Published : 16 Aug 2024 06:20 AM
Last Updated : 16 Aug 2024 06:20 AM
இந்தியாவில், புற்றுநோய் பாதிப்புகளும் எலும்பு மஜ்ஜை சார்ந்த பாதிப்புகளும் ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாகத் தேசியப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, இவ்வகைப் பாதிப்புகளுக்கு குழந்தைகள் அதிகம் உள்ளாவதாகத் தெரிகிறது. பயனாளிக்கு உரிய விழிப்புணர்வு இருந்து, தேவையான மருத்துவச் சிகிச்சைகளும் உரிய நேரத்தில் கிடைக்குமானால், இந்தப் பாதிப்புகளை ஆரம்பநிலையிலேயே தவிர்க்கலாம் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
எலும்பு மஜ்ஜை என்பது எது? ஓர் எலும்பானது வெளியிலிருந்து பார்ப்பதற்கு இரும்புக் கம்பி போன்று கடினப் பொருளாகத் தெரிந்தாலும், அதன் மையத்தில் குழல் போன்ற ஒரு பகுதியும் (Medullary cavity) உள்ளது. இதில் ‘எலும்பு மஜ்ஜை’ (Bone marrow) உள்ளது. இது மென்மையான திசுக்கூழ். எலும்பு மஜ்ஜையில் ‘சிவப்பு மஜ்ஜை’, ‘மஞ்சள் மஜ்ஜை’ என இரண்டு வகை உண்டு. சிவப்பு மஜ்ஜை ரத்தச் சிவப்பணுக்கள், வெள்ளணுக்கள், தட்டணுக்கள் ஆகியவற்றை உற்பத்திசெய்கிறது. மஞ்சள் மஜ்ஜை கொழுப்பைத் தன்னிடம் சேமித்துவைக்கிறது. எலும்பு மஜ்ஜையில் ஸ்டெம் செல்கள் (Stem cells) இருக்கின்றன. இவைதான் உடல் செல்கள் அனைத்துக்கும் ஆதார செல்கள். இவை வளரும்போது பல்வேறு திசுக்களின் செல்களாகப் பிரிந்து, வெவ்வேறு உறுப்புகளை உருவாக்குகின்றன. புற்றுநோய் உள்ளிட்ட ஏதாவது ஒரு நோயின் தாக்குதலால் எலும்பு மஜ்ஜை பாதிக்கப்படுமானால், அப்போது ஆரோக்கியமான ஸ்டெம் செல்களை அது உருவாக்காது. ரத்த அணுக்களின் உற்பத்தி பாதிக்கப்படும். உடலின் பிற உறுப்புகளும் இதனால் செயலிழக்கும். இந்தச் சூழலில், ஆரோக்கியமான நபரிடமிருந்து எலும்பு மஜ்ஜையைப் பெற்று, பாதிக்கப்பட்ட நபருக்குச் செலுத்தப்படும் சிகிச்சை முறைக்கு ‘எலும்பு மஜ்ஜை மாற்றுச் சிகிச்சை’ (Bone Marrow Transplantation) என்று பெயர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT