Published : 21 May 2018 08:44 AM
Last Updated : 21 May 2018 08:44 AM

சென்று வாருங்கள் செலமேஸ்வர்!

வ்வொரு வினைக்கும் சமமான எதிர்வினை உண்டு என்கிற நியூட்டனின் மூன்றாம் விதியை, இயற்பியல் பட்டம் பெற்றவரான உச்ச நீதிமன்ற நீதிபதி ஜஸ்டி செலமேஸ்வர் நன்கு அறிந்திருப்பார். ஆனால், மேன்மையான மனிதர்களிடமிருந்து எந்தச் சூழலிலும் மேன்மையான எதிர்வினைதான் வரும் என்பதற்கு அவரே வாழும் உதாரணம்.

ஜனவரி 12, 2018 அன்று ரஞ்சன் கோகாய், மதன் பி. லோகுர், குரியன் ஜோசஃப் ஆகிய உச்ச நீதிமன்ற நீதிபதிகளுடன் சேர்ந்து ஊடகங்களுக்குப் பேட்டியளித்தார் செலமேஸ்வர். ‘இந்திய நீதித் துறை வரலாற்றில் முன்னுதாரணமற்றது’ என்று வர்ணிக்கப்பட்ட அந்தப் பேட்டியில், உச்ச நீதிமன்றத்தில் ஜனநாயகம் கேள்விக்குறியாகி இருப்பதை அம்பலப்படுத்தினார் செலமேஸ்வர். நீதித் துறையின் கோயில் என்று கருதப்பட்ட இடம் அப்படி ஒன்றும் புனிதமானதல்ல என்ற உண்மையை நாட்டு மக்களிடம் அப்பட்டமாகக் கொண்டுவந்தார்.

இதற்கான எதிர்வினையாக அந்த ஊடகச் சந்திப்புக்குப் பிறகு முக்கியத்துவம் வாய்ந்த எந்த வழக்கும் செலமேஸ்வருக்கு ஒதுக்கப்படவில்லை. இதுபற்றி ஊடகவியலாளர் கரண் தாப்பர் எழுப்பிய கேள்விக்கு செலமேஸ்வர் அளித்த பதில் இதுதான்: “சிறந்த விஷயங்களைச் சின்ன வழியில் செய்ய முடியும். சின்ன விஷயங்களையும் சிறந்த வழியில் செய்ய முடியும் என்பதை நான் நம்புகிறேன். ஒரு நீதிபதியின் முக்கியத்துவம் அவருக்கு ஒதுக்கப்படும் வழக்குகளின் தன்மையை வைத்து தீர்மானிக்கப்பட வேண்டியதில்லை.”

ஆம், எதிர்ப்புக் குரல் எழுப்பியதற்காக அவர் பழிவாங்கப்படுகிறார் என்று பலரும் பேசியபோதும் அதை அவரே உணர்ந்திருந்தபோதும்கூட நீதித் துறை மீதோ தலைமை நீதிபதியின் மீதோ ஒரு சுடுசொல்கூட பிரயோகிக்கவில்லை செலமேஸ்வர். அவர் நீதித் துறையை, நீதிமன்றம் என்ற அமைப்பை அவ்வளவு மதித்தார். அந்த மதிப்புக்கு இழுக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே பேசினார். தலைமை நீதிபதிக்கு எதிரான பதவிநீக்க நடவடிக்கையும்கூட அவர் ஆதரிக்கவில்லை. சீர்திருத்தத்தையே அவர் விரும்பினார், சீர்குலைவை அல்ல.

திருப்பங்கள் நிறைந்த திரைக்கதை

அமைப்பை விமர்சிப்பவர்கள் அனைவரையும்விட அதிக சுய ஒழுக்கம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். அதை உணர்ந்திருக்கிறார் செலமேஸ்வர். ஓய்வுக்குப் பின் எந்த அரசுப் பணியையும் ஏற்க மாட்டேன் என்று அறிவித்திருக்கிறார். பல நீதிபதிகள் ஓய்வுக்குப் பின் ஆளுநர்களாகவும் விசாரணைக் குழுத் தலைவர்களாகவும் நியமிக்கப் படும்போது பணிக்காலத்தின்போது அவர்களது நேர்மை யும் நடுநிலையும் கேள்விக்குள்ளாகியிருக்கின்றன. செலமேஸ்வர் அந்தக் கேள்விகளுக்கு இடம்தரவில்லை. ஜனவரி 12, 2018 செலமேஸ்வரின் பணி வாழ்வின் உச்சம். அந்த உச்சத்துக்கு முன்பும் பல திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையைப் போன்றதுதான் அவரது வாழ்க்கை. ஆந்திர பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில், பெத்தமுட்டெவி கிராமத்தில் ஜூன் 23, 1953 அன்று ஒரு வழக்கறிஞரின் மகனாகப் பிறந்தார் செலமேஸ்வர். வீட்டிலிருந்து 25 கி.மீ. அப்பால் இருந்த பள்ளியில் படித்தார். சென்னை லயோலா கல்லூரியில் இயற்பியல் பட்டம் பெற்றவர், 1976-ல் ஆந்திர சட்ட பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்தார்.

அடுத்த 19 ஆண்டுகள் வழக்கறிஞர் பணி. 1995-ல் ஆந்திர அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகளுக்குள் ஆந்திர உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியானார். 2007-ல் குவாஹாத்தி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவி உயர்வுபெற்றார். அதையடுத்து கேரள உயர் நீதிமன்றத் தின் தலைமை நீதிபதியாகவும் இருந்தார். 2011-ல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக்கப்பட்டார். தலைமை நீதிபதிக்கு அடுத்த நிலையில் இருந்தவர், தலைமை நீதி பதியாக முடியாமல்போனது இந்தியாவின் துரதிர்ஷ்டங்களில் ஒன்று என்றே சொல்ல வேண்டும்.

செலமேஸ்வருக்கு இன்னொரு சுவாரஸ்யமான முகமும் இருக்கிறது. அவர் ஒரு தேர்ந்த இலக்கிய வாசகர் என்பதுதான் அது. தன்னுடைய நூலகத்தை இளம் வழக்கறிஞர்களும் தன் அலுவலகப் பணியாளர்களும் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ள அனுமதித்தவர் அவர்.

தீர்ப்புகளின் மூன்று பிரதான அம்சங்கள்

நீதிபதியாக இருந்த காலத்தில் மாற்றுத் திறனாளி களுக்கு கைகொடுத்துத் தூக்கிவிட வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தவராகவும், தனிநபர்களின் உரிமைகளை மதிப்பவராகவும் நீதித் துறைக்கு இறுதியான தலையீடற்ற அதிகாரங்கள் இருக்கக் கூடாது என்று நினைப்பவராகவும் செலமேஸ்வர் இருந்தார் என்பதை அவர் வழங்கிய முக்கியமான தீர்ப்புகள் வெளிப்படுத்துகின்றன.

இவற்றோடு நீதித் துறையில் ஒரு சில சீர்திருத்தங்களை விளைவித்தவராகவும் அவர் இருந்திருக்கிறார். மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை உயர்த்திப் பிடிக்கும் பல தீர்ப்புகளை வழங்கியிருக்கிறார் செலமேஸ்வர். ‘ராஜீவ் குமார் குப்தா எதிர் இந்திய ஒன்றிய அரசு’ என்ற வழக்கில் பதவி உயர்வின் மூலம் மட்டுமே நிரப்பப்படும் பணிகளுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு பொருந்தும் என்ற தீர்ப்பு அவற்றில் முக்கியமானது.

தகவல்தொடர்பு தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 66-ஏ-யை, அரசியல்வாதிகள் சமூக வலைதளங்களில் தங்களை விமர்சிப்பவர்களைக் கைதுசெய்து சிறையில் அடைக்கப் பயன்படுத்தினர். கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை நெரிக்கும் இந்தப் பிரிவை 2016-ல் ரத்துசெய்தது செலமேஸ்வரை உள்ளடக்கிய இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு. 2015-ல் அரசின் நல உதவிகளைப் பெற ஆதாரைக் கட்டாயமாக்குவதையும் இவரது தீர்ப்பு தடுத்தது.

ஆதார் தொடர்பான விவாதங்களின் வழியாகத் தனியுரிமை இந்தியர்களின அடிப்படை உரிமையாக நிலைநிறுத்தப்பட்டதற்கும் செலமேஸ்வருக்கே முக்கியப் பங்கு இருக்கிறது. தனியுரிமை என்பது அடிப்படை உரிமையா என்ற கேள்விக்கு விடைகாணும் பொறுப்பை ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்விடம் ஒப்படைத்தது இவர்தான். தனியுரிமையை அடிப்படை உரிமையாக அங்கீ கரிக்கும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பை வழங்கிய அமர்விலும் செலமேஸ்வர் இருந்தார். நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமிக்கும் கொலீஜியம் முறையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் தனி அதிகாரத்தைத் தடுக்கும் வகையில், ‘தேசிய நீதிமன்ற நியமன ஆணையம்’ என்ற அமைப்பை உருவாக்க முயன்றது மத்திய அரசு.ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வில் நால்வர் இந்த ஆணையம் அமைக்கும் முயற்சியை அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று சொல்லி ரத்துசெய்தனர். ஆனால், அந்தத் தீர்ப்பிலேயே கொலீஜியம் முறையை விமர்சித்து நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் முயற்சிக்கு ஆதரவளித்தார் செலமேஸ்வர்.

கொலீஜியம் கூட்டங்கள் முறைப்படி நடத்தப்படுவதில்லை; அந்தக் கூட்டங்கள் ரகசியமாக நடத்தப்படுகின்றன என்று விமர்சித்தார் செலமேஸ்வர். கூட்டங்களில் பங்கேற்க மறுத்தார். கொலீஜியம் கூட்டங்களில் விவாதிக்கப்பட்டவற்றைப் பொதுப் பார்வைக்கு உட்படுத்த தலைமை நீதிபதி ஒப்புக்கொண்டதற்கு இதுவே காரணமாக அமைந்தது.

ஓயாத எதிர்ப்புக் குரல்

என்ன நேர்ந்தாலும் கடைசிவரை எதிர்ப்புக் குரலை எழுப்பிக்கொண்டே இருந்தார் செலமேஸ்வர். கடந்த மார்ச் மாதம், மத்திய அரசின் தலையீட்டால், கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணா பட்டின் பதவி உயர்வு நிறுத்திவைக்கப்பட்டபோது, இதுகுறித்து தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினார். அதில் அரசுக்கும் நீதித் துறைக்கும் இப்படிப்பட்ட ‘நட்பு’ இருப்பது ஜனநாயகத்துக்குச் சாவு மணி அடிக்கும் என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.

அமைப்புக்கு உள்ளிருந்தபடியே சீர்திருத்தத்துக்கு முயற்சிப்பவர்கள் பல இடையூறுகளையும் இழப்புகளை யும் எதிர்கொண்டபடியே அதைத் தொடர்ந்து செய்கிறார்கள். தனது இறுதிக் காலம் வரை அப்படி குரலை எழுப்பிக்கொண்டே இருந்த செலமேஸ்வர் பணி வாய்ப்புகளை இழந்திருக்கலாம். ஆனால், தன் ஓய்வுக் காலத்தை எந்த உறுத்தலும் இல்லாமல் நிம்மதியாகக் கழிப்பார். புனிதப் பசுவாக நடந்துகொள்ளும் நீதித் துறையில் உள்ளிருந்துகொண்டு கலகக் குரல் எழுப்பியதற்காகவே வரலாற்றில் என்றும் நினைவுகூரப்படுவார் செலமேஸ்வர்.

- ச.கோபாலகிருஷ்ணன்,

தொடர்புக்கு:

gopalakrishnan.sn@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x