவே, அதிமுக – காங்கிரஸ் கூட்டணிக் காலத்​தில், தமிழ்​நாட்டில் அதிகாரத்தில் பங்கு என்கிற முழக்​கங்கள் எழவேயில்லை.

இதே அணுகு​முறையைத்தான் 1996இல் திமுகவும் பின்பற்றியது. அன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு மக்களவைக்கு அதிகத் தொகுதி​களையும் சட்டமன்​றத்​துக்குக் குறைவான தொகுதி​களையும் திமுக ஒதுக்​கியது. எனவே, இயல்பாகவே சட்டமன்​றத்தில் அதிகாரத்தில் பங்கு அளிக்க முடியாத வகையில், தனித்தே தாங்கள் ஆட்சி அமைக்கும் அளவுக்குத் தோழமைக் கட்சிகளுக்குக் குறைந்த தொகுதிகளை ஒதுக்குவதை மாறாத அணுகு​முறை​யாகத் திராவிடக் கட்சிகள் தொடர்ந்தன. 2001இல் அதிமுக கூட்ட​ணியில் முக்கியக் கட்சிகளாக இருந்த தமாகா, பாமக, 2011இல் தேமுதிக போன்ற கட்சிகளும் கூட்டணி ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்கிற அழுத்​தத்தைக் கொடுக்க முனைந்​த​தில்லை.

சாதிக்க முடியாத காங்கிரஸ்: விதிவிலக்காக 2006 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகுதான் பெரும்​பான்மை பெற முடியாத நிலையைத் திமுக எதிர்​கொள்ள நேர்ந்தது. எனினும், கூட்டணிக் கட்சிகள் - குறிப்பாக காங்கிரஸின் ஆதரவுடன் ஐந்து ஆண்டு​களையும் திமுக நிறைவுசெய்தது. 2006-11 காலத்தில் அமைச்​சர​வையில் காங்கிரஸுக்கு இடம் வேண்டும் என்கிற கோரிக்கைகள் அக்கட்​சி​யினர் சார்பில் தமிழ்​நாட்டில் அவ்வப்போது எழவே செய்தன.

மத்தியில் காங்கிரஸ் கூட்ட​ணியில் திமுகவைச் சேர்ந்​தவர்கள் அமைச்​சர்களாக இருந்​ததும் சுட்டிக்​காட்​டப்​பட்டது. மத்திய ஆட்சிக்கு உறுதுணையாக இருப்​ப​தை​யும், புதுச்​சேரியில் காங்கிரஸுக்கு வெளியி​லிருந்து ஆதரவு அளிப்​ப​தையும் கூறி திமுக சமாளித்தது. ஒரு வகையில், ‘மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி’ என்கிற தங்களுடைய கொள்கையை இந்தக் காலக்​கட்​டத்தில் கச்சித​மாகவே பயன்படுத்தி ஐந்து ஆண்டு​களையும் திமுக பூர்த்தி​செய்தது.

விசிகவின் குரல்: தற்போது ஒரு தசாப்​தத்​துக்குப் பிறகு தமிழ்​நாட்டில் அதிகாரத்தில் பங்கு என்கிற ஒரு விவாதம் எழுவதற்கு, திமுக கூட்ட​ணியில் ஆறு ஆண்டு​களுக்கும் மேலாகப் பயணித்​துக்​கொண்​டிருக்கும் விடுதலைச் சிறுத்​தைகள் கட்சி காரணமாகி​யிருக்​கிறது. அதிகாரத்தில் பங்கு தொடர்பாக திருமாவளவன் பேசிய பழைய காணொளியைச் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டது, பிறகு நீக்கியது, மீண்டும் வெளியிட்டது போன்ற செயல்கள் கூட்டணி ஆட்சி என்கிற விவாதத்தைத் தொடங்கி வைத்திருக்​கின்றன.

அடித்​தட்டு மக்கள் அதிகாரத்தில் அமர வேண்டும் என்கிற வகையிலும், தேர்தலில் வெற்றியை அடிப்​படை​யாகக் கொண்டு அமைக்​கப்​படுகிற கூட்டணி, வெற்றி பெறுகிறபோது அதிகாரத்​தையும் பகிர்ந்​து​கொள்ள வேண்டும் என்றும் நினைப்​பதில் தவறில்​லை​தான். ஆனால், அது ஏன் நடைபெறு​வ​தில்லை என்பதுதான் கேள்வி. இந்த விவாதங்​களுக்கு இடையே முதல்வர் மு.க.ஸ்​டா​லினைச் சந்தித்த திருமாவளவன், “ஆட்சி, அதிகாரத்தில் பங்கு தொடர்பாக முதல்​வரிடம் பேசவில்லை.

1999இலிருந்து நாங்கள் வலியுறுத்துகிற கருத்து இது. இதை நாங்கள் எப்போதுமே பேசுவோம்” என்று சொல்லி​யிருக்​கிறார். திருமாவளவனின் கருத்​துக்குத் திமுக தரப்பிலிருந்து பதில் வரவில்லை. என்றாலும் 2006-11இல் காங்கிரஸ் தயவுடன் ஆட்சியில் இருந்தபோதே அதிகாரத்தில் பங்கு அளிக்காத திமுக, இப்போது மட்டும் எப்படி கொடுக்கும் என்கிற கேள்வியும் இயல்பாகவே எழுகிறது. மாறாக, திருமாவளவனின் கருத்​துக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, “தமிழகத்தில் அதிமுக, திமுக யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு என்கிற பேச்சுக்கே இடமில்லை” என்று பட்டவர்த்​தன​மாகக் கூறிவிட்​டார். ஆக, திராவிடக் கட்சிகள் எப்போதும் தனித்த ஆட்சி என்பதில் உறுதி​யாகவும் தெளிவாகவும் இருக்​கின்றன.

செவிமடுக்குமா திராவிடக் கட்சிகள்? - தேர்தல் கூட்டணி என்பது தேர்தலில் வெற்றியைப் பெறுவதற்காக மட்டும் அமைக்​கப்​படு​வ​தில்லை. ஆட்சி, அதிகாரத்தைக் கைப்பற்று​வதற்​கும்​தான். அந்த வகையில், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் அதிகாரத்தைக் கைப்பற்றும் திராவிடக் கட்சிகள், தோழமைக் கட்சிகளுக்கும் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு அளிப்பது என்பது கட்சி மாச்சரி​யங்​களுக்கு அப்பாற்​பட்டு, வாக்களித்த மக்களுக்கு அளிக்கும் மரியாதை​யும்கூட.

ஆனால், தமிழ்​நாட்டில் அது நிகழாமல் போவதற்குத் தோழமைக் கட்சிகளிடம் உள்ள போதாமை ஒரு முக்கியக் காரணம். அது - தேர்தல் களத்தில் தனித்துப் போட்டி​யிட்டுச் சவால் விடுக்கும் அளவுக்குத் தங்கள் வாக்கு வங்கியை உயர்த்தவோ, இரட்டை இலக்க எண்ணிக்கையில் வெற்றி பெற முடியாமலோ போவது​தான். அதுதான் திராவிடக் கட்சிகளுக்கு வசதியாகி​விடு​கிறது.

தமிழ்​நாட்டில் கடந்த 30 ஆண்டு​களில் திமுக, அதிமுக அல்லாத கட்சியோ அல்லது கூட்டணியோ குறிப்​பிட்ட தேர்தல் வெற்றியைப் பதிவு செய்திருக்​கின்​றனவா? திமுக, அதிமுக​வுக்கு மாற்றாகத் தேர்தலில் களமிறங்கிய கட்சிகள் எத்தனை தொகுதி​களில் வெற்றியைப் பெற்றிருக்​கின்றன? தேர்தல் வெற்றிக்குத் திராவிடக் கட்சிகளைச் சார்ந்​திருக்க வேண்டிய சூழல்தான் தமிழ்​நாட்டில் உள்ளது. தேர்தலில் குறைந்​தபட்ச வெற்றிக்​காகத் திராவிடக் கட்சிகளின் பெரும்​பாலான முடிவு​களைச் சமரசம் செய்து​கொண்டு ஏற்கும் நிலையில்தான் தோழமைக் கட்சிகள் இருக்​கின்றன.

எனில், ஆட்சியில் உள்ள கட்சிக்கு எப்படி அழுத்தம் கொடுக்க முடியும்? தேர்தலில் தனித்தே போட்டி​யிட்​டாலும், குறிப்​பிடத்​தகுந்த வெற்றியைப் பெறும் அளவுக்கு வளர்ச்​சியைக் காட்டி, முக்கி​யத்து​வத்தை உணர்த்​தும்​போதுதான் அதிகாரத்தில் பங்கு, கூட்டணி ஆட்சி போன்ற கோரிக்கைகளுக்கு உயிர் கிடைக்​கும்; திராவிடக் கட்சிகளும் செவிமடுக்​கும்.

அதே நேரத்​தில், அறுதிப் பெரும்​பான்மை பெற்ற​போதும் 2014, 2019இல் மத்தியில் கூட்டணிக் கட்சிகளுக்கும் அதிகாரத்தில் பங்கு அளித்து பாஜக ஒரு முன்னு​தா​ரணத்தை ஏற்படுத்​தி​யிருக்​கிறது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்​களிலும் கூட்டணி ஆட்சிகள் வெற்றிகரமாக நடைபெற்றுக்​கொண்​டுதான் இருக்​கின்றன.

அண்டை மாநிலமான ஆந்திரத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசம் பெரும்​பான்மை பெற்ற​போதும் குறைந்த தொகுதி​களில் வென்றுள்ள பாஜக, ஜனசேனா ஆகிய கட்சிகளுக்கும் அதிகாரத்தில் சந்திரபாபு நாயுடு பங்கு அளித்​திருக்​கிறார். எனவே, இந்த விஷயத்தில் தமிழ்நாடு நீண்ட நாள்களுக்கு விதிவிலக்காக இருக்க முடியாது. அதைச் சாத்தியப்​படுத்​துவதற்கான காலமும் வெகுதூரத்தில் இல்லை!

- தொடர்புக்கு: karthikeyan.di@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x