Published : 20 May 2018 01:42 PM
Last Updated : 20 May 2018 01:42 PM
நடை, உடை, தோற்றம் என அனைத்திலும் கிட்டத்தட்ட டிராஃபிக் ராமசாமியாகவே மாறியிருக்கிறார் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன். ‘‘ஆமா தம்பி... வயசு 76 ஆகிடுச்சே. 69 படங்கள் இயக்கிட்டேன். நடிப்புல டிராஃபிக் ராமசாமி மூணாவது படம்’’ என்று இயல்பாகப் பேசியவர் பேட்டிக்குத் தயாரானார்.
‘டிராஃபிக் ராமசாமி’ படத்துக்கு எத்தகைய மிரட்டல்கள் வந்தாலும் பயப்பட மாட்டேன் என்று கூறியிருக்கிறீர்கள். இது ஆளுங்கட்சிக்கு விடுக்கும் சவாலா?
கே.எஸ்.சேதுமாதவன் இயக்கத்தில் எம்ஜிஆர் நடித்த ‘நாளை நமதே’ படத்தில் நான் உதவியாளர். அப்ப எனக்கு 24 வயசிருக்கும். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு எம்ஜிஆர் வந்துட்டா குண்டூசி விழுற சத்தம்கூட இருக்காது. அன்னைக்கு வாகினி ஸ்டுடியோவுல பாட்டு ஷூட்டிங். திரும்ப ஒரு டேக் வேணும்னாகூட அவரோட காதுக்கிட்ட போய் மெதுவாத்தான் சொல்லணும். அந்த மாதிரி சூழல்ல ஒரு டேக் கொஞ்சம் சுமாரா இருந்ததால என்னையும் அறியாமலேயே ‘அண்ணே... ஒன்ஸ்மோர்’ன்னு எம்ஜிஆரைப் பார்த்து கத்திட்டேன். அதைக் கேட்டு ஒட்டுமொத்த யூனிட்டும் என்னைய திரும்பிப் பார்த்துச்சு. அடுத்த நாள் காலையில, கார் வரும்னு ரெடியாகி வீட்ல உட்கார்ந்திருக்கேன். ம்ஹூம்… 10 மணி ஆகியும் கார் வரல. ஒரு ஆட்டோ பிடிச்சு வாகிணி ஸ்டுடியோவுக்கு போனா, ‘சேகரு.. நம்ம அடுத்த படத்துல வேலை செய்துக்கலாம்பா’ன்னு சொன்ன இயக்குநர், மேனேஜரை அழைத்து, ‘சேகருக்கு செட்டில் பண்ணி அனுப்பிடுங்க’ன்னுட்டு போய்ட்டார்.
அப்படிப்பட்ட நான் எம்ஜிஆர் ஆட்சியில் இருந்தப்ப கருணாநிதி எழுதிய ‘நீதிக்கு தண்டனை’யைப் படமாக எடுத்தேன். அது கருணாநிதி கைதுசெய்யப்பட்டு விடுதலையான சமயம். படம் ரிலீஸாகி 15 நாள் கழிச்சு எம்ஜிஆர் ராமாவரம் தோட்டத்துக்கு வரச் சொன்னார். பொதுவா பெண்கள் சென்டிமென்ட் என்றால் கொஞ்சம் ஸ்மூத்தா ஹேண்டில் செய்வார்னு கேள்விப்பட்டிருந்ததால மனைவியையும் அழைச்சுக்கிட்டுப் போனேன். எனக்கு பின்னாடி வந்தவங்க எல்லாரும் எம்ஜிஆரை பார்த்துட்டுப் போறாங்க. கடைசி வரைக்கும் எங்கள கூப்பிடல.
மூணு நாள் கழிச்சு மறுபடியும் கூப்பிட்டிருந்தார் போனேன். ‘என்னப்பா சேகர்.. நீ எடுத்த ‘நீதிக்கு தண்டனை’ படம் பார்த்தேன். நல்லா இருந்துச்சு. எம்ஜிஆர் பிக்சர்ஸ்ல படம் பண்ணி ரொம்ப நாளாச்சு. வருஷத்துக்கு ரெண்டு படம் பண்ணே’ன்னு கேட்டார். இதை நான் எதிர்பார்க்கல. ‘எதுக்கு இவனைப் பகைச்சிக்கணும்’னு அவர் நினைச்சிருப்பாரோனு இப்ப நினைக்கிறேன். ஆனா, அந்த வருஷத்தோட முடிவுல அவர் இறந்துட்டார். இதேமாதிரி திமுக ஆட்சியிலும் ‘சட்டப்படி குற்றம்’ படம் எடுத்துட்டு ஏகப்பட்ட எதிர்ப்புகளை சம்பாதிச்சேன். ‘சாட்சி’, ‘நான் சிகப்பு மனிதன்’ படங்களை எடுத்தபோதும் பல எதிர்ப்புகளை எதிர்கொண்டவன். அதனாலதான் சொல்றேன். எதிர்ப்புகளும் மிரட்டல்களும் எனக்குப் புதிதல்ல; எது வந்தாலும் சமாளிப்போம்.
திரைத் துறையில் நீங்கள் உருவாக்கிய இயக்குநர்களும் நடிகர்களும் உங்களுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறார்களா?
நன்றி மறவாமல் இருக்கிறார்களா என்றால் அதுக்கு பதில் சொல்ல முடியாது. மரியாதை கொடுக்கிறார்கள். அவர்களில் நன்றி மறக்காமல் இருப்பவர் விஜயகாந்த் மட்டும்தான். அவர் திரும்பவும் பழைய சூழலுக்கு திரும்ப வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இயக்குநர் ஷங்கர் என் மாணவர்தான். ஆனால், அவர் நன்றிக்குரியவராக இருக்கிறாரா என்று கேட்கக் கூடாத உயரத்தில் இருக்கிறார். நாம் பெருமைப்பட்டுக்கொள்ள வேண்டும்; அவ்வளவுதான். மற்றபடி இயக்குநர்கள் செல்வபாரதி, ’கோயம்புத்தூர் மாப்ளே’ எடுத்த ரெங்கநாதன், மஜித், இப்போ படம் எடுத்துக்கிட்டிருக்குற எம்.ராஜேஷ், பொன்ராம் எல்லோரும் என் மீது மரியாதை வைத்திருக்கிறார்கள்.
2011 தேர்தலில் உங்கள் மகன் விஜயின் ஆதரவை ஜெயலலிதா கோரியதாக சமீபத்தில் பேசியுள்ளீர்கள். ஜெயலலிதா மறைந்த பிறகு இதைச் சொல்வது ஏன் என்று சர்ச்சையாகிவருகிறதே?
உண்மைதான், அந்த நேரத்தில் எங்களுக்கு பதினைந்து சீட் கேட்டோம். அவர்கள் மூன்று தருவதாகச் சொன்னார்கள். உடனிருந்த சசிகலா அம்மையார், ‘நீங்கள் என்ன அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சியா?’ என்று கேட்டார். நாங்கள் உங்கள் சின்னத்திலேயே போட்டியிடுகிறோம் என்றோம். அவர்கள் மூன்றுக்கு மேல் கொடுக்க முன்வராததால் நாங்கள் வேண்டாம் என்று திரும்பினோம். பிறகு, திருச்சிக்கு அழைத்து ஆதரவு வேண்டும் என்று ஜெயலலிதா கேட்டார். ஆதரவு அளித்தோம். தேர்தல் வெற்றிக்குப் பிறகு ஒரு நிகழ்ச்சியில், ‘இந்த வெற்றிக்கு விஜய்யும் ஒரு காரணம்’ என்று நான் பேசினேன். அதை ஜெயலலிதாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இப்படி பேச பல உண்மைகள் உள்ளன. ஆனா, திரும்பத் திரும்ப அதெல்லாம் பேசிக்கொண்டே இருக்க வேண்டாம்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் அரசியலை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். அதுபோல உங்கள் மகன் விஜயும் இப்போது அரசியலுக்கு வருவாரா? ரஜினி, கமலின் அரசியல் பிரவேசத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
விஜய் அரசியலுக்கு வருவதா வேண்டாமா என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும். அவர் குழந்தை அல்ல. நல்லது கெட்டதைத் தீர்மானிக்கும் வயது அவருக்கு வந்து நீண்ட காலம் ஆகிவிட்டது. சீனியர்கள் என்ற முறையில் கமலும் ரஜினியும் அரசியலில் இறங்கிவிட்டார்கள். அந்த சீனியர்களுக்கு விஜய் வழிவிடலாம் என்றே தோன்றுகிறது.
(இன்னும் நிறையப் பேசுகிறார் எஸ்.ஏ.சி. விரிவான பேட்டிக்கு, வரும் வார
‘காமதேனு’ வாங்குங்கள்.)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT