Published : 12 Aug 2024 08:36 AM
Last Updated : 12 Aug 2024 08:36 AM
சோறு என்று சொல்வது மரியாதைக் குறைவாகக் கருதப்படுகிறது. சாதம் என்று நவில்வது ‘மேலோர்’ வழக்கு. ‘ரைஸ்’ என்பது நாகரிகர் பயன்பாடு; ‘ஒயிட் ரைஸ்’ நனி நாகரிகர் உச்சரிப்பு. ‘அன்னலட்சுமி’, ‘அன்னபூரணி’ போன்ற சொற்கள் வழக்கில் உண்டெனினும் அன்னம் எனச் சொல்வோர் தமிழில் மிகக் குறைவு. தெலுங்கில் அன்னம் என்பது பெருவழக்கு. தமிழின் பழைய பயன்பாடு சோறுதான். ‘சோழ நாடு சோறுடைத்து’ என்பது சான்று. ‘சோ’வுக்கு மோனையாக முன் வந்தது சோறு என்பாரும் இருப்பர். சாதம் என்பதும் அன்னம் என்பதும் பிற்கால வரவுகள்.
அன்ன விக்கிரயம் கூடாது என்பது பண்பாடு. அதாவது, சோற்றை விற்கக் கூடாது. அது பசித்தவர்க்குத் தானமாக அளிக்கப்பட வேண்டியது. ‘அம்பரமே தண்ணீரே சோறே’ என்று நந்தகோபன் அளிக்கும் அறச்செயல்களைப் பட்டியலிடும் ஆண்டாள் அதில் சோற்றையும் சேர்க்கிறார். ‘அன்னமிட்டு உண்’ என்பது அறிவுரை. மேற்கத்தியப் பண்பாடு நுழையுமுன் இங்கு உணவகங்கள் இல்லை. மக்கள் சத்திரங்களில் தங்கினர். அச்சத்திரங்களில் தங்காதோர் உறவினர் அல்லது சாதிக்காரர் இல்லங்களில் அதிதிகளாக உணவு உண்டனர்; திண்ணையில் தூங்கினர். ஊர்தோறும் அதன் வழியெங்கணும் ‘அன்னசத்திரங்கள் ஆயிரம்’ நாட்டினர். அப்படி ஒரு சத்திரத்தில் இரவுச் சோறு சமைத்து இலையில் போடுவதற்குள் காலை பிறந்து ‘வெள்ளி முளைத்து’ விட்டது. அச்சோகத்தை ஒருவர் நகைச்சுவைப் பாடலாகப் பாடியும் விட்டார். சோறு என்பது புண்ணியம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT