Published : 06 Aug 2024 06:18 AM
Last Updated : 06 Aug 2024 06:18 AM
“1950 ஜனவரி 26இல் இந்தியா மிகப்பெரும் முரண்பாட்டுக்குள் கால் வைக்கப்போகிறது. அரசியலில் சமத்துவம் அடைந்துவிட்டோம். ஆனால் சமூகத்தில், பொருளாதாரத்தில் ஒரு மனிதனுக்கு ஒரு மதிப்பு என்கிற சமத்துவத்தை நாம் அடையவில்லை.
எவ்வளவு சீக்கிரம் இந்த முரண்பாட்டைக் களைகிறோமோ அவ்வளவு சீக்கிரம் இந்தியாவுக்கு நல்லது” - இந்திய அரசமைப்புச் சட்ட நிர்ணய அவையில், 1949 நவம்பர் 25இல் உரையாற்றிய பாபாசாகேப் அம்பேத்கர் சொன்ன வார்த்தைகள் இவை. 75 ஆண்டுகள் ஆன நிலையிலும் சமத்துவமின்மை மோசமாகத் தொடர்கிறது.
அரசமைப்புச் சட்டம் என்ன சொல்கிறது? - பின்தங்கிய நிலையிலிருந்து முன்னேறுவதற்கு அரசமைப்புச் சட்டத்தின் கூறு 15, 16இன்படி சமூக - கல்வியில் பின்தங்கிய நிலைக்கு உள்ளான சமூகத்தினருக்குக் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் வாய்ப்புகள் வழங்கிட வேண்டும். சமூகப் பின்தங்கிய நிலையில் இருந்து வெளியே வரக் கல்வியும் வேலையும் அவசியம். இதற்காக வழங்கப்படும் சாதிச் சான்றிதழ்/ இனச் சான்றிதழ் மூலம் படிக்கும் வாய்ப்பும், வேலை பெறும் உரிமையும் கிடைக்கின்றன.
அரசமைப்புச் சட்டம் பிரிவு 342(2) என்பது பட்டியல் பழங்குடியினரைக் குடியரசுத் தலைவர் சேர்த்தல், நீக்குதல் தொடர்பானது. முதன்முதலாகப் பழங்குடியினர் பட்டியல் சட்டம் 1950 செப்டம்பர் 6 அன்று வெளியிடப்பட்டது. பிறகு, திருத்தச் சட்டம் 1956 அக்டோபர் 29 அன்று வெளியிடப்பட்டது. மற்றொரு திருத்தச் சட்டம் 1976 செப்டம்பர் 18 அன்று வெளியிடப்பட்டது.
பிறகு 2003 ஜனவரி 7 இறுதியாக 2023 ஜனவரி 3 அன்று திருத்தப் பட்டியல் வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டில் உண்மையில் பழங்குடியினராக இருந்துவரும் ஈரோடு மாவட்ட மலையாளி, குறவன் இனத்தின் உட்பிரிவு, குறுமன்ஸ் இனத்தின் உட்பிரிவு, மலைப்புலையன், வேட்டைக்காரன் ஆகிய இனங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்கிற கோரிக்கை பல்லாண்டுகளாக மத்திய, மாநில அரசுகளால் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.
நடைமுறைச் சிக்கல்கள்: தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 2023இல் கடைசியாகப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட்ட நரிக்குறவன், குருவிக்காரன் ஆகிய சாதியினர் சேர்க்கப்பட்டு, 37 பிரிவுகள் பழங்குடியினராகப் பட்டியல்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பில் மத்திய அரசில் 7.5 சதவீதமும் தமிழ்நாட்டில் 1 சதவீதமும் இடஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
இந்த இடஒதுக்கீட்டு உரிமையைப் பெற வேண்டுமென்றால், அதற்கு ஒவ்வொருவரும் இனச் சான்றிதழ் பெறுவது அவசியம். இனச் சான்றிதழ் வழங்கும் அதிகாரம் தமிழ்நாட்டில் கோட்டாட்சியர், சார் ஆட்சியர், உதவி ஆட்சியர் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சான்றிதழ் வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை ஆதிதிராவிடர் - பழங்குடியினர் நலத் துறை வெளியிட்டுள்ளது. இருப்பினும், அந்த வழிகாட்டுதலின்படி அதிகாரிகள் நடந்துகொள்வதில்லை. இதனால் சான்றிதழ் கேட்டுத் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.
கடந்த ஆண்டு வேல்முருகன் என்பவர் தனது குழந்தைகளுக்கு மலைக்குறவன் சான்றிதழ் கோரிக்கைவிடுத்து, இணையம் மூலம் விண்ணப்பித்து அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டதால், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துக்கொண்டு மாண்டுபோனார். இதேபோல் பள்ளிப்பட்டு தாலுகாவில் கொண்டாரெட்டி சான்றிதழ் கேட்டு வழங்க மறுத்த நிலையில், தாலுகா அலுவலகத்திலேயே பெரியசாமி என்பவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
அதிகாரிகளின் அலட்சியம்: உயிரை மாய்த்துக்கொள்ளும் செயலை ஏற்க முடியாதுதான். ஆனால், இணையம் மூலம் விண்ணப்பிக்கும்போது கோட்டாட்சியர் உள்ளூர் விசாரணையை மேற்கொள்வதே இல்லை. கிராம நிர்வாக அலுவலர், வருவாய் அலுவலர்களின் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அவர் முடிவெடுக்கிறார்.
ஆதார, ஆவணங்கள் இல்லையென்றாலும் விசாரணை மூலம் முழுத் திருப்தி அடைந்தால் சான்றிதழ் வழங்கலாம் என்று அரசு ஆணை குறிப்பிடுகிறது. அப்படியானால், மனுதாரரின் குடியிருப்புக்குச் சென்று நேரடியாக விசாரணை செய்வது அவசியம். மனுதாரர் பேசுகிற மொழி, உடல்மொழி, வாழுமிடம், அருகில் வசிப்பவர்களின் வாக்குமூலம் போன்றவை முடிவெடுக்க உதவும்.
இணையத்தில் ஆவணங்கள் மட்டுமே முதன்மைப்படுத்தப்பட்டு, நிராகரிக்கப்பட்டு விடுகிறது. பெற்றோருக்கு அல்லது ரத்த உறவு சம்பந்தப்பட்டவர்களுக்குச் சான்றிதழ் இருந்தால், அவர்களின் குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவு குறிப்பிடுகிறது.
அதேபோல் மாநில கூர்நோக்குக் குழுவில் மெய்த்தன்மை உறுதி செய்யப்பட்டவர்களின் குழந்தைகளுக்கு மீண்டும் விசாரணை தேவையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு, அது தொடர்பாக அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், உயர் நீதிமன்ற உத்தரவையும் அதிகாரிகள் மதிப்பதில்லை. அரசு ஆணையையும் உதாசீனப்படுத்தும் போக்கு உள்ளது.
இப்படி உருவத்தைப் பார்த்து, வெளித் தோற்றத்தைப் பார்த்து ஒருவர் பழங்குடியினத்தவரா இல்லையா என்று முடிவுசெய்யக் கூடாது என்று ஓர் அரசாணை உண்டு. குறுமன்ஸ் என்று ஒருவர் சான்றிதழ் கேட்கிறார்.
அவர் இந்த இனத்தைச் சேர்ந்தவர் இல்லை என்று நிராகரிக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் உண்டு. ஆனால், அவர் குறும்பர் என்றோ, குறும்பா என்றோ அதிகாரி குறிப்பிட்டு மனுவைத் தள்ளுபடி செய்கிறார். இப்படி வேறொரு சாதியைச் சேர்ந்தவர் என்று குறிப்பிட்டுத் தள்ளுபடி செய்யக் கூடாது என்று ஓர் அரசு வழிகாட்டல் உண்டு.
இந்த மாவட்டத்தில், தாலுகாவில் இல்லை என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்வது கூடாது. சம்பந்தப்பட்ட மனுதாரர் குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்தவரா, இல்லையா என்றுதான் அதிகாரி கூற முடியுமே தவிர, மாவட்டத்திலேயே இல்லை என்பதற்கு அவர் எத்தகைய ஆய்வை மேற்கொண்டு அந்த முடிவுக்கு வந்தார்? இது தொடர்பாக ஓர் அரசாணை உண்டு.
பிறந்த இடத்தைவிட்டுப் புலம்பெயர்ந்து வேலை - வாழ்வாதாரம் காரணமாக வேறொரு மாவட்டத்தில் வசித்துவருபவர்களுக்கு அவர்களின் பூர்விக இடத்தில்தான் சான்றிதழ் வாங்க வேண்டும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
நிரந்தர வசிப்பிடம் என்பது இப்போது வாழுமிடம்தானே தவிர, பூர்விக இடம் என்று அர்த்தமல்ல என்று உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தி, இது தொடர்பாகவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதிகபட்சம் 15 நாள்களுக்குள் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டிருந்தாலும் ஆண்டுக்கணக்கில் இழுத்தடிக்கும் அதிகாரிகள் இருக்கிறார்கள்.
பழங்குடி மக்களின் எதிர்பார்ப்பு: பழங்குடியினரைப் பொறுத்தவரை எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் பழங்குடியினர்தான் என்று 1956ஆம் ஆண்டு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், இந்த உத்தரவைப் படிக்காமலேயே கிறிஸ்துவர் என்பதற்காகப் பழங்குடிச் சான்றிதழ் மறுக்கப்பட்ட நிகழ்வு தமிழ்நாட்டில் சமீபத்தில்கூட நிகழ்ந்துள்ளது.
அதேபோல் கலப்பு மணம் புரிந்தவர்களின் குழந்தைகளுக்குப் பெற்றோர் எந்தச் சாதிச் சான்றிதழ் கோருகிறார்களோ அதை வழங்க வேண்டும். அவர்களின் அனைத்துக் குழந்தைகளுக்கும் அதே சாதிச் சான்றிதழ்தான் பெற வேண்டும். ஒரு குழந்தைக்குத் தந்தையின் சாதி மற்றொரு குழந்தைக்குத் தாயாரின் சாதி என்று சான்றிதழ் கேட்க முடியாது என்று அரசாணை தெளிவாகக் குறிப்பிடுகிறது. ஆனால், சில அதிகாரிகள் தந்தையின் சாதியைச் சேர்ந்த சான்றிதழ்தான் வழங்க முடியும் என்று தெரிவிக்கிறார்கள்.
இந்த மாதிரியான நேர்வுகளில் உதவிடும் வகையில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, 14 மானுடவியலாளர்களை நியமனம் செய்துள்ளது. ஆனால், அதனாலும் பெரிய மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை. இன்றைய நிலையில், திட்டவட்டப் பழங்குடி நிலையில் (Ideal Tribal Pole) எந்தப் பழங்குடியினரும் இல்லை.
இதற்குக் காரணம் தொழில்மயமாதல், புலப்பெயர்வு, நகர்மயமாக்கல், உலகமயம், தொலைக்காட்சி, சினிமா, தொலைத்தொடர்பு, இணையவழிச் செய்திகள், வேலைக்காக வெளிமாநிலங்கள் செல்வது, பன்முகப் பண்பாட்டுச் சமுதாயத்தை ஒற்றைப் பண்பாட்டுச் சமூகமாக ஆக்க முற்படும் சமூக - சமய - அரசியல் அணுகுமுறை (Social - Religious - Political Approach) என்னும் பல்வேறு சமூகப் பண்பாட்டுக் காரணிகளைக் கூறலாம். இவற்றின் காரணமாகப் பழங்குடியினரின் தோற்றத்தில், பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை அதிகார வர்க்கமும், மானுடவியலாளர்களும் உணர வேண்டும்.
பல்வேறு வகைகளில் பண்பாட்டுச் சிதைவு ஏற்பட்டுள்ளதை அறியாமல், இன்னமும் எட்கர் தர்ஸ்டன் காலத்து வரைமுறைகளை மட்டுமே அளவுகோலாகக் கொண்டு பழங்குடி மக்களைப் பார்த்தால், எவருமே பழங்குடியினராகத் தெரியமாட்டார்கள். எனவே, அரசமைப்புச் சட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றும் வகையில் மாற்றங்களை ஏற்று அரசு ஆணைகளின் அடிப்படையில் அதிகாரிகள் சான்றிதழ் வழங்க வேண்டும் என்பதே பழங்குடி மக்களின் எதிர்பார்ப்பு.
- தொடர்புக்கு: pstribal@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT