Published : 25 May 2018 08:52 AM
Last Updated : 25 May 2018 08:52 AM
மு
ன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டிகளில் பயணம் செய்பவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடியை, அவஸ்தையைச் சராசரி இந்தியர்கள் அனைவரும் அறிந்திருப்பார்கள். 1930-களிலேயே கூட்ட நெரிசல் கொண்ட ரயில் பெட்டிகளை ‘பூலோக நரகம்’ என்று வர்ணித்திருக்கிறார் திரு.வி.க. அந்நிலை இன்று வரை மாறவில்லை. இப்படியான சூழலில், முன்பதிவு செய்யாமல், குறைந்த கட்டணத்தில் பயணிக்கும் வகையில் கொண்டு வர திட்டமிடப்பட்டிருந்த ‘அந்த்யோதயா’ விரைவு ரயில் வெறும் அறிவிப்புடன் நின்றுவிட்டது பயணிகளை ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது.
தாம்பரத்திலிருந்து விழுப்புரம், தஞ்சை வழியாகத் திருநெல்வேலிக்கு ஏப்ரல் 27 முதல் தினமும் அந்த்யோதயா விரைவு ரயில் இயக்கப்படும் என ஏப்ரல் 25-ல் தெற்கு ரயில்வே அறிவித்தது. 16 முன்பதிவில்லா இரண்டாம் வகுப்புப் பெட்டிகள் கொண்ட இந்த ரயில், செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவித்தது. ஒரே நேரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் குறைந்த கட்டணத்தில் தினமும் பயணிக்க முடியும் என்பது பெரும் ஆறுதலைத் தந்தது. ஏற்கெனவே, பேருந்துக் கட்டணம் கடுமையாக உயர்ந்திருப்பதால், ஊருக்குச் செல்வதே பெரும்பாடாகியிருக்கும் நிலையில், இதுபோன்ற ரயில்கள் பயணிகளுக்கு வரப் பிரசாதம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அப்படியெல்லாம் எளிதில் நமக்கு நன்மை வாய்த்துவிடுமா? இந்த ரயில் சேவை தொடக்கத் தேதியைத் திடீரென ரத்துசெய்துவிட்டது தெற்கு ரயில்வே. ஏன் நிறுத்தப்பட்டது என்றோ, எப்போது தொடங்கிவைக்கப்படும் என்றோ சொல்லவில்லை. கொண்டுவரப்பட்ட ரயில் பெட்டிகளும் தாம்பரம், பல்லாவரம் பகுதியில் கேட்பாரற்றுக் கிடக்கின்றன. “பஸ் அதிபர்களின் ‘லாபி’ காரணமாகவே கோடை விடுமுறை முடியும் வரை ரயில் நிறுத்தப்பட்டிருக்கிறது” என்கிறார்கள் பயணிகள். “காரணமெல்லாம் இப்போதைக்குச் சொல்ல முடியாது. நிர்வாகரீதியாக எடுக்கப்பட்ட முடிவு இது. எனினும், இந்த ரயில் சேவையை விரைவில் தொடங்கு வோம்” என்று மட்டும் சொல்கிறார்கள் ரயில்வே அதிகாரிகள்.
தற்போது, கோடை விடுமுறை கிட்டத்தட்ட முடியப்போகும் இந்தத் தருணம் வரை அந்த்யோதயா இயக்கப்படவில்லை. ஏற்கெனவே, சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் அனைத்து ரயில்களிலும் முன்பதிவு இல்லாத பெட்டிகளின் படிகளில் தொங்கியபடி பயணம் செய்வதைப் பார்க்க முடிகிறது. தெற்கு ரயில்வேயால் அறிவிக்கப்படும் சிறப்பு ரயில்களும் யானைப் பசிக்கு சோளப்பொரிதான். பல மடங்குக் கட்டணம் வசூலிக்கும் சுவிதா ரயில் களும், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் சிறப்பு ரயில்களும் மட்டுமே ஒரே வழி. இதனால், சாதாரணக் கட்டணத்தில் பயணம் செய்யும் மக்களின் நிலை படுமோசமாகிவிட்டது. இந்நிலையில், அந்த்யோதயா ரயில் சாமானிய மக்களுக்குக் கைகொடுக்கவில்லை என்பது கூடுதல் துயரம்தான்!
- கி.ஜெயப்பிரகாஷ், தொடர்புக்கு: jayaprakash.k@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT