Published : 24 Jun 2018 08:58 AM
Last Updated : 24 Jun 2018 08:58 AM
உ
ள்ளாட்சி அமைப்புகள், பொது மக்களுக்கு அடிப்படை சேவைகள் வழங்குவதற்கு ஏதுவாக, மத்திய அரசு ஆண்டுதோறும் மானியம் வழங்க 14ஆவது நிதிக் குழு பரிந்துரைத்தது. இந்த நோக்கத்துக்காக நிதியாண்டு 2015-16 முதல் 2019-20 வரை ஐந்து ஆண்டுகளுக்கு, இந்தியா முழுமைக்கும், ரூ 2,87,436 கோடி, நிதி ஒதுக்கப் பட்டுள்ளது.
அடிப்படை மானியம் மற்றும் செயலாக்க மானியம் என்று இரண்டு பிரிவுகளில், ஆண்டுக்கு இரண்டு தவணைகளாக ஜூன், அக்டோபர் மாதத்தில், இது வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதி, கடந்த ஆண்டின் இரண்டாம் தவணையில் இருந்து வழங்கப்படவில்லை. இவ்வாண்டுக்கான முதல் தவணையுடன் ரூ 3558 கோடி நிலுவையில் உள்ளது. உடனடியாக இந்த மானியத் தொகையை விடுவிக்க வேண்டும் என்று மாநில அரசு, மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
கிட்டுமா கிட்டாதா...?
உள்ளாட்சி அமைப்புகளுக்கு முறையாகத் தேர்தல் நடந்து, தேர்ந்தெடுக்கப் பட்ட மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலையில், உள்ளாட்சிகளுக்கான மானியம் வழங்க வழியில்லை என்கிறது 14ஆவது நிதிக் குழு. இது சரியில்லை என்பது தமிழக அரசின் வாதம்.
யார் சொல்வது சரி...? தமிழக உள்ளாட்சிகளுக்கு நிதி மானியம் கிட்டுமா கிட்டாதா...?
இந்திய அரசு, நிதி அமைச்சகம், செலவுத் துறை (நிதிக் குழுப் பிரிவு) 2015 அக்டோபர 8 அன்று, அனைத்து மாநிலத் தலைமைச் செயலாளர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளது. (எண் 13(32)FFC/FCD/2015-16) 2015 - 20 காலத்தில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியத் தொகைகளை அவ்வந்த மாநில அரசுகளுக்கு வழங்குவதில் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டிக் குறிப்புகளை இந்தக் கடிதம் பட்டியல் இடுகிறது. 'மானிய நிதி பெறுகிற அமைப்பு, மிகச் சரியாக திட்டம் வகுத்து, செலவுகளை மேற்கொள்ள வேண்டும்' (குறிப்பு எண் 4)
அதாவது, பஞ்சாயத்து / நகராட்சி, அடிப்படை சேவை குறித்த திட்டம் வகுத்து, இத்தொகையை செலவிடுதல் வேண்டும். அதற்கு முதலில், 'செயல்படுகிற' அமைப்பு வேண்டுமே.....! இதற்கு ஒருபடி மேலே சென்று, இலக்கணம் வரையறுக்கிறது, குறிப்பு எண் 6. 'முறையாக கட்டமைக்கப்பட்ட பஞ்சாயத்து & நகராட்சி என்பது, தேர்தல் நடந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட, அரசமைப்பு சட்டம் பகுதி IX & IXA கூறுவதுபோல், செயல்படுகிற ஓர் அமைப்பு'.
உள்ளாட்சி அமைப்புகளுக்கான சட்டங்கள் மட்டும் இருந்தால் போதாது. அவை முறையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளால் நிர்வகிக்கப்பட வேண்டும். வழிகாட்டிக் குறிப்பில் ஒரு குழப்பமும் இல்லை; மிகத் தெளிவாக இருக்கிறது. வழங்கப்படும் மானியத்தில் 10%க்கு மேல், நிர்வாகச் செலவுகளுக்குப் பயன்படுத்தக் கூடாது; தண்ணீர் சப்ளை, சுகாதாரம், தெருக்கள், தெருவிளக்குகள், இடுகாடு - சுடுகாடு உள்ளிட்ட பொதுச் சொத்துகளை பராமரித்தல் / பாதுகாத்தல் மற்றும் பிற அடிப்படை சேவைகளுக்குத்தான் இந்த மானியம் பயன்படுத்தப்பட வேண்டும்.
2 முக்கிய நிபந்தனைகள்
செயலாக்க மானியம் பெறுவதற்கும் இரண்டு முக்கிய நிபந்தனைகள் தரப் பட்டு உள்ளன: முந்தைய இரண்டு நிதி ஆண்டுகளின் கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டு இருக்க வேண்டும். அதை விடவும், உள்ளாட்சி அமைப்பு, கடந்த ஆண்டை விடவும், தனது சொந்த வருவாயைப் பெருக்கி இருத்தல் வேண்டும். (குறிப்பு 13).
இந்தியா முழுவதுமே, உள்ளாட்சி அமைப்புகளில் 'கணக்குகள்' எப்போதுமே சரியாக பதிவு செய்யப் படுவதில்லை என்று நிதிக் குழு அறிக்கைகள் தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகின்றன. அடுத்தது - 'சொந்த வருவாய்ப் பெருக்கம்'. இங்குதான் தமிழக அரசு, மிக மோசமான செயல்பாட்டை வெளிப் படுத்தி வருகிறது. உள்ளாட்சி அமைப்புகளின் வரி வருவாயைப் பெருக்கா விட்டாலும் கூடப் பரவாயில்லை. முறையாக, சட்டப்படி உள்ளாட்சிகளுக்குச் சேர வேண்டிய கேளிக்கை வரி விஷயத்தில், தமிழக அரசு காட்டி வரும் 'பெருந்தன்மை', சாமான்ய மக்களின் அடிப்படை சேவைகளை நிறைவேற்ற வேண்டிய உள்ளாட்சிகளின் நலனுக்கு முற்றிலும் விரோதமானது.
பொது மக்களின் அடிப்படை எதிர்பார்ப்புகளை நிறைவேற்றித் தருவதில், மத்திய, மாநில அரசுகளை விடவும், உள்ளாட்சிகள்தாம் அதிக பொறுப்புணர்வுடன் செயல் புரிந்து வருகின்றன. அவைதாம், உண்மையான ஜனநாயக நெறிப்படி, மக்களின் நியாயமான தேவைகளுக்கு மதிப்பளிக்கின்றன. ஆனால் கடந்த 50 ஆண்டுகளில் அடுத்தடுத்து வந்த தமிழக அரசுகள், உள்ளாட்சிகளுக்கு வர வேண்டிய நிதி ஆதாரங்களை திட்டமிட்டு சீர்குலைத்து விட்டன. கேளிக்கைகளுக்கு வரி விலக்கு அளித்து, பஞ்சாயத்து / நகராட்சிப் பணிகளை முடக்கி விட்டன.
இந்த நிலையில், எந்த 'செயலூக்க' அடிப்படையில் மானியம் கோருகிறது தமிழக அரசு? எந்த கிராமத்தில், பஞ்சாயத்துக்கான வரி வருவாயை வலுப்படுத்தி இருக்கிறது....? உள்ளாட்சி அமைப்புகள் தமது 'சொந்த' வருவாயைப் பெருக்கிக் கொள்ள உதவி இருக்கிறது...? எதுவுமே செய்யாமல், 'செயலூக்க' மானியம்!!
இந்த மானிய நிதி, உள்ளூர் மக்கள் பிரதிநிதிகளால் கையாளப் பட வேண்டும் என்பதற்காகத்தான், மத்திய அரசால் மானியத் தொகை விடுவிக்கப்பட்ட 15 நாட்களுக்குள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி மாற்றல் செய்தாக வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகள் இல்லாத போது, மாநில அரசின் அதிகாரிகள் மூலம்தான் நிதி செலவிடப்பட இருக்கிறது. இது, 'கிராம அதிகாரம்' என்கிற கருத்துருவுக்கே எதிரானது.
இதெல்லாம் போகட்டும். மானிய நிதி குறித்து ஒவ்வோர் ஆண்டும், மாநில நிதிச் செயலாளர், 'பயன்பாட்டுச் சான்றிதழ்' வழங்க வேண்டும். ஐந்து கேள்விகள் மட்டுமே கொண்டது இந்தச் சான்றிதழ். முதல் கேள்வியே, 'உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல்கள் நடைபெற்றனவா...?' அடுத்தது - மொத்தம் எத்தனை கிராமங்கள் / நகராட்சிகளில் தேர்தல் நடைபெற்றது...? மூன்றாவது - அடுத்த தேர்தலுக்கான தேதி / ஆண்டு என்ன?
இதன் பிறகுதான், மானியத் தொகை தொடர்பாக இரண்டு வினக்கள் வருகின்றன. நோக்கம், பயன்பாடு, அதிகாரம்..... எல்லாமே, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், நிர்வாகத்தில் கூடுதல் அதிகாரத்துடன் செயல்படத் துணை புரிவதாகத்தான் இருக்கிறது. இதற்கு நேர்மாறான திசையில் பயணித்துக் கொண்டு, மானியம் மட்டும் வேண்டும் என்று கோரிக்கை வைப்பது, மக்கள் சேவைக்காகத்தான் என்று நம்ப முடியவில்லை. ஒரு சிலரின் நிர்வாகக் குளறுபடிக்கு, ஒட்டுமொத்த தமிழக மக்களும் பாதிப்புக்கு உள்ளாக வேண்டுமா....?
சற்றும் நியாயம் இல்லை. இந்தச் சிக்கலில் இருந்து மீள்வதற்கு, ஒரு வழி இருக்கிறது. உள்ளாட்சிகளின் நிதி ஆதாரத்தைப் பறிக்கிற கேளிக்கை வரிச் சலுகையை உடனடியாக ரத்து செய்யச் சொல்லலாம்;
உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான வலுவான உறுதிமொழியை, திட்டமிட்ட கால அட்டவணையை சமர்ப்பிக்கச் சொல்லலாம். இவற்றின் அடிப்படையில், மானிய நிதியை நிலுவையுடன் சேர்த்து உடனடியாக விடுவிக்கலாம். என்ன இருந்தாலும், மக்களுக்கான நிதி மக்களைத்தானே சேர வேண்டும்...?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT