Published : 16 Sep 2024 07:29 AM
Last Updated : 16 Sep 2024 07:29 AM
த.மு.எ.ச.வின் (இப்போது த.மு.எ.க.ச) வெள்ளிவிழா மாநாடு கோவையில் 1999 மே மாதம் நடைபெற்றது. மாநாட்டையொட்டி அமைத்திருந்த கருத்தரங்கில் பேச தோழர் சீதாராம் யெச்சூரியை அழைத்திருந்தோம். அப்போது தமுஎசவின் பொதுச்செயலாளர் நான். கோவைக்கு வந்தவரை வரவேற்று, நானும் சில தோழர்களும் பேசிக்கொண்டிருந்தோம்.
அப்போது, “இன்றைய அரசியல்-பொருளாதாரம் பற்றி எழுத்தாளர்களுக்கு நான் எடுத்துச் சொல்ல வேண்டும் என்று ஓர் ஆலோசனை வந்திருக்கிறது. அதைப் பேசவா அல்லது பின்-நவீனத்துவம் உள்ளிட்ட இலக்கியக் கோட்பாடுகள் பற்றிப் பேசவா?” என்று யெச்சூரி கேட்டார். நாங்கள் அனைவரும் ஒரே குரலில், “தோழர், நீங்கள் இலக்கியக் கோட்பாடுகள் பற்றிப் பேசுங்கள்; அதுவே பொருத்தமாக இருக்கும்” என்றோம். அவர் மெலிதாகச் சிரித்தார்.
இலக்கியத்தின் அரசியலில்... கருத்தரங்கம் தொடங்கியது. நான்தான் மொழிபெயர்ப்பாளர். ‘இவர் அரசியல் பேசுவாரா, இலக்கியம் பேசுவாரா?’ என்று எனக்குள் ஒரே பரபரப்பு. பேச ஆரம்பித்தவர் தேச அரசியலின் சாரத்தைச் சொல்லிவிட்டு, இலக்கியத்தின் அரசியலுக்குள் புகுந்தார். புகுந்தார் என்றால்... புகுந்து விளையாடினார்.
இலக்கியக் கோட்பாடுகளுக்குள் இருக்கும் அரசியலைப் புட்டுப் புட்டு வைத்தார். பின்-நவீனத்துவம் எனப்பட்டதன் உள்ளிருக்கும் அரதப் பழசான அரசியலைப் பிரமாதமாக அடையாளம் காட்டினார். யதார்த்தவாதம் என்னும் இலக்கியக் கோட்பாடே முற்போக்கு எழுத்தாளர்களுக்கு மட்டுமல்ல, எந்தவொரு எழுத்தாளருக்கும் ஏற்றது என்றார். அதேநேரத்தில், அதை விரிந்த நோக்கில் புரிந்துகொள்ள வேண்டும், கைக்கொள்ள வேண்டும் என்றார். ஓர் அரசியல் தலைவர் இவ்வளவு ஆழமாக இலக்கிய நடப்புகளை அறிந்து வைத்திருப்பாரா, இவ்வளவு அழகாக எடுத்துச் சொல்வாரா என்று அனைவரும் அசந்துபோனார்கள். ஒரு சரியான அரசியல்வாதி உள்ளார்ந்த இலக்கியவாதியாகவும் இருப்பார் என்பது அன்று உறுதியானது. அந்தப் பேச்சு, ‘இலக்கைத் தேடும் இலக்கியம்’ என்று சிறு பிரசுரமாகவும் வெளிவந்தது.
அரசியல் யதார்த்தங்களை எதிர்கொண்டவர்: 1975இல் வந்த நெருக்கடிநிலை எனும் சர்வாதிகாரத்தை எதிர்த்த அரசியலில் முகிழ்த்த தலைவர்களில் ஒருவர் யெச்சூரி. அப்போது அவர் காங்கிரஸ் அரசால் கைது செய்யப்பட்டார். ஆனால், உறுதி குலையவில்லை. டெல்லியில் உள்ள ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (ஜேஎன்யூ) இடதுசாரி இளைஞர்களின் பிறப்பிடமாகத் திகழ்ந்த காலத்தில், இவர் அந்த மாணவர்களின் உறுதியான தலைவராக உயர்ந்தார். பின்னர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து, அதற்கு முழுமையாகத் தன்னை ஒப்படைத்துக்கொண்டார்.
வாழ்க்கை வினோதமானது. எதை எதிர்த்துப் புறப்பட்டோமோ அதன் துணையைத் தேடும் காலமும் வரலாம். காங்கிரஸை எதிர்த்துப் புறப்பட்ட அந்த இளம் தலைவர், பாஜக என்னும் பெரும் எதிரி கண் முன்னால் எழுந்தவுடன் அதை வீழ்த்தப் புறப்பட்டார். இப்படி மாறுவது ஒரு தனிமனிதருக்குச் சாதாரண விஷயமல்ல; உளவியல் பிரச்சினைகளை உருவாக்கக் கூடியது. ‘இன்றைய பிரதான எதிரி பாஜக என்பதால், அதை முறியடிக்க காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் அணிவகுப்பை உருவாக்க வேண்டும்’ என்னும் கருத்து எழுந்தபோது, ஒரு மூத்த தோழர், “அருணன், காங்கிரஸ் எதிர்ப்பிலேயே வந்த எனக்கெல்லாம் இதை ஏற்பது கடினம்” என்று என்னிடம் சொன்னார். தனிமனித உணர்வின் இயல்பான, நேர்மையான வெளிப்பாடு அது.
தோழர் யெச்சூரியும் இதை எதிர்கொண்டிருப்பார். ஆனால், அதை எல்லாம் சட்டென்று தாண்டிப் புதிதாக எழுந்துள்ள யதார்த்த நிலைமையைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப அரசியல் வியூகம் வகுப்பதே மார்க்சியச் செயல்முறை என்பதை உள்வாங்கியவர் அவர்.
அகில இந்திய மாநாடுகளில் யெச்சூரி ஆற்றிய உரைகள் கடந்த காலம் உருவாக்கிய தனிமனித உணர்வைத் தாண்டி, அவர் சமகாலம் காட்டும் நிதர்சனங்களை ஏற்ற மகத்தான தலைவர் என்பதைப் பறைசாற்றின. இன்று ‘இண்டியா’ எனும் எதிர்க்கட்சிகளின் கட்டமைப்பு ஒன்று உருவாகி, அது பாஜகவைப் பலவீனப்படுத்தியிருக்கிறது என்றால், அதில் தோழர் யெச்சூரியின் மகத்தான பங்களிப்பு உள்ளது.
சித்தாந்தக் கலங்கரை விளக்கு: இந்தியாவில் பாஜகவின் எழுச்சியைப் போல உலகில் சோவியத் ஒன்றியம் தகர்ந்ததும், அங்கே கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி வீழ்ந்ததும் மார்க்சியர்களாகிய எங்களுக்குப் பெரும் அதிர்ச்சி தந்த நிகழ்வுகள். இந்தச் சரிவைப் புரிந்துகொள்ளக் கட்சி முயன்றது. அவரவர் தனிப்பட்ட முறையிலும் அதற்கான ஆய்வினை மேற்கொண்டனர்.
1992இல் நடந்த கட்சியின் அகில இந்திய மாநாட்டில், ‘சில சித்தாந்தப் பிரச்சினைகள்’ என்னும் ஆவணத்தைத் தோழர் யெச்சூரி முன்வைத்த விதமும், தொகுப்புரை தந்த வகையும் அவர் இந்த விஷயத்தில் எவ்வளவு ஆழமாகச் சிந்தித்திருக்கிறார் என்பதை உணரவைத்தன. 2012இல் நடந்த அகில இந்திய மாநாடும் சித்தாந்த நிலைப்பாடுகளைச் செழுமைப்படுத்தியது. அதை முன்வைத்தவரும் அவரே.
தோழர்கள் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட், ஹர்கிஷன் சிங் சுர்ஜித் போன்றவர்களுக்குப் பிறகு, கட்சியின் சித்தாந்தக் கலங்கரை விளக்காக ஜொலித்தவர். உலக அளவில் வலதுசாரிச் சக்திகளின் கை பெரிதும் ஓங்கி நின்ற வேளையிலும், இந்தியாவில் மார்க்சியத்துக்கும், அதன் கட்சிக்கும் ஒரு தனித்த மரியாதை இருக்கிறது என்றால், அதன் காரணிகளில் ஒருவர் தோழர் யெச்சூரி.
‘ஆமாம், நான் சீதாராம்தான்!’ - யெச்சூரி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் படித்தவர். ஆனால், அரசியல் பல்கலைக்கழகத்தில் வாழ்வின் அனைத்துப் பாடங்களையும் படித்தவர். ஒருவருக்கு தர்க்க நியாயம் கைவரப்பெற்றால், அவரால் எந்தத் துறையின் உண்மைகளையும் உணர முடியும்.
அப்படி நாட்டின் தொன்மங்களை விமர்சன நோக்கோடு படித்து, அவற்றை மார்க்சியப் பரப்புரைக்குப் பயன்படுத்தியவர் தோழர் யெச்சூரி. அவருடைய முழுப் பெயர் சீதாராம் யெச்சூரி. பாபர் மசூதியை இடித்துக் கட்டப்பட்ட ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு அவரை அழைத்தவர்கள் “நீங்கள் சீதாராம்; ஆகவே அவசியம் வர வேண்டும்” என்றார்கள். அதற்கு அவர், “ஆமாம், நான் சீதாராம்தான். அதனால், ராமரை வைத்து நீங்கள் நடத்துகிற பிளவுவாத அரசியல் எனக்கு நன்றாகத் தெரியும். நான் வர மாட்டேன்” என்றார்.
தமிழ் மீதான பற்று: தமிழ் மீதும், தமிழர் மீதும் அலாதியான பிரியம் கொண்டிருந்தார். அவர் பிறந்தது சென்னையில் என்பது ஒரு காரணமாக இருக்கலாம்.
அத்தோடு தமிழின் வளமை, தமிழரின் தொன்மை பற்றி அவருக்கு தெளிவான ஞானம் இருந்தது. 2010இல் கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் அவர் ஆற்றிய உரை அதற்கான அழியா சாட்சியம்.
“தேசிய இனத்தை வரையறை செய்யும் நான்கு அவசியமான அம்சங்களில் ஒன்றாக மொழியை நாங்கள் கருதுகிறோம். விடுதலைப் போராட்டம் நடந்துகொண்டிருந்த காலத்தில், இத்தகைய உணர்வின் அடிப்படையில்தான் மொழிவழி மாநிலம் என்ற முழக்கத்தை முன்வைத்தோம்” என்றார். “தமிழுக்குப் பழமையான மரபு உண்டு; இன்றைக்கும் பொருந்தக் கூடிய பெருமைமிகு இலக்கியங்களைத் தமிழ் தன்னகத்தே கொண்டுள்ளது” என்றும் குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டின் சிறப்பு அரசியல் இயக்கங்களின் வரலாற்றுப் பாத்திரத்தை அவர் உணர்ந்திருந்தார். “தமிழ்ச் சமூகமானது தேசிய இயக்கம், சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம், கம்யூனிஸ்ட் இயக்கம், தலித் மற்றும் பெண்ணுரிமை இயக்கம் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களால் செழுமையடைந்த ஒன்று” என்று கச்சிதமாக எடுத்துரைத்தார்.
அதேநேரத்தில், இன்றைய கால வேகத்தில் மனிதர்கள் ஏற்கெனவே போடப்பட்ட வட்டத்தைத் தாண்டி, பன்முகப்பட்டு நிற்பதைத் தன்னையே உதாரணமாகக் காட்டி விளக்கினார். “இங்கு நின்றுகொண்டிருக்கும் நான் தமிழ்நாட்டில் பிறந்தேன். என் தாய்மொழி தெலுங்கு. இந்தி மொழி பேசும் டெல்லியில் பணியாற்றுகிறேன். நாடாளுமன்றத்தில் மேற்கு வங்க மாநில மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறேன். இப்போது உலகம் முழுவதுமிருந்து இங்கு குழுமியுள்ள தமிழ் மக்களிடையே உரையாற்றிக்கொண்டிருக்கிறேன். இதுதான் இந்தியா.”
இவர்தான் தோழர் யெச்சூரி. அவரது மறைவால் உலகம் ஒரு ஞானச் சூரியனை இழந்தது. நான் எனது குருநாதரை இழந்தேன். ஒருவருடைய ஆங்கில உரையைப் பல்லாயிரம் மக்கள் முன்பு மொழிபெயர்ப்பது உள்ளூரப் பெரும் பதற்றத்தை உருவாக்கக் கூடியது. ஆனால், தோழர் யெச்சூரியின் உரையை மொழிபெயர்ப்பது சுகமாக இருந்தது. வாக்கினிலே அவ்வளவு தெளிவு. மதுரைக்கு வரும்போதெல்லாம் சந்திப்பேன், தொலைபேசியிலாவது பேசுவேன். அடுத்து எப்போது வருவார் எனக் காத்திருப்பேன். இனி?
- அருணன், பேராசிரியர், 'இந்திய கம்யூனிச இயக்க வரலாறு' உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர், arunan.kathiresan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT