Published : 16 May 2018 07:41 AM
Last Updated : 16 May 2018 07:41 AM
இ
ன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. சுமார் 9 லட்சம் மாணவர்கள் கனவுகள் கைகூடக் காத்திருக்கிறார்கள். நாளைய உலகை கட்டமைக்கப்போகும் கனவுகள் அவை. தேர்வு முடிவுகள் மகிழ்ச்சியோ.. மலைப்போ.. கசப்போ.. எதுவாகினும் கருகிவிடக் கூடாத கனவுகள் அவை. மலர்களைப்போல அவை வாசம் வீசட்டும். மதிப்பெண்கள், மருத்துவம், பொறியியல், விஞ்ஞானம்... என எதற்குள்ளும் சுருங்கிவிடாத கனவுகள் அவை. தேர்வு முடிவுகளும் குடும்பத்தின் சூழல்களும் ஒருபோதும் சாதனைகளை தீர்மானிப்பதில்லை. தடைகளை தாண்டிய சாதனைகள் மட்டுமே சாதனையாளர்களைத் தீர்மானிக்கின்றன. நம்மைச் சுற்றியே அப்படியான சாதனையாளர்கள் இருக்கிறார்கள்... பார்ப்போம்!
ஐஏஎஸ் சாதனையாளர்
சமீபத்தில் வெளியான இந்திய ஆட்சிப் பணித் தேர்வில் தேசிய அளவில் 101-வது இடத்தைப் பெற்றவர் சிவகுரு பிரபாகரன். இவர், தஞ்சை மாவட்டம் மேலவட்டங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர். அப்பா மரம் அறுக்கும் தொழிலாளி. விவசாயக் கூலி வேலைகள் உட்பட சிறு சிறு வேலைகள் பார்த்துக்கொண்டுதான் பள்ளி படிப்பை முடிக்க வேண்டியிருந்தது. பொறியியல் படிக்க வேண்டும் என்பது இவரது லட்சியம். ஆனால், அதற்கான கட்டணங்களோ லட்சங்களில் இருந்தன. அதனால், ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்தார். உறவினர் வீட்டில் தங்கி, விவசாயக் கூலி வேலை பார்த்துக்கொண்டே, 2 ஆண்டுகளில் அதனை முடித்தார். சுமார் 3 ஆண்டுகள் மரம் அறுக்கும் தொழிலாளியாக குடும்ப பாரம் சுமந்தார். குடும்பத்தின் சுமை ஓரளவு குறையவே, மீண்டும் பொறியியல் கனவை துரத்திப் பிடிக்கத் தொடங்கினார். பொறியியல் படிப்பு முடித்து வேலையில் சேர்ந்திருக்க வேண்டிய 24-வது வயதில்தான் இவருக்கு பொறியியல் கல்லூரியில் சேர்வதற்கே வாய்ப்பு கிடைத்தது. அங்கும் ஆங்கிலம் தடுமாற்றம். நாளொன்றுக்கு 15 வார்த்தைகள் வீதம் ஆங்கிலம் பழகினார். ஒருவழியாக பொறியியல் முடித்தவர், மேற்படிப்பாக சென்னை ஐஐடியில் எம்.டெக். படிக்க ஆசைப்பட்டார். சென்னை பரங்கிமலையில் இருக்கும் பயிற்சி வகுப்பில் சேர்ந்து, ஐஐடியில் சேர்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். பயிற்சி வகுப்பு கட்டணத்துக்கே திண்டாடியதால் இங்கு தங்கிப் படிக்க பொருளாதார சூழல் இடம் கொடுக்கவில்லை. ஊரில் இருந்து ரயிலில் வந்து வகுப்பு முடித்துவிட்டு, பல நாட்கள் பரங்கிமலை ரயில் நிலையத்தில் படுத்து, உறங்கினார். அங்கேயே அமர்ந்து பாடங்களைப் படித்தார். சுமார் ஓராண்டு காலம் பட்ட சிரமத்துக்குப் பலனாக ஐஐடியின் கதவுகள் பிரபாகரனுக்காக திறந்தன. அங்கு எம்.டெக். டாப்பராக உயர்ந்தார். தேசிய அளவில் ஐஈஎஸ் தேர்வில் 75-வது இடத்தைப் பிடித்தார். புனேவில் ரயில்வே துறையில் வேலை கிடைத்தது. பணிபுரிந்தபடியேஐஎஃப்எஸ், ஐஏஏஸ் தேர்வுகளை எழுதினார். முதலில் வெளியான ஐஎஃப்எஸ் தேர்வில் தேசிய அளவில் 20-வது இடமும், அடுத்து வெளியான ஐஏஎஸ் தேர்வில் 101-வது இடமும் பெற்றார்.
