Published : 28 Aug 2024 08:37 AM
Last Updated : 28 Aug 2024 08:37 AM
பெரும் போராட்டத்துக்கு இடையில் வெளியாகியிருக்கும் ஹேமா ஆணையத்தின் அறிக்கை, மலையாளத் திரையுலகில் நிகழ்த்தப்படும் பாலியல் சுரண்டல்கள் குறித்த பெரும் விவாதத்துக்கு வழிவகுத்திருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு ‘மீ டூ’ இயக்கம் முன்னெடுக்கப்பட்டதைப் போல இந்த அறிக்கையைத் தொடர்ந்து, மலையாள சினிமா தொழில் சார்ந்து நிகழ்ந்த பாலியல் சுரண்டல்களை நடிகைகள் பலர் அம்பலப்படுத்திவருகிறார்கள். இது தேசிய அளவில் ஓர் இயக்கமாக முன்னெடுக்கப்பட்டுவருகிறது.
பின்னணி என்ன? - 2017இல் மலையாள நடிகை ஒருவர் கடத்தப்பட்டுப் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் கேரளத்தையும் தாண்டி பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. முன்னணி நடிகர் திலீப் சம்பந்தப்பட்டிருப்பதாகப் பேசப்பட்ட அந்தச் சம்பவத்துக்குப் பிறகு, மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’ (Association of Malayalam Movie Artists) மீதான அதிருப்தி காரணமாக டபுள்யூசிசி (Women in Cinema Collective) எனப் பெண்களுக்கான புதிய சங்கத்தை மலையாள நடிகைகள் நிறுவினர்.
இதன் தொடர்ச்சியாக மலையாளத் திரைத் துறையில் நடக்கும் பாலியல் சுரண்டல்களை அம்பலப்படுத்தி, ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை அவர்கள் நடத்தினர். திரைத் துறையில் நடக்கும் பாலியல் சுரண்டல்களை விசாரிக்க ஆணையம் அமைக்க அரசுக்குக் கோரிக்கையும் விடுத்தனர். இதன் தொடர்ச்சியாக 2017 நவம்பரில் ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வத்சலாகுமாரி, நடிகை சாரதா ஆகியோர் அடங்கிய மூன்று பேர் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் பெரும் சவால்களுக்கு மத்தியில் தனது விசாரணையைத் தொடங்கியது.
நடிகைகள் பலரும் விசாரணை ஆணையத்தில் சாட்சியம் கூறக் கூடாது என மிரட்டப்பட்டதாகத் தகவல் வெளியானது. பல நடிகைகள் சென்னை போன்ற நகரங்களுக்குப் புலம்பெயர்ந்துவிட்டனர். அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து வாட்ஸ்-அப் உரையாடல்கள் போன்ற உறுதியான ஆதாரங்களை ஆணையம் திரட்டியது. அதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட 300 பக்க அறிக்கை 2019 டிசம்பர் 31இல் கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
இதில் மலையாளத்தின் முன்னணி நடிகர்கள் பலரது பெயர்களும் அடிபட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. எனினும், ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான செலவும் கடும் உழைப்பும் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த அறிக்கையை வெளியிடாமல் கேரள அரசு கிடப்பில் போட்டது.
சரியும் பிம்பங்கள்: டபுள்யூசிசி, தகவல் அறியும் உரிமை ஆணையம், நீதிமன்றம் ஆகியவற்றின் தலையீடுகளுக்குப் பிறகு, தனிப்பட்ட விஷயங்களைப் பாதுகாக்கும் பொருட்டு அந்த அறிக்கையில் 87 பக்கங்கள் நீக்கப்பட்டு வெளியிடப்பட்டது. ஆனால், இந்த அறிக்கையின் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்க கேரள அரசு முன்வரவில்லை. பண்பாட்டுத் துறை அமைச்சர் சஜி செரியன் அறிக்கையை முழுமையாகப் படிக்கவில்லை எனத் தெரிவித்ததும் சர்ச்சையானது.
ஆனால், அந்த அறிக்கையின் பரிந்துரைகளை நிறைவேற்ற முயற்சி எடுப்போம் என முரணாக அவர் தெரிவித்தார். இது குறித்து நடிகர் சங்கமும் மோகன்லால், மம்மூட்டி உள்படப் பலரும் மெளனம் காத்தனர். இது நடிகைகள் மத்தியில் மீண்டும் அதிருப்தியை ஏற்படுத்தியது. முன்னணி குணச்சித்திர நடிகரும் ‘அம்மா’ பொதுச்செயலாளருமான சித்திக், ‘இது எல்லாத் துறைகளிலும் நடப்பதுதான்’ என்கிறரீதியில் பேசினார்.
இதற்கிடையில்தான் நடிகர் சித்திக் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக நடிகை ரேவதி சம்பத் துணிச்சலுடன் ஊடகங்களிடம் பரபரப்புப் பேட்டியளித்தார். சித்திக் ஓர் அறையில் தன்னைப் பூட்டிவைத்து அருவருக்கத்தக்க வகையில் நடந்துகொண்டதாக அவர் குற்றம்சாட்டினார்.
இதனை அடுத்து அம்மா பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து சித்திக்கை நீக்க வேண்டும் என்கிற எதிர்ப்பு வலுத்தது. இதையடுத்து, அவரே தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துவிட்டார். ரேவதி சம்பத் தமிழ் / மலையாள நடிகர் ரியாஸ் கான் மீதும் பாலியல் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
இதேபோல, கேரளத் திரைப்பட அகாடமியின் தலைவரும் முன்னணி இயக்குநருமான ரஞ்சித்துக்கு எதிராக வங்காள நடிகை ஸ்ரீலேகா மித்ரா பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார். மம்மூட்டிக்கு கேரள அரசு விருது பெற்றுத் தந்த ‘பாலேறிமாணிக்கம் ஒரு பாதிரா கொல பாதகம்’ படத்தில் நடிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட சமயத்தில், கதை குறித்து விவாதிப்பதற்காகத் தன்னைத் தனி அறைக்கு அழைத்த ரஞ்சித், தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், அதனால், உடனடியாக அந்தப் படத்திலிருந்து வெளியேறிவிட்டதாகவும் மலையாளத் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் ஸ்ரீலேகா தெரிவித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரான ஸ்ரீலேகாவின் புகார் அரசியல் அரங்கில் பேசுபொருளானது. மாநில விருதுகள், திருவனந்தபுரம் திரை விழா போன்ற பலவற்றில் ரஞ்சித் முறைகேடாகச் செயல்பட்டதாக ஏற்கெனவே இயக்குநர்கள் வினயன், டாக்டர் பிஜூ உள்ளிட்டோர் புகார் அளித்தும் கேரள அரசு நடவடிக்கை எடுக்க மறுத்த நிலையில், இந்தப் புகாருக்குச் செவிசாய்க்க வேண்டிய சூழல் உருவாகிவிட்டது. அதனால், அகாடமி தலைவர் பதவியை ரஞ்சித் இழந்தார்.
அத்துமீறல்களும் மிரட்டல்களும்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ.வும் மலையாள முன்னணி குணச்சித்திர நடிகருமான முகேஷ் மீது, நடிகை கடத்தப்பட்ட வழக்கில் திலீப்புக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. ஆனால், முகேஷ் மீது ‘அம்மா’வும் கட்சியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஹேமா ஆணைய அறிக்கை வெளியாகியிருக்கும் இந்தச் சமயத்தில் நடிகை மினு குரியன், “எனக்கு இணங்காமல் உன்னால் இந்தத் துறையில் இயங்கவே முடியாது” என முகேஷ் தன்னிடம் சொன்னதாகவும், இன்னும் மோசமாகச் சில விஷயங்களைப் பேசியதாகவும் சொல்லியுள்ளார்.
மேலும், அம்மா சங்கத்தில் சேர்வதற்காக, மறைந்த நடிகரும் மார்க்சிஸ்ட் கட்சி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான இன்னசென்ட்டை அணுகியபோது, நடிகரும் அப்போது சங்க நிர்வாகியாகவும் இருந்த இடவேளை பாபுவை அவர் பார்க்கச் சொன்னதாகக் குறிப்பிட்டிருக்கும் மினு குரியன், “சங்க உறுப்பினராவதற்குச் சில சமரசங்களைச் செய்ய வேண்டும்” என பாபு கூறியதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
‘என் மன வானில்’, ‘வசூல் ராஜா எம்பிபிஎஸ்’ போன்ற தமிழ்ப் படங்களில் நடித்துள்ள மலையாள முன்னணி நடிகர் ஜெயசூர்யா தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் மினு கூறியுள்ளார். ஜெயசூர்யா மீது இன்னொரு நடிகையும் இதே குற்றச்சாட்டைக் கூறியுள்ளார்.
தொடரும் ஜமீன்தார்த்தனம்: நடிகைகள் மீதான அத்துமீறல்களுக்கு இயக்குநர் ஆசிக் அபு, நடிகர்கள் டோவினோ தோமஸ், ஆசிப் அலி உள்ளிட்ட பலர் நம்பிக்கையூட்டும் வகையில் வெளிப்படையாகப் பேசியுள்ளனர். மலையாள சினிமாவே தொடர்ந்து பல காலமாகத் திருவனந்தபுரம் லாபியில்தான் இருந்துள்ளது. முன்னணி நடிகர்கள் தவிர்த்து சித்திக், முகேஷ், மணியம்பிள்ளை ராஜூ, ப்ரியதர்ஷன் போன்ற சிலர்தான் இதை ஆட்டுவித்துவந்தனர்.
உயர் குடிகளின் பெருமை பேசும் படங்களே அதிகமாக வந்து, பொது அபிப்ராயமாக ஆக்கப்பட்டன. வெற்றிக்காக மம்மூட்டியும் அம்மாதிரி பல படங்களில் நடித்தார். இந்தப் போக்கின் காரணமாக மலையாள சினிமாவில் உதிரி மக்களின் வாழ்க்கையும் பங்களிப்பும் முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டன.
இந்த ஜமீன்தார்த்தனம்தான் திலகன் போன்ற சிறந்த நடிகரை அம்மாவில் இருந்து விலக்கி வாய்ப்புகள் இல்லாமல் வீட்டில் முடக்கியது; கூலிக்கு ஆள் வைத்து நடிகையை பாலியல் பலாத்காரம் செய்ய வைத்தது; இணங்க மறுத்த நடிகைகளைத் திரைத் துறையில் இல்லாமல் ஆக்கியது.
ஹேமா ஆணைய அறிக்கையைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டிருக்கும் இயக்கம், இந்த ஜமீன்தார்த்தனத்தின் மீது விழுந்த பேரிடி எனலாம். ‘அம்மா’ தலைவர் பொறுப்பிலிருந்து நடிகர் மோகன்லால் விலகியிருப்பது இதன் சமீபத்திய சாட்சியம்!
- தொடர்புக்கு: jeyakumar.r@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT