Published : 13 May 2018 09:43 AM
Last Updated : 13 May 2018 09:43 AM

காலம் கனிய காத்திருக்கிறாரா? காலாவை ஓட்ட காய் நகர்த்துகிறாரா?: ரஜினியைச் சுழற்றும் சர்ச்சைகள்!

ன்னுடைய ‘தனிக்காட்டு’ ராஜா படத்தில் ரஜினிக்கு அப்பாவாக வரும் மேஜர் சுந்தர்ராஜன், “நீ தேர்ந்தெடுத்திருக்கிறது காந்தி வழியா... சுபாஷ் சந்திரபோஸ் வழியா?” என்று மகன் ரஜினியைப் பார்த்துக் கேட்பார். அதற்கு, “நான் யார் வழியிலும் போக விரும்பல... நான் போறதே ஒரு வழியா இருக்கணும்னு நினைக்கிறேன்...” என்பார் ரஜினி. அநேகமாக, முதன்முதலில் ரஜினி பேசிய அரசியல் கலப்பு வசனம் இதுவாகத்தான் இருக்கும். ‘தனிக்காட்டு ராஜா’ வெளிவந்து 36 வருடங்கள் கடந்துவிட்டன. இன்னமும் தன் வழி எதுவென்று ரஜினிக்கும் புலப்படவில்லை; அவரை அறிந்தவர்களாலும் அந்த வழியை அறிய முடியவில்லை!

கட்டாயத்துக்கு ஆளான ரஜினி

தேர்தல் சமயத்தில், தான் கொடுத்த கடைசி நேர ‘வாய்ஸ்’கள் கலகலத்துப்போனதால், சிறிது காலம் அரசியல் பேசாமல் இருந்தார் ரஜினி. அந்தக் காலகட்டத்தில்தான் அவரது ‘கோச்சடையான்,’ ‘லிங்கா’, ‘கபாலி’ படங்கள் வெளிவந்தன. ‘கோச்சடையான்’ எடுபடாமல் போன ஃபார்முலா என்பதை ரஜினியே ஒப்புக்கொண்டார். எதிர்பார்த்த அளவுக்கு படம் ஓடாததால், ‘லிங்கா’ படத்தின் விநியோகஸ்தர்கள் பலரும் நிதி கேட்டு ரஜினி வீட்டுக்குப் படையெடுத்தார்கள். பஞ்சாயத்துப் பேசி அவர்களுக்கு பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்கும் ஆளானார் ரஜினி. ‘கபாலி’ தொடர்பாகவும் சர்ச்சைகள் இல்லாமல் இல்லை.

இதோ, ‘காலா’ வருகிறது. இப்போதும் அமைதியாக இருந்தால் மறுபடியும் பஞ்சாயத்துப் பேச வேண்டிய நிலை வந்துவிடும் என ரஜினி பயந்தாரோ என்னவோ, முன்கூட்டியே அரசியல் வசனம் பேச ஆரம்பித்துவிட்டார். “போர் வரட்டும் பார்க்கலாம்” என்று முதலில் சூசகமாய்ச் சொன்னார். கடந்த ஆண்டின் இறுதி நாளில், “நான் அரசியலுக்கு வருவேன்... சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவேன்” என்று சொன்னார். இந்த நிமிடம் வரை, ‘நான் அரசியலுக்கு வந்துவிட்டேன்’ என்று ரஜினியால் அறிவிக்க முடியவில்லை!

ஆனால், அரசியலுக்கு வருகிறாரோ இல்லையோ, அவரது அரசியல் வசனங்கள், ‘காலா’வை வெற்றிமுகம் நோக்கி இழுக்கத் தொடங்கிவிட்டன. கூடவே, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் இன்னொரு படத்திற்கும் கோடிகளில் சம்பளம் பேசி ‘ஸ்டார்ட்... கேமரா... ஆக்‌ஷன்!’ ஆகிவிட்டார் ரஜினி. அவரது முகாம் எதிர்பார்த்ததும் இந்த ரிசல்ட்டைத்தானே!

இனி, வந்தா என்ன வராட்டா என்ன?

இதையெல்லாம் சுட்டிக்காட்டும் ரஜினியால் வாழ்க்கையைத் தொலைத்த அவரது ஆரம்ப காலத்து ரசிகர்கள், “தன்னுடைய ‘காலா’ இசை வெளியீட்டு விழாவில், ‘நாற்பது ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கும் குதிரை இது’ எனத் தன்னைப் பற்றி ரஜினி பெருமையாகக் குறிப்பிட்டார். கடந்த 20 ஆண்டுகளாக அந்தக் குதிரை இப்படியேதான் அரசியல் வசனம் பேசி ஓடிக்கொண்டிருக்கிறது. எங்களுக்குத் தெரிந்தவரை அது அவ்வளவு சீக்கிரம் அரசியலுக்கு வரப்போவதில்லை. அப்படியே வந்தாலும் அதனால் தமிழ்நாட்டுக்கு எந்தப் பிரயோஜனமும் இருக்கப்போவதுமில்லை”என்கிறார்கள்.

மூச்சுக்கு முந்நூறு தரம், “மொதல்ல அப்பா - அம்மா, குடும்பத்தைப் பாருங்க” என்கிறார் ரஜினி. ஆனால், என்றைக்காவது அவர் அரசியலுக்கு வருவார், நமக்கும் ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என்று நினைத்து ரசிகர்கள் பல ஆயிரம் பேர் தங்களது வாழ்க்கையைத் தரிசாக்கி நிற்கிறார்கள். ‘ரஜினி இனி அரசியலுக்கு வந்தா என்ன... வராட்டா என்ன?’ என்று விரக்தியின் விளிம்பில் நிற்கும் இவர்களை வைத்துக்கொண்டு தனது அடுத்தடுத்த படங்களை ரஜினி ஓட்ட முடியாது.

இதை நினைத்துத்தானோ என்னவோ, பழையவர்களை ஓரங்கட்டிவிட்டு புதியவர்களை முன்வரிசைக்குக் கொண்டுவருகிறார்கள். ஏனென்றால், ரஜினி பேசும் சினிமா வசனத்தை நிஜமென்று நம்பி விசிலடிக்கவும் பாலாபிஷேகம் செய்யவும் அவர்களுக்குப் புதிதாக ஒரு கூட்டம் தேவைப்படுகிறது. அதற்காக ரசிகர் மன்றத் தலைவர் சத்யநாராயணாவிலிருந்தே இந்த ஓரங்கட்டல் தொடங்கிவிட்டது. அரசியல் அறிவிப்புகள் வந்த நேரத்தில் சத்யநாராயணா, ராகவேந்திரா மண்டபத்தில் இல்லை. இதுபற்றி வதந்திகள் பரவியதும், அடுத்தடுத்த நாட்களில் பேருக்கு அவரையும் அழைத்து உட்காரவைத்தார்கள். ‘காலா’ இசை வெளியீட்டு விழாவில் பத்தோடு பதினொன்றாய்வந்து, நின்றபடியே எல்.இ.டி. திரையில் நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டுப் போனார் சத்தி!

அரசியலுக்கு சாதி பார்க்கிறார்கள்!

ரஜினியைவிட அவரது ரசிகர்களை நன்கு அறிந்தவர் சத்யநாராயணா. அவருக்கு நெருக்கமாக இருந்த ரசிகர் மன்றத்துப் பிள்ளைகளில் பெரும் பகுதியினர் இப்போது ஒதுக்கப்பட்டு நிற்கிறார்கள். இதுகுறித்துப் பேசிய தென்மாவட்ட முன்னாள் ரசிகர் மன்றத் தலைவர் ஒருவர், “ரசிகனாக இருந்தால் சாதி, மதம், பண வசதி இதெல்லாம் பார்க்க மாட்டார்கள்; எப்படியாவது கூட்டம்கூட்டிப் படத்தை ஓட்டினால் போதும். அதுவே, இப்போது அரசியல் என்றதும் சாதி பார்க்கிறார்கள். உதாரணத்துக்கு, ராமநாதபுரத்தில் ஆரம்பத்திலிருந்தே ரஜினி மன்றத்தைக் கட்டிக்காத்தவர் பாலநமச்சி. அவரை ஓரங்கட்டிவிட்டு, புதிதாக ஒருவரை மாவட்டப் பொறுப்பில் நியமிக்கிறார்கள். கேட்டால், ‘அது முக்குலத்தோர் மாவட்டம், அங்கே அந்த சாதிக்குத்தான் முக்கியத்துவம்’ என்கிறார்கள்.

தமிழகத்தைத் தலைகீழாக மாற்றவே அரசியலுக்கு வருவதாகச் சொல்லும் ரஜினி, எல்லா அரசியல் கட்சிகளும் செய்யும் அதே சாதி அரசியலைத்தானே தானும் முன்னெடுக்கிறார். அரசியலுக்கு வருவதாகச் சொல்லும் நிலையில், ‘வேங்கையன் மகன் வந்துருக்கேன்’ என்று வசனம் பேசுகிறார். வேங்கையன் யாருடைய அடையாளத்தை நினைவூட்ட? அப்படியானால் தன்னை யாருடைய பிம்பமாகக் காட்ட நினைக்கிறார் ரஜினி? ‘தென்னக நதிகளை இணைப்பதுதான் எனது கனவு’ என்று சொல்லும் இவர், நதிகள் இணைப்புக்காக ஒரு கோடி ரூபாய் தருவதாகச் சொல்லி எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன? அதற்காக இவர் எடுத்த அடுத்தகட்ட முயற்சி என்ன? ‘நதிகளை இணைத்துவிட்டால், அடுத்த நாளே நான் கண்ணை முடினாலும் பரவாயில்லை’ என்று இப்போது டயலாக் பேசும் நீங்கள், மோடி உங்களைத் தேடிவந்தபோது இதுபற்றிப் பேசி ஒரு தீர்வை அறிவிக்க வைத்திருந்தால், நாடே உங்களைக் கொண்டாடியிருக்குமே!” என்று ஆதங்கப்பட்டார்.

இதுதான் ரஜினியின் ஸ்டைல்!

தொடர்ந்து பேசிய அவர், “இப்படித்தான், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆண்டுக்கு ஒரு ஏழை ஜோடிக்கு திருமணம் செய்துவைப்பேன் என்றார் ரஜினி. மூன்று ஆண்டுகள் மட்டும்தான் அதைச் செய்தார். அத்தோடு அதை மறந்துவிட்டார். இதேபோல், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய்க்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்குவதாகச் சொன்னார். அதுவும் மூன்று ஆண்டுதான் நடந்தது. ‘புதிதாக மன்றங்களைத் தொடங்காதே’ என்பார். ஆனால், ராகவேந்திரா மண்டபத்துக்குப் போனால், புதிய மன்றத்துக்கு தாராளமாய்ப் பதிவெண் கொடுப்பார்கள். இப்படி, ஆதியிலிருந்தே, சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றும்தான் ரஜினியின் ஸ்டைல்; சொல்வதைச் செய்வது இல்லை” என்று சொன்னார்.

எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழாவில் பேசிய ரஜினி, ‘தனக்காகப் பெண் வீட்டில் பேசி தனது திருமணம் நடக்கக் காரணமாக இருந்ததே எம்.ஜி.ஆர்.தான்’ என்று ஒரு வசனத்தையும் உதிர்த்தார். அதுவும் இப்போது அவரது ரசிகர்களாலேயே விமர்சிக்கப்படுகிறது. இதுகுறித்தும் பேசிய தென் மாவட்ட மூத்த ரசிகர்கள், “ ‘சங்கர் சலீம் சைமன்’ படத்தில் நடித்த விஜயகுமாரும் மஞ்சுளாவும் பிற்பாடு திருமணம் செய்து கொண்டார்கள். அதேபோல், இணைந்து நடித்த இன்னொரு ஜோடியும் திருமணம் செய்துகொள்ள நினைத்தார்கள். கடும் நெருக்கடி கொடுத்து அந்தத் திருமணத்தைத் தடுத்தது யார்?

மறைக்கிறாரா மறந்துவிட்டாரா?

எம்ஜிஆர் அதிகாரத்தில் இருந்த அந்தச் சமயத்தில் ரஜினியின் உடல் நிலையைப் பற்றி தாறுமாறாகத் தகவல் பரப்பியதன் பின்னணியில் இருந்தது யார்? ‘பில்லா’வில் ஜெயலலிதாவை ரஜினிக்கு ஜோடியாக நடிக்கவிடாமல் தடுத்த சக்தி எது? இதையெல்லாம் ரஜினி மறைக்கிறாரா அல்லது மறந்துவிட்டாரா? நேர்மையுடன் அரசியலுக்கு வருபவராக இருந்தால், இதையெல்லாம் அந்தக் கூட்டத்தில் சொல்லியிருக்க வேண்டும்.

இப்படி, முரண்பாடுகளின் மொத்த உருவமாய் நிற்கும் ரஜினிதான், அரசியலுக்கு வந்து தமிழகத்தை தலைநிமிர்த்தப்போவதாகச் சொல்கிறார். அவரைப் பொறுத்தவரை ரூ.360 கோடிக்கு படத்தை விற்று முடித்துவிட்டார்கள். அதை ஓட்டி முடிப்பதற்கு சில விளம்பர உத்திகள் தேவைப்படுகின்றன. அதைத் தான் இப்போது அற்புதமாய் செய்து கொண்டிருக்கிறார்கள்” என்று குமுறினார்கள்.

“பணம் சம்பாதிக்கிறதுக்கு ஆயிரம் வழி இருக்கு; ஆயிரம் தொழில் இருக்கு... அதுக்கு இந்தப் புனிதமான அரசியலைப் பயன்படுத்தாதீங்க...” ‘அண்ணாமலை’ படத்தில் ரஜினி பேசிய வசனம் அரசியலுக்கு வரும் அனைவருக்கும் பொருந்தும்தானே!

(முழு கட்டுரையையும் படிக்க நாளை

‘காமதேனு’ வாங்குங்கள்…)

- குள.சண்முகசுந்தரம், தொடர்புக்கு: shanmugasundaram.kl@kamadenu.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x