Last Updated : 06 Jun, 2018 10:52 AM

 

Published : 06 Jun 2018 10:52 AM
Last Updated : 06 Jun 2018 10:52 AM

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீடு வேண்டும்!: ஜி.ஆர்.ரவீந்திரநாத் பேட்டி

 

நீ

ட் தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டன. பல்வேறு சிரமங்களுக்கு நடுவில் நீட் தேர்வெழுதிய 1.14 லட்சம் தமிழக மாணவர்களில் 45,336 மாணவர்கள்தான் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். இது தேர்ச்சி விகிதம் அடிப்படையில் 39%. பின்தங்கிய மாநிலங்கள் எல்லாம் முன்னே நிற்க, பட்டியலில் கீழே இருக்கிறது தமிழ்நாடு. நீட் தேர்வே வேண்டாம் என்ற நிலைப்பாடு ஒருபுறமிருக்க தமிழக மாணவர்களின் பொதுவான பின்னடைவுக்கான காரணங்கள், பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கான தீர்வுகள் தொடர்பாக சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்திடம் பேசினேன்.

தேர்வு முடிவுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?

அனைத்திந்திய அளவில் தமிழ்நாடு பின்தங்கியிருப்பதுதான் கவலை தரும் விஷயம். பிமாரு மாநிலங்கள் என்றழைக்கப்படும் ராஜஸ்தான்(74%), பிஹார்(60%), மத்திய பிரதேசம்(51%) போன்ற மாநிலங்கள் தேர்ச்சி பட்டியலில் முன்னிலையில் இருக்கின்றன. தமிழ்நாட்டில் தேர்ச்சி சதவீதம் 39%தான். இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. முக்கியமாக, தமிழக அரசு மாணவர்களைத் தயார் செய்யத் தவறிவிட்டது. நம்முடைய பழைய பாடத்திட்டமும் நீட் தேர்வுக்கு ஏற்றதாக இல்லை. பிற மாநிலங்களில் தனியார் பயிற்சி மையங்கள் தமிழகத்தில் இருப்பதைவிட தரமாகப் பயிற்றுவிக்கின்றன. தமிழகத்தில் நுழைவுத் தேர்வை ரத்துசெய்து பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அதை எதிர்கொள்ளும் மனநிலை நம் மாணவர்களிடம் இல்லை என்பதும் ஒரு காரணம்.

மாணவர்களிடம் இது தொடர்பான புரிதல் இல்லை என்று நினைக்கிறீர்களா?

நீட் தேர்வில் நெகட்டிவ் மதிப்பெண்கள் இருப்பது நமது மாணவர்கள் பலருக்குத் தெரியவில்லை. எல்லாக் கேள்விகளுக்கும் விடை அளிக்க வேண்டும் என்று எழுதினால், தவறான விடைகளுக்கு நெகட்டிவ் மதிப்பெண் கிடைத்து, இறுதியில் மதிப்பெண்கள் குறைந்துவிடும். இதுபற்றிய விழிப்புணர்வு இல்லாததால், நன்றாகப் படித்த மாணவர்களுக்கும்கூட இந்த நிலை ஏற்படுகிறது. தெரியாத கேள்விகளுக்கு விடை எழுதாமல் விட்டுவிட்டால் நெகட்டிவ் மதிப்பெண் வராது. இதெல்லாம், பயிற்சி மையங்களில் சொல்லிக்கொடுக்கப்படும். கிராமப்புற மாணவர்கள் இதுகுறித்து தெரிந்துகொள்ள வாய்ப்பில்லை என்பது அவர்களுக்குப் பின்னடைவாகவே இருக்கிறது.

பயிற்சி மையங்களில் முறையாகப் பயிற்சி எடுத்துக்கொண்டால், நீட் தேர்வை நமது கிராமப்புற மாணவர்கள் நன்றாக எழுதுவார்கள் என்று எடுத்துக்கொள்ளலாம் அல்லவா?

நம் மாணவர்கள் திறமை குறைந்தவர்களல்ல. குறிப்பாக, இந்த ஆண்டு தமிழக அரசு அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 3,000 மாணவர்களைத் தேர்வுசெய்து பயிற்சியளித்தது. இவர்களில் பெரும்பாலானோர் தமிழ்வழி படித்தவர்கள். அதில், 1,337 பேர் நீட் தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். மேலும், அரசு இன்னும் அதிகப் பயிற்சி மையங்களை உருவாக்கியிருந்தால் நிறைய மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருப்பார்கள். கடந்த அக்டோபரிலேயே பயிற்சி மையங்கள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு கூறியது. ஆனால், அப்படிச் செய்யவில்லை. 50,000 வினா - விடைகள் அடங்கிய குறுந்தகடுகள் எல்லாப் பள்ளிகளுக்கும் வழங்கப்படும் என்று அரசு உறுதியளித்தது. அதுவும் நடக்கவில்லை. அரசுப் பயிற்சி மையங்களில் இத்தனை பேர் தேர்ச்சி பெற்றிருந்தாலும், அவர்கள் நல்ல ‘ரேங்க்’ வாங்கினால்தான் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கும். அதற்கு அரசு தரப்பில் இன்னமும் முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.

ஒருபுறம் அரசுப் பள்ளிகளில் படித்து, அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர ஏழை மாணவர்களை இவ்வளவு போராடவைக்கும் ‘நீட் தேர்வு’ மறுபுறம் வசதியான மாணவர்கள் தனியார் கல்லூரிகளில் சேர்வதற்கான சாத்தியங்களை அதிகம் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறதே? வெறும் 17% மதிப்பெண் எடுத்த ஒரு மாணவர் பணம் இருந்தால் தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துவிடலாம் என்ற சூழல் முன்னைக் காட்டிலும் மோசம் இல்லையா?

இந்தக் காரணங்களையும் உள்ளடக்கிதான் நாம் ‘நீட்’ தேர்வே வேண்டாம் என்று கோருகிறோம். கடந்த ஆண்டிலேயே இது அப்பட்டமாக நடந்தது. நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் 90% இடங்கள் பூர்த்தியாகவில்லை. கடைசி இரண்டு நாட்களில், எல்லா நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் அவர்களே இடங்களை ஒதுக்கிக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அனுமதித்தது. அப்போது ‘நீட்’ தேர்வில் குறைந்த மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்களும்கூட பணத்தைக் கொடுத்து கல்லூரியில் போய் அமர்ந்துவிட்டார்கள்.

தமிழ் வினாத்தாள்களில் பிழைகள் இருந்ததாகப் புகார் எழுந்தது. அது என்னவாயிற்று?

49 பிழைகள் இருந்தன. அதற்குக் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டிருக்க வேண்டும். இதுதொடர்பாக, டி.கே.ரங்கராஜன் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், முன்கூட்டியே தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டன. 24,720 பேர் தமிழில் தேர்வு எழுதியிருந்தார்கள். கருணை மதிப்பெண் வழங்கப்பட்டிருந்தால் இவர்களுக்குக் கிட்டத்தட்ட 100 மதிப்பெண்கள் கிடைத்திருக்கும். வெளிப்படையாகப் புகார் எழுந்தும்கூட சிபிஎஸ்இ அதுகுறித்தெல்லாம் அலட்டிக்கொள்ளாதது அதன் எதேச்சாதிகாரப் போக்கையே காட்டுகிறது.

அனிதா. அடுத்து பிரதீபா. இந்தத் தற்கொலைகளுக்கு என்னதான் தீர்வு?

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு பெறுவதுதான் இதற்கெல்லாம் தீர்வாக இருக்கும். மாநிலங்கள் தேர்வை நடத்த வேண்டும். தேர்வானது மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் அமைய வேண்டும். தமிழகத்தில் நீட் தேர்வால் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்தவர்களைவிட, சிபிஎஸ்இ மாணவர்களே அதிகம் பயனடைந்திருக்கிறார்கள். கடந்த ஆண்டு, தமிழகத்தில் மொத்தம் உள்ள 3,534 தமிழக அரசு ஒதுக்கீட்டுக்கான மருத்துவ இடங்களில் சேர்ந்தவர்களில் 1,220 பேர் சிபிஎஸ்இ மாணவர்கள். மொத்தமாகவே, 4,675 பேர்தான் விண்ணப்பித்திருந்தார்கள். ஆனால், தமிழ்நாடு பாடத்திட்டத்தில் படித்த 26,325 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், இவர்களில் 2,314 பேருக்குத்தான் இடம் கிடைத்தது என்பது கவனிக்கத்தக்கது. அதேசமயம், மாணவர்கள் மனம் தளர வேண்டியதில்லை. நீட் தேர்வைப் பலமுறை எழுத முடியும் என்பதை மாணவர்கள் உணர வேண்டும். ஒரு வருடம் தோல்வியடைந்தால் அத்துடன் வாய்ப்பு முடிந்துவிடுவதில்லை. தற்கொலை எதற்கும் தீர்வு அல்ல.

புதிய பாடத்திட்டம் அமலுக்கு வந்துவிட்டது. மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த பல்வேறு அம்சங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. இனி, நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வது எளிதாக இருக்குமா?

முந்தைய பாடத்திட்டத்தைவிட நிச்சயம் பயனுள்ளதாகவே இருக்கும். பாடத்திட்டத் தயாரிப்பு தொடர்பான கூட்டங்களில் கலந்துகொண்டு பல யோசனைகளைக் கூறியிருக்கிறோம். நல்ல மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கலாம்.

நீட் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு உண்டா?

அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தனி இடஒதுக்கீடு வழங்கும் வகையில் மருத்துவ கவுன்சில் விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவர வேண்டும். ஏனெனில், நுழைவுத் தேர்வு இருந்தாலும் இல்லாவிட்டாலும், வசதி படைத்த, தனியார் பள்ளி மாணவர்கள்தான் அதிகமாக மருத்துவக் கல்லூரிகளில் சேர முடிகிறது. தமிழகத்தில், முன்பு நுழைவுத் தேர்வு இருந்த காலகட்டங்களில் அதற்கான பயிற்சி மையங்களில் படித்தவர்கள்தான் பெரும்பாலும் மருத்துவப் படிப்பில் சேர முடிந்தது. நுழைவுத் தேர்வு ரத்துசெய்யப்பட்ட பின்னர், நாமக்கல் போன்ற நகரங்களில் தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்குத்தான் அதிக வாய்ப்பு இருந்தது. இப்போது, நீட் வந்த பிறகு, நீட் பயிற்சி மையங்களில் படித்தவர்களுக்குத்தான் அதிக வாய்ப்பு கிடைக்கிறது. எனவே, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 50% வரை இடஒதுக்கீடு கொண்டுவர வேண்டும். அதுதான் நிரந்தரத் தீர்வாக அமையும்!

-வெ.சந்திரமோகன்

தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x