Published : 28 Aug 2024 08:29 AM
Last Updated : 28 Aug 2024 08:29 AM
மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராகப் பணியாற்றிவந்த முதுநிலை மருத்துவ மாணவி ஒருவர், ஆகஸ்ட் 9ஆம் தேதி மருத்துவமனை வளாகத்தில் வைத்துப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார். நாடு முழுவதும் இச்சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தக் கொடூரக் குற்றத்துக்கு நீதி கேட்டு மருத்துவர்கள், கல்லூரி மாணவர்கள், மக்கள் போராட்டத்தில் இறங்கினர்.
இச்சம்பவத்தின் தாக்கம் சிறிதும் குறையாத நிலையில், அசாமில் சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டது, அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழகத்திலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் என்சிசி பயிற்சி வழங்குவதாகப் பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டது கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இவ்வாறு, இந்தியாவில் தொடர்ச்சியாகப் பெண்கள் மீது ஏவப்படும் பாலியல் வன்முறைகள், சீண்டல்கள் பெண்களின் பாதுகாப்புக்குப் பெரும் அச்சுறுத்தலாகி இருக்கின்றன.
குற்றங்களும் குற்றவாளிகளும்: தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் 2023இல் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் 2022இல் பெண்கள் மீதான வன்முறை 4% அதிகரித்திருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. 2022இல், பெண்கள் மீதான வன்முறைச் சம்பவங்களின் எண்ணிக்கை 4,45,256. இந்த எண்ணிக்கை 2021இல் 4,28,278ஆகவும், 2020இல் 3,71,503 ஆகவும் இருந்தது.
பாலியல் வன்கொடுமையை மட்டும் எடுத்துக்கொண்டால், 2012இல் டெல்லி நிர்பயா சம்பவத்துக்குப் பிறகு, பாலியல் குற்றங்களைத் தண்டிப்பதற்கான சட்டங்கள் வலுப்படுத்தப்பட்டன. பாலியல் வல்லுறவு என்பதற்கான வரையறையும் விரிவுபடுத்தப்பட்டது. பாலியல் குற்றங்களை விசாரிப்பதற்கான சிறப்பு நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால், இந்த வகையிலான குற்றங்கள் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கின்றன. 2012இல் 25,000 பாலியல் வல்லுறவு வழக்குகள் பதிவாகின. 2022இல் அந்த எண்ணிக்கை 31,000 ஆக அதிகரித்துள்ளது.
பெண்கள் மீதான குற்றச் சம்பவங்களில் கணவர் அல்லது அவரது உறவினர்களின் மூலம் அரங்கேறும் குடும்ப வன்முறையே முதன்மையாக உள்ளது. 31.4% பெண்கள் தங்கள் கணவர் வீட்டில் இத்தகைய சித்ரவதைக்கு உள்ளாகின்றனர். 2022இல் வரதட்சிணைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 13,479 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில், பெண் கடத்தல் (19.2%), பெண்கள் மீதான தாக்குதல் (18.7%), பாலியல் வல்லுறவு (7.1%) போன்ற குற்ற நிகழ்வுகள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
சட்டங்களும் நடைமுறையும்: பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களைத் தடுத்திடப் பல்வேறு சட்டங்கள் இந்தியாவில் இயற்றப்பட்டுள்ளன. வரதட்சிணை தடைச் சட்டம் (1961) வரதட்சிணை பெறுவதையோ கொடுப்பதையோ தடை செய்கிறது.
பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதை பாலியல் தொழில் தடுப்புச் சட்டம் (1956) தடுக்கிறது. பெண்களை அநாகரிகமாகக் காட்சிப்படுத்துவதைத் தடுக்கும் சட்டம் 1986 (THE INDECENT REPRESENTATION OF WOMEN (PROHIBITION) ACT1986), திரைப்படம், விளம்பரம் போன்றவற்றில் பெண்களை அநாகரிகமான முறையில் சித்தரிப்பதைத் தடுக்கிறது.
ஒரு பெண் தனது கணவர் வீட்டில் பாதுகாப்பாக வாழ்வதற்கான அம்சங்களை ‘குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாத்தல் சட்டம் (2005)’ வலியுறுத்துகிறது. பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டமும் (2013) அமலில் உள்ளது. எனினும் இச்சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் நிலவும் சிக்கல்களினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது.
தாமதமாகும் நீதி: இந்தியாவில் பொதுவாகவே குற்றவியல் வழக்குகளை விசாரிப்பதில் காவல் துறை - நீதிமன்றங்களிடம் சுணக்கம் நிலவுகிறது. பாலியல் துன்புறுத்தல் வழக்குகளை விசாரிக்க, அனுபவம் பெற்ற காவல் துறை அதிகாரிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதனால் வழக்கு விசாரணையிலும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதிலும் சிக்கல் ஏற்படுகிறது.
அடுத்து நீதிமன்ற விசாரணை; ஒரு வழக்கு விசாரணைக்குக் குறைந்தபட்சம் மூன்று முதல் ஐந்து ஆண்டுகளை நீதிமன்றங்கள் எடுத்துக்கொள்கின்றன. மேல் முறையீட்டுக்கு வழக்கு கொண்டுசெல்லப்பட்டால், அது முடிவடைய 10 - 15 வருடங்கள் ஆகக்கூடும். இதனால் பாதிக்கப்பட்ட பெண், வழக்கைத் தொடர முனைப்பு காட்டாத நிலை ஏற்படுகிறது.
2022 நிலவரப்படி, இந்தியாவில் 801 மாவட்டங்களில் 4.4 லட்சம் பாலியல் துன்புறுத்தல் சார்ந்த வழக்குகள் நிலுவையில் இருப்பதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. வழக்குகளை விரைந்து முடிக்க விரைவு நீதிமன்றங்கள் இயங்கினாலும், அவை வழக்குகளை முடிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை என்கிற குற்றச்சாட்டைச் சட்ட நிபுணர்களும் முன்வைக்கின்றனர்.
பிற நாடுகளில்: உலகளவில் மூன்று பேரில் ஒரு பெண் ஏதேனும் ஒரு வகையில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதாக உலகச் சுகாதார அமைப்பு கூறுகிறது. தென் ஆப்ரிக்காவில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் அதிகம் நடைபெறுகின்றன. ஆப்கானிஸ்தான், காங்கோ, சோமாலியா உள்ளிட்ட நாடுகளில் பெண்கள் மீதான வன்முறைகள் கூடுதலாக உள்ளன.
உலக நாடுகளில் குடும்ப வன்முறைக்கு எதிராகவும், பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தலைத் தடுக்கவும் சட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. எனினும் இச்சட்டங்கள் எல்லாம் பெண்கள், சிறுமிகள் மீதான வன்முறைகளைத் தடுக்கின்றனவா என்றால், இல்லை என்றே உலகச் சுகாதார அமைப்பு பதிலளிக்கிறது. இச்சட்டங்களில் நிலவும் குளறுபடிகள் காரணமாகக் குற்றவாளிகளுக்குத் தண்டனையை உறுதிசெய்வதில் கால தாமதம் எற்படுவதாக அவ்வமைப்பு கூறுகிறது.
தீர்வுகள்: வன்முறை, பாலியல் துன்புறுத்தல் போன்ற குற்றங்கள் பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் அவர்களின் சமூகப் பங்களிப்பையும் குறைக்கின்றன. இதனால் பல்வேறு உரிமைகளைப் பெண்கள் இழக்கின்றனர். இந்நிலையைச் சீரமைக்கச் சமூகத்தில் பாலினச் சமத்துவம், பொருளாதாரத் தற்சார்பு, காவல் துறை, நீதிமன்றம் போன்றவற்றில் பெண்களுக்குச் சம வாய்ப்பு என ஆரோக்கியமான சூழல் உருவாவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
கல்வி, வேலைவாய்ப்பு, அதிகாரத்தில் பெண்கள் தன்னிறைவைப் பெற வழி ஏற்படும்போது, குடும்ப வன்முறையில் அவர்கள் சிக்கும் சாத்தியம் குறைகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்திடக் காவலர்கள் பற்றாக்குறை உடனடியாகச் சரி செய்யப்பட வேண்டும். குற்றவியல் சட்டங்களை மேம்படுத்தி, பாலியல் வழக்குகளில் குற்றம்சாட்டப்படும் குற்றவாளிகளுக்கு விரைவாகத் தண்டனை வழங்கப்பட வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT