Published : 26 May 2018 09:34 AM
Last Updated : 26 May 2018 09:34 AM

பாவண்ணன்: இரு நிலங்கள், ஒரே மொழி

ரு எழுத்தாளன் தன் மொழிக்குச் செய்ய வேண்டிய மூன்று காரியங்களைக் கச்சிதமாக நிறைவேற்றிவருபவர் பாவண்ணன். முதலாவது காரியம் சிறுகதை, நாவல்கள், கவிதைகள் என்று தொடர்ந்து பங்களிப்புகளைச் செய்திருப்பது. 35 ஆண்டு காலத்தில் அவர் எழுதாத நாளே இல்லை என்று சொல்லலாம். இதுவரையிலும் 20 சிறுகதைத் தொகுதிகள், ‘வாழ்க்கை ஒரு விசாரணை’, ‘சிதறல்கள்’, ‘பாய்மரக் கப்பல்’ என மூன்று நாவல்கள், இரண்டு குறுநாவல்கள், 18 கட்டுரைத் தொகுப்புகள் என 50-க்கும் மேற்பட்ட நூல்கள் வெளியாகியுள்ளன.

இரண்டாவது காரியம், தான் அறிந்த, வாசித்த பிற மொழி இலக்கியங்களை மொழிபெயர்ப்பின் வழியாக தமிழுக்குத் தருவது. பணியின்பொருட்டு கர்நாடகத்தில் வசிக்கத் தொடங்கிய நாளிலேயே கன்னடத்தைக் கற்றுக்கொண்ட பாவண்ணன், கன்னடத்திலிருந்து மொழிபெயர்த்தவை 19 நூல்களாக வெளியாகியுள்ளன.

மூன்றாவது காரியம், ஒரு வாசகனாகத் தான் ரசித்தவற்றைத் தன் வாசகர்களுக்கு அடையாளம் காட்டுவது. தமிழில் எழுதும் புதிய கவிஞர்களின் கவிதைகளை முன்வைத்து அவர் எழுதிய ‘மனம் வரைந்த ஓவியங்கள்’ எனும் புத்தகமும், சிறுகதையாளர்களை அறிமுகப்படுத்தும் கட்டுரைகளைக் கொண்ட ‘எனக்குப் பிடித்த கதைகள்’ தொகுப்பும் புதிய வாசகர்களுக்கு முக்கியமானவை. அவரது கட்டுரைத் தொகுப்புகள் பலவும் வாழ்வின் பல்வேறு தருணங்களில் நாம் உணர நேரும் அபூர்வ கணங்களைச் சுட்டி நிற்பவை.

ஒரு எழுத்தாளனாகத் தான் செய்ய வேண்டிய காரியங்களை ஓசையில்லாமல், தற்பெருமையில்லாமல், அடக்கமாக, புன்னகையுடன் செய்திருப்பது என்பதே அபூர்வமான ஒன்றுதான். கர்நாடக மாநிலத்துக்கும் நமக்குமான அரசியல் உறவு சீர்கெட்டுக் கிடக்கும் இந்தச் சூழலில், இரண்டு மாநிலங்களுக்கும் இடையேயான இலக்கிய உறவுக்கான முக்கியமான பாலமாக பாவண்ணன் விளங்குகிறார். சொல்லப்போனால், பிறப்பால் புதுச்சேரிக்கும், மொழியால் தமிழகத்துக்கும், இருப்பால் கர்நாடகத்தும் என பாவண்ணன் மூன்று மாநிலங்களுக்குச் சொந்தக்காரர்.

மொழிபெயர்ப்பின் வழியாக கன்னட இலக்கியத்தைத் தமிழுக்குக் கொண்டுவந்தவர்களில் முதன்மையானவர். இலக்கியவாதி ஒருவர் தனது சொந்த படைப்பிலக்கியத்துக்குத் தரும் அதேயளவு முக்கியத்துவத்தை மொழிபெயர்ப்புக்கும் அளிப்பதென்பது எளிய காரியமன்று. ஆனால், பாவண்ணன் தனது 35 ஆண்டுகால இலக்கிய வாழ்வில் தனது சொந்தப் படைப்புகளுக்கு இணையாக 20 மொழிபெயர்ப்பு நூல்களையும் எழுதியிருக்கிறார்.

‘பலிபீடம்’, ‘நாகமண்டலம்’ போன்ற கிரீஷ் கர்நாட்டின் நவீன நாடகங்களையும், லங்கேஷ், வைதேகி, விவேக் ஷன்பாக் போன்றவர்களின் சிறுகதைகளையும், பைரப்பாவின் ‘பருவம்’, ‘வினை விதைத்தவன் வினை அறுப்பான்’, தேவனூரு மகாதேவாவின் ‘பசித்தவர்கள்’, ‘ஓம் நமோ’, ராகவேந்திர பாட்டீலின் ‘தேர்’ உள்ளிட்ட நாவல்களையும் அக்கமாதேவி, பசவண்ணர் என கன்னடத்தின் ஆதி கவிகள் தொடங்கி இன்றைய நவீன கவிஞர்கள் வரையிலும் தமிழில் வாசிக்கும் வாய்ப்பு நமக்கு பாவண்ணனின் மொழியாக்கத்தின் வாயிலாகவே சாத்தியமானது. கன்னடத்தின் முன்னணி எழுத்தாளரான கிரீஷ் கர்நாட்டின் நாடகங்களைத் தமிழில் மொழிபெயர்க்க அனுமதி கோரும்போது, பாவண்ணன் மொழிபெயர்ப்பதாய் இருந்தால் மட்டுமே அனுமதி தர முடியும் என்று நிபந்தனை விதிக்குமளவுக்கு அவரது மொழிபெயர்ப்பின் மேல் பெரும் மரியாதை வைத்திருக்கிறார் கிரீஷ் கர்நாட்.

தமிழில் தலித் எழுத்துக்களுக்கான தொடக்கத்தை ஏற்படுத்தியவை பாவண்ணனின் மொழிபெயர்ப்புகளே. 1996-ல் வெளியான ‘புதைந்த காற்று’ என்கிற தலித் எழுத்துகளின் தொகை நூலும், சித்தலிங்கய்யாவின் ‘ஊரும் சேரியும்’ மற்றும் அரவிந்த் மாளகத்தியின் ‘கவர்மென்ட் பிராமணன்’ எனும் தன்வரலாற்று நூல்களும் தமிழ் இலக்கிய உலகில் பெரும் அதிர்வுகளையும் பாதிப்புகளையும் உருவாக்கின. இந்த நூல்களின் வருகைக்குப் பின்பே தமிழில் தலித் இலக்கியம் பற்றிய உரையாடல்கள் தொடங்கின.

பாவண்ணன் கவிதையிலிருந்து தன் எழுத்து வாழ்க்கையைத் தொடங்கினார். தமிழ் மரபிலக்கியத்தில் பெரும் ஈடுபாடு கொண்டிருந்த அவர், கபிலர் தொடங்கி ஆவுடையக்காள் உள்ளிட்ட பல கவிஞர்கள் குறித்து கட்டுரைகள் எழுதியுள்ளார். அதேபோல, கன்னடத்தின் முக்கியமான பக்திக் கவிஞரான அக்கமாதேவியின் கவிதைகளைத் தமிழின் ஆண்டாள் பாசுரங்களோடு ஒப்பிட்டு எழுதிய ‘பாட்டும் பரவசமும்’ என்கிற கட்டுரை மிக முக்கியமானது.

பிற இலக்கிய வகைமைகளைப் போலவே கவிதைகளையும் அவர் தொடர்ந்து எழுதுகிறார். இதுவரையிலும் மூன்று கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. குழந்தைகளுக்கான பாடல்களை எழுதுவதில் பெரும் ஆர்வம் கொண்டவர் பாவண்ணன். வியப்பும் உற்சாகமும் கும்மாளமும் மிக்க குழந்தைகளின் உலகைச் சுற்றி அவர் எழுதிய பாடல்கள் மூன்று தொகுதிகளாய் வெளியாகியுள்ளன.

பாவண்ணன் அளவுக்கு ஓயாமல் தொடர்ந்து எழுதும் எழுத்தாளர்கள் வெகு சிலரே. தமிழுடனும் வாசகர்களுடனுமான அவரது செயல்பாடுகளும் உரையாடல்களும் உள்ளபடியே அவருக்கு மேலும் கவனத்தையும் அங்கீகாரத்தையும் தந்திருக்க வேண்டும். ஆனால், குழுச் செயல்பாடுகளுக்கும் இலக்கிய அரசியல் விளையாட்டுகளுக்கும் பேர்போன தமிழ்ச் சூழலில், பாவண்ணனின் அசலான பங்களிப்புகளுக்கு உரிய மதிப்பில்லாமல் போனதில் வியப்பொன்றுமில்லை. இப்படியான சூழலில், ‘பாவண்ணனைப் பாராட்டுவோம்’ எனும் முழுநாள் நிகழ்வை இந்திய-அமெரிக்க வாசகர் வட்டம் முன்னெடுத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. சென்னை மயிலாப்பூரிலுள்ள கவிக்கோ அரங்கில் இன்று (மே 26) இந்நிகழ்வு நடைபெறுகிறது. பாவண்ணனைக் கொண்டாடுவோம்!

- எம்.கோபாலகிருஷ்ணன், ‘மணல் கடிகை’, ‘முனிமேடு’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

தொடர்புக்கு: murugesan.gopalakrishnan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x