Published : 12 Sep 2024 06:25 AM
Last Updated : 12 Sep 2024 06:25 AM
இந்தியாவின் அரசமைப்புச் சட்டம், கால ஓட்டத்தில் பல மாற்றங்களைச் சந்தித்து, சமூகரீதியாகவும் கல்வியிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குக் கல்வி, வேலைவாய்ப்பிலும்; பட்டியல் சாதிகளுக்கும், பட்டியல் பழங்குடியினருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் துறையிலும் இடஒதுக்கீடு வழங்குகிறது.
கூடவே, கிரீமிலேயருக்கு (Creamy Layer) இடஒதுக்கீடு தரக் கூடாது என்கிற குரல்களும் தொடர்கின்றன. சமீபத்தில் உள்ஒதுக்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் கிரீமிலேயர் தொடர்பாக நீதிபதிகள் தெரிவித்திருந்த கருத்துகள் விவாதத்தை எழுப்பியிருக்கின்றன.
இடஒதுக்கீடு பெறத் தகுதியானவர் யார்? - 1871 முதல் பிரிட்டிஷ் இந்தியாவில் சாதிகளின் பட்டியலும் மக்கள்தொகையும் கணக்கெடுக்கப்பட்டன. 1931 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கையில், தீண்டாமைக் கொடுமையினால் பாதிக்கப்படும் சாதிகளும், மலைகளிலும் காடுகளிலும் வாழும் பழங்குடியினங்களும் அட்டவணைப்படுத்தப்பட்டன.
அதுவரை பயன்படுத்தப்பட்ட Depressed Class என்ற சொல்லுக்குப் பதில், 1935இல் Scheduled Castes (பட்டியல் சாதிகள்), பிற்படுத்தப்பட்ட பழங்குடிகள் (Backward Tribes) என்கிற சொற்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த இரண்டு பட்டியல்களில் இடம்பெற்ற மக்கள் பிரிவினருக்கு அரசியல் துறையில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. மதராஸ், பம்பாய் உள்ளிட்ட மாகாணங்களிலும், மைசூர், கோலாப்பூர் உள்ளிட்ட சமஸ்தானங்களிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குக் கல்வி, வேலைவாய்ப்பில் வழங்கப்பட்ட இடஒதுக்கீடுகளும் தொடர்ந்தன.
சுதந்திர இந்தியாவில் அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது, பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடிகளுக்கு அரசியல் துறையிலும் (சட்டப்பிரிவு 332); பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடிகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வேலைவாய்ப்பிலும் (சட்டப்பிரிவு 16(4)) இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. யாரெல்லாம் பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடிகள் என்று கண்டறியும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்குத் தரப்பட்டு, அதற்கு அரசமைப்பு அங்கீகாரம் (சட்டப்பிரிவுகள் 341, 342) வழங்கப்பட்டது.
மதராஸ் மாகாணத்தில் நடைமுறையில் இருந்த வகுப்புவாரி ஆணையை எதிர்த்து செண்பகம் துரைராஜன் தொடுத்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் வகுப்புவாரி ஆணையை ரத்துசெய்தது. மேல்முறையீட்டில் அத்தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்தது. வகுப்புவாரி உரிமையை மீட்டெடுக்க பெரியாரின் பின்னால் திரண்டு தமிழ்நாடு போராடியது. தமிழ்நாடு காங்கிரஸும், அன்றைய முதல்வர் குமாரசாமி ராஜாவும் அரசமைப்புச் சட்டத்தைத் திருத்த பிரதமர் நேருவை வலியுறுத்தினர்.
விளைவாக, அரசமைப்புச் சட்டம் முதன்முறையாகத் திருத்தப்பட்டு, சட்டப்பிரிவு 15(4) சேர்க்கப்பட்டது. இப்பிரிவு சமூகரீதியாகவும் கல்வியிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குக் கல்வியில் இடஒதுக்கீடு தரும் அதிகாரத்தை அரசுக்குத் தந்தது. அதன்படி தமிழ்நாடு, கர்நாடகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் தங்கள் அதிகாரத்துக்கு உள்பட்ட கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்கின.
இருந்தபோதும் தேசிய அளவில் யார் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்கிற பட்டியல் இல்லை. 1953இல் பிரதமர் நேருவால் உருவாக்கப்பட்ட காகா காலேல்கர் ஆணையம், 2,399 சாதிகளைப் பிற்படுத்தப்பட்ட சாதிகள் என்று கண்டறிந்து அறிக்கை அளித்தது. ஆனால், காங்கிரஸ் அரசு அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
1979இல் உருவாக்கப்பட்ட மண்டல் கமிஷன், 11 வகையான சமூக, பொருளாதார, கல்வி அளவுகோல்களின் அடிப்படையில் 3,743 சாதிகளைப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று அறிக்கை அளித்தது. மண்டல் குழுவின் பரிந்துரைகளின்படி 1990இல் பிரதமர் வி.பி.சிங் செயலாக்கம் தந்து, மத்திய அரசின் வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இடஒதுக்கீடு தந்தார். 2006இல் அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட்டு, மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இடஒதுக்கீடு கிடைத்தது.
இடஒதுக்கீட்டில் கீரிமிலேயர்: குறிப்பிட்ட தொகைக்கு அதிகமாக வருமானம் பெறும் பிற்படுத்தப்பட்ட பிரிவினரை கிரீமிலேயர் என்று கருதி, அவர்களுக்கு இடஒதுக்கீடு தரக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் இந்திரா சஹானி வழக்கில் 1992இல் தீர்ப்பளித்தது. இதைப் போன்ற வருமான அடிப்படையிலான கட்டுப்பாடு பட்டியல் சாதிகளுக்கும், பட்டியல் பழங்குடிகளுக்கும் வந்துவிடுமோ என்கிற ஓர் அச்ச உணர்வு இடஒதுக்கீட்டு ஆதரவாளர்களுக்கு எப்போதும் உள்ளது.
‘பஞ்சாப் அரசு எதிர் தவீந்தர் சிங்’ வழக்கில், ஆகஸ்ட் 1இல் வெளிவந்துள்ள உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடிகளில் பின்தங்கிய பிரிவினருக்கு உள்ஒதுக்கீடு தரலாம் என்றும், அதற்காகப் பட்டியலில் உள்ள சாதிகளையும், பழங்குடிகளையும் துணைப் பிரிவுகளாகவும் பிரிக்கலாம் என்றும், அதற்கான அதிகாரம் மாநில அரசுகளுக்கு உண்டு என்றும் கூறுகிறது.
இத்தீர்ப்பானது, சட்டப்பிரிவு 341இன் கீழ் உருவாக்கப்பட்ட பட்டியலில் உள்ள சாதிகளை கிரீமிலேயர் என்று அறிவித்து, இடஒதுக்கீட்டுப் பலன்களில் இருந்து அவர்களை முற்றிலும் விலக்கும் தொடக்கக் காரணிகளைக் கொண்டுள்ளது என்று சில தலித் அமைப்புகள் கருதுகின்றன. அந்த வகையில் கிரீமிலேயரைவிட உள்ஒதுக்கீடு ஆபத்தானது என்றும் கருதுகின்றன. ஏனெனில், தற்போது நடைமுறையில் உள்ள கிரீமிலேயர் இடஒதுக்கீட்டுப் பலன்களில் இருந்து தனிநபர்களை விலக்குகிறது. ஆனால், ஒட்டுமொத்த சாதியை கிரீமிலேயர் என்று அறிவிக்கும் ஆபத்தை உள்ஒதுக்கீடு கொண்டுள்ளது என்கின்றனர்.
கிரீமிலேயரை வீழ்த்துமா? - உண்மையில் உள்ஒதுக்கீடு தருவதன் மூலம் கிரீமிலேயர் எனும் கிருமிலேயரை வீழ்த்த இயலும். ஏனெனில், இடஒதுக்கீடு என்ற தத்துவம் கிரீமிலேயருக்கு எதிரானது. பல நூற்றாண்டுகளாக முன்னேறிய வகுப்பினர் வசமிருந்த சமூக வளங்களைப் பங்கிடும் சட்டவடிவமே இடஒதுக்கீட்டுத் தத்துவம். 1902இல் சாகு மகாராஜின் சமஸ்தானத்தில் அறிமுகம் கண்ட இடஒதுக்கீட்டுத் தத்துவம், கால ஓட்டத்தில் பல்வேறு மாற்றங்களைக் கண்டுள்ளது. சமூகத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு இடஒதுக்கீட்டின் பலன்கள் ஓரளவுக்காவது சென்று சேர்ந்துள்ளன.
அதன்விளைவாக, இந்தியச் சமூகத்தின் உண்மையான கிரீமிலேயரான முன்னேறிய வகுப்பினர், ‘எங்களுக்கும் இடஒதுக்கீடு வேண்டும்’ என்று கோரி, 103ஆவது அரசமைப்புச் சட்டத்திருத்தத்தின் மூலம் பொருளாதார அடிப்படையில் 10% இடஒதுக்கீடு பெற்றுவிட்டனர். எவ்வளவு குறைவாகச் செயல்படுத்தப்பட்டாலும் இடஒதுக்கீட்டின் மூலம் பலன்கள் உண்டு என்பதற்கான சாட்சியம் இது.
இடஒதுக்கீட்டின் மூலம் பலன்கள் உண்டாகுமெனில், ஏற்படும் பலன்களை அளவிடுவது அவசியம். அவ்வாறு அளவிட்டால், உண்மைப் பயனாளிகளையும், பயன்பெறாதவர்களையும் கண்டறிய இயலும். கண்டறிந்த தரவுகளின்படி, இடஒதுக்கீட்டின் பலன் இதுவரை பயன்பெறாதவர்களுக்குச் சென்று சேரும் வகையில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். அதற்காக இடஒதுக்கீட்டுக் கொள்கையில் தேவையான மாற்றங்களை, குறிப்பிட்ட கால அளவில் செய்துகொண்டே இருக்க வேண்டும்.
இதன்மூலம் இடஒதுக்கீட்டுக் கொள்கை நடைமுறைக்கு வந்து கிட்டத்தட்ட 75 ஆண்டுகள் ஆன பின்னரும் சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ளோரைத் தூக்கிவிட இயலும். சமூகப் பின்தங்கிய நிலையின் அடிப்படையில் வழங்கப்படும் இடஒதுக்கீட்டை ஒழித்துவிட்டு, தனிநபர் பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரும் முன்னேறிய வகுப்பினரின் குரல்களை அடக்கவும் இயலும்.
அரசுப் பள்ளிகளில் பயின்றோருக்கு வழங்கப்படும் 7.5% இடஒதுக்கீடு, பிற்படுத்தப்பட்ட பிரிவை இரண்டாகப் பிரித்து உருவாக்கப்பட்ட மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு உள்ளிட்ட பல உள்ஒதுக்கீடுகள் தமிழ்நாட்டில் ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ளன. மற்ற மாநிலங்களிலும் வேறு வகையிலான உள்ஒதுக்கீடுகள் உள்ளன. இவ்வகை உள்ஒதுக்கீடுகள் பின்தங்கிய நிலையில் உள்ளோருக்குச் சமூக வளங்கள் சென்றுசேருவதை உறுதிசெய்கின்றன.
பல ஆண்டுகளாக வருமானத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்பட்ட வறுமைக் குறியீடு தற்போது சுகாதாரம், கல்வி, வாழ்க்கைத் தரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும் பல பரிமாண வறுமைக் குறியீடாக விரிவடைந்துள்ளது.
அதேபோல் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரம் உள்ளிட்ட சமூக வளங்களைப் பகிர்ந்தளிக்கும் இடஒதுக்கீட்டுத் தத்துவம், சாதியை முக்கியக் காரணியாகக் கொண்ட பல பரிமாணக் குறியீடுகளின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டு, அது தரும் பலன்களைக் குறிப்பிட்ட கால அளவில் அளவிட வேண்டும். தேவைப்படின் தரவுகளின் அடிப்படையில் மாற்றங்களைச் செய்ய வேண்டும். சாதிகளுக்கு இடையே வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் இருக்கும் வரை இடஒதுக்கீட்டுத் தத்துவத்தின் முக்கியமான அடிப்படை அலகாக சாதி இருக்க வேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து இடஒதுக்கீட்டுத் தத்துவத்தை மறுசீரமைப்புச் செய்வதன் மூலம், உண்மையான கிரீமிலேயர் பிரிவினர் இடஒதுக்கீட்டின் பலன்களைப் பெறுவதைத் தடுக்க இயலும். சாதியைப் புறக்கணித்துவிட்டு, பொருளாதார அடிப்படையை மட்டுமே தனித்த அலகாகக் கொண்டு உருவாக்கப்பட்டு, ஏற்கெனவே நடைமுறையில் உள்ள கிரீமிலேயர் என்ற நஞ்சின் தாக்கம் பட்டியல் சாதிகள், பழங்குடியினரைத் தீண்டாமல் தடுக்க இயலும். இவ்வகையில், தகுந்த முறையில் உருவாக்கப்பட்ட உள்ஒதுக்கீடுகள் கிரீமிலேயர் என்ற ஆபத்தைத் தடுக்க இயலும்.
- தொடர்புக்கு: vvv_vv_1985@yahoo.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...