Published : 26 Jul 2024 06:18 AM
Last Updated : 26 Jul 2024 06:18 AM
ஒலிம்பிக் - விளையாட்டின் மீது தீராத ஆர்வம் கொண்டவர்களின் பெருங்கனவு. பண்டைய கிரேக்கம் தந்த இந்த விளையாட்டுத் திருவிழாவை, நவீனக் காலத்தின் அடையாளமாக உருமாற்ற நினைத்தார் ஃபிரெஞ்சுக் கல்வியாளர் பியர் தெ கூபர்டின். உலகில் அதிகமானோரால் பார்க்கப்படுபவையாகக் கால்பந்து, டென்னிஸ், கிரிக்கெட் போட்டிகள் இருக்கலாம்.
ஆனால், இ்ந்தப் போட்டிகளைவிட அதிகமாக எதிர்பார்க்கப்படுவது ஒலிம்பிக். காரணம், அதன் தனித்தன்மை. ஒருபுறம் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள், புரோ கபடி போன்ற தனியார் விளையாட்டுப் போட்டிகள் திட்டமிட்டுப் பரபரப்பை அதிகரிக்கின்றன, மக்களின் பொழுதுபோக்கு உணர்வைத் தங்களுக்கான மூலதனமாக மாற்றிக்கொள்கின்றன.
இதனால் விளையாட்டின் அடிப்படை அம்சங்கள் பல அடிபட்டுப்போகின்றன. மற்றொருபுறம் விளையாட்டுகளைத் துல்லியமாக்கவும், விதிமுறைகளைத் திட்டவட்டமாகக் கடைப்பிடிக்கவும் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு போன்ற தலையீடுகள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன.
இவையெல்லாம் இருந்தாலும்கூட, விளையாட்டுப் போட்டிகளில் மனிதர்களின் நேரடிப் பங்கேற்பு, யோசனை, புதிய உத்தி அந்த விளையாட்டுக்குப் புதிய பரிமாணத்தை வழங்கலாம், சுவாரசியத்தைக் கூட்டலாம், பரபரப்பை அதிகரிக்கலாம். மனித உடல், ஆரோக்கியமான பொழுதுபோக்குத் திறன்களின் உச்ச வெளிப்பாடுதான் ஒலிம்பிக் போட்டிகள். அப்படி இருக்க வேண்டுமென்றுதான் கூபர்டின் உள்ளிட்ட முன்னோடிகள் அதை நிறுவியபோது எதிர்பார்த்தார்கள்.
கற்பிதம் தகர்ப்பு: 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே ஒலிம்பிக் போட்டி தொடங்கிவிட்டது. 1900, 1924 ஆகிய ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டிகள் பாரிஸில் நடைபெற்றிருந்தாலும்கூட, 1936 பெர்லின் ஒலிம்பிக் போட்டியைப் பிரம்மாண்டமாக நடத்தி, உலகுக்குத் தங்களைப் பற்றி வெளிச்சம் போட்டுக் காட்ட நினைத்தது, ஜெர்மனியை அப்போது ஆண்ட ஹிட்லரின் நாஸி கட்சி. அந்தப் போட்டிகள்தான் முதன்முதலில் தொலைக்காட்சியிலும் பரவலாக வானொலியிலும் ஒலிபரப்பப்பட்டன.
நாஸி கட்சிக் கொள்கைப்படி ஆரியர்கள்தான் அனைத்திலும் உச்சத்தில் இருக்க வேண்டும் என ஜெர்மன் சர்வாதிகாரி ஹிட்லர் எதிர்பார்த்தபோது, தன் விளையாட்டுத் திறமையால் அந்தக் கற்பிதத்தை உடைத்தார் ஆப்ரிக்க அமெரிக்கரான ஜெஸி ஓவன்ஸ். 100 மீ. ஓட்டம், 200 மீ. ஓட்டம், நீளம் தாண்டுதல், தொடர் ஓட்டம் ஆகிய நான்கிலும் தங்கப் பதக்கம் வென்று ஜெஸி ஓவன்ஸ் சாதித்தார்.
இவ்வளவுக்கும் நீளம் தாண்டுதல் தகுதிச் சுற்றுப் போட்டிகளில் பதற்றமாக இருந்த ஜெஸி ஓவன்ஸை நிதானப்படுத்தியவர் ஜெர்மானியரான லஸ் லாங். எப்படியாவது பதக்கத்தைத் தனதாக்கிக்கொள்ள வேண்டும் என்று எண்ணுவதைவிட, விளையாட்டு வெற்றி பெற வேண்டும் என நினைக்கும் லஸ் லாங் போன்ற ஆளுமைகள் பதக்கம் பெறாமலே மனங்களை வென்றுவிடுகிறார்கள்.
நவீனக் காலத்தில்... ஜெஸி ஓவன்ஸின் சாதனையைக் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு கழித்து, 1984 லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக்கில் அமெரிக்காவின் கார்ல் லூயிஸ் சமன்செய்தார். 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் ஜமைக்காவின் உசைன் போல்ட் 9.69 விநாடிகளில் 100 மீ. தொலைவை ஒரு சிவிங்கிப்புலியைப் போலச் சடாரெனக் கடந்தபோது, ஓடுதளங்கள் தீப்பிடிக்காத குறைதான். அதே ஒலிம்பிக்கில் 200 மீ. ஓட்டம், 400 மீ. தொடர் ஓட்டத்திலும் அவர் சாதனை படைத்தார் என்றால் சும்மாவா? கால்பந்து, டென்னிஸ் வீரர்/வீராங்கனைகளுக்கு இணையான புகழை ஒரே நாளில் அவர் அறுவடை செய்தார்.
பெண்களும் ஒலிம்பிக் தருணங்களுக்கு ஒளியேற்றியிருக்கிறார்கள். 1976 மாண்ட்ரியல் ஒலிம்பிக்கில் ருமேனியாவின் நாடியா காமென்சி ஜிம்னாஸ்டிக்ஸில் 10-க்கு 10 எடுத்தபோது, அன்றைக்கு இருந்த மின்னணுக் காட்சிப்பலகைகளால் அதைக் காட்ட முடியவில்லை.
காரணம் 9 வரைதான் அந்தப் பலகைகளில் இடம்பெறச் சாத்தியம் இருந்தது. 1988 சியோல் ஒலிம்பிக்கில் அமெரிக்காவின் ஃபிளாரன்ஸ் ஃகிரிபித் ஜாய்னர் 200 மீ. ஓட்டப் போட்டியிலும் அதற்கு முன்னதாக ஒலிம்பிக் தேர்வுக்கான 100 மீ. ஓட்டத்திலும் உலக சாதனை படைத்தார். இன்றுவரை அந்தச் சாதனைகள் முறியடிக்கப்படவில்லை.
இந்தியர்களும் பல மாயாஜாலத் தருணங்களைத் தந்து சிலிர்ப்படைய வைத்திருக்கிறார்கள். ஒரேயொரு வித்தியாசம், அவர்களால் பதக்கம் வெல்ல முடியவில்லை என்பதே. ‘பறக்கும் சீக்கியர்’ மில்கா சிங் 1960 ரோம் ஒலிம்பிக்கில் 400 மீ. ஓட்டத்தில் 0.1 விநாடியில் வெண்கலப் பதக்கத்தைத் தவறவிட்டார்.
இந்திய ஓட்டப்பந்தய வீரர்களைப் பொறுத்தவரை அவருக்குப் பிறகு வேறுயாரும் இந்த நிலையைக்கூடத் தொட்டதில்லை. அதேபோலத்தான் பி.டி.உஷா விஷயத்திலும் நடந்தது. 1984 லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக்கில் 400 மீ. தடையோட்டப் போட்டியில் 0.01 விநாடியில் வெண்கலப் பதக்கத்தை அவர் தவறவிட்டார்.
ஒத்திகையற்ற நாடகம்: 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் உயரம் தாண்டுதலில் கத்தாரின் மாதஸ் இஸ்ஸா பர்ஷிம், இத்தாலியின் ஜமர்கோ தம்பேரி இருவரும் ஒரே உயரத்தைத் தாண்டியிருந்தனர். கூடுதல் உயரத்தைத் தாண்டி ஒருவர் மட்டும் தங்கப் பதக்கத்தை வென்றிருக்க முடியும். ஆனால், அதற்கு மாறாகத் தங்கப் பதக்கத்தை இருவரும் பகிர்ந்துகொண்டு ஜஸ் லாங்-ஜெஸி ஓவன்ஸ் வெளிப்படுத்திய உயர்ந்த மனிதப் பண்பை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தினார்கள்.
இப்படி நம் காலத்துக்கென்று சிரிப்பு, அழுகை, உணர்வுவயப்படுதல், சோகம், கொண்டாட்டம் போன்ற பல்வேறு உணர்வுக் கலவைகளும் அசைபோட்டு மகிழ்வதற்கான தருணங்களும் தேவைப்படுகின்றன. சுருக்கமாக ஒத்திகையில்லாமல் ஒரு நாடகம் நடக்க வேண்டும். இதுபோன்ற சிலிர்ப்புணர்வை ஏற்படுத்தும் மாயாஜாலத் தருணங்கள் இந்த ஒலிம்பிக்கில் வாய்க்குமா?
நவீனத்துக்கும் புதுமைக்கும் வரலாற்றில் பெயர்பெற்ற பாரிஸில் நடைபெறும் இந்தப் போட்டி, அதற்கு உத்தரவாதம் அளிக்கும் என்றே தோன்றுகிறது. வழக்கத்துக்கு மாறாக இந்த ஒலிம்பிக்குக்கான தயாரிப்பு, ஏற்பாடுகளில் நிறைய மாற்றம் நிகழ்ந்துள்ளது ஒரு காரணம். மட்டுமல்லாமல், கோவிட் தொற்றுக்குப் பிறகு அச்சம் இல்லாமல் நடைபெறும் போட்டி என்பதாலும் மயிர்க்கூச்செறியும் ஒலிம்பிக் தருணங்களுக்காக நம்பிக்கையுடன் காத்திருப்போம்.
- தொடர்புக்கு: valliappan.k@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT