Published : 24 Aug 2014 01:26 PM
Last Updated : 24 Aug 2014 01:26 PM
ஆசியாவின் முதல் விமானம் எங்கே பறந்தது தெரியுமா? நாட்டின் பல முதன்மைகளைப் பெற்ற நமது பழைய மெட்ராஸில்தான். உலகின் முதல் வெற்றிகரமான விமானத்தை ரைட் சகோதரர்கள் செலுத்தி, அடுத்த 7 ஆண்டுகளில் இந்த விமானம் சென்னையில் றெக்கை கட்டிப் பறந்திருக்கிறது.
தின்பண்டத் தயாரிப்புத் தொழிலில் வெற்றிகரமாக ஈடுபட்டிருந்தவர் இத்தாலியிலுள்ள மெசினா பகுதியைச் சேர்ந்த ஜாகோமோ டி ஏஞ்சலிஸ் (Giacomo D'Angelis). வியாபாரம் செய்யும் எண்ணத்துடன் 1880-ல் இந்தியாவுக்கு வந்து மேசன் ஃபிரான்சேஸ் நிறுவனத்தை அன்றைய மெட்ராஸ் மவுண்ட் ரோடில் (இன்றைய அண்ணா சிலை சந்திப்பு அருகே) தொடங்கினார். இந்தியாவில் உணவு விநியோகிக்கும் சேவை யைத் தொடங்கிய முதல் நிறுவனம் அதுதான். ஆம்ப்டில் பிரபு காலத் தில் மெட்ராஸ் ஆளுநரின் அதிகாரப்பூர்வ உணவு விநியோகஸ்தராக ஏஞ்சலிஸின் நிறுவனம் இருந்திருக்கிறது. இதில் நல்ல அனுபவம் பெற்ற டி ஏஞ்சலிஸ், 1906-ல் ஓட்டல் டி ஏஞ்சலிஸ் என தன் பெயரிலேயே ஒரு உணவகத்தைத் தொடங்கினார். இந்த ஓட்டல் இந்தியாவில் நவீன தொழில்நுட்பத்தைப் புகுத்தியதாகக் கருதப்படுகிறது.
சென்னையிலேயே முதன்முறையாக இந்த ஓட்டலில்தான் மின் தூக்கி, மின்விசிறிகள், ஐஸ் தயாரிப்பு அமைப்பு, குளிர்பதனக் கிடங்கு, வெந்நீர்க் குழாய்கள் போன்றவை இருந்திருக்கின்றன.
டி ஏஞ்சலிஸ் நடத்திய அந்த ஓட்டல் இருந்த இடம் எதுவென்றால், இன்றைய சென்னை அண்ணா சாலை கெயிட்டி திரையரங்கம் அருகே உள்ள பாட்டா ஷோரூம் இருந்த இடம்தான்.
ஜாகோமோவுக்குப் பின்னால் சுவாரசியமான மற்றொரு கதை இருக்கிறது. ஓட்டல் ஆரம்பித்து கொஞ்ச காலத்திலேயே பிரான்சைச் சேர்ந்த பிலாரியோ, விமானம் மூலமாகவே ஆங்கிலேயக் கால்வாயைக் கடந்து ஆச்சரிய சாகசம் நிகழ்த்திய செய்தி ஜாகோமோவின் கண்களில் பட்டிருக்கிறது. நவீன தொழில்நுட்பம் மீது தீவிர ஆசை கொண்டிருந்த ஜாகோமோவுக்கு, தானும் பறக்க வேண்டும் என்று ஆசை றெக்கை வெளியே எட்டிப் பார்த்தது. தானே ஒரு விமானத்தை வடிவமைத்தார். அது ஒரு பைபிளேன். ரைட் சகோதரர்கள் ஓட்டியது போன்று, மேலும் கீழும் இரண்டு றெக்கைகள் பொருத்தப்பட்டதே பைபிளேன்.
பிறகு மெட்ராஸ் சிம்சன் நிறுவனத்தில், அதை உருவாக்கித் தர அவர் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. அந்த நிறுவனத்தில் இருந்த அன்றைய பிரபல பொறியாளர் ஜான் கிரீன் அதை வடிவமைத்திருக்கலாம். ஏனென்றால், விமானத்தை உருவாக்கியது சிம்சன் நிறுவனம் என்று பாரதியாரின் ‘இந்தியா’ இதழ் குறிப்பிடுகிறது. ‘‘இவ்விமானம் சென்னையில் டாஞ்சலிஸ் ஓட்டலின் பிரெஞ்சு முதலாளி டாஞ்சலிஸின் திட்டப்படி சிம்சன் கம்பெனி பட்டறையில் ‘தமிழ் வேலைக்காரர்களால்’ கட்டப்பெற்றது’’ என்று பாரதியார் எழுதியிருக்கிறார்.
சிறிய இன்ஜின் கொண்ட அந்த விமானத்தை பல்லாவரம் மலைப் பகுதியில் ஓட்டி முதலில் பரிசோதித்துப் பார்த்திருக்கிறார் டி ஏஞ்சலிஸ். அதில் நம்பிக்கை கிடைக்கவே, தீவுத் திடலில் பொது மக்களிடம் கட்டணம் வசூலித்து பறந்து காட்டியிருக்கிறார். அது நடந்த நாள் 10 மார்ச் 1910. இந்த விமானத்தில் ஒரே நாளில் பல முறை அவர் பறந்து காட்டியிருக்கிறார். அவருடைய அழைப்புக்கு ஏற்ப கூட்டத்தில் இருந்த ஒருவரும், விமானத்தில் உடன் பறந்துள்ளார்.
ஆசியாவிலேயே ஓடிய முதல் எரிசக்தி விமானம் அதுதான். இதன் மூலம் ஆசியாவிலும் இந்தியாவிலும் முதல் விமானத்தை ஓட்டியவர் என்ற பெருமையை டி ஏஞ்சலிஸ் பெறுகிறார். இந்தச் செய்தி ராயல் ஏரோ கிளப் இதழான ‘ஃபிளைட்'டில் உடனடியாக, அதாவது 1910 மார்ச் 26-ம் தேதியே பதிவாகியுள்ளது. லெவிட்டஸ் நிறுவனமே இந்தத் தகவலை வெளியிட்டது. இந்திய விமான வரலாற்றிலோ அலகாபாதில்தான் முதல் விமானம் பறந்ததாக பதிவாகியுள்ளது. ஆனால், அதற்கு 9 மாதங்களுக்கு முன்னதாகவே டி ஏஞ்சலிஸ் இந்த விமானத்தை ஓட்டியிருக்கிறார்.
‘‘இந்தியாவில் மட்டுமல்ல; ஆசியாவில் பறந்த முதல் விமானமும் ஏஞ்சலிஸ் ஓட்டிய விமானம்தான்’’ என்று விமான வரலாற்று ஆராய்ச்சியாளரும் ஓய்வுபெற்ற கேப்டனுமான கபில் பார்கவா குறிப்பிட்டிருக்கிறார். 1910 டிசம்பர் 10-ம் தேதி அலகாபாத்தில் முதல் விமானம் பறந்ததாகவும், அதே ஆண்டு டிசம்பர் 20-ம் தேதி கொல்கத்தாவில் இரண்டாவது விமானம் பறந்ததாகவும் பதிவுகள் உள்ளன. வழக்கம்போல இதிலும் முந்திக்கொண்டு உயரப் பறந்து, வானை அளந்து, சாதனை படைத்துவிட்டது நமது மெட்ராஸ்.
இந்தச் சாதனையில் இன்றைய அண்ணா சாலையும் ஒரு தனிப் பெருமையைப் பெறுகிறது. டி ஏஞ்சலிஸின் ஓட்டல் இருந்த இடம், சிம்சன் நிறுவனம், தீவுத்திடல் ஆகிய மூன்றும் அமைந்திருக்கும் இடம் மெட்ராஸின் அன்றைய மவுன்ட் ரோடு, சென்னையின் இன்றைய அண்ணா சாலை!
- ஆதி வள்ளியப்பன், தொடர்புக்கு: valliappan.k@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT