Last Updated : 13 Jun, 2018 10:07 AM

 

Published : 13 Jun 2018 10:07 AM
Last Updated : 13 Jun 2018 10:07 AM

ஆட்சிப் பணியா? ஆள்வோருக்கான சேவையா?

த்திய அரசுப் பணியில் இருக்கும் நண்பர் ஒருவர் “திறமையான ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்குப் பஞ்சமா என்ன?” என்ற கேள்வியுடன், மத்திய அரசில் பத்து அமைச்சகங்களில் இணைச் செயலாளர் தகுதியுள்ள பத்து பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று ஜூன் - 10 அன்று வெளியிடப்பட்டிருந்த விளம் பரத்தை எனக்கு மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். மிகுந்த அதிர்ச்சியுடன்தான் அதைப் பார்த்தேன்.

1. வருவாய் 2. நிதிச்சேவைகள் 3. பொருளாதார விவகாரங்கள் 4. வேளாண், கூட்டுறவு & விவசாயிகள் நலன் 5. சாலைப் போக்குவரத்து & நெடுஞ்சாலைகள் 6. கப்பல் 7. சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் 8. புதிய, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி 9. விமானப் போக்குவரத்து 10. வணிகவியல். ஆகிய இந்த அமைச்சகங்களில் இணைச் செயலாளர் தகுதியில் இவர்கள் நேரடியாக நியமனம் செய்யப்படுவார்கள் என்று அந்த விளம்பரம் தெரிவித்தது.

பின்னணி என்ன?

இதன் அடிப்படை நோக்கமே தனக்கு வேண்டியவர்களை, தனது விருப்பங்களை நிறைவேற்றத் தயாராக உள்ளவர்களை நியமிப்பது என்பதைத் தவிர வேறெந்த விளக்கத்தையும் நம்மால் தர இயலாது. ஏனெனில், நாடு முழுவதிலும் உள்ள சுமார் 5,000 இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளில் தற்போது சுமார் 500 பேராவது இணைச் செயலாளர் தகுதியில் பல்வேறு துறைகளில் பணியாற்றிவரும் நிலையில், மேலே குறிப்பிட்ட பதவிகளுக்குத் தேவையான கல்வித் தகுதியைக் கொண்ட, அனுபவம் மிக்க அதிகாரிகளை இனம் கண்டுபிடிப்பது இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி நிலையில் ஒரு விஷயமே இல்லை.

இந்த விளம்பரத்தை வெளியிட்டுள்ள பணியாளர் மற்றும் பயிற்சித் துறையிடம்தான் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் குறித்த அனைத்துத் தகுதி விவரங்களும் உள்ளன. அதன் அடிப்படையில் தேவையான கல்வியும் அனுபவமும் கொண்ட அதிகாரிகளைத் ‘தேடும் முயற்சி’க்குச் சில மணி நேரம்கூட ஆகாது. இந்த 10 இடங்களுக்காக 100 பேரைக் கொண்ட ஒரு பட்டியலை உருவாக்கி, அதிலிருந்து மிகச் சிறந்த 10 பேரைத் தேர்ந்தெடுக்கும் திறன் இந்தத் துறைக்கு இல்லாமல் போய்விட்டதா? ஏன் வெளியிலிருந்து ஆட்களைத் தேடுகிறார்கள்?

மேற்கு வங்க அனுபவம்

நான் பணியாற்றிய மேற்கு வங்க மாநில அரசில் பல்வேறு மாவட்டங்களுக்குத் தேவையான ஆட்சியர், கூடுதல் ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், கூடுதல் கண்காணிப்பாளர், பல்வேறு துறைகளுக்கான இணைச் செயலர், துணைச் செயலர் போன்ற பதவிகளுக்கு அதி காரிகளைத் தேர்வுசெய்து பட்டியல் தயாரித்து, நியமன உத்தரவுகளை வெளியிடக் குறைந்தது ஆறு மாத காலம் ஆகும் என்ற நிலை நிலவிவந்தது.1990-களின் இறுதியில் மத்திய அரசு பணியிலிருந்து மீண்டும் மாநிலப் பணிக்கு வந்த என்.கே.ரகுபதி உள்துறைச் செயலாள ராக நியமிக்கப்பட்டபோது, அப்போதுதான் தலையெடுத்துவந்த கணினி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இந்தப் பதவிகளுக்கான நியமனம் தொடர்பான கோப்பை ஒரே நாளில் இறுதிசெய்தார். அன்று மாலையே நியமன உத்தரவு அனுப்பி வைக்கப்படும் நிலை அங்கு உருவானதை நான் நேரில் கண்டிருக்கிறேன்.

எனவே, உண்மையிலேயே மத்திய அரசுக்கு இந்த நியமனங்களில் உள்நோக்கம் ஏதுமில்லை எனில், இன்று மேலும் நவீனமாகியுள்ள கணினி தொழில்நுட்பத் தைப் பயன்படுத்தி, மத்திய - மாநில அரசுப் பணிகளில் 15-20 ஆண்டுகள் பணியாற்றி அனுபவம் பெற்ற இ.ஆ.ப. அதிகாரிகளை, அந்தந்த துறைகளுக்கான கல்வி, அனுபவம் பெற்ற அதிகாரிகளைத் தேர்ந்தெடுக்க மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறையினால் எளிதாகக் கண்டறிய முடியும் என்பதே உண்மை நிலவரம்.

அபாயகரமான முடிவு

இந்த விஷயத்தில் உள்ள மிக முக்கியமான அபாயம் என்னவென்றால், அமைப்பைப் பற்றி எந்த அறிதலும் இல்லாதவர்கள் உள்ளே நுழைக்கப்படுவதால் உண்டாகவல்ல சேதம்.

ஆட்சிக்கு வரும் எந்த ஆட்சியாளர்க்கும் அரசின் அமைப்பில் உள்ள சாத்தியங்கள் - பிரச்சினைகள் - சவால்களை விளக்கும் இடத்தில் இருப்பவர்களே இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள்தான். இவர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்படும் தேர்வானது நாட்டில் நடத்தப்படும் முதன்மையான தேர்வுகளில் ஒன்று. மருத்துவம், பொறியியல் என்று பல்வேறு துறைகளிலிருந்தும் போட்டியிடும் சிறந்த மூளைகளைக் கண்டறிவதோடு அவர்களுக்கு இந்திய அமைப்பை முழுக்க அறிமுகப்படுத்தி, முழுப் பயிற்சி அளித்து, பின்னர் அவர்களுடைய தொடர் அனுபவங்களின் அடிப்படையிலேயே செயலர் பதவி நோக்கி அவர்கள் இப்போது உயர்த்தப் படுகிறார்கள்.

அரசியல்வாதிகள் ஓட்டுக்காக நடைமுறைச் சிக்கல்களோ, அபாயங்களோ தெரியாமல் கொடுக்கும் பல வாக்குறுதிகள் அல்லது அவர்கள் நினைத்த மாத்திரத் தில் செயலாக்க முற்படும் விஷயங்களுக்கு அனுபவம் உள்ள அதிகாரிகள் உடன்பட மாட்டார்கள். இப்போது உள்ள அமைப்பில் அதிகாரிகள் சுயாதீனமாகச் செயல் பட கொஞ்சமேனும் இடம் இருக்கிறது. அந்த இடத்தையும் நாசமாக்கி, தனக்கு விருப்பப்பட்டவர்களைப் பதவி யில் வைத்து, நினைத்த மாத்திரத்தில் காரியங்களைச் சாதிக்கவே மத்திய அரசு மேற்கொண்டிருக்கும் புதிய ஏற்பாடு வழிவகுக்கும். லட்சக்கணக்கான மக்கள் மத்தியில், பல்வேறு இக்கட்டான சூழல்களில் பணியாற்றி செயலர் பதவியை நோக்கி வந்தடையும் ஒரு அதிகாரிக்கு இணையான அனுபவம் ஒருபோதும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றிவிட்டு வருவோருக்கு வராது.

மேலும், ஏற்கெனவே மாநில ஒதுக்கீட்டில் தலையிட்டு, அதிகாரிகளிடையே போட்டி மனப்பான்மைக்கு விதை போட மத்திய அரசு முயற்சித்துவரும் நிலையில், இந்த நேரடி நியமன உத்தரவானது அரசின் முதுகெலும்பை பலவீனப்படுத்தி, ஆட்சிக்கு வரும் எவருக்கும் குனிந்துகொண்டே இருக்கும் ஒரு பிரிவினரை உருவாக்கிவிடும். படிப்படியாக இந்திய ஆட்சிப் பணி அமைப்பையே இது சீர்குலைத்துவிடும்!

- வீ.பா.கணேசன், எழுத்தாளர்,

மேற்கு வங்க அரசில் 25 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்.

தொடர்புக்கு : vbganesan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x