Published : 26 Jul 2024 02:47 PM
Last Updated : 26 Jul 2024 02:47 PM
பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது பல கேள்விகளை உருவாக்கியுள்ளது. விசாரணை மேற்கொள்ளும் தமிழக காவல் துறை, கொலையின் பின்னணியில் அரசியல் காரணமில்லை என முன்பு கூறியிருந்தது. ஆனால், தற்போது பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய மாநிலத் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் வழக்கறிஞர் ஆனந்தன், ‘இதன் பின்னணியில் இருப்பது அரசியல் காரணம்’ என அடித்துச் சொல்கிறார். இது தற்போது பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ‘இந்து தமிழ் திசை’ டிஜிட்டலுக்கு ஆனந்தன் வழங்கிய சிறப்பு நேர்காணலில் இருந்து...
ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட பிறகுதான் தமிழகத்தில் பகுஜன் சமாஜ் கட்சி இருப்பதே பொது மக்களுக்கு தெரிகிறது. ஏன் மக்களுக்கும் கட்சிக்கும் இவ்வளவு இடைவெளி?
“ஊடகத்தில் தங்களைப் பிரபலப்படுத்திக்கொள்ள பகுஜன் சமாஜ் கட்சி நினைத்ததில்லை. திண்ணைப் பிரச்சாரத்தின் வாயிலாக மக்களிடம் செல்லும் அரசியல் நடைமுறை முன்பு இருந்தது. அதுபோன்ற மிஷனரி வேலையைத்தான் ஆம்ஸ்ட்ராங் செய்து வந்தார். அவர் இறந்த பிறகுதான் அவர் எவ்வளவு சமூக வேலைகளைச் செய்திருக்கிறார் என்பது பொது மக்களுக்குத் தெரிய வருகிறது. எங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளாமல் மக்களிடம் நேரடியாக சென்று சேருவதுதான் பகுஜன் சமாஜ் கட்சியின் நோக்கம்.”
விளம்பரப்படுத்திக் கொள்ளாமல் அதிகாரத்தைப் பிடிப்பது எப்படி சாத்தியமாகும்?
“உத்திரப் பிரதேசத்தில் பெரிய பப்ளிசிட்டி செய்யாமல் தான் 4 முறை அதிகாரத்தைப் பிடித்தோம். சமூகத்தில் ஊடுருவி வேலை செய்வதுதான் பகுஜன் சமாஜ் கட்சியின் மாடல்.”
தமிழகத்தில் ஏற்கெனவே தலித் அரசியல் இருக்கிறது. அதிலிருந்து பகுஜன் சமாஜ் கட்சி எப்படி வேறுபடுகிறது?
“தமிழகத்தில் தலித் அரசியல் செய்யும் கட்சிகள் அச்சமூக மக்களுக்கு மட்டும்தான் வேலை செய்யும். ஆனால், பகுஜன் சமாஜ் கட்சி சோஷியல் இன்ஜினியரிங் (Social Engineering) என்னும் கான்செப்ட் (Concept) கையில் எடுத்திருக்கிறது. அனைத்து சாதியினரையும் உள்ளடக்கி வேலை பார்ப்பதுதான் பகுஜன் சமாஜ் கட்சியின் திட்டம். அனைத்து மக்களுக்குமான கட்சியாகத்தான் பகுஜன் சமாஜ் கட்சி செயல்படும். இந்தப் புள்ளியில்தான் பிற அரசியல் கட்சிகளிடையே பகுஜன் சமாஜ் கட்சி வேறுபடுகின்றது.”
அப்படி என்றால் தமிழகத்தில் தலித் அரசியல் செய்யக்கூடிய கட்சிகள் சாதிய கட்சிகளாக இருக்கிறது என்கிறீர்களா?
“அப்படி அல்ல. ஆனால், தமிழ் தேசியம் பேசினாலும் பொது அரசியலைப் பேசினாலும் ‘தலித்’ என்னும் முத்திரைதான் இங்கு குத்தப்படுகிறது.”
நீங்கள் மாநிலத் தலைவராக தேர்வு செய்யப்பட்டதில் கட்சிக்குள் அதிருப்தி இருப்பதாக சொல்லப்படுகிறதே?
“நான் 2006-ம் ஆண்டு தொடங்கி ஆம்ஸ்ட்ராங் உடன் பயணித்து வருகிறேன். 2009-ம் ஆண்டு திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு 40,000-க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருக்கிறேன். ஆகவே, தொடக்கம் முதலே கட்சிக்காகப் பாடுபட்டு வருகிறேன். எனவே, கட்சிக்குப் புதிது, இவருக்கு எப்படி மாநிலத் தலைவர் பதவி கொடுக்கலாம் எனக் கட்சிக்குள் வைக்கப்படும் வாதமே தவறானது என்பது என் கருத்து.”
தமிழக அரசு விசாரணை மேற்கொண்டு வரும் சூழலில், ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் அரசியல் பின்னணி இருப்பதாக நீங்கள் கூறுவது முரணாக இல்லையா?
“அரசியல் கட்சிப் பின்னணியில் இருப்பதாக நான் கூறவில்லை. தற்போது விசாரணையில் பல கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன் அடிப்படையில் என் கருத்தைப் பொறுத்திப் பார்க்க வேண்டும்.”
திருமாவளவன் ‘பாஜக - ஆருத்ரா’ இதன் பின்னணியில் இருப்பதாக சொல்கிறாரே! நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
“ஆருத்ரா நிறுவனத்துக்கும் பாஜகவுக்கும் இந்தக் கொலைக்கும் எந்த தொடர்பும் இல்லை.”
‘ஆற்காடு சுரேஷ் மரணம் - ஆருத்ரா- ஆம்ஸ்ட்ராங் படுகொலை’ என அனைத்தும் தொடர்புபடுத்தி பேசப்படுகிறதே?
“ஆற்காடு சுரேஷ் பகுஜன் சமாஜ் கட்சியில் அடிப்படை உறுப்பினராகத்தான் இருந்தார். ஆருத்ரா நிறுவனம் குறித்து ஆற்காடு சுரேஷ், ஆம்ஸ்ட்ராங்கிடம் எந்த தகவலும் சொல்லவில்லை. ஜெயபால் என்ற நம்பருக்கும் ஆற்காடு சுரேஷுக்கும் ஏற்பட்ட பிரச்சனையில்தான் கொலை நடந்தாக காவல் துறை விசாரணையில் தெரியவந்ததை நினைவுப்படுத்த விரும்புகிறேன்.”
ஆற்காடு சுரேஷின் கொலைக்குப் பழிவாங்கும் நடவடிக்கையாகத்தான் இந்தக் கொலையைத் திட்டமிட்டு செய்ததாக சுரேஷின் தம்பி பாலு காவல் துறை விசாரணையில் கூறியதாக தகவல் சொல்லப்பட்டதே?
“நான் 25 ஆண்டு காலமாக வழக்கறிஞராக இருப்பதால் எனக்கு கைதியிடமிருந்து வாக்குமூலம் எப்படி பெறப்படும் என்பது தெரியும். காவல் துறையில் சரணடைந்தவர்கள் எப்படி அடித்துக் கேட்டாலும் ஒரே கதையைத் தான் சொல்வார்கள். அது நிச்சயமாக உண்மையான தகவலாக இருக்காது.”
‘தமிழகத்தில் உள்ள பட்டியலின தலைவர்கள் அனைவரும் ஒருங்கிணைய வேண்டும்’ என இயக்குநர் பா.ரஞ்சித் கூறியிருந்தார். ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவராக இது குறித்து உங்கள் கருத்து என்ன?
“அவரின் நோக்கம் நிறைவேற வாழ்த்துகள். ஆனால், பிரதான கட்சிகள் இந்த ஒருங்கிணைப்பை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர்களின் தலித் வாக்கு வாங்கி சிதையும் என்பதால் பட்டியலினத் தலைவர்கள் ஒன்று சேர விட மாட்டார்கள்.”
குற்றப் பின்னணி கொண்டவர் என்பதால் ஆம்ஸ்ட்ராங் கொலை நடந்திருக்கிறது என்னும் அணுகுமுறையை எப்படி பார்க்கிறீர்கள்?
“ஆம்ஸ்ட்ராங் குற்றப் பின்னணி கொண்டவர் என்பதால் கொலை நடந்துள்ளது என்னும் வாதம் சில கட்சியினரால் முன்வைக்கப்பட்டது. ஆனால், அவருக்கு எந்தக் குற்றப் பின்னணியும் இல்லை. தலித் தலைவர்கள் வளர்கிறார்கள் என்றால் அவர்கள் குற்றப் பின்னணி கொண்டவர்களாக சித்தரிக்கப்படுவார்கள். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் தலைவர்கள் வீட்டில் பஞ்சாயத்துகள் நடக்கிறது. அவர்கள் நடத்தினால் அது அரசாங்கப் பணி. அதுவே ஒரு தலித் தலைவர் செய்தால் கட்டப்பஞ்சாயத்து என முத்திரை குத்தப்படுகிறது. ஒரு தலித் தலைவர் வளர்வதைப் பிற அரசியல் கட்சியினரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.”
தமிழகத்தில் பகுஜன் சமாஜ் கட்சி வளர்ச்சி அடைந்த நிலையில் இருந்தாலும், தமிழக மக்களிடம் இன்னும் போய் சேரவில்லை. இந்தச் சூழலில் எதற்குப் பிரதான கட்சிகள் பகுஜன் சமாஜ் கட்சி மீது காழ்ப்புணர்ச்சி கொள்ள வேண்டும்?
“எங்கள் கட்சிப் பின்னால் இளைஞர்கள் இருக்கிறார்கள். பொது வெளியில் இறங்கிப் போராட்டம் நடத்தக்கூடிய பட்டாளம் இருக்கிறது. முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங் எங்கு சென்றாலும் அவர் பின்னால் பலர் நிற்பார்கள். எனவே, இது பிற கட்சிக்கு நெருடலை ஏற்படுத்துகிறது.”
சமத்துவம், சமூக நீதி பேசும் திராவிட கட்சிகள் இருக்கும் தமிழ்நாட்டில் ஒரு தலித் தலைவர் வளர்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனக் கூறுவதை எப்படி புரிந்து கொள்வது?
“சமூக நீதி என்னும் கொள்கை இன்றைய கட்சிகளிடம் பெயரளவில்தான் இருக்கிறது. அந்தக் கட்சிக்குள்ளே கூட அந்தக் கொள்கைகள் பின்பற்றப்படுவதில்லை. அவர்கள் வருணாசிரம தர்மத்தைத் தான் பின்பற்றுகிறார்கள். அப்படி சமூக நீதி கொள்கையைப் பின்பற்றுகிறார்கள் என்றால், தலித்துகளுக்குத் தலைமை பொறுப்பில் முன்னுரிமை வழங்கப்பட்டிருக்க வேண்டும். திறமையற்றவர்களுக்குத் தான் தலைமைப் பொறுப்பு வழங்கப்படுகிறது. அம்பேத்கர் அவர்கள் ’தனித் தொகுதி’ என்பதை உருவாக்கியதற்கு காரணமே அந்தச் சமூக மக்கள் அதிகாரத்தைப் பெற வேண்டும் என்பதுதான்.
ஆனால். பல கட்சிகளில் தலைமை சொல்வதைத் தான் தலித் நிர்வாகிகள் கேட்கிறார்கள். அவர்களுக்கான பிரச்சினைகளைச் சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் கூட பேசுவதே இல்லை. தற்போது தமிழக சட்டப்பேரவையில் தனித்தொகுதியைச் சேர்ந்த 43 தலித் எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். ஆனால், தலித் தலைவரான ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதற்கு ஒரு தனித் தீர்மானத்தைக் கூட அவர்கள் கொண்டு வரவில்லையே. கட்சி என்ன சொல்கிறதோ அதைத்தான் செய்கிறார்கள். கட்சியின் விசுவாசியாகத்தான் இருக்கிறார்கள். தலித் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு பற்றி அவர்கள் பேசுவதில்லை.”
துணை முதல்வராக உதயநிதியைத் தேர்வு செய்ய வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறதே? ஒரு மாநிலத் தலைவராக இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
“துணை முதல்வராக ஒருவரை அறிவிப்பது உட்கட்சி விவகாரம். ஆனால், நிர்வாகத்தின் அடிப்படையில் பார்த்தால் உதயநிதிக்குப் போதிய அனுபவமில்லை என சொல்ல முடியாது. தற்போதுள்ள ஆட்சியைப் பொறுத்தவரை முக்கியமான திட்டங்களை மேற்கொள்வது அதிகாரிகள்தான். அதனால், யார் பொறுப்புக்கு வந்தாலும் எந்த மாற்றமும் இருக்கப்போவதில்லை.”
‘பாமகவோடு இணைந்து செயல்பட வேண்டும்’ என ஆம்ஸ்ட்ராங் கருத்து தெரிவித்திருந்தாரே... அது சாத்தியமாகுமா?
“தலித்துக்கு விரோதி வன்னியர் என ஒரு கருத்து கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அந்த அரசியலுக்கு முடிவுரை எழுத வேண்டும். இதைச் செயல்படுத்த வேண்டும் என்பதை பாமக தலைவர் அன்புமணி முன்னிலையிலும் ஆம்ஸ்ட்ராங் பேசியிருக்கிறார். எனவே இது குறித்து கட்சியோடு கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். வெறும் தேர்தல் கூட்டணி என்பது அல்லாமல், சோஷியல் இன்ஜினியரிங் என்பதை நாங்கள் உருவாக்க முயற்சிக்கிறோம்.”
பகுஜன் சமாஜ் கட்சியின் அடுத்தக்கட்ட திட்டம் என்ன?
“அனைத்து மக்களும் உள்ளடக்கிய ஜெய் பீம் மாடலை கிராமம் தோறும் சென்று சேர்க்க வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பது எங்களின் குரலாக இருக்கும்.”
பாஜக ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பை மாற்றுவோம் என்று கூறியிருந்தார்களே?
“பாஜகவுக்குப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனவே, அவர்கள் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றுவார்கள் என அச்சப்பட வேண்டிய தேவை இல்லை.”
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT