Last Updated : 24 May, 2018 09:35 AM

 

Published : 24 May 2018 09:35 AM
Last Updated : 24 May 2018 09:35 AM

ஜாலியன் வாலாபாகும் தூத்துக்குடியும்!

மிழ்நாட்டையே பதைபதைக்க வைத்திருக்கிறது தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு. ராகுல் காந்தி குறிப்பிட்டிருப்பதுபோல அரச பயங்கரவாதமே இது. துப்பாக்கியுடன் ஒரு போலீஸ்காரர் வெள்ளை வேனில் குறிபார்த்தபடி படுத்திருக்கும் காணொலிக் காட்சி, மக்கள் மீதான தமிழக அரசின் கொடூர முகத்தை வெளிக்கொண்டுவந்திருக்கிறது. முதல் நாள் ஒன்பது உயிர்கள், மறு நாள் ஓருயிர் என்று பத்து உயிர்கள் இதுவரை பறிபோயிருக்கின்றன. மதிமுக தலைவர் வைகோ உட்பட பலரும் “ஜாலியன் வாலாபாகில் பிரிட்டிஷ் ராணுவம் உயிர்களை வேட்டையாடியதைப் போல தமிழகக் காவல் துறையும் மனித உயிர்களைப் பலிவாங்கியிருக்கிறது” என்று குமுறுகிறார்கள்.

ஜாலியன் வாலாபாகை நினைவுகூர்கையில், இந்த ஒப்பீட்டின் பின்னுள்ள நியாயத்தையும் நடந்திருப்பது எத்தனை பெரிய கொடூரம் என்பதையும் புரியவைக்கும். பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான புரட்சியை அடக்குவதற்காகக் கொண்டுவரப்பட்ட ரவுலட் சட்டம், மக்களின் உரிமையை முற்றிலும் பறிப்பதாக அமைந்தது.

இச்சட்டத்துக்கு எதிராக அமைதியான முறையில் போராடிய மக்கள், 1919 ஏப்ரல் 13-ல் பஞ்சாபின் அமிர்தசரஸ் நகரில் பொற்கோயிலுக்கு அருகில் உள்ள ஜாலியன் வாலாபாக் திடலில் கூடியிருந்தனர். அப்போது 50 கூர்க்கா படையினருடன் அங்கு வந்தார் ஜெனரல் டயர். போராட்டத் தில் ஈடுபட்ட மக்களைச் சுட்டுத்தள்ளுமாறு உத்தரவிட்டார். கொடூரமான அந்தப் படுகொலைச் சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 376 என்று பிரிட்டிஷ் அரசு சொன்னாலும், 1,000-க்கும் மேற்பட்டோர் இறந்தனர் என்று காந்தி தலைமையிலான காங்கிரஸ் தலைவர்கள் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்தது.

மக்கள் மீது அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் கொந்தளித்தனர். பிரிட்டிஷ் அரசு வழங்கிய ‘நைட்’ பட்டத்தைத் துறந்தார் ரவீந்திரநாத் தாகூர். அதுவரை, பிரிட்டிஷ் அரசின் ஒரு குடிமகன் என்று தன்னைக் கருதிக்கொண்டு, அதனளவில் பிரிட்டிஷாரை எதிர்த்துவந்த காந்தி, முற்றிலும் பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க இந்தச் சம்பவம் காரணமாக அமைந்தது. ‘கைசர் - இ - ஹிந்து’ பதக்கத்தைத் திருப்பிக்கொடுத்தார் காந்தி. 1920-ல் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினார். நேருவைத் தீவிர அரசியல் நோக்கிச் செலுத்தியதும் அதுவே. பகத் சிங்கைச் செலுத்தியதும் அதுவே. ஜெனரல் டயரை நோக்கி துப்பாக்கிச் சூடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, அவர் சொன்ன பதில்தான் இங்கே நினைவுகூர வேண்டியதில் முக்கியமானது: “மக்களைச் சுடவில்லை என்றால், கடமையிலிருந்து தவறியவனாவேன் என்று நினைத்தேன்!”

அரசு மட்டும் அல்ல; துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தும் ஒவ்வொருவரும் இதையேதான் வெவ்வேறு வார்த்தைகளில் வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x