Published : 09 Aug 2024 07:10 AM
Last Updated : 09 Aug 2024 07:10 AM

ஆயிரம் கோடிகளும் அளவு கடந்த வன்முறையும்

அண்​மையில் தமிழ் சினிமாவின் இரண்டு முன்னணி நடிகர்​களின் 50ஆவது திரைப்​படங்கள் வெளியாகி, மிகப் பெரிய வணிக வெற்றியையும் ரசிகர்​கள்​-விமர்​சகர்​களின் பாராட்​டையும் பெற்றுள்ளன.

நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடித்​திருந்த ‘மகாராஜா’, தனுஷ் எழுதி, இயக்கி, நாயகனாக நடித்​திருந்த ‘ராயன்’ ஆகிய இந்த இரண்டு திரைப்​படங்​களுமே வன்முறை நிரம்பிய திரைப்​படங்களாக இருந்தன. அண்மை ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் வெற்றி​பெறும் படங்கள் வன்முறை நிறைந்​தவையாக இருப்பது எழுதப்படாத விதியாகி​விட்​ட​தாகத் தோன்றுகிறது.

வன்​முறையின் இடம்: ஒரு காலத்தில் வெகுஜனத் திரைப்​படங்​களில் காதல் காட்சிகளும், நகைச்​சுவைக் காட்சிகளும் கட்டாயமாக இடம்பெற வேண்டிய உள்ளடக்​கங்​களாகக் கருதப்​பட்டன. அவை இல்லாத படம் ஓடாது என்று நம்பப்​பட்டது. ‘மகாராஜா’, ‘ராயன்’ இரண்டிலும் காதலுக்கோ நகைச்​சுவைக்கோ பெரிதாக இடம் இல்லை.

தனியாகப் படமாக்​கப்​பட்டு, மையக் கதையுடன் ஒட்டப்​படும் ‘காமெடி-டிராக்’ நகைச்​சுவைக் காட்சிகள் தமிழ் சினிமாவில் வழக்கொழிந்​து​விட்டன. நாயகனும் நாயகியும் திடீரென்று வெளிநாட்டுக் குளிர்ப்​பிரதேசங்​களுக்குச் சென்று ஆடிப்​பாடும் பாடல்​களும் கிட்டத்தட்ட இல்லாமல் ஆகிவிட்டன.

உண்மைக்கு நெருக்​க​மாகவும், கச்சாத்தன்​மை​யுடனும் (raw) மேம்பட்ட திரைப்பட ஆக்க உத்தி​களு​டனும் உருவாக்​கப்​படுவதாக முன்வைக்​கப்​படும் இன்றைய சினிமாக்​களில் காதல், நகைச்சுவை ஆகியவற்றின் இடத்தை வன்முறை வலிந்து பறித்துக்​கொண்டு​விட்​ட​தாகத் தோன்றுகிறது.

‘விக்​ரம்’, ‘ஜெயிலர்’, ‘லியோ’, ‘துணிவு’, ‘பொன்னியின் செல்வன் 1&2’, எனக் கடந்த சில ஆண்டுகளில் மிகப் பெரிய வணிக வெற்றியைப் பெற்ற முன்னணி நட்சத்​திரங்​கள்​/ இயக்​குநர்​களின் திரைப்​படங்​களில் வன்முறை கடுமையான வகையில் இருந்தது. ‘விக்​ரம்’, ‘ஜெயிலர்’ போன்ற சில படங்களில் கொலை, உடல் உறுப்புகள் துண்டிக்​கப்​படுதல் ஆகிய காட்சிகள் அப்பட்​ட​மாகத் திரையில் காண்பிக்​கப்​பட்டன.

‘பொன்னியின் செல்வன்’ கல்கி எழுதிய வரலாற்றுப் புனைவு நாவலின் அடிப்​படையில் எடுக்​கப்பட்ட திரைப்​படம். அதில் கத்தி, வாள் ஆகிய ஆயுதங்​களுடன் கூடிய சண்டைக் காட்சிகள் தவிர்க்க முடியாதவை. ஆனாலும் வயிற்றில் செருகப்​படும் வாளின் கூர்மையான நுனிப் பகுதி முதுகின் வழியாக வெளியேறு​வதைப் போன்ற அப்பட்டமான வன்முறைச் சித்தரிப்பை, நாவலை எழுதிய கல்கி நிச்சயம் விரும்​பி​யிருக்க மாட்டார்.

ஏமாற்றும் சான்றிதழ்: லோகேஷ் கனகராஜ், நெல்சன், அருண் மாதேஸ்வரன் போன்ற இளம் இயக்குநர்கள் வன்முறையை இயல்பானதாகவோ ரசிக்​கத்​தகுந்​த​தாகவோ முன்னிறுத்​து​வதைத் தமது ஒவ்வொரு படங்களிலும் முந்தைய படத்தைவிட அதிகமாகச் செய்து​வரு​கிறார்கள். இன்னும் சில இளம் இயக்குநர்​களும் இந்தப் போக்கையே பின்பற்றுகிறார்கள்.

பெரிய பொருள்​செலவில் திரைப்​படங்​களைத் தயாரிக்கும் கார்ப்​பரேட் நிறுவனங்கள் சில நூறு கோடிகளை முதலீடு செய்து, ஆயிரம் கோடிகளை வசூலிப்​பதில் மட்டுமே கவனம் செலுத்து​கின்றன. திரைப்​படங்கள் உண்மை​யிலேயே அனைத்து வயதினருக்கும் உகந்தவையாக இருக்க வேண்டும் என்பதில் ஒருகாலத்தில் அக்கறை செலுத்திய தயாரிப்பு நிறுவனங்கள், இப்போது திரைப்படம் எடுப்பதை நிறுத்தி​விட்டன அல்லது குறைத்துக்​கொண்டு​விட்டன.

மிகப் பெரிய பொருள்​செலவில் எடுக்​கப்​படும் திரைப்​படங்கள் 18 வயதைக் கடந்தவர்​களுக்​கானவை என்பதற்கான ‘ஏ’ சான்றிதழைப் பெற்றால் போட்ட முதலீட்டைத் திரும்பப் பெற முடியாது. எனவே, இந்தப் படங்களின் தயாரிப்​பாளர்கள் தணிக்கை வாரியத்​திடம் எப்படி​யாவது ‘யு/ஏ’ சான்றிதழைப் பெற்று​விடு​கிறார்கள்.

‘யு/ஏ’ படங்களை 18 வயதை நிறைவு செய்​யாதவர்கள் பெற்றோருடன் பார்க்​கலாம். ‘யு/ஏ’ சான்றிதழுக்​காகத் தணிக்கை வாரியத்தின் நிர்ப்​பந்​தத்தின் பெயரில் சில வெட்டுகள் மேற்கொள்​ளப்​படு​கின்றன. இவ்வாறாக, ‘மகாராஜா’ படத்தில் 26 நொடிகள் வெட்டப்​பட்​டுள்ளன. ஆனால், அதற்குப் பிறகும் இந்தப் படங்களில் இருக்கும் வன்முறைச் சித்தரிப்புகள் பெரிய​வர்​களையே அதிர்ச்​சிக்​குள்​ளாக்கும் வகையிலேயே உள்ளன.

சிலநேரம், இத்தகைய படங்களுக்கு வழங்கப்பட்ட ‘யு/ஏ’ சான்றிதழை நம்பிக் குழந்தைகளை அரங்குக்கு அழைத்​துச்​செல்லும் பெற்றோர் படத்தைப் பார்த்து அதிர்ச்​சி​யும், அவை தமது குழந்தை​களிடம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துமோ என்கிற கவலையும் அடைவது உண்டு. ஆனால், இத்தகைய படங்களைக் காணத் திரையரங்​கு​களுக்குக் குடும்பம் குடும்​பமாகப் படையெடுப்பது குறைவதில்லை. பெரும்​பாலான பெற்றோருக்கு இந்த வன்முறை குறித்துக் குறைந்​தபட்சப் புரிதலும் இருப்​ப​தில்லை.

கொண்டாடப்​படும் கொலைகள்: இத்தகைய பித்தலாட்​டங்கள் இல்லாமல் ‘ராயன்’ திரைப்படம் ‘ஏ’ சான்றிதழுடனே வெளியானது, சற்று ஆறுதலுக்​குரியது. பல ‘யு/ஏ’ படங்களில் இருந்த அளவு அப்பட்டமான வன்முறைச் சித்தரிப்பு இந்தப் படத்தில் இல்லை. ஆனாலும் இந்தப் படம் தன்னையும் தன்னைச் சேர்ந்​தோரையும் ஆபத்திலிருந்து காப்ப​தற்காக மிக எளிதாக யாரை வேண்டு​மானாலும், எத்தனை பேரை வேண்டு​மானாலும் கொலைகளைச் செய்பவனை நாயகனாக முன்னிறுத்து​கிறது.

வெளித் தோற்றத்துக்கு மிக அமைதி​யானவனாக இருக்கும் நாயகன், கொலைகாரனாக மாறும் காட்சிகள் அரங்கை அதிரவைக்கும் பின்னணி இசையுடன் மிகப் பிரம்​மாண்டமான நாயகத் தருணமாக முன்வைக்​கப்​படு​கின்றன. நாயகன் கொலை செய்ய வருகிறான் என்பதை உணரும் தருணத்​திலேயே பார்வை​யாளர்கள் பெருங்​கூச்சல் எழுப்பி ஆர்ப்​பரிக்​கிறார்கள்.

பேச்சு​வார்த்​தைக்கு இடமே இல்லாமல் சுற்றி இருக்கும் அனைவரையும் நாயகனும் அவனது தம்பிகளும் வெட்டி வீழ்த்​துவதை ரசிகர்கள் கூச்சலிட்​டுக்​கொண்டே ரசிக்​கிறார்கள். ‘அசுரன்’ உள்ளிட்ட முந்தைய படங்களின் மூலம் தனுஷுக்குக் கிடைத்​திருக்கும் நாயகப் பிம்பமும் இந்தக் காட்சிகளுக்கான ஆராவாரத்தை அதிகரிக்கிறது.

இந்தப் படத்தில் நாயகனின் தங்கையும் ஒரு கட்டத்துக்கு மேல் பழிவாங்கல் கொலைகளை நிகழ்த்து​கிறார். இதன் மூலம் இந்தக் கதாபாத்​திரம் பெண் கதாபாத்​திரங்​களின் வழக்கமான சித்தரிப்​புக்கு மாறாக அமைந்​துள்​ள​தாகச் சில விமர்​சகர்கள் பாராட்​டி​யிருந்​தனர். ஆனால், ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் பச்சைப் படுகொலைகளைச் செய்பவர்களாக முன்னிறுத்​தப்​படுவது பாலின சமத்து​வத்துக்கு எந்த வகையிலும் பங்களிக்​கப்​போவதில்லை. மாறாகப் பெண்களுக்குப் புதிய தீங்கு​களையே ஏற்படுத்​தக்​கூடும்.

‘மகாராஜா’ திரைப்​படத்தில் சிகைதிருத்​துநராக இருக்கும் நாயகன் தன் மகளைப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்​கிய​வர்​களைக் கொடூர​மாகக் கொலை செய்கிறான். தலையைத் துண்டிப்பது போன்ற காட்சிகளும் உள்ளன. குழந்தை​களைப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குவது பொதுச் சமூகத்​தினரால் மிகப் பெரிய குற்றமாகப் பார்க்​கப்​படு​கிறது.

எனவே, அந்தக் குற்றவாளிகள் கொடூர​மாகக் கொல்லப்​படுவது அனைத்துத் தரப்பு பார்வை​யாளர்​களாலும் ரசிக்​கப்​படு​கிறது. சிறார் பாலியல் குற்றவாளிக்கான தண்டனை எவ்வளவு கொடூர​மாகச் சித்தரிக்​கப்​படு​கிறதோ பார்வை​யாளர் அவ்வளவு ‘நிறைவு’ அடைகிறார். பாலியல் வன்முறைக்கு - குறிப்பாக, சிறார் மீதான பாலியல் வன்முறைக்கு வன்முறைமிக்க தண்டனையைத் தீர்வாகக் கருதும் பொதுப்​புத்​திக்கு இத்தகைய சித்தரிப்புகள் வலுச்​சேர்க்​கின்றன.

சமூகத் தாக்கம்: நட்சத்திர நடிகர்கள் படத்தில் கொலை செய்யும்​போது, கதையில் அதற்குச் சொல்லப்​படும் காரணங்​களைப் புரிந்து​கொள்ளும் பக்குவம் அனைவருக்கும் எப்படி இருக்​கும்? குறிப்பாக, பதின்​பரு​வத்​தினர் கண்மூடித்​தனமான வன்முறையை வீரமாகவும் நாயகத்​தன்​மைக்​குரிய அம்சமாகவும் கருதும் மனநிலையில் இருப்​பார்கள். அப்படிப்​பட்டோர் இத்தகைய படங்களைப் பார்ப்பதன் மூலம் வன்முறை சார்ந்து கூடுதலாக ஈர்க்​கப்​படு​வார்கள்.

சில வாரங்​களுக்கு முன்பு ஸ்ரீரங்கத்தில் பள்ளி மாணவர் ஒருவர் சக மாணவரைப் பள்ளி வகுப்​பறைக்குள் புகுந்து வெட்டி​யிருக்​கிறார். தடுக்க வந்த ஆசிரியரையும் வெட்டி​யிருக்​கிறார். வேறு சில இடங்களிலும் இதேபோல் பள்ளி மாணவர்​களுக்கு இடையிலான வெட்டுக்​குத்துச் சம்பவங்கள் பதிவாகி​யுள்ளன. இவற்றுக்குத் திரைப்​படங்களை மட்டும் பொறுப்​பாக்​கிவிட முடியாது. ஆனால், இத்தகைய வன்முறைச் சம்பவங்​களுக்கு மறைமுக​மாகவாவது திரைப்​படங்​களும் பங்களிக்​கின்றன.

‘ராயன்’ படத்தில் இருந்த வன்முறையைத் தொழில்முறை திரைப்பட விமர்​சகர்​கள்​கூடப் பெரிதாகக் கண்டிக்க​வில்லை. அந்தப் படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்​பட்​டிருந்​ததால் வன்முறையைக் குற்றமாகக் கருத முடியாது என்று பலர் நினைத்​திருக்​கலாம். ஆனால், ‘ஏ’ சான்றிதழ் பெற்று​விட்​ட​தாலேயே எவ்வளவு முடியுமோ அவ்வளவு அப்பட்​ட​மாகவும் குரூர​மாகவும் வன்முறையைச் சித்தரிக்​கலாம் என்கிற போக்கைச் சாதாரணமாக எப்படிக் கடந்துவிட முடியும்? 18 வயதைக் கடந்து​விடு​வ​தாலேயே ஒருவருக்கு வன்முறைக் காட்சிகளைச் சரியாக உள்வாங்​கு​வதற்கான பக்குவம் வந்து​விடாது.

அரங்கை விட்டு வெளியேறும் இளைஞர்கள், படத்தில் நாயகன் எப்படி எல்லாம் கொலை செய்கிறார் என்பதைச் சிலாகித்துப் பேசிக்​கொண்டு செல்வதைப் பார்க்க மிகவும் அச்சமாக இருக்​கிறது. தமிழ்த் திரைப்​படங்​களில் வன்முறை என்பது திரைப்​படங்​களின் தரத்தைச் சீரழிப்​ப​தோடு, சமூகத்தில் பல மோசமான நீண்ட கால விளைவு​களையும் ஏற்படுத்தி​விடு​கிறது.

கதைக்​களத்துக்குப் பொருந்தாத வெளிநாட்​டில் பாடல்​களைப் படம்​பிடிப்​பது, கதைக்​குத் தொடர்​பில்லாத நகைச்​சுவைக் காட்​சிகளை ஒட்​ட​வைப்ப​து ஆகிய​வற்​றைப் போல் இது​வும் தானாக மறை​யும் என்று காத்​திருக்​கவும் முடி​யாது. சம்​பந்​தப்​பட்ட அனைவரும் சிந்​தித்​துச் செயல்​பட்டு உடனடி​யாகத் தீர்க்​க வேண்டிய தீவிர​மான பிரச்​சினை இது.

- தொடர்புக்கு: gopalakrishnan.sn@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x