இட்லி கடை டு ‘ஃபுட் கிங்’
சரத்பாபு ஏழுமலை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சென்னை மடிப்பாக்கத்தில் குடிசைப் பகுதியில் பிறந்து வளர்ந்து படித்தவர். தெருவோரம் உள்ள அம்மாவின் இட்லி கடையில் உதவியாக இருந்தவரின் அனுபவமும், விடாமுயற்சியும் தான் இன்று அவரை ஆண்டுக்கு சுமார் ரூ.7 கோடி புழங்கும் தொழிலதிபர் ஆக்கியிருக்கிறது. ஆம், நாடு முழுவதும் 6 இடங்களில் கிளை பரப்பியிருக்கும் ‘ஃபுட் கிங்’ உரிமையாளர் இவர். சிறுவயதில் அம்மா குடிசைப் பகுதியில் இட்லி சுட, தெருத்தெருவாக அதைக் கொண்டுசென்று விற்றார் சரத்பாபு ஏழுமலை. அக்கம்பக்கத்தினர் சொல்லும் வீட்டு வேலைகளை செய்தும் சம்பாதித்தார். இப்படி படித்தவர்தான் பிளஸ் 2-வில் கணிசமான மதிப்பெண்களைப் பெற்று ராஜஸ்தானின் பிலானியில் இருக்கும் ‘பிட்ஸ்’ இன்ஸ்டிடியூட்டில் பொறியியல் சேர்ந்தார். பின்பு ‘கேட்’ தேர்வு எழுதியவர், ஐஐஎம் அகமதாபாத்தில் எம்பிஏ சேர்ந்தார். படிப்பை முடித்தவுடன் நண்பர்களின் உதவியுடன் சிறு முதலீட்டில் சென்னையில் 2011-ல் கேட்டரிங் தொழில் தொடங்கினார். படிப்படியாக முன்னேறியவர் இன்று நாடு முழுவதும் சென்னை, ஹைதராபாத், கோவா, பிலானி உள்ளிட்ட இடங்களில் தனது ‘ஃபுட் கிங்’ உணவகங்களை விரிவுபடுத்தியிருக்கிறார்.
தடையைத் தாண்டி வெற்றி
இந்திய வருமானவரித் துறையின் இணை ஆணையராக இருக்கும் நந்தகுமாரின் கதையைக் கேட்டால் கண்ணீர் வருகிறது. அவருக்கு 5 வயதிலேயே உடல்நிலை படுமோசமாக இருந்திருக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி சுத்தமாக இல்லை. கூடவே ‘டிஸ்லெக்ஸியா’ பிரச்சினை. பள்ளியில் ஆசிரியர் சொல்வதை புரிந்துகொள்ள முடியாது. இப்படியாக 8-ம் வகுப்பை தாண்டிவிட்டார். அதன் பிறகு குடும்ப சூழ்நிலை படிக்க இடம் தரவில்லை. தெருத் தெருவாக லாட்டரி சீட்டு விற்றார். கட்டிட கூலி வேலைக்குச் சென்றார். ஜெராக்ஸ் கடை, மெக்கானிக் கடை, சவுண்ட் சர்வீஸ் என கிடைத்த வேலைகளை எல்லாம் பார்த்தார். வேலைக்கு நடுவில் பிளஸ் 2 தனித்தேர்வுக்கு விண்ணப்பித்தார். அந்த ஆண்டு தோல்வியைச் சந்தித்தார். மீண்டும் அடுத்த முறை தேர்வு எழுதி வெற்றி பெற்றார். பின்னர் சென்னை வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரியில் ஆங்கில இளங்கலை இலக்கியம் சேர்ந்தார். நாளொன்று 18 மணி நேரம் படித்தார்.
விளைவு, அம்மை நோய். அடுத்து ஒரு விபத்தில் சிக்கினார். இப்படி பல தடைகளை தாண்டிதான் இளங்கலை பட்டத்தை முடித்தார். பின்பு மாநிலக் கல்லூரியில் முதுகலை ஆங்கிலம் சேர்ந்தார். அங்குதான் போட்டித் தேர்வுகள் இவருக்கு அறிமுகமாகின. பலமுறை தேர்வு எழுதியவருக்கு ராணுவத்தில் ‘செகண்ட் லெப்டினென்ட்’ வேலை கிடைத்தது. பயிற்சியில் சேரும் முன்பு மீண்டும் ஒரு விபத்தில் சிக்கினார். கிடைத்த வேலையும் போயிற்று. பிறகு, மீண்டும் டிஎன்பிஎஸ்சியில் குரூப் 2 தேர்வு எழுதி வெற்றி பெற்றார். அரசு வேலை கிடைத்தது. பணியில் இருந்துகொண்டே குரூப் 1 தேர்வும் எழுதி வெற்றி பெற்றார். கூட்டுறவுத் துறையில் துணைப் பதிவாளராக உயர்ந்தார். தொடர்ந்து யூபிஎஸ்சி எழுதி வெற்றி பெற்றார். ஐபிஎஸ் கிடைத்தது. தமிழ்நாடு கேடர் கிடைக்காததால் ஐஆர்எஸ் பணியில் சேர்ந்துவிட்டார். இன்று இவரை அரசு அதிகாரியாக மட்டுமல்ல; மாணவர்களை ஊக்குவிக்கும் பல்வேறு மேடைகளிலும் பார்க்கலாம்!
தேடிவந்த பத்மஸ்ரீ
ஆசியாவின் முதல் முதியோர் நல மருத்துவ நிபுணர் வி.எஸ்.நடராஜன். முதியோருக்கான சிறப்பு மருத்துவம் படித்தவர். இவரது முயற்சியால்தான் நாட்டிலேயே முதல்முறையாக சென்னை பொது மருத்துவமனையில் முதியோர் மருத்துவ புறநோயாளிகள் பிரிவு தொடங்கப்பட்டது. பின்னாளில் பத்மஸ்ரீ விருது வரை இவரைத் தேடி வந்து அலங்கரித்தது. ஆனால், உயர் கல்விக்கான இவரது முதல் முயற்சியே தோல்வியில்தான் தொடங்கியது. பி.யூ.சி. எழுதியவர் தோல்வி அடைந்தார். ஒருவழியாக மீண்டும் எழுதி வெற்றி பெற்றவருக்கு மருத்துவப் படிப்பு அவ்வளவு சீக்கிரம் கிடைத்துவிடவில்லை. பல்வேறு அலைக்கழிப்புகளுக்கு பிறகு, அந்தக் காலத்தில் எந்த வசதியும் இல்லாத தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. அங்கிருந்துதான் தனது சகாப்தத்தை அவர் தொடங்க முடிந்தது.
இப்படி, நிறைய உதாரணம் சொல்லலாம். நிறைவாக ஒன்று. தேர்வில் வெற்றி பெற்றவர்கள் எல்லோரும் வெற்றியாளர்கள் அல்ல; வெற்றியாளர்கள் எல்லோரும் தேர்வில் வெற்றி பெற்றவர்களும் அல்ல. பிளஸ் 2 தேர்வில் பலர் சதம் அடிக்கின்றனர். அவர்கள் அளவுக்கு நீங்கள் மதிப்பெண் பெறவில்லையா? இதெல்லாம் பிரச்சினையே இல்லை. அதைவிட இன்னும் பெரிதாக, பிடித்தமான ஒன்று உங்களுக்கு காத்திருக்கிறது. அதற்கான முடிவுகள்தான் இது. ஆறுதல் வார்த்தை அல்ல இவை. மேற்கண்டவர்கள் உட்பட பலரும் கடந்து சென்ற வெற்றிகரமான வாழ்க்கைப் பாதை அவை!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT