Last Updated : 17 May, 2018 08:26 AM

 

Published : 17 May 2018 08:26 AM
Last Updated : 17 May 2018 08:26 AM

சித்தராமையா: எழுச்சியும் வீழ்ச்சியும்

ர்நாடகத் தேர்தலில் மிக முக்கியமான வீழ்ச்சிகளில் ஒன்று – சித்தராமையா அடைந்திருக்கும் தோல்வி. சென்ற தேர்தலில் 122 தொகுதிகளில் வென்ற காங்கிரஸ் இந்த முறை 78 இடங்களுடன் சுருங்கியிருக்கிறது என்பதை காட்டிலும், பாஜகவுக்கான ஒரு எதிர் உத்தியை கர்நாடகத்திலிருந்து ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சித்தராமையாவின் தோல்வி பெரிய வீழ்ச்சிதான்.

விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் சித்தராமையா. ஐந்தாம் வகுப்பு வரையில் முறையான கல்வி இல்லை. மணலில் எழுதிப் படித்தவர். சட்டம் பயின்ற காலத்தில் பொதுப் பிரச்சினைகள் தொடர்பான போராட்டங்களில் ஆர்வத்துடன் பங்கெடுத்தவர். அரசியல் ஆர்வமும் அவரைத் தொற்றிக்கொண்டது. சிக்கபூரையா எனும் வழக்கறிஞரிடம் ஜூனியராகப் பணியாற்றிய அவர், பாரதிய லோக் தள கட்சியின் சார்பில் 1983 தேர்தலில் சாமுண்டேஸ்வரி தொகுதியில் போட்டியிட்டு முதன்முறையாக எம்எல்ஏ ஆனார். பின்னர், ஜனதா கட்சியில் இணைந்த அவர், 1994-ல் கட்சியின் பொதுச் செயலாளரானார்.

ஜனதா கட்சி உடைந்து ஜனதா தளம் உருவானபோது அக்கட்சியில் சேர்ந்தார். விரைவில் துணை முதல்வரானார். ஜனதா தளம் உடைந்து மதச்சார்பற்ற ஜனதா தளம் உருவானபோது தேவகவுடாவின் கீழ் அக்கட்சியில் சேர்ந்தார். துணை முதல்வரானார். முதல்வர் பதவிக்கு வாய்ப்பே இல்லை. தேவகவுடாவின் மகன் குமாரசாமியுடன் மனக்கசப்பு இருந்துகொண்டே இருந்தது. 2005-ல் கட்சியிலிருந்து வெளியேறினார். தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் இருந்தது. எனினும், தனிக்கட்சிகள் நிலைப்பது கடினம் என்பதால் காங்கிரஸில் இணைந்தார். அவரை காங்கிரஸ் கட்சிக்கு மகிழ்ச்சியுடன் வரவேற்றார் சோனியா.

2008 சட்ட மன்றத் தேர்தலில் 80 இடங்கள் பெற்ற காங்கிரஸுக்கு 2013 தேர்தலில் 122 இடங்கள் கிடைத்ததில் சித்தராமையாவின் பங்கு முக்கியமானது. எனினும், முதல்வர் பதவி யாருக்கு என்பதில், கட்சியில் மிக முக்கியமான ஆளுமையாக இருக்கும் தலித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கும் சித்தராமையாவுக்கும் இடையில் போட்டி உருவானது. காங்கிரஸ் கட்சி ஜனநாயக முறைப்படி கட்சிக்குள் வாக்கெடுப்பு நடத்தியது. காங்கிரஸுக்குள் 80 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தது. முதல்வரானார் சித்தராமையா. 2013 தேர்தலில் போட்டியிட்டபோதே இதுதான் தனது கடைசித் தேர்தல் என்று அவர் சொன்னது குறிப்பிடத்தக்கது. 2013 - 2018 வரையிலான சித்தராமையாவின் ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டுவந்தார். பல ஆண்டுகளாக நிதியமைச்சராகப் பணிபுரிந்தவர் எனும் முறையில் பொருளாதாரம் தொடர்பான நல்ல புரிதல் உண்டு. அடித்தட்டு மக்கள் மீது பரிவு கொண்டவர் என்பது அவரது சிறப்பம்சங்களில் ஒன்று. அன்னபாக்யா எனும் பெயரில் வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள மக்களுக்கு இலவச அரிசி, மானிய விலையில் தானியங்கள் என்று அவரது திட்டங்கள் பேசப்பட்டன. பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரில் ஏழைக் குடும்பங்களுக்கு இலவச தானியங்கள், மாணவர்களுக்கு இலவச பால் என்று திட்டங்கள் கொண்டுவந்தார். பாஜக ஆட்சிக்கு வந்தால் சித்தராமையாவின் மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என்று எடியூரப்பாவே உறுதியளித்தது கவனிக்கத்தக்கது.

இடையில் 2014 மக்களவைத் தேர்தலில் எழுந்த மோடி அலை கர்நாடகத்தையும் விடவில்லை மொத்தமுள்ள 28 தொகுதிகளிலும் 18, மதச்சார்பற்ற ஜனதா தளம் 2 தொகுதிகளை வெல்ல வெறும் 8 இடங்கள் மட்டுமே காங்கிரஸுக்குக் கிடைத்தது. ‘இந்தி – இந்து - இந்துஸ்தான்’ ஒற்றைக் கலாச்சாரத்தை மையப்படுத்தும் இந்துத்துவ அரசியலை பாஜக வலிமையாகப் பயன்படுத்த ஆரம்பித்தபோது, கன்னட தேசியத்தைக் கையில் எடுத்தார் சித்தராமையா. இதன் உச்சமாக மாநிலத்துக்கான தனிக் கொடியை அறிமுகப்படுத்தினார். கர்நாடகத்தில் மெட்ரோ ரயில் நிலைய பெயர் பலகைகளில் இனி இந்தி இடம்பெறாது என்று மத்திய அரசுக்குக் கடிதம் எழுதினார்.

தனிக்கொடி தொடர்பாக வட இந்திய செய்தித் தொலைக்காட்சி சேனல்கள் சர்ச்சையைக் கிளப்பியபோது ஆயிரம் சொச்சம் வார்த்தைகளுடன் அவர் எழுதிய நீண்ட கட்டுரை பெரிய அளவில் பேசப்பட்டது. அதில் மாநில சுயாட்சி உணர்வு, மத்திய அரசின் நிதிக் கொள்கை என்று பல்வேறு விஷயங்களை அலசியிருந்தார். இவ்விஷயத்தில் கன்னட அமைப்பினர் நடத்திய போராட்டங்களைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார்.

மாநிலத்தில் முக்கியமான சமூகமான லிங்காயத்துகளை ஈர்க்க எடியூரப்பாவைத் தன்னுடைய முதல்வர் முகமாக்கியபோது, ‘லிங்காயத்துகளைத் தனி மதம் ஆக்க வேண்டும்’ என்ற அவர்களுடைய கோரிக்கையை ஏற்று அறிவிப்பு வெளியிட்டு, பாஜகவுக்கு செக் வைத்தார்.

சித்தராமையாவின் இரு பெரிய நகர்வுகளாக இந்த விஷயங்கள் பார்க்கப்பட்டாலும், பாஜக இவ்விரு விஷயங்களையுமே தனக்குச் சாதகமாகப் பிரச்சாரத்தில் திருப்பியது. கர்நாடகாவின் கணிசமான பகுதிகள் கன்னடர் அல்லாதோரும் வசிப்பவை என்கிற சூழலில் கன்னடர் அல்லாதோரிடம் பாஜகவின் பிரச்சாரம் நன்கு எடுபட்டது. அதேசமயம், கன்னடர்களை சாதிக்கு அப்பாற்பட்டு கன்னட அடையாளத்துக்குள் சித்தராமையாவால் ஒருங்கிணைக்க முடியவில்லை. அதேபோல, லிங்காயத்துகளின் ஓட்டுகளையும் காங்கிரஸால் பெரிய அளவில் ஈர்க்க முடியவில்லை. ஆனால், “இந்து மதத்தைப் பிளவுபடுத்த முயற்சிக்கிறார் சித்தராமையா” என்ற பிரச்சாரம் எடுபட்டது.

அஹிந்தா (தலித், பழங்குடியினர், சிறுபான்மையினர், மிகவும் பிற்படுத்தோர் கூட்டமைப்பு) 60% வாக்குகள் காங்கிரஸுக்குக் கை கொடுக்கும் என்று சித்தராமையா உறுதியாக இருந்தார். அது கை கொடுக்கவில்லை. ஒடுக்கப்பட்ட மக்கள் எப்போதும் காங்கிரஸுக்குத்தான் ஆதரவு தருவார்கள் என்று பேசிவந்தார். எனினும், தலித் / பழங்குடியினருக்கான 51 தனித் தொகுதிகளில், 18 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வென்றிருக்கிறது.

காங்கிரஸுக்கே உரிய கோஷ்டி பூசல்களும் சித்தராமையாவைக் கீழே தள்ளின. கட்சியில் எப்போதுமே சித்தராமையா – கார்கே இடையேயான பூசல்கள் இருந்துவந்த நிலையில், வேட்பாளர்களைத் தேர்வுசெய்யும் விஷயத்தில் கார்கேயின் யோசனைகள் மறுதலிக்கப்பட்டன. தொழிலதிபர் அசோக் கெனி கட்சியில் சேர்க்கப்பட்டதால் கார்கே அதிருப்தி அடைந்தார். பாஜக முன்னாள் அமைச்சர் பி.எஸ்.ஆனந்த் சிங், மஜதவைச் சேர்ந்த பிமா நாயக் காங்கிரஸில் சேர்க்கப்பட்டபோதும் அதிருப்தியை வெளிப்படுத்தினார் கார்கே. கர்நாடக காங்கிரஸ் தலைவர் ஜி.பரமேஸ்வரா அணி, எரிசக்தித் துறை அமைச்சர் டிகே.சிவக்குமார் அணி என்று இரண்டு அணிகள் செயல்பட்டன. இதுவும் ஒரு பெரிய தலைவலியாக இருந்தது. எல்லாமுமாக சேர்ந்துதான் சித்தராமையா வீழ்ச்சிக்கு வழிவகுத்திருக்கிறது. இரு தொகுதிகளில் போட்டியிட்ட அவர், சாமுண்டேஸ்வரி தொகுதியில் தோற்றார். பாதாமி தொகுதியில் 1,696 வாக்குகளில் நூலிழையில் தோல்வியைத் தவிர்த்திருக்கிறார்.

2013-ல் சொன்னதுபோலவே, இந்த முறையும் இந்தத் தேர்தல்தான் தனது கடைசித் தேர்தல் என்று சொன்னார். தேர்தல் முடிவுகளைப் பார்த்தால் இந்த முறை அவருடைய வார்த்தை பலித்துவிடும்போலவே தோன்றுகிறது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